Pages

Friday 26 February 2010

நான்தான் கட்சி, நானே எல்லாம்


இடம்: கோயஸ் தோட்டம் அம்மா, உ.பி.ச தீவிர சிந்தனையில் இருக்கின்றனர்.
ஓ.பி, கம்பிதுரை, வெங்கோட்டையன் பரபரப்புடன் உள்ளே பம்மி பம்மி என்ட்ரி கொடுக்கிறார்கள்.

மூவரும் காலில் விழுகின்றனர்.

அம்மா வணக்கம்மா.

அம்மா அலுப்புடன், “ஓ.பி வெங்கு, கம்பி வாங்க கொஞ்சநேரம் நிம்மதியா இருக்க வுட மாட்டீங்களா”.

அதில்லம்மா, நீங்க இல்லாம ஒடனாட்டில, மரம், செடிஎல்லாம் துளிர் உட்டுப் போச்சும்மா.

ஆமாம் கவனிக்கலேன்னா காடு மாதிரி தான் வளரும், அதுக்கு என்ன ஓ.பி.

அங்க அப்படின்னா கட்சியிலே இலை பட்டுப் போயிட்டிருக்கும்மா,

செங்கு என்ன பேத்தறீங்க.

அது என்னான்னு தெரியலேமா, உங்க முன்னாடி அப்படித்தான் வருகுது.

நம்ம ஆளுங்க எல்லாம் எதிர் கட்சியிலே என்ட்ரி உட்டுக்கினே இருக்காங்கம்மா.

சரி அதுக்கு இப்போ என்ன?, நீங்களும் போகனுமா, “போங்க நான்தான் இந்தக் கட்சி, இந்தக் கட்சிதான் நான்”. கூட உ.பி.ச,

ஐயோ அது இல்லம்மா, நாங்க எப்பவும் உங்க காலடிலதான் இருப்போம்மா.

அந்த குஸ்.வி. சேகர், பயம்கொண்டான், சுனிதா ராதாகிருஷ்ணன் எல்லாம் எதிர் கட்சி பொதுக் கூட்டத்துக்குப் போய் உங்களைப் போட்டுக் குடுக்கிராங்கம்மா.

அதெல்லாம் நாம ஆட்சிக்கு வந்தவுடனே பிடிச்சி உள்ளப போட்டுடலாம்.

அம்மா, ஜனங்க இந்த தடவ நம்ம இலைக்கு தண்ணி ஊத்தமாட்டாங்க போல தெரியுதுமா,

சும்மா வாய மூடுங்க, எல்லாம் எலெக்ஷன் சமயத்துல லட்டு கொடுக்கலாம். அடுத்த சி.எம், நான்தான் போய் வேலயப்பாருங்க.

Thursday 25 February 2010

தனிமை


வெறிச்சோடும் வீடு,
மழலைகள் இல்லா நிசப்தம்
பேச்சில்லா தனிமை
ஒலிக்காத தொலைபேசி
பார்வையின் வெறுமை
ருசிக்கா உணவு
போதும் போதும்
தனிமையிலே இனிமை
என்று சொன்னவன்
பொய்யே மொழி
கொண்ட கவிஞன்.


ஓயாத பேச்சுடனும்
கொஞ்சும் சிரிப்புடனும்
மழலைகளின் குழல்
தனிமை கண்டதுண்டு
அதில் இனிமை இருக்குதடி
நம் தனிமை கண்டு
கவிதை சொல்லும்
கவிஞன் உண்மையை
ஊரறிய உரைக்கிறான் .

Sunday 21 February 2010

குடி கொடுத்த(கெடுத்த) கோமான்


இன்னாடா கவாலி இந்தா லேட்டா வர.

ஏன் இன்னா மேட்டரு, கடிய இஸ்து பூட்டிட்டானுன்களா பாடுங்க

அது ஒன்னியும் இல்ல மச்சி, எம்மா நேரந்தான் சர்க்கடிக்காம குத்த வச்சு குந்திக்கினுகீது.

சரி சரி, விரசா போய், க்வாட்டரு வாங்கிக்கின்னு வந்துடு, தோ முநியம்மக்கிட்ட ரெண்டு முட்ட தோசை சொல்லிடுறேன்.

ஏண்டா கவாலி, அது இன்னிடா வியா எடுத்தானுங்கோ, அப்பாலே அடிச்சிக்கரானுங்கோ, ஒன்னியும் பிரிலபா.

ஹஹான்பா இப்போ எங்கியப் பாரு, தல, தளபதி, ஜாக்காறு, தலிவருன்னு ஒரே அலம்பல் உட்ரானுங்கோ.

இவனுங்களுக்கு வேறு பொயப்பில்லபா இன்னா செயவானுங்கோ, அதான் பிகுருங்கள வச்சிக்கினு பிலிம்
காட்ரானுங்கோ. அப்பாலே அச்சிகிரானுங்கோ.

அத்தே விடு, கையிலே இன்னாபா சீட்டு வச்சிக்கினுகிரே,

நம்ம டாஸ்மாக் தொகீது பாரு இந்ததேதியில்லாம் மூடி நமக்கு ஆப்பு வக்கிரானுங்கோ கவாலி.

ஜனவரி 26, 30
மார்ச் 22
மே 1
ஜூலை 14
ஆகஸ்ட் 15
செப்டம்பர் 3,14
அக்டோபர் 2,8
நவம்பர் 9

இந்த சீட்ட ஏம்பா எம் முவத்தாண்ட காட்டி மேர்சல் செய்றே.

அது இல்ல கவாலி நம்மகண்டி தலிவருக்கு ஒரு வியா எடுத்து “குடி கொடுத்த கோமான்” ன்னு ஒரு பட்டம் கொடுத்தொம்னு வச்சிக்கோ அல்லா நாளும் கடிய தொரப்பாருபா.

அடபோபா நம்மகிட்டே டான்ஸ் ஆடுறே பிகுருங்க இல்லிய, அதுக்கு எங்கப் போவுதாம்.

இன்னா சொல்லிகினே நீ, நம்ம காசிமோடு கனகாவ வுட்டு கூத்து கட்டினா போவுது, “சும்மா சித்தாள கூட்டிகிட்டு செவுரோரம் சாச்சிக்கிட்டுன்னு” கனகா அப்படி ஆடிக்கிச்சின்னு வச்சிக்கோ அல்லாசனமும் அப்படியே சரக்கு உடாமே மப்பாவும். தலிவரு அப்படியே ஆடாம குந்திக்கின்னு சிரிச்சிகினு இருப்பாரு, அப்பாலே கடிய அல்லாநாளும் தொரப்பாரு.

அதுகண்டியில்ல அல்லாருக்கும் டிவி குடுக்கிராறு,நிலம் குடுக்கிராறு மவராசான், நமக்கு இலவசமா தெனிக்கும் ஒரு க்வார்டரோ,ஹாபோ குடுப்பாருபா.

Saturday 20 February 2010

நல்லாசிரியையுமாய்.............


ஹைதராபாத்: 15 வயதே ஆகும் மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கல்யாணமும் செய்து கொண்ட 22 வயது ஆசிரியையால் ஆந்திராவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோமட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ரம்யா (22). அனுமகொண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் நாகேசுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.
நாகேஷின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், 15 வயதே ஆன எங்களது மகன் நாகேஷை ஆசிரியை ரம்யா மயக்கி கெடுத்துவிட்டார். நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை நஞ்சை விதைத்துள்ளார். மைனர் வயதுடைய என் மகனை கடத்தி திருமணம் செய்த ரம்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகேஷை அவனது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் நான் ரம்யாவுடன்தான் வாழ்வேன். எங்களை பிரித்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினான். இருந்தாலும் விடாமல் காரில் ஏற்றி அவனை கூட்டிக் கொண்டு போய் விட்டனர் பெற்றோர்.


சமீபத்தில் வந்த செய்தி, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இரு வீட்டிலும் எதிர்ப்புக்குப் பின் இருவரும் ஊரை விட்டு ஓடி வேறு ஊரில் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை ஒரு மன இயல் ரீதியாக ஆராய்வோம்.

பதினைந்து வயது சிறுவன், முடிவெடுக்க முடியாத வயது. பெரும்பாலும் பருவ உணர்ச்சிகளால் உந்தப் படும் மனது. பார்ப்பவர்கள் எல்லாம் தனது மனைவியாக நினைக்கும் வயது. சொல்லப் போனால் எந்தப் பெண் வேண்டுமானாலும் இந்த நிலையை உபயோகித்துக் கொள்ளக்கூடிய பற்றிக்கொள்ளக்கூடிய "பஞ்சு"

இப்பொழுது நெருப்பைப் பார்ப்போம்.

கல்வி கற்றுத்தர வந்தவர்,
கற்றுக் கொடுத்தது முறையற்ற "காதல்". இருபத்திரண்டு வயதில் ஓரளவுக்கு மனது பண்பட்டு இருக்க வேண்டும். இவரது உந்துதல் குடும்ப சூழ்நிலையாக இருக்க வேண்டும். திருமணம் என்பது கேள்விக் குறியாக, தன் நிலைமை குறித்த சந்தேகம் இருந்திருக்கவேண்டும்.


இப்பொழுது ஆண்துணை, தான் ஆளுமை செய்ய ஒரு ஆண் (சிறுவன்).

அல்லது இந்த வயதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஒரு பாதுகாப்பு வடிகால் என்று நினைத்திருக்கக் கூடும்.

இதையே ஒரு ஆசிரியன் மாணவியை கூட்டிக் கொண்டு ஓடி திருமணம் செய்திருந்தால் சட்டம் என்ன செய்திருக்கும், ஆசிரியன் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான்.

ஆணிற்கு பெண் சரி நிகர் சமானம் என்று எவன் சொன்னது. போங்கப்பு.

Sunday 14 February 2010

அம்மா வந்தாள்


அஜயும், அம்ருதாவும் வீட்டில் நுழையுமுன் அந்தக் கடிதத்தை கண்டனர்.
அஜய் உனக்குத்தான் கடிதம் என்றாள் அம்ருதா.
அஜய் கடிதத்தைப் படித்தான்.
“அம்மு எங்க அம்மா இங்க வராங்க, ஏதோ ஒரு உறவினரின் திருமணமாம், அதை முடித்து விட்டு என்னுடன் இந்த வீட்டில் தங்கப் போவதாக எழுதியிருக்கிறாள்”.
“ஓ அப்படியா” என்றாள் அம்ருதா.
“என்ன அப்படியா, நீ அந்த ஒரு வாரம் ஏதாவது தோழிகள் வீட்டில் தங்கிக் கொள்”.
“என்ன அஜய் விளையாடற எனக்கு யார் தோழி இங்கே இருக்காங்க, ஒன்று செய்யலாம் அந்தக் கடைசி ரூமில் ஒரு சிங்கள் கட்டில் வாங்கிவிடுவோம், அம்மா இருக்கும் ஒரு வாரம் நான் அங்கே உறங்குகிறேன்”.
“அது செய்யலாம் அம்மு, ஆனால் எங்க அம்மா படிக்காதவளே தவிர நல்ல புத்திசாலி, நம் உறவைக் கண்டு பிடித்து விடுவாள்”.
“அஜய் நீயே அம்மாவிடம் நான் இந்த வீட்டை ஷேர் செய்து கொள்கிறோம் என்று சொல்லிவிடு”.
“கேட்காமல் வலியப்போய் பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை அம்மு”.
“அம்மா ரொம்ப சாமர்த்தியமானவள் எப்படியாவது கண்டு பிடித்து விடுவாள். மேலும் நாமோ திருமனம் செய்துக்கொள்ளப் போவதில்லை. இங்கு இருக்கும் வரை ஒரு வருடம் அல்லது எத்தனை வருடமோ ஒன்றாக இருக்கப் போகிறோம். நீதான் முதலிலேய சொல்லிவிட்டாயே அம்மு “லிவிங் டுகதேர்” என்று. அம்மா இதையெல்லாம் ஒத்துக்கொள்ளமாட்டாள்”.

அம்மா வந்து ஒரு வாரம் தங்கி விட்டு சென்றாள். இருந்த ஒரு வாரமும் அஜயுடனும் அம்ருதாவுடனும் நன்றாகப் பேசினாள், ஆனால் அஜயிடம் அம்ருதாவைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை.

அஜய் அம்ருதா காலை உணவின் போது அந்த இரண்டு பாத்திரங்களைத் தான உபயோகிப்பார்கள், அது அம்ருதா வாங்கியது.. அந்தப் பாத்திரங்கள் அம்மா ஊருக்கு சென்ற நாள் முதல் காணவில்லை.

அஜய் எப்படி அம்மாவிடம் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

பிறகு அம்மாவுக்கு கடிதம் எழுதினான். “அம்மா உன்னை கேட்க எனக்கு தயக்கமாக இருக்கிறது, நீ எடுத்துக்கொண்டு போயிருக்கமாட்டாய் என்று தெரியும், ஆனால் நீ வந்து போன பின்பு அந்த பாத்திரங்களைக் காணவில்லை”

இரண்டு நாட்கள் கழித்து அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது.

“அந்தப் பாத்திரங்கள் அவளின் கட்டிலின் தலையணைக்கு அடியில் தான் உள்ளது, எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதியிருந்தாள்.

புரிந்தவர்கள் வோட்டைப் போடுங்கள்(பின்னூட்டமும் போடுங்கள்), புரியாதவர்கள் வோட்டைப் போட்டு பின்னூட்டத்தில் கேளுங்கள் புரிய வைக்கிறேன்.

{மின்னஞ்சலில் வந்த ஒரு கருவை வைத்து எழுதியிருக்கிறேன்).

Friday 12 February 2010

ஆதலினால் (தினம்) காதல் செய்வீர்


காதலிலே மானுடற்கு கலவியுண்டாம்
கலவியிலே மானுடற்கு கவலை தீரும்
காதலினால் மானிடற்கு கவிதையுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்
பாரதி பரிந்துரைக்கும் ஆதலினால் காதல் செய்வீர்

ஒரு தலைக் காதல், முக்கோணக் காதல்
பேசி காதல், பேசாக் காதல்
சொல்லி காதல், சொல்லாக் காதல்
எல்லாக் காதலும் காதலில் அடங்கா

ஊன் உயிரை உருக்கி உணர்வுகள் பெருக்கி,
உள்ளத்திலே உவகை கொண்டு
நேசிப்பவளை நேசித்து,
என்னுள் நீ, உன்னுள் நான்
உலகம் நீ என உணர வைத்து
செல்வம் எல்லாம் செல்லா காசாக
செருக்குடன் அகலும் பொழுது
உண்மை காதல்
உணர்ச்சிகள் அடங்கும் நேரம்
ஊரறிய புறப்படும்.





உண்மைக் காதலுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் அன்றோ.

Thursday 11 February 2010

கவிதை என்று எதை சொல்வது?


கவிதை என்று எதை சொல்வது?
வார்த்தைகளைக் கோர்த்து வடிவமைத்து
பொருளிலே உட்பொருள் வைத்து
விளங்கச் சொல்வது கவிதையா?, இல்லை

வார்த்தைகளின் தொடர்பறுத்து,
உரை நடையை உடைத்துப் போட்டு
வாசகனின் மூளையை வறுத்தெடுத்து
விளங்காத புதிர் செய்வதையா?, இல்லை

“தளை” பார்த்து “சீர்” அமைத்து
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்
வெண்பா, கலிப்பா என கிண்டி
புரியாத புதிர் செய்வதா? , இல்லை

யாப்பிலக்கணம் பொருந்தாத
வசனக்கவி, புதுக் கவிதை
ஹைக்கூ, லிமரிக் வடிவ
எளிய வார்த்தைக் கோர்வைகளா?, இல்லை

கந்தனைகான கார்த்திகைக்கு வந்தேன்
உன்னைக் கண்டேன் ஊருக்கு செல்லேன் என்ற
நாட்டுப் புறக் கவிஞனின் எளிமையான
புரியும் மண்வாசக் கவிதைகளா? இல்லை,


குனிந்து நிமிர்ந்து கூடம் பெருக்கினாள்,
கூடம் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு
என்ற நகர நையாண்டி வகை
புதுக் கவிதைகளா? இல்லை,

எழுதும் கவிஞனின் அறிவும்
எளிமையான வார்த்தைகளும்
நயம் கொண்டு சேர்த்து
வாசகனின் எண்ண ஓட்டத்தில்
நிலைத்து நிற்கின்ற
சலனத்தை கொடுக்கும்
கவிதைகளா?
கவிதை என்று
எதை சொல்வது?

Wednesday 10 February 2010

சரோஜாவின் விளக்கம்


சரோஜாவிடமிருந்து வந்த பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்த பதிலை சற்றும் எதிர் பார்க்க வில்லை.

“இதைவிட சுலபமான வழி இருக்கா நீ சொல்லு என்றாள். நீ இத்தனை படிச்சிட்டிருக்க வேலை தேடுற, இன்னி தேதிக்கு நீ சம்பத்திக்க முடியாதத நான் சம்பாதிக்கிறேன்” என்றாள்.
என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இந்த பதிலின் நதிமூலம் வேண்டும் என்றால் என்னுடைய சுய சரிதையை நீங்கள் கேட்கவேண்டும்.

பட்டப் படிப்பை முடித்து வேலை தேடும் காலம் அது. என்னுடன் நண்பன் சங்கரும் தினமும் வேலைக்கு மனு போட்டுக் கொண்டிருந்தான். எவனும் வேலைத் தருவது மாதிரித் தெரியவில்லை.

தினமும் நான் காலை உணவை முடித்துவிட்டு சங்கர் வீட்டுக்கு போய் விடுவேன். அவன் இல்லை என்றாலும் அவன் அம்மா சங்கர் வந்துருவாண்டா நீ உட்கார் என்று கதவை திறந்து விட்டு அவள் சென்று விடுவாள். அவளுக்கு பக்கவாதம் வந்து கைகளும் கால்களும் செயலிழந்து, இப்பொழுது தான் ஓரளவுக்கு நடக்க ஆரம்பித்திருக்கிறாள்.
சங்கர் வந்தவுடன் நானும் அவனும் சிறிது நேரம் சதுரங்கம் ஆடுவோம். பின்பு பேசிக்கொண்டிருப்போம். மாலையில் தெருக்கோடி டீ கடையில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம்.

சங்கர் வீட்டின் எதிர் வீடு பெரும் பாலும் காலியாகவே இருக்கும். அதனுடைய சொந்தக்காரர் திருச்சியிலோ தஞ்சாவூரிலோ எங்கேயோ இருந்தார். சமீபத்தில் அந்த வீட்டில் ஒரு குடும்பம் குடி வந்தது. ஒரு கணவன் மனைவி, இரு குழந்தைகள், மற்றும் ஒரு இளம் பெண். அவள் அந்த மனைவியின் தங்கை போலும்.

இவளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பதிவுப் போதாது. நல்ல அழகி. மா நிறத்தவள். இவளின் அழகிற்கு இன்றைய திரை நடிகைகளின் அழகு உரை போடக் காணாது. இதற்கு மேல் இவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை. தமிழின் வளம் இங்குக் கேள்விக்குறியாகிறது.?

இரவு நேரங்களில் இவள் வீடு விழிக்கும். தினமும் ஒரு இரண்டு மூன்றுக் கார்கள் வரும். எங்கள் தெருவிற்கு கார்கள் வருவது அதிசயம். இதற்கு மேல் அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று சொல்ல அவசியமில்லை.

எனக்கும் சங்கருக்கும் சரோஜா மேல் ஒரு அனுதாபம் ஏற்பட்டது, இவள் அக்கா கணவன் இவளை தப்பாக உபயோகிக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

சரோஜா மதிய நேரங்களில் நாங்கள் சதுரங்கம் விளையாடும் நேரம் சங்கர் வீட்டில் திண்ணையில் அமர்ந்துக் கொண்டு எங்கள் விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பாள்.

பெரும்பாலும் நாங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவோம், அவள் இருப்பதை கண்டு கொள்ள மாட்டோம்.

அன்று பாதி விளையாட்டில் சங்கர் பால் வாங்க கடைக்கு சென்ற பொழுது, சரோஜா என்னிடம் பேச்சைத் தொடங்கினாள்.

நான் என்ன படித்திருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று தொடங்கியப் பேச்சு அவளைப் பற்றிய திரும்பிய பொழுதுதான் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அந்தப் பதில் கிடைத்தது,

Tuesday 9 February 2010

அண்டவீட்டு நெய்யே, என் பெண்டாட்டி(கள்) கையே


கண்ணுக்கும் மனதிற்கும்
நடிகைகள் உபயத்தில்
கனிவான விருந்து
கலாச்சாரம் கைக்குட்டை
கட்டிய ஆட்டம்
அன்டவீட்டு நெயை
பெண்டாட்டி(கள்) கையால்
அள்ளி ஊற்றி அனைவரும்
மகிழ விழா, எண்ணிய கருமம்
நிறைவேறிய நிம்மதி,
கலைஞர்களை அடிமைப்படுத்திய
சாணக்கியம்,


நாட்டு மக்கள் நலனறிய
நாளை புறப்படுவோம்
உடன் பிறப்புகள்
வட்டம் மாவட்டம்
மாண்புமிகுக்களுடன் சென்று
மக்கள் குறை களைய
மண்டியிட்டு கேட்போம்
மிக்க குறை என்றால்
தக்க ஒப்பந்தம் போட்டு
பொற்குவை நிறைப்போம்
நலிந்த தமிழன்னைக்கு
நெடிய விழா எடுத்து
அடுத்து வரும் தேர்தலிலும்
அள்ளிடுவோம் அனைத்து
அரசவைத் தொகுதிகளும்
இத்துனையும் செய்ய
நிதி நிலை பற்றாக்குறை
நிலவரமேன்று உண்டியல்
குலுக்க உடன் பிறப்புகளே
உடனே சீர் கொண்ட
சிங்கமெனப் புறப்படுங்கள்
நிதி நிறைந்தோரிடம்
பொற்குவையும்
நிதி குறைந்தோரிடம்
காசுகளும் அடித்து
கதியிழந்து தவிக்கும்
தமிழ் மக்களுக்கு
சிறிது கொடுத்து
பெரும் புகழ் ஈட்டுவோம்
வாழ்க (கேனத்) தமிழன்!!!!

Monday 8 February 2010

ஜே.பி. (பால்யநண்பன்)


இரண்டு வருடம் கழித்து விடுமுறைக்கு தாய் நாடு திரும்புகிறேன். நான்கு மணி நேர விமானப் பயணம். அருகில் என்னைப் போல் தாய் நாடு திரும்பும் இரண்டு புதுவை யுவதிகள். விமானம் கிளம்பும் முன்னே ஆரம்பித்த பேச்சு ஓய்ந்த பாடில்லை. ஒரு நிமிடம் கூட கண்ணை மூடவில்லை. ஒரு வழியாக தூங்கு மூஞ்சியுடன் வீடு சேர்ந்தேன். என் மகள் நன்றாக உறங்கிவிட்டாள்.

வரவை எதிர் பார்த்திருந்த பெற்றோர்கள், சகோதர சகோதரிகளுடன் பேச்சு, இரண்டு வருடக் கதையை இரண்டு மணியில் பேசி அவர் அவர்கள் கடமையாற்ற கிளம்பிவிட்டனர். என் மகள் பிரயாணக் களைப்பில் நான் அப்புறம் சாப்பிடுகிறேன் என்று உறங்கிவிட்டாள். அம்மாவுடன் காலை உணவை முடித்து விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அம்மா மனைவி குழந்தைகள் பற்றி விசாரித்தாள், எப்பொழுது அவர்கள் வருகிறார்கள் என்றாள். பெரியவனுக்கு இப்பொழுது பரீட்சை நேரம்மா, முடிந்தவுடன் அவர்கள் அடுத்த வாரம் வருவார்கள் என்றேன். சிறிது நேரம் தூங்குகிறேன்” என்று அறைக்குள் நுழைந்தேன். அம்மாவும் சிறிது நேரம் தூங்குகிறேன் என்று ஹால் சோபாவில் உறங்கப் போனாள்.

கண் அசரும் நேரம் அழைப்பு மணி அழைக்கவே எழுந்தேன், ஹாலைக் கடக்கும் பொழுது அம்மா யாரவது சோப்பு விற்பவர்கள் ஆக இருக்கும், நீ போய் உறங்கடா, இரண்டு முறை மணி அடித்துவிட்டு அவர்களே போய் விடுவார்கள் என்றாள். விடாமல் மணி ஒலிக்கவே நான் கதவைத் திறந்தேன்.

சார் “வீட்டுல பண்ண பிஸ்கட் முறுக்கு எல்லாம் இருக்கு, வாங்கிக்கங்க என்றான்” அழைப்பு மணி அடித்தவன்.
அதற்குள் அம்மா அதெல்லாம் வேண்டாம்பா, போன முறை வாங்கியதே இன்னும் யாரும் தின்னாமல் கிடக்கிறது” என்றாள்.
நான் அவள் பேச்சை கேட்காமல் ஒரு இரண்டுப் பாக்கட் வாங்கினேன். முதல் முறை என்னை நிமிர்ந்துப் பார்த்தவன் இந்த முறை பாக்கெட்டை கொடுத்து பணத்தை தலையை குனிந்து கொண்டுதான் பெற்றுக் கொண்டான். அவன் என்னை நோக்குவதை தவிர்ப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. எனக்கு அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது, என் பால்ய சிநேகிதன் ஜே.பி. அவன் முழுப் பெயர் ஜ. பாலகுமார். அவன் வாழ்ந்த வாழ்க்கை என் மனதில் ஓடியது. மிகவும் பெரிய பணக்கார வீட்டுப் பையன் அவன். பள்ளியின் மதிய இடைவேளையில் நாங்கள் கொண்டு வந்த உணவை அவன் வீட்டில் வைத்துதான் உண்பேன், அப்பொழுது அவன் தாத்தா நான் திண்ணையில் தனியாக உண்பதைக் கண்டு ஜே. பியைக் கடிந்துக் கொண்டு என்னையும் அவனுடன் உண்ண வைப்பார். மிகப் பெரிய வீடு, தோட்டம் துரவேல்லாம் இருக்கும், அவன் வீட்டு மாட்டுக் கொட்டகை அளவிற்குத்தான் என் வீடு இருக்கும். அவனுக்கு ஒரு தங்கையும் இரண்டு தம்பிகளும் உண்டு. அவர்கள் வீட்டில் எனக்கு ராஜ மரியாதை தான்.

பின்பு நான் உயர் பள்ளி, கல்லூரி என்று வேறே இடத்தில் படித்ததால் அவனைக் காணுவது மிகவும் அபூர்வமாகிவிட்டது. மேலும் நான் கல்லூரி சென்றவுடன் நாங்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் குடி புகுந்தோம். அவனை நான் பார்த்து வெகு வருஷங்கள் ஆகிவிட்டது.

இப்பொழுது அவனை பார்த்ததும் என்னால் அடையாளம் காண முடிந்தது. அவன் வீடு வீடாக சென்று முறுக்கு விற்கும் அளவிற்கு வந்தது எனக்கு வேதனையாக இருந்தது. கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்கிறார்களே, என்னைக் கேட்டால் அதைவிடக் கொடுமை எல்லாம் அனுபவித்து விட்டு ஒன்றும் இல்லாதவனாக ஆகிவிடுவது என்பேன். அவனை பார்த்து அவன் கஷ்டத்தைக் கேட்டு என்னால் எதாவது செய்ய முடியுமா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து அவனை தெருமுனையில் சந்தித்தேன். ஜே.பி என்னை அடையாளம் தெரிகிறதா என்றேன். ஏண்டா தெரியாம எப்படிட இருக்க என்ன பண்ணுகிறாய் என்று என்னைக் கேட்டான். என் கதையை சொன்னேன். அம்மா அப்பா தங்கை தம்பிகள் எப்படிடா இருக்கிறார்கள் என்று கேட்டேன்.

இரண்டு தம்பிகளும் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார்கள், கல்யாணம் ஆகிவிட்டது அவர்களுக்கு என்றான். தங்கை உமா எப்படி இருக்கிறாள் என்றேன். அவள் கல்யாணமாகி தாம்பரத்தில் இருக்கிறாள் என்றான். அப்பா இறந்து விட்டாராம், அவனும் அம்மாவும் தனியாக இருக்கிறார்களாம்.

அவன் அப்பா அவன் தாத்தா வைத்துப் போன சொத்தையெல்லாம், கிண்டி, பெங்களூர் என்று ஊர் ஊராக சென்று குதிரை மேலேக் கட்டி ஒழித்துவிட்டாராம், அவருடைய நடத்தைப் பிடிக்காமல் படிப்பிலும் கவனம் செலுத்தாமல் பாதியிலேயே ஜே.பி படிப்பை நிறுத்தி விட்டான். அவன் அம்மா தன் நகைகளை விற்று தங்கைக் கல்யாணத்தை எப்படியோ முடித்திருக்கிறார்கள். தம்பிகள் இருவரையும் அம்மாவும் இவனும் சேர்ந்து படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிரார்கள். ஆனால் அமெரிக்கா சென்று அங்கேயே திருமனம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார்களாம். இங்கு வரவே இல்லையாம். எப்பொழுதாவது போன் செய்து அம்மாவுடன் பேசுவார்களாம். ஆனால் இவர்கள் பொருளாதார நிலமைத் தெரிந்து கொண்டதுபோல் இது வரை காட்டிக் கொன்டதில்லையாம்.
ஏண்டா உனக்கு இதை நினைத்து வருந்துவதில்லையா என்று அடக்க முடியாமல் கேட்டேன்.
இல்லைடா நானும் அம்மாவும் இப்பொழுது ஏதோ வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.. எங்கள் சொத்து போனவுடன் அம்மா எப்படி நான்கு பேரையும் கரை சேர்க்கப் போகிறோம் என்று புலம்புவாள். இப்பொழுது தம்பிகள் இருவரும் செட்டில் ஆகிவிட்டார்கள். உமாவும் ஓரளவுக்கு சுமாராக செட்டில் ஆகிவிட்டாள், அடிக்கடி எங்களை வந்துப் பார்த்துப் போவாள். இப்பொழுது வரும் வருமானம் எங்கள் இருவருக்கும் போதுமானது என்றான்.

கடைசியில் அடக்க முடியாமல் ஏண்டா கல்யாணம் பண்ணிக்கவில்லையா என்று கேட்டுவிட்டேன்.

இல்லைடா, எனக்கு அந்த நினைப்பு இல்லை, மேலும் திரும்ப குழந்தை குட்டி என்று அவர்கள் படிப்புக்கு என்னால் ஓட உடம்பிலும் மனசிலும் வலுவிருக்குமா தெரியவில்லை என்றான்.

ஜே. பி உன்னை என்ன என்று சொல்வது தெரியவில்லை. அவன் தம்பிகளை நினைத்தேன், வெறுப்பு முட்டியது.

கண்ணதாசனின் “அண்ணன் என்னடா” பாடல்” ஏனோ நினைவுக்கு வந்தது.

Sunday 7 February 2010

சாக்கடை வெள்ள சருகு


கரியக் கூந்தல் நடனமிட
கன்றுக்குட்டிக் கண்கள் போதையூட்ட
அபரிமித அழகு ஆர்ப்பரிக்க
அறிவுச்சுடர் தெறித்து எழ
நடையின் நளினம் நான்முகனின்
நல்ல படைப்பாற்றல்
அறிந்துக் கிறங்கும் வேளையிலே
இரவில் உன்முகம் புலப்படாது
மாறும் ஆண்களின் முகங்களின்
பறைசாற்றிய உண்மையின் தாக்கம்
எரியும் நெஞ்சை விட்டு ஒழித்தாலும்
சாக்கடை வெள்ளத்தில்
அமிழவும் முடியாமல்
குத்தி மேலெழுந்து
தத்தளிக்கும் சருகு.

Friday 5 February 2010

அச்சம், மடம், நாணம், பருப்பு மன்னிக்கவும் பயிர்ப்பு


முதல்வர் கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா, பாவனா மற்றும் ப்ரியாமணிக்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்ஸி அறிவித்துள்ளது.

செய்தி



ஏம்மா திரிஷா, நீங்க ஊரெல்லாம் பார்க்க குளிப்பீங்க ஆனால் எங்க தலைவர் பங்கேற்கிற நிகழ்ச்சியிலே குத்தாட்டம் போட மாட்டீங்களா. எங்கள் தமிழ் கூறும் நல்லுலகமே எவ்வளவு ஆவலா காத்திருக்கு. மேலும் ஓய்வுக்கே ஓய்வு குடுக்கிற பெரியவரை இப்படியா அவ மரியாதை செய்வது. நாட்டின் வளர்ச்சி, விலைவாசி, தண்ணீர், மின்சாரப்ரச்சினை போன்ற எத்துணைக் கடமைகளை விட்டு இங்கு உங்களைக் காண வருகிறார். என்ன ஒரு அநியாயம், குத்தாட்டம் போட மாட்டீங்களா. உனக்கு திரைப்பட சம்மேளனம் கொடுக்கிற தண்டனை போதாது இந்தா வாழும் வள்ளுவானந்தா சாபம் குடுக்கிறாரு "இனி நீ குளிக்கும் குளியரைக் கதவுகளில், தாழ்ப்பாளே இருக்கக் கூடாது".



பாவனா நீங்க பேட்டை விட்டு பேட்டை வந்து பொழைச்சிட்டு எங்கள் தலைவருக்கு முன்னழக கட்ட மாட்டீங்களோ, வள்ளுவானந்தா சாபம் இட்டார்ணா நீ அம்பேல். இந்தா உனக்கு சாபம் "உன் முன்னழகு காற்று போன பலூன் போல ஆகக் கடவாய்”.



ஸ்ரேயா நீ தலைவருடன் நடிச்சா இன்னா பெரியா ..........பாநீ. அச்சம், மடம், நாணம், பருப்பு மன்னிக்கவும் பயிர்ப்பு என்ற நான்கு வித குணங்களை கொண்ட எங்கள் தமிழ் நாட்டிற்கு பிழைக்க வந்து எங்கள் தலைவருக்கு நாங்கள் எடுக்கும் விழாவிலே தொடை கறி படைக்க மாட்டிங்களா. என்ன ஒரு துரோகம். “இனி உன் தொடையிரண்டும் கருத்து, சொறி பிடித்து, காலான்குப்பம் சொறி நாய் போல் ஆகக் கிடவாய்”.



ஏம்மா ப்ரியா நீ ஆந்த்ராவுக்கேல்லாம் புல் ஆந்த்ரா மீல்ஸ் படைப்பே, எங்க தமிழினத்தலவருக்கு ஒரு ஹாப் பாயில் கூடக் கிடையாதா. என்ன ஒரு தமிழனுக்கு செய்யும் துரோகம், அவமானம். இதை இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது. இந்தா பிடி வள்ளுவானந்தா சாபம், " இனி நீ குளிக்கும் காட்சியிலும் முழு உடை அணிந்து, கறுப்புக் கவசம் அணிந்து கருங்குரங்கு போல் தெரிய வேண்டும், உன் முன்னழகு பின்னழகாகவும், பின்னழகு முன்னழகாகவும் ஆகக் கடவாய்".


இந்த தமிழனுக்கு நேர்ந்த அவமானத்தை கண்டித்து, நாளை தொடக்கம் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை அனைத்து தமிழர்களும், இன்ன பிற வெட்டிகளும் நாலு வேளை நன்றாகத் தின்று, தூங்கி, கலைஞர், சன், ராஜ், விஜய், பேஷன், ஸீ, இன்னும் மற்ற பிற பிட்டு காட்சி டிவி நிகழ்ச்சிகளைக் காணும் அறவழிப் போராட்டம் நடத்தப் படும்.

Thursday 4 February 2010

அறியாமை பிழைக்கட்டும்


அப்பன் வியர்வை கைப் பையில்
அம்மா அறிவுரை அவளிடம் விட்டு
அவளின் ஒரே நகை கவர்ந்து
கனக்கும் பையில் உடைகளுடன்
காலை கதிரவன் விரியும் முன்பு
காதலனுடன் காணாமல் போவதற்கு
கால் வலிக்க ஓட்டம், தொடர் வண்டி
நிறுத்தம் நெருங்கி, சில்லறை கொடுத்து
சீட்டெடுத்து, இருக்கையில் அமர்ந்து,
வரச் சொன்னவன் வரவை எதிர்
நோக்கி, விழியிரண்டும் வழிவைக்க
இதயம் இறைந்து களைக்க,
இடது புறம் புறப்பட்டு, விரையும்
தொடர் வண்டியில் கட்டழகியின்
இடுப்பனைத்து எதிர் புறம் நோக்குபவன்
ஒன்றும் அறியாதிருந்த என்னை
இத்துணை தூரம் கொண்டு...
அவளிடம் அறியாமையாவது
பிழைக்கட்டும்.

Wednesday 3 February 2010

கடமைக்கு அவன், இவன், எவன்..........................


கண்மணிகளே உடன் பிறப்புகளே ரத்தத்தின் ரத்தங்களே மேலும் என்னை வாழ வைத்து என் பெரிய, சிறிய, நீள, மற்றும் அகல முதலிய எல்லாக் குடும்பங்களையும் வாழ வைக்கும் தொண்டரடிப் பொடிகளே, வீழ்வது தமிழாக இருப்பினும் வாழ்வது என் குடும்பம் ஆக இருக்கும் என மன்னா, சிறியார் பாசறையிலே புழன்ற நான் உங்களிடம் சூளுரைக்கிறேன்.

ஈழ மக்களின் துயர் போக்க மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தியேழு மடல்கள் வரைந்து அவர்கள் கதையை இனிதே முடித்தேன். மேலும் அவர்கள் குற்றுயிரும் கொலைஉயிருமாய் இருந்த பொழுது காலையில் பன்னிரண்டு இட்லி வடைகரியுடன் உண்டு, மதிய உணவு வரை உண்ணாவிரதம் இருந்து நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு அருந்தொண்டாற்றினேன். இதை உணராத பேடிகள் கயமை பேசி என் மீது காரி உமிழ்ந்து வெஞ்சினம் தீர்க்கிறது.


நமது விவசாயிகள் பாசனத்திற்கு காவிரி நீர் இல்லாமல் எலிக்கறி உண்ட பொழுது, எட்டாயிரத்து நானூற்றி எட்டு மடல்கள் என் ரத்தத்திலே தோய்த்து எழுதி, பின்பு தலைநகராம் டில்லிக்கு கோமகன் கொழுகிரியும், வீரப் பெண் மொழிமனியும், பின் வருமா, மாலு, கூஜா போன்ற கழக கண்மணிகளையும் உடன் அனுப்பி பிரதமரிடம் காவிரி நீர் இல்லா விடினும் ஒரு பெருச்சாளி கறிக்காவது வழி செய்து கொடுங்கள் என்று மன்றாடி ஒரு லட்சத்தி அறுபதாயிரம் விவசாயிகளுக்கு நான்கு லட்சத்தி எண்பதாயிரம் பெருச்சாளிகளை பிடித்துக் கொடுத்து அவர் தம் கண்ணீர் பெருக வழிவகை செய்தேன்.


எதிர் கட்சிகள் நான் இந்த அருந்தொண்டாற்றியதை பாராமல் ஒடனாட்டிலே ஒண்டிகுடித்தனம் செய்து ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவதை இத்தமிழ் கூறும் நல்லுலகம் நம்ப மறுக்கிறது.


தமிழனுக்கு ஒரு தீங்கு வரும் என்றால் என் குடும்பம் கொதித்தெழுந்து கும்மியடித்து டெல்லி புறப்படும். அங்கு உதி”ரம்” குடித்து கும்மாளமிட்டு தமிழர் துயர் தீர்க்க பாடுபடும்.


இதையெல்லாம் புரியாமல் பேசும் புல்லுருவிகள் கலை நிகழ்ச்சி காண்பதில் குற்றம் சொல்கின்றன. இந்த தள்ளாத வயதிலும் எனது கலையுலகக் கண்மணிகள் விழா எடுக்கும் வேளையிலே என் கடமையாற்ற ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து இதோ உங்கள் முன் நிற்கிறேன், மன்னிக்கவும் அமர்ந்திருக்கிறேன்.


கலையுலகம் இப்பொழுது நம்மிடையே குத்தாட்டம், வெத்தாட்டம் என்று தங்கள் திறமைகளை மறைக்காமல் நம்மிடையே காட்டி, ஆடை அகற்றியவள் அருந்தமிழள் என்று புது மொழி கூறி என்னை கௌரவிக்க இருக்கிறார்கள். கண்மணிகளே மன்னா, சிறியார் வழியே வந்த நாம் கலைக்கு அருந்தொண்டாற்றுவோம்.


போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் என்னை இந்த கடமை உணர்ச்சி ஆற்றுவதை தடுக்க இயலாது என்று கூறி, வருகின்ற முதலமைச்சர் மாநாட்டிலே எனக்கு பதில் அருமைத் தம்பி துணை அமைச்சர் கலந்து கொண்டு உங்கள் துயர் தீர்க்க என் கடமை ஆற்றுவார்,

வீழ்க தமிழ், வாழ்க என் குடும்பம்.

(தட்றான் பாருங்க வெறும் பயலுக)

Tuesday 2 February 2010

ங்கொயால சிங்கமில்ல நாங்க........................


சென்னை: அதிமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடப்பது அதிகரித்துவிட்டது.

எங்கம்மா இவனுங்களுக்கு இவ்வளவு தெகிரியம் வந்தது?. காலிலே விழுந்தவனுங்க எல்லாம் இப்போ கதவு வரைக்கும் வந்ததுட்டானுங்கோ. உஷாரா இல்லேன்னா இப்படிதாம்மா நிஜார் வரைக்கும் வந்துடுவானுங்கோ.

கொடனாடுலேயே கொடிய நட்டுக்கின்னா இவனுங்க அப்படித்தான் அரிப்பெடுத்து எந்தப் பக்கம் போவலாமுன்னு நோட்டம் வுடுவானுங்கோ.

உங்கள் நிலைமை, ரொம்ப பெஜாருதான். நடவடிக்கை எடுத்தா அத்தினி பெரும் அறிவாலயம் பக்கம் போய்டுவாங்க. அங்கே ஆளு சேர்க்க ஒரு கூட்டமே கதவாண்டே காத்திருக்காங்க.

இல்லேன்னா கருப்பு எம். ஜி. ஆர் குடும்பக் கட்சியில கப்புன்னு க்வார்ட்டர் உட்டுக்கின்னு கமுக்கம் ஆயிடுவாங்க.
ஆனாக்க பாருங்க இதிலே நீங்க சந்தோசமா இருக்கு ஒரு மேட்டர் இருக்கு, மருத்துவர் அய்யா பக்கம் எவனும் திரும்ப மாட்டேன்றானுங்க.

டெல்லி போனா அந்தம்மா டீ குடிக்கவே பயப்படுறாங்க. டெல்லி பக்கமும் ஒன்னும் பேர மாட்டேங்குது. இன்னா செய்வீங்க பாவம்!!!!!!!!!!!!. விதி வலியது?.

கதவாண்ட கத்திக்கினு இருக்கிறவன்களிலே, உ.பி.ச ஆளுங்க இருக்குறானா பார்த்துக்குங்க.


எதுக்கும் உ.பி.ச குடும்பத்தாண்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க. உங்க மத்தளத்துக்கு எல்லாப் பக்கத்திலே இருந்தும் இடிதான். இன்னா பண்ண.

(அன்றாயர் போட்டுகின்னு ஒரு நிருபர் வந்து சுளுக்கு எடுப்பாரு, அவராண்ட உசாரா இருங்க.)


ஆணைப் படுத்தா, எலி எங்கெல்லாமோ ஏறி விளயாடுமாம், எதொம்மா சொல்றதே சொல்லிட்டோம், பாத்து சூதானமா நடந்துக்கங்க.


இல்லேன்னா கட்சி தாராந்து போய்டும்.

Monday 1 February 2010

ஏ. ஆர். ரஹ்மான்


ஏ.ஆர். ரஹ்மானின் கிரீடத்தில் மற்றும் ஒரு ரத்தினம் பொறிக்கப் பட்டுள்ளது. கிராம்மி விருது இரண்டு வகையில் கொடுக்கப் பட்டுள்ளது. முதலில் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள். (மாஷா அல்லாஹ்)

அந்த வகையில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படவேண்டும். ரஹ்மான் எங்கள் ஊர்காரர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தமிழ் இசை உலகம் பல அறிய மேதைகளை சந்தித்திருக்கிறது.

முதலில் ஜி. ராமநாதன்.
இவரது இசைப் புலமை மிகவும் பிரசித்தம். குறைந்த பக்க வாத்தியங்களை வைத்துக் கொண்டு பல அருமையானப் பாடல்களை தந்தவர். உத்தம புத்திரன், தூக்கு தூக்கி பாடல்கள் இதற்கு எடுத்துக் காட்டு. அனைத்துப் பாடல்களையும் ஹிட் ஆக்குவதை தொடங்கிவைத்த மாமேதை.

அடுத்து இசை உலக இரட்டையர் என்று அழைக்கப் பட்ட விஸ்வநாதன் -ராமமூர்த்தி.தமிழ் இசையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள். சுத்தமான கர்நாடக இசையுடன் மேற்கத்திய இசையையும் கலந்து ரசிகர்களை ஒரு இருபது முப்பது வருட காலம் கட்டிப் போட்டவர்கள்.

இவர்களுடைய இசைக்கு நிறையப் படங்களை சொல்லலாம். காதலிக்க நேரமில்லை, பாலும் பழமும், பாவமன்னிப்பு, காத்திருந்தக் கண்கள், சுமைதாங்கி.
கர்ணன் படம் எடுக்கும்பொழுது பி;ஆர். பந்துலு அவர்கள் ஜி. ராமநாதனை தான் இசை அமைப்பாளராக முடிவு செய்திருந்தாராம். ஏனெனில் புராணக் கதை என்பதால், ஆனால் ராமநாதன் இரட்டயரிடம் கொடுக்க சொன்னாராம். பாட்டுகள் அனைத்தும் ஹிட் ஆனது.

இந்த சமகாலத்தில் வாழ்ந்து ஒரு தனி பாணியில் இசை அமைத்த மற்றுமோர் இசை மேதை கே.வி. மகாதேவன்.

திருவிளையாடல், கொஞ்சும் சலங்கை போன்ற படங்களின் பாடல்களை எல்லாம் ஹிட் செய்தவர். மேலும் புரட்சித் தலைவரின் நிறைய படங்களுக்கு இசை அமைத்தவர். தாய் சொல்லைத் தட்டாதே,தர்மம் தலைகாக்கும் போன்றவை.

கிட்டத்தட்ட எழுபதுகளில் இளையராஜா என்னும் மற்றுமோர் மாமேதை தமிழ் திரைப் பட இசையை ஒரு புதிய பரிமாணத்தில் கொடுத்து பல எண்ணற்ற ரசிகர்களை தன் இசையால் கட்டிப் போட்டவர். வட நாட்டவரையும் தமிழ் திரை இசைப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

அன்னக்கிளியில் தொடங்கி, பதினாறு வயதினிலே, கோழிகூவுது, நாயகன், நிழல்கள், ராஜாதி ராஜா, இதயம், ஜானி போன்ற ஐந்நூறுக்கும் மேற்பட்டப் படங்களில் இசையமைத்து பல கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுத்தவர். இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். இவர் இசை பின்னர் கடல் கடந்து சிம்போனி என்று பல பரிமாணங்களைத் தொட்டது.

இவருடைய இசைப் புலமை இவரது வாரிசுகளிடம் இல்லை. ஏழை கிராமத்து இளைஞன் இவ்வளவு சிகரங்களைத் தொட்டது இவரது இசை வேட்கைக்கு எடுத்துக் காட்டு.

பின்னர் தொண்ணூறுகளில் ஏ. ஆர் ரஹ்மான் இசைப்புயலின் வருகை தமிழ் திரை பட இசையை உலகை நோக்கி பயணிக்க வைக்க தொடங்கியது. ரோஜாவில் தொடக்கமே சின்ன சின்ன ஆசை என்று தொடங்கி எல்லோரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். தீவிர என் போன்ற இளையராஜா ரசிகர்களை பொறாமைப் பட வைத்தார். இவர் தொடர்ந்து கொடுத்த புதிய முகம், காதலன், ஜென்டில்மேன், கருத்தம்மா, பாம்பே என்று தொட்டதெல்லாம் தன் வித்தியாச இசையால் மின்ன வைத்தார். தயாரிப்பாளர்கள் இவர் வீட்டில் இரவுப் பகலாக காத்திருக்க ஆரம்பித்தனர். மிக விரைவில் இந்தி தயாரிப்பாளர்களை சென்னைப் பக்கம் வரவைத்தார்.

பின்பு வந்தேமாதரம் என்ற ஆல்பம் விற்பனையில் பெரிய சாதனைப் படைத்தது. பாம்பே டிரீம்ஸ் இசை நாடகம் என்ற அடுத்தக் கட்டம், லண்டனில் வாசம். நுர்சத் பதெஹ் அலிகான், என்ற பாகிஸ்தான் இசை மேதையை “ சந்தா சூரஜ் லாகி தாரே “ என்று வந்தே மாதரத்தில் பாட வைத்தார்.

வட இந்தியப் பின்னணிப் பாடகர்கள் தமிழ் இசைக்க ஆரம்பித்தார்கள். அட்னான் சாமியை தமிழ் பாட வைத்தார். சாதனா சர்கத்தின் தேன் குரலை :வெண்ணிலவே வெண்ணிலவே” என்று நம் காதுகளில் பாய வைத்தார்.

இப்பொழுது ஆஸ்கார், கிராம்மி என்று நம் தமிழுக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார்.
இதற்கெல்லாம் ஒரு ஐந்து வருடம் முன்பே “Inside man” என்ற ஹாலிவுட் படத்தில் தொடக்கப் பாட்டு “சைய சையாவை” உபயோகப் படுத்தி இருந்தார்கள்.

வாழ்க ரஹ்மான். உங்களுடைய காலகட்டத்தில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மேலும் பெருமையும் புகழும் சேர்க்கட்டும்.

“இன்ஷா அல்லாஹ்”.