Pages

Thursday 24 September 2009

அக்யுஸ்ட் (Accused)......


வீட்டின் பின்புறத்தில் ஏதோ சலசலப்பு கேட்கவே, எழுந்து, அறையின் கதவைத் திறந்து வெளியே உள்ள மொட்டை மாடியின் விளக்கை போட்டேன். சலசலப்பு அடங்கியது. வானம் இருட்டி லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. ஏதும் ஆளரவம் தெரியவில்லை. மறுபடியும் அறையின் உள்ளே வந்துப் படுத்தேன். மனைவி தூக்கதிலிருந்து முழித்து, “மணியென்ன” என்றாள். “நாலரை இருக்கும் என்றேன்”.

“என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டீர்கள்” என்றாள்.

“இல்லை தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது என்னவென்று பார்த்தேன்” என்றேன்.
எங்கள் வீட்டில் திருட்டு அடிக்கடி நடப்பதுண்டு. வீடு ரயில்வே ட்ரக்கை ஒட்டி இருந்தது. ட்ரக்கின் அப்பால் ஒரு முப்பது குடிசைகள், கட்சிகொடிகளுடன் புதியாதாக வரதொடங்கியிருந்தது. என் வீட்டின் பின்புறம் “கம்பௌந்து” சுவர் இருந்தாலும் ஏறிக்குதித்து, கொடியில் காயபோட்டிருக்கும் துணிகள், பாத்ரூம் புக்கெட், டூத்ப்ருஷ் எதையும் வெளியில் வைக்க முடியாது.

வீட்டின் பின் புறமிருந்த இரண்டு தென்னை மரங்களும் வளைந்து சுவர் வெளியே இருப்பதால் மரத்தின் மேல் ஏறி உள்ளே குதித்து விடுவார்கள். சுவரின் மேல் முள் வேலி வேயந்திருந்தேன், ஆதலால் சுவர் ஏறி குதிப்பது கடினம். பொருட்களை எடுத்துக்கொண்டு மரத்தின் மேல் ஏறி அப்பால் குதித்து "எஸ்" ஆகிவிடுவார்கள்.

அன்று நான் காலையில் எப்பொழுதும் போல் பாக்டரி போகத் தயாராகிக் கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் ஒரே கூட்டம். அப்பாலிருந்த குடியிருப்பு ஆட்கள் ஆண்களும் பெண்களுமாகக் கூடி, என்னை வெளியே வரச்சொல்லி சத்தம் போட்டார்கள். காலையில் ஒரு ஆள் ரயில்வே ட்ரக்கின் ஓரமாக தலையில் காயத்துடன் இறந்து விட்டதாகவும், அவனை நான் கல்லால் அடித்துக் கொன்று விட்டேன் என்றும் கூச்சலிட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு ஒரு கரப்பான் பூச்சியைக் கொல்லக் கூடத் தைரியம் கிடையாது.

அவர்கள் சிறிது நேரம் கூப்பாடு போட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள்.
எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. ஆளரவம் அடங்கியப் பின்பு நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டஷனுக்கு சென்றேன்.
சப் இன்ஸ்பெக்டர் தான் இருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன்.
நான் சற்றும் எதிர்பாராமல் அவர், "இன்னா சார் அந்த ஆளை கல்லாலே அடிச்சு கொன்னுட்டு இப்போ நீயே கம்ப்ளைன்ட் குடுக்கிறியா, நாங்க எப்பவோ எப் ஐ ஆர் போட்டாச்சு" பிறகு அருகிலிருந்த ரைட்டரைக் கூப்பிட்டு, "காலையிலே எப் ஐ ஆர் போட்டோமில்லே, தொ இவர் தான் "அக்யுஸ்ட்", இவர்கிட்டே ஒரு கையெழுத்து வாங்கிக்கோ" என்றார்.

“சார் நான் கல்லால் எல்லாம் அடிக்கலே எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காலையில் ட்ரக் பக்கம் எதோ சத்தம் கேட்குது என்று எழுந்து விளக்கைப் போட்டேன். வேறொன்னும் செய்யவில்லை” என்றேன்.

“இன்னது விளகாலேப் போட்டு தள்ளிட்டியா, எப்பா ரைட்டேர் அக்யுஸ்ட் ஒத்துகினார்பா, எழுதிக்கோ குத்து விளக்குலே அடிசிட்டராம்பா” என்றார். நான் இந்த எஸ் ஐயிடம் பேசுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று வீடு திரும்பினேன்.

பிறகு நான் அன்று பாக்டரிக்கு லீவ் போட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து வாசலில் ஆளரவம் கேட்கவே, வெளியே சென்றால். ஒரு நாலைந்து ஆட்களும், ஒரு பெண் தன கைக்குழந்தையுடன் அழுதுக் கொண்டு அவர்களுடன் இருந்தாள்.

அந்தக் கூட்டத்தில் நடு நாயகமாக இருந்த ஒருவன், சற்றே கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்து, "இன்னா சார் அநியாயமா அந்த ஆளை கொன்னுட்டியே, பாரு என்ன சினா வயசுப் பாரு இந்தப் பொண்ணு, இது இப்போ வயத்து பொழைப்புக்கு இன்னா செய்யும், நாம அல்லாத்தையும் செட்டில் செய்யலாம், வா என்று என்னை சற்றுத் தள்ளி அழைத்து, நீ இன்னா பண்றே சார் ஒரு மூணு லட்சம் குடுத்திரு, நா அந்தப் பொன்னே கேசே வாபுஸ் வாங்கச் சொல்றேன்" என்றான்.

"யோவ் நான் என்ன செய்தேன், எதுக்கு மூணு லட்சம், சும்மா இங்கே கலாட்டப் பண்ணாதே", என்றேன்.

......த்தா அவ்வளவு முறைப்பகீரியா, கொலைப் பண்ணிட்டு, மவனே போ போயீ களி துன்னுடா. என்று எங்கள் வீட்டின் முன்னே இரண்டு அரை செங்கலை வீசிவிட்டு சென்றான்.
எனக்கு இப்பொழுது பயம் தொற்றிக்கொண்டது. இவர்கள் இது போல் தினமும் வீட்டின் முன்பு வந்து கலாட்டா செய்யப் போகிறார்களே என்றும், மேலும் நான் இல்லாதப் பொழுது மனைவியும் குழந்தைகளும் தனியாக இருக்கும் பொழுது எதாவது செய்து விடுவார்களோ என்று.

ஆதலால் கமிஷனர் ஆபீஸில் வேலை செய்யும் என் நண்பனை கண்டு விவரத்தை சொல்லாலாம் என்று சென்றேன்.

அவன் விஷயத்தை கேட்டு என்னை அசிச்டனட் கமிஷனரை பார்க்கக் கூட்டிச் சென்றான்.
நான் அவரிடம் அன்று நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னேன். பொறுமையாக என் பேச்சைக் கேட்டார், பிறகு யாரையோ அழைத்து எங்கள் ஏரியா எஸ் ஐ யாரென்று கேட்டார், முத்துப்பாண்டி என்று பெயர் சொன்னார்கள்.

பிறகு அவர் என்னிடம் நீங்கள் கவலைப் படாதீர்கள் நான் பார்த்து கொள்கிறேன், யார் பணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். உங்களை எப்பொழுது வேணாலும் நான் கூப்பிடுவேன் வரவேண்டியிருக்கும் என்றார்.

நிச்சயமாக வருகிறேன் சார் என்றேன்.

வீட்டுக்கு வந்தால் வீட்டில் எனக்காக எஸ் ஐ முத்துபாண்டி காத்துக் கொண்டிருந்தார்.
“சார் நான் அல்லாத்தையும் விசாரிச்சுட்டேன், என்கிட்டே உண்மையே சொல்லு, தொ பார் நேத்துக் கூட ஒரு கொலை கேசு, நாமாண்ட வந்துச்சு, உண்மையே ஒத்துகினான், அவனே நான் காப்பாத்திட்டேன், தொ பார் இப்போ எட்டாம் நம்பர் கடையாண்ட தண்ணி அடிச்சுகின்னு கிரான்”.

“அந்தக் குப்பத்து ஆளோட வச்சுக்காதே, அவனுங்க ரொம்ப மோசமானவனுங்க. பொலிடிகல் சப்போர்ட் வேறே கீது. நம்மலாண்டே வா உனக்கு அல்லாம் முடிச்சு கொடுக்கிறேன், ஒரு அம்பதாயிரம் கொடு. அல்லாம் சுளுவா முடிஞ்சிரும் இன்னா” என்றார்.
“சார் என் கிட்டே பைசா பேராது, நான் ஒன்றும் செய்யவில்லை, மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.

“தோ பார் சார் நீ எங்கே போனாலும் ஒன்னாலே ஒன்னும் பண்ண முடியாது, நல்ல வழி சொல்றேன் காசுக்கு பாக்காதே, அப்புறம் உன் தலை எயுத்து, நா இன்னா சொல்ல” என்று சென்று விட்டார்.

ஒரு வாரம் கழித்து என்னை நண்பன் கமிஷனர் ஆபிசுக்கு வர சொன்னான்.
மறுபடியும் நான் ஏசியை சந்தித்தபொழுது, அவர் என்ன நடந்தது என்று கேட்டார். நான் எஸ். ஐ. வந்த விஷயத்தை அவரிடம் சொல்லவில்லை.

அவர் இந்த கேஸ் ஓபன் அண்ட் ஷட் கேஸ். அவன் அந்த மரத்தின் மேல் ஏற முயற்சித்து, கீழே விழும் பொழுது, கல்லில் மண்டை அடிபட்டு இறந்திருக்கிறான். இந்த கேஸ் நீங்கள் சென்ற போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகவில்லை. ரயில்வே ஏரியா என்பதால், "ஆர்பிஎபில்" பதிவாகியிருந்தது.

இனி உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது,

நன்றி சார் என்று நான் கிளம்புமுன், நீங்க யாருக்கும் பணம் எதுவும் குடுக்கலியே என்றார்.

இல்லை சார் என்றேன்.

“குட், உங்கள் தெளிவான சிந்தனையும், தைரியமும்(??) உங்களை அனாவசிய பிரச்சனையிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. நீங்க ஒரு முறை பயந்து, பணம் குடுத்தீர்கள் என்றால், இதற்கெல்லாம் முடிவில்லை” என்றார்.

வீட்டிற்கு வந்து மனைவியிடம் விஷயத்தை சொன்னேன்.
பின்பு வீட்டின் பின்புறம் சென்றேன், அங்கு அந்த இறந்தவனின் மனைவி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

மனைவியிடம் கோபமாக வந்து, “இவளை ஏன் வீட்டுக்குள் விட்டாய், மறுபடியும் ஏதாவது பிரச்சினை வரப் போகிறது” என்றேன்.

"பாவம் அவள் என்ன செய்வாள், கணவன் இறந்தவுடன் அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தொந்தரவு செய்கிறார்களாம். இவளை வைத்து காசு சம்பாதிக்கப் பார்கிறார்களாம். என்னிடம் வந்து அழுதாள், நான் தான் அவளை இங்கு வேலைக்கு வைத்து, தோட்டத்தில் உள்ள லும்பர் ரூமில் தங்கச் சொல்லியிருக்கிறேன், பிரச்சினை என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.

Tuesday 22 September 2009

நீ இல்லாத ராத்திரியோ..


நீ இல்லாமல் உறக்கம் வருவதில்லை
நீ இருந்தால் தொல்லைகள் தொலை தூரம்
துடித்து ஓடுகின்றன.
உண்மையில் நீ இல்லாத பொழுது
உன் நினைவை அகற்ற முடிவதில்லை.

உனக்கு ஒவ்வொருமுறையும் கொடுக்கும் விலை
உறுத்தலாகவே இருக்கிறது, என் செய்வது
எங்கும் எதிலும் வியாபாரம்,
உன்னைக் கொணர்ந்து
உன் ஆடையைக் களையும் பொழுதே,
உன் சுகந்தம் தொல்லைகளை துரத்திவிடும்,
நீ மேலும் உன்னை எரித்து, என்னை
உறக்கத்தில் தள்ளும் சுகத்திற்கு,
உள்ளம் ஏங்குகிறது,
“உத்ரா” கடையில்
உன்னை “ஆமை மார்க்” சுருள் என்று
மறக்காமல் கேட்டு வாங்கவேண்டும்.

Monday 21 September 2009

இரட்டுறமொழிதல்-ஆடிக் குடத்தடையும்- பதவுரை




ஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும்,
மூடித்திறப்பின் முகம் காட்டும்
ஓடி மண்டை பற்றி பரபர என எரியும்
பாரில் பிண்ணாக்கும் உண்டாம்
முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஒது.



ஆடிக் குடத்தடையும்
எள்ளை செக்கில் இட்டு ஆட்டியபின் வரும் எண்ணெய் குடத்தில் வைக்கப்படும்
பாம்பு படம் எடுத்து ஆடிய பின் கூடையில் வைக்கப்படும்.


ஆடும்போதே இரையும்

எள்ளு செக்கில் ஆடும் பொழுது இரைச்சலிடும்
பாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது, சப்தமிடும்.


மூடித் திறப்பின் முகம் காட்டும்

எண்ணைக் குடத்தின் மூடித்திறந்து பார்த்தால் நம் முகம் தெரியும்
கூடையின் மூடித் திறந்தால் பாம்பு தன் முகம் காட்டும்.


ஓடி மண்டைப் பற்றி பரபரவென எரியும்

நல்லெண்னையைத் தலையில் தேய்த்துக்கொண்டால், வெப்பம் உண்டாகி பின்பு தணியும்.
பாம்பு கடித்தால் விஷம் விரைவில் தலைக்கேறும்.


பாரில் பிண்ணாக்கும் உண்டாம்.

செக்கில் எண்ணெய் எடுத்தபின் மிஞ்சுவது பிண்ணாக்கு.
பாம்பிற்கு இரட்டை நாக்கு (பின் நாக்கு)


கடைசி வரிக்கு விளக்கம் தேவையில்லை.

ஆதலால் முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஓது.

ஷங்கருக்கு நன்றி, போனப் பதிவிலே எல்லாவற்றையும் தெளிவு படுத்தியதற்கு.

Friday 18 September 2009

இரட்டுற மொழிதல்


ஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும்,
மூடித்திறப்பின் முகம் காட்டும்
ஓடி மண்டை பற்றி பர பர என எரியும்
முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஒது.



நாம் எல்லோரும் தமிழ் சினிமாக்களில் தான் இரட்டை அர்த்தம் உள்ள வசனங்களையும், பாடல்களையும் கேட்டிருக்கிறோம்.

காளமேகப் புலவர் சொல்லும் இந்த கவியில் உள்ள இரட்டை அர்த்தங்கள் புரிகிறதா.

சிந்தியுங்கள், பதவுரை, பொழிப்புரை, அடுத்த பதிவில் இடுகிறேன்.

Monday 14 September 2009

எங்களுடன் தங்கிய ஏஞ்சல்


யுத்தமில்லா உலகம்.
பொறாமையில்லா மனசு.
வியாதி இல்லா உடம்பு
மரணம் இல்லா ஜனனம்
ஊனமில்லா பிறப்பு


அன்புள்ள அறிவு
அறிவுள்ள அன்பு
கருணையுள்ள கடவுள்
கடவுளில்லா கருணை
அன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.


ஹேமா ஏன் பத்து வரங்கள் மட்டுமே?. கேட்பதில் ஏன் கஞ்சத்தனம். நூறு வரம் கேட்போமே.

ஏஞ்சல் என் வாசலில்

வரம் கேட்ட பின்னர் ஏஞ்சலை திரும்ப அனுப்ப மனமில்லை, ஆதலால் எங்களுடன் தங்க வைத்து விட்டோம்.

என் மனைவி ஏஞ்சலுக்குப் பிடித்த உணவை தயார் செய்தாள்.

முள்ளங்கி சாம்பார், நெய் ரசம், கத்திரிக்காய் பொறியல் என்று ஒரே உபசாரம் தான்.

இரண்டு நாட்கள் தங்கிய ஏஞ்சலை இப்பொழுது மேலும் ஐந்து பேருக்கு அனுப்புகிறேன்.

பதிவுலக நண்பர்கள் எஞ்சலிடம் உங்களது வரங்களைக் கேளுங்கள்.

கார்த்திகைப் பாண்டியன்
சாயர பாலா
லோஷன்
முருகு
பித்தன்

ஹேமா தாமதத்திற்கு மன்னிக்கவும். (வேலை பளு)

Saturday 12 September 2009

ஏஞ்சல் தேவதை என்வாசல் வந்தால்.


யுத்தமில்லா உலகம்.
பொறாமையில்லா மனசு.
வியாதி இல்லா உடம்பு
மரணம் இல்லா ஜனனம்
ஊனமில்லா பிறப்பு


அன்புள்ள அறிவு
அறிவுள்ள அன்பு
கருணையுள்ள கடவுள்
கடவுளில்லா கருணை
அன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.


ஹேமா ஏன் பத்து வரங்கள் மட்டுமே?. கேட்பதில் ஏன் கஞ்சத்தனம். நூறு வரம் கேட்போமே.

Wednesday 9 September 2009

எங்கிருந்தோ வந்தார்.......



குருசாமிக்கு ஒரு அறுபத்தைந்து வயது இருக்கும். ஒரு "லொடகனி" சைக்கிளை மிதித்துக் கொண்டு சரியாக வீட்டில் எட்டு மணிக்கு ஆஜராகி விடுவார். எந்த வேலைக் கொடுத்தாலும் செய்வார். அவருக்கு ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபாய் கொடுத்து விடவேண்டும். (வேறு ஒரு வீட்டில் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தால் அந்த வீட்டிற்கு சென்று விடும் அபாயமும் உண்டு). தினக் கூலி தான். ஆனால் வேலைக்கு வராமல் இருக்க மாட்டார். அவரது மனைவி அவரிடம் போட்ட நிபந்தனை அப்படியாம். வீட்டில் சும்மா இருக்கக் கூடாது, வெளியே போய் தினமும் சம்பளம் கொண்டு வரவேண்டும். அவர் மின்சாரத்துறையில் ஒயர் மேனாக இருந்து ஓய்வு பெற்றவர்.

குருசாமிக்கு, தங்கமணி வேலை கொடுக்கும் நேரம் தொடரும் சம்பாஷனைகள் எனக்கும் குழந்தைகளுக்கும் நல்ல பொழுதுபோக்கு.

தங்கமணி: குருசாமி மொட்டை மாடியில் நிறைய தண்ணி ஊத்தி கழுவிட்டு, அப்படியே கடைக்கு போய் இந்த மாவு அரைச்சுகிட்டு வாங்க.

பிறகு அதை அவர் செய்யும் பொழுது ஏதோ முனுமுனுத்து கொண்டு செய்வார்.
வெகு நாட்கள் வரை அவர் என்ன முனுமுனுக்கிறார் என்று தெரியவில்லை.

தங்கமணி: குருசாமி என்ன முனுமுனுக்கிறிங்க, சம்பளம் பத்தலை என்றால் சொல்லுங்க.
அவர்பாட்டுக்கு தன் வேலையை தொடர்ந்து முனுமுனுத்துக் கொண்டே செய்துக் கொண்டிருப்பார். வெகு நாட்களுக்கு பிறகுதான் தெரிந்தது, அவர் நாம் சொல்லும் வேலையை மறக்காமல் இருப்பதற்காக அதை திரும்ப சொல்கிறார் என்று.

ஒரு முறை நான் ஊருக்கு போய் திரும்பி வந்து, காலையில் என்னுடைய பெட்டியையும், பையையும் குழந்தைகள் அறையில் வைத்திருந்தேன். என் மனைவி அந்தப் பைகளை பரணையில் வைக்கச் சொல்லி குருசாமியிடம் சொன்னாள்.

அவர் குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளையும் சேர்த்து மேல வைத்து விட்டார். பிறகு என்ன, குழந்தைகளுக்கு ஸ்கூல் பஸ் வந்தவுடன் பைகளைதேடி காணாததால் ஒரே களேபரம்தான். அரைமணி கழித்துதான் எனக்கு தோன்றியது அவர் பரனையின் மேலே வைத்திருக்கலாம் என்று, பிறகு குழந்தைகளை நான் வண்டியில் பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு விடும்படி ஆகிவிட்டது.

தங்கமணி, என்ன குருசாமி நேற்று வேலைக்கு வரவில்லை, நான்தான் வரசொல்லியிருந்தேனே என்றால் பதில் சொல்ல மாட்டார். நாளைக்கு கட்டாயம் வரீங்களா இல்லே உங்க மனைவிக்கு போன் செய்யட்டுமா, என்றாலும் பதில் சொல்லமாட்டார்.

சரியான அழுத்தகாரர். சிலநாள் சம்பள முன்னதாகக் கேட்பார், கொடுத்தால் ஒரு நான்கைந்து நாட்களுக்கு நம்ம வீட்டுப் பக்கம் வரமாட்டார். பக்கத்து வீட்டில்தான் வேலை செய்தாலும், நாம் கூப்பிட்டால் அவர் காதில் விழாது.

அவருக்கு வேலை எங்கும் இல்லை என்றால் நம்ம வீட்டில் சொல்லாமலே வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்.

ஆனாலும் எடுபிடி வேலைக்கு எங்களுக்கு இவரை விட்டால் ஆளில்லை.

இவ்வளவு இருந்தும் குருசாமி எங்கள் வீட்டில் ஒரு அங்கத்தினர், வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு வந்து தன்னால் ஆன உதவிகளை செய்யத் தயங்கமாட்டார்.

Tuesday 8 September 2009

வேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நேரம் பருந்து என்று நினைப்பதுண்டு


இது தான் சம்பந்தப் பட்ட நடிகரின் நிலை
ஐம்பது படத்தில் எவ்வளவு படம் லாபத்தை சம்பாதித்தது நினைத்துப் பார்த்தாரா?
ரஜினியே நுழையத் தயங்கும் ஒரு இடம்
இவர் தன்னை ரஜினிபோலும், எம்.ஜி. ஆர். போலும் நினைத்துக்கொண்டு செயல் படுகிறார்.
இவர் தன்னைப் பற்றி விளம்பரம் செய்துகொள்வது அவருக்கே தெரியும, கடைந்தெடுத்த பொய் என்று.
குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடியவேரெல்லாம் மக்கள் தொண்டு என்று வைத்தால் புலியூர் சரோஜாவும், கலாவும், சுந்தரமும், ராஜுவும், பிரபு தேவாவும் தான் இன்று முதல் அமைச்சர் ஆகியிருப்பார்கள்.
நம் தலைவிதி என்ன செய்வது.
அரசியலுக்கு வர தகுதி தேவையில்லை.
ஆனால் இவரை வருவதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
அப்பொழுது தான் தமிழ் திரை உலகம் நல்லப் படங்களை பார்க்க நேரிடும்.

வாழ்க ஜன நாயகம், வாழ்க அரசியல், வாழ்க வளமுடன்.

Monday 7 September 2009

பாரதி இன்று இருந்தால் (முண்டாசு கவிஞனே மன்னிப்பீராக)


காதலிலே நற் கலவியுண்டாம்.
கலவி முடிந்தபின் பிரிவும் உண்டாம், "கர்ப்பமுமுண்டாம்"
ஆட்கொல்லி “எய்ட்சும்” உண்டாம் ஆதலினால்,
"காண்டமுடன்" கலவி செய்வீர் இவ்வுலகத்தீரே.
எந்தப் பரங்கித் தலையனடா என் கவியை
விளம்பரத்திற்கு உபயோகித்தது,
போங்கடா.........
தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்,
மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்.

Friday 4 September 2009

பால்காரி- பாரிஜாதம்


காலையில் எழுந்ததும்
உன் முகம்
காணாமல் விடியலுக்கு
அர்த்தம் தெரிவதில்லை

எந்தன் பால்
கொண்ட அன்பால்
நீ கொண்டு வரும் பால்
காய்ச்சப் படும் பொழுது
உன் அன்பு அப்பால்
போவதாக உணர்கிறேன்.

உன் நினைவில்லா
நாட்கள் ஒருக்காலும்
பிறந்ததில்லை
என்னுடன் நீ
இருந்தால் நான்
இழந்த கால்கள்
என்னோடு இணைகின்றன.

என் கால்கள்
என்னுடன் இணைய
நம் ஜாதி பேதம்
நாலு கால்கள்
கொண்டு நாட்டை
விட்டே ஓட வேண்டும்.

என் ஓட்டம்
எந்நாளும் இயலாது
நாலு கால்களின்
ஓட்டம் நடக்கும்
நாள் எப்பொழுது.

கொல்லிமலை மல்லிகா


கொல்லிமலை குமரியவள்
அல்லிபோல் சிரிக்கிறாள்
வெள்ளி முளைக்கையில்
அள்ளி அணைத்தால்
துள்ளி விளையாடுவாள்
கள்ளி வாடி என்
மல்லி என்றழைத்தால்
எள்ளி நகையாடுகிறாள்
புள்ளிமான் கண்களால்
தள்ளி நிற்கும் கணவனைக் காட்டி.

Thursday 3 September 2009

அனுஜாவின் காதல்-.உறவுகள் வேண்டாமடி பாப்பா


அண்ணா எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது, எவ்வளவு நல்லவன். அண்ணா நீ இல்லாத பொழுது ஒரு தடவை கூட அவன் இந்த அறையினுள் வந்ததில்லை. நீ இல்லை என்று சொன்னால் அவன் திரும்ப போய் விடுவான்.

யாரைச் சொல்கிறாய் அணு.

அதான் அண்ணா உன்னோடு, அடிக்கடி நம் வீட்டுக்கு வருகிறானே.

என்னோடு நிறையபேர் வருகிறார்கள் யாரைச் சொல்கிறாய் நீ.

சனிக்கிழமைகளில் அவன் கட்டாயம் வருவான் அண்ணா, அவன் தலை முடிகூட நன்றாக திருத்தப்பட்டு, கொஞ்சம் ஒல்லியாக இருப்பானே.

ஒ விநோதைச் சொல்கிறாயா. ஆமாம் அவன் நல்லவன். எனக்கும் நல்ல நண்பன்.

அண்ணா நீ அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறாயா?

ஒ அடிக்கடி சென்றிருக்கிறேன்.

அண்ணா அவனைப் பற்றி சொல்லேன்.

ஏன் எதற்கு கேட்கிறாய்?

ஒன்றுமில்லை தெரிஞ்சிக்கத்தான்.

அணு இதைச் சொல்லும் பொழுது உன் கண்கள் விசாலமாகிறது, ஏதோ நடக்குது.
போ அண்ணா....................

சரி அணு நாளை அவன் வருவான் அப்பொழுது அறிமுகப் படுத்துகிறேன். நீயே அவனிடம் பேசிக் கொள். ஆல் தி பெஸ்ட். ஒரு தங்கை கடலைப் போடுகிறாள்.
போ அண்ணா......

வினோத் நீ அனுஜாவைப் பார்த்திருக்கிறாயோ. அணு இங்கே வாயேன், இது தான் என் நண்பன் வினோத்.

ஹாய் வினோத்.

ஹாய் அனுஜா.

சரி வினோத், அணு பேசிக்கொண்டிருங்கள், நான் இதோ வருகிறேன்.

அனுஜா வினோத் இப்பொழுது காதலிக்கிறார்கள். இரண்டு வருடம் கழிகிறது. வீட்டில் கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கிறது.

அனுஜாவின் அம்மா அணுஜாவிடம், அவன் வீட்டில் யார் யார் உள்ளார்கள்.?

ஏன் கேட்கிறாய் அம்மா? யாரிருந்தால் என்ன? எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது.

கேட்பதற்கு பதில் சொல்.

அவனுக்கு மூன்று தங்கைகள், அம்மா இருக்கிறார்கள், அப்பா இறந்து விட்டார். இவன்தான் அந்த வீட்டில் சம்பாதிப்பவன். அண்ணா மாதிரியே இந்த வயதிலேயே நல்ல வேலையில் இருக்கிறான். மேலும் அவன் மிகவும் நல்லவன் அம்மா. அன்பு என்கிறாயே அந்த வீட்டில் வந்துப் பார் தெரியும். இந்த வீட்டில் அண்ணாவை தவிர யார் என்னைப் புரிந்திருக்கிறார்கள். அப்பாவும், நீயும் என்னோடு எப்பொழுதாவது பிரீயாகப் பேசியிருக்கிறீர்களா? அப்பாவிற்கு எப்பொழுதும் பிசினஸ் தான்.

சரி அவனை நீ கல்யாணம் செய்து கொள்ள நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். அப்பா கட்டாயம் சம்மதிக்க மாட்டார்.

ஏன் அம்மா?

அதெல்லாம் உனக்குத் தெரியாது. அக்கா தங்கை இல்லாதப் பையனாகப் பார்த்து காதலி, கட்டி வைக்கிறோம்.

அம்மா உனக்கும் அப்பாவிற்கும் இதெல்லாம் புரியாது. நீங்கள் பணத்திற்கும் வசதியான வாழ்க்கைக்கும் வேண்டி, உறவை எல்லாம் துறந்து விடுவீர்கள்.

நான் வாழ்ந்தால் அவனோடுதான்.

Tuesday 1 September 2009

கொடநாடு அம்மா


எடுப்பேன் கவிழ்ப்பேன்
என் முடிவு எப்பொழுதும்
எரியும் என் நெஞ்சினால்
எடுக்கப் படுபவை,
என்னை எதிர்ப்பவர்களை,
ஏறி மிதிப்பேன்,
என்னை வணங்குபவர்களை,
எப்பொழுதும் காலடியில் வைப்பேன்,
என் முடிவிற்கு எதிர் முடிவில்லை,
என் முடிவு "உடன் பிறவா" உடன்
எடுக்கும் முடிவு, தோல்வி என்றால்
எங்களுக்கு இருக்கு கொடநாடு.