Pages

Tuesday 29 June 2010

எம்மொழி செம்மொழி


கல்தோன்றி மண் தோன்றா காலத்தின்
முன் தோன்றி முதன்மைப் பெற்றாய்
அகத்தியனிடம் தொல்கப்பியனிடமும்
நாம் போற்றிக் கற்க வலிமையுற்றாய்
கம்பனிடம் தவழ்ந்து வள்ளுவனிடம் வளர்ந்து
அவ்வையிடம் அழகு பெற்றாய்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி, குறுந்தொகை
அகநானூறு, புறநானூறு, போன்ற
பூக்கள் சூடி அழகு பெற்றாய்

இயல் இசை நாடகம் என்ற
மூன்று வடிவத்தில் காட்சியுட்றாய்
பாரதியின் மடியில் தவழ்ந்து
புதுப் பொலிவு பெற்றாய்
பாரதி தாசன், மு. வ.
உ.வே. சா, முதலான
எண்ணற்ற தமிழ் ஆர்வலர்கள்
எமக்களித்தாய்
வந்தாரை வாழ வைத்தாய்
உன் பெயர் உபயோகிப்போரை
உச்சத்திலே தூக்கி விட்டாய்

அவர், இவர், என்றால் தமிழ்
தமிழ் என்றால் அவர், இவர்,
என்று எல்லோரையும் உளற வைத்தாய்
செந்தமிழ் நாடு என்ற பொழுது
தேன் வந்துப் பாயும் என்ற சொல்லை
பொய்யென்று போற்றிப் புகழ
கொங்கு நாட்டிலே துகிலுறியப்பட்டாய்

Saturday 26 June 2010

செம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்


செம்மொழி மாநாடு விமர்சையாக கொங்கு நாட்டிலே கொண்டாடப் போகிறோம் என்ற ஒரு செய்தி வெளியான பொழுதே அதற்கான எதிர்மறை கருத்துக்களும் அப்பொழுதே பிறந்துவிட்டன.

எல்லோர் மனதிலும் இருந்த ஐயப்பாடு அகல இதில் தனி மனிதத் துதி இருக்காது என்று நம்பியிருந்தோம். ஆனால் அங்கு நடப்பதை பார்க்கும் பொழுது “இப்பரிசில் வாழ்கை” என நொந்த புலவன் கதை தான் மனதில் தோன்றுகிறது.

கவியரங்கம் என்றப் பெயரில் தமிழ் பெருமைகளை, இல்லை தமிழை அழியாமல் காக்க ஆக்க பூர்வமானக் கருத்துக்கள் தான் கவிதையூற்றிலே பெருக்கெடுத்து ஓடும் என்ற நம் எண்ணத்தில் விழுந்தது அடி.

ஈரோட்டு தமிழன்பன் தொடங்கிவைத்தார். “அவர் நேரடியாகவே கேட்டிருக்கலாம், நீதான் தமிழ், தமிழ்தான் நீ, சில்லறை இருந்தாக் கொடு தலைவரே என்று” அதை விட்டு வேட்டிக் கட்டிய தாய், அவ்வை அதியமான் நெல்லிக்கனி, துப்பின கொட்டை(கள்) என்று, நல்ல காலம் அவ்வையார் காதில் விழவில்லை விழுந்திருந்தால்

எட்டேகால் லட்சணமே
எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே
முட்டமுட்ட கூரையில்ல வீடே
குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னாய் அது

நல்லத் தமிழில் திட்டியிருப்பாள். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

அடுத்தபடியாக நம்ம கவிப் பேரரசு

“உன் வாய் உமிழ் நீர் கூடத் தமிழ் நீர்”, அபத்தத்தின் உச்சக் கட்டம். அதற்கு பதில் “கொடுத்தது போதாது தலைவா கூட்டிக் கொடு” என்று கேட்டிருக்கலாம்.
ஏதோ தமிழ்த் தாய்க்கு நல்ல காலம் மற்ற கழிவு நீரை விட்டானே பாவி என்று தப்பி ஓடிவிட்டாள்.

அப்புறம் வந்தார் ஐயா வாலி என்று ஒரு போலி இவரின் செம்மொழி மாநாட்டு பங்கு அபாரம்.

பூ ஒன்று ப்பூ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது, ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதய சூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது அப்பூ எப்பூ “புடவைக் கட்டிய பூ” அந்தம்மா ஜாக்கெட்டை ஏன் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.

மேலும் நாம் யாருக்கு சொம்பு தூக்குகிறோமோ அவருடைய எதிராளிய ஏதாவது ஏசவேண்டும் என்பது எழுதாத விதி.

அந்த வகைக்கு தன் பங்கில்
புனைந்தான் அய்யா ஒரு பாட்டு, அது செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு, அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு
ஆனால் என் அருமை நண்பர் சோவுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யா நோக்கு அது அய்ய நோக்கு அல்ல “அய்யர்” நோக்கு.

இதற்கு முதல்வர் விழுந்து விழுந்து சிரித்தார்.
என்ன ரசனை, செம்மொழி மாநாட்டிலும் சாதி வெடி கொளுத்தியாகிவிட்டது.

நான் மாநாடு நடத்துவதை குறை சொல்லவில்லை. நடத்திய விதம் நடத்தப் படும் நோக்கம் இதைப் பற்றிதான் சொல்கிறேன்.

ஒனாண்டி கவிஞர்களை வைத்து புகழ் மாலை தேவைதானா.

தமிழைப் பாடுங்க என்று ஏன் யாரும் சொல்லாமல் போனார்கள்.

இதற்காக தொடங்கியிருக்கும் வலைமனையில் சான்றோர் என்ற பகுதி நிரப்பப்படாமலே உள்ளது உறுத்துகிறது. இது வரை நான் கவனித்ததில் உருப்படியான ஒன்று புத்தக விற்பனை. (அதிலும் தள்ளுபடி இல்லையாம்)

“நெஞ்சுப் பொறுக்குதில்லையே”

Friday 25 June 2010

பாவி மகள் நினைக்கலையே


என்னுள் உன் உயிர் வாங்கி
என் கருப்பை பொறிக்குள் வைத்து
ஐ இரண்டு மாதம் அனுதினமும்
கையும் வாயும் கட்டி விரும்பிய
உணவு தவிர்த்து, மசக்கையிலே
உன் நலம் விரும்பி உனக்காக,
பத்திய உணவு உண்டு
எட்டி உதைக்கையிலே
தொட்டு உணர்ந்து,
வலி கண்ட பொழுது
என் உயிர் பிடித்து உன்னை
பிள்ளை என கொணர்ந்து
உதிரத்தால் பால் கொடுத்து
பால் பற்கள் முலையில் பதிய
முட்டி முட்டி குடித்த பொழுது
பாவி மகள் நினைக்கலையே
நாடி தளர்ந்து காடு செல்லும் நேரம்
காக்கவேண்டிய காலத்திலே
காப்பகத்தில் விடுவாய் என.

Thursday 24 June 2010

கவரிமான்


“நாங்கள் எல்லாம் கவரிமான் பரம்பரையடா, உன் மாதிரி கைகட்டி சேவகம் செய்யமாட்டோம்”, என்றான் சங்கர்.

நான் பட்டப் படிப்பு முடித்து ஒரு ஐந்தாறு நேர்கானல்களும், பரீட்சைகளும் முடித்து ஒரு வழியாக ஒரு தனியார் கம்பனியில் எனக்கு வேலைக்கிடைத்தது. அதை நான் சங்கரிடம் சொன்ன பொழுதுதான் மேற் சொன்ன வார்த்தைகளைக் கூறினான்.

சங்கர் என்னைவிட ஒரு ஆறு ஏழு வயது பெரியவன், எனக்கு நல்ல நண்பன். அவன் அப்பா நியூஸ் பேப்பர் ஏஜென்ட்டாக இருந்தார். நல்லக் கமிஷன் வந்துக் கொண்டிருந்தது. இவன்தான் வீட்டிற்கு முதல் பையன். மூன்று தங்கைகளும் இரண்டு தம்பிகளும் உண்டு. கிட்டத்தட்ட எங்கள் வீட்டிலும் அதே உறுப்பினர்கள்தான். நான் வேலைக்கு போக வேண்டியக் கட்டாயம். பட்ட மேல் படிப்பு படிக்க ஆசையிருந்தும் வசதியில்லாத காரணத்தினால் படிக்க முடியவில்லை. கிடைத்த வேலையில் சேர்ந்துவிட்டேன்.

சங்கர் அவன் அப்பாவிற்கு உதவியாக அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் ஒரு இரண்டு மூன்று மணிநேரம்தான் வேலை. விடியற்காலையில் எழுந்து செய்தித்தாள்களை எல்லாக் கடைகளிலும் போடுவது வேலை. மாத முடிவில் கலெக்ஷன் என்று ஒரு இரண்டு மூன்று நாட்கள் இரவு பகலாக வசூல் செய்வான். மற்ற நாட்களில் பகல் பொழுது வெட்டிதான். என் வார விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்துக் கொள்வோம்.

பின்பு நான் வெளிநாட்டிற்கு பிழைக்க வந்து கல்யாணமாகி, குழந்தைக் குட்டிகளுடன் அங்கேயே தங்கிவிட்டது சரித்திரம். ஆனால் ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் பொழுதும் சங்கரை போய் பார்க்காமல் இருக்கமாட்டேன். சங்கருக்கு ஒரு பையனும் பெண்ணும் இருந்தனர். அந்த விடுமுறையில் நான் அவன் வீட்டிற்கு போயிருந்த பொழுது சங்கர் வீட்டில் இல்லை. அவன் மனைவி என்னிடம் புலம்பினாள். நியூஸ் பேப்பர் ஏஜன்சி இப்பொழுது இல்லை என்றும், அவர்களிடம் வேலை செய்தவன் இவர்களை ஏமாற்றி அதை எடுத்துக் கொண்டு, இப்பொழுது குடும்பம் சிக்கலில் இருப்பதாகவும் கூறினாள்.

இவருக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்களேன், உங்கள் ஊரில் வாங்கிக் கொடுத்தால் கூட பரவாயில்லை என்றாள். அன்று நான் சங்கரை வெளியே அழைத்துக் கொண்டு வேலை ஏதாவது தேடுகிறாயா என்று வினவினேன். அவன் தன வறட்டு கௌரவத்தை விடவில்லை. "போடா நான் யாரிடமும் வேலைக்குப் போகமாட்டேன், பெண்டாட்டி நகைகளை விற்று "அச்சகம்" வைக்கப் போகிறேன்" என்றான். நான் வயதாகிவிட்டால் வேலைக் கிடைப்பது குதிரைக் கொம்பு என்று சொன்னாலும் கேட்கவில்லை.


அச்சகம் மற்றொரு ஒருவனிடம் சேர்ந்து வைத்ததில் நஷ்டம் ஏற்பட்டு, அச்சகத்தை விற்று அந்தப் பணத்தையும் மற்றவன் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டான். சங்கரின் மனைவி எப்படியோ துணிக் கடையில் வேலை செய்து பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து விட்டாள். பெண்ணிற்கு கல்யாணமாகி அமெரிக்கா சென்றுவிட்டாள்.

நான் இரண்டு மூன்று வருடங்களாக ஊருக்கு செல்ல வில்லை. சமீபத்தில் நான் விடுமுறையில் ஊருக்கு சென்ற பொழுது சங்கரை காண அவன் வீட்டிற்குப் போனேன். மிகவும் சோர்ந்து போய் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். அவன் மகனும் மருமகளும் வேலைக்கு செல்ல தயாரகிக் கொண்டிருந்த்தார்கள். நானும் சங்கரும் வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லாமல் மையமாக சிரிதுக்கொண்டிருந்தான். அவன் நிலை எனக்கு பரிதாபமாக இருந்தது.

அவன் மருமகள் வெளியே வந்து காரை நோக்கிவிட்டு தன் கணவனை விளித்தாள். "எங்க இங்கப் பாருங்க மாமா கார் தொடைச்சிருக்கிற அழகை, டயர் எல்லாம் அழுக்கா இருக்கு. நல்லா கீழே படுத்துக் கொண்டு சுத்தம் செய் என்றால் செய்கிறாரா?, இந்த அழகில் நண்பனுடன் எண்ணப் பேச்சு வேண்டியிருக்கு இந்த ....க்கு அவள் பிரயோகித்த ஒரு சொல் என் காதில் தெளிவாக விழுந்தது, சங்கரை பார்த்தேன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டிக் கொள்ளவில்லை.


அப்பொழுது சங்கரின் மனைவி மீனா வெளியே வந்தாள். அவளின் தோற்றம் மிகவும் என்னை வருந்த வைத்தது. கிட்டத்தட்ட அந்த வீட்டின் வேலைக்காரி போல இருந்தாள். அவர்களது மகன், மருமகள் இருவரும் வேலைக்கு கிளம்பி வீட்டின் வாயிலைக் கடக்கும் பொழுது அவர்கள் வீடு நாய்க் குட்டியிடம் "பை ஜிம்மி" என்று சொல்லிக் கொண்டு காரிலேறி போய் விட்டார்கள். இந்த ஜிம்மியின் பொதுப் பெயரைத் தான் அவள் தன் மாமனாருக்கு அடைமொழியாக்கினாள்.


சங்கரின் மனைவி தன் கணவரின் நிலை பற்றி வருத்தப்பட்டாள். தினமும் இந்த வார்த்தைகள் இவர் காதில் விழுவதில்லை, எனக்கு அடுப்படியில் இருந்தாலும் எல்லாம் தெளிவாக விழும், என்ன செய்வது, நாங்கள் இப்பொழுது அவர்கள் தயவில் இருக்கிறோம், சொத்து எதுவும் இல்லை.


நான் எனக்குத் தெரிந்த ஒருவரின் கல்யாண மண்டபத்தை பார்த்துக் கொள்ளும் வேலை இருக்கிறது, சங்கரை கேட்கலாமா என்று அவளிடம் சொன்னதற்கு, திரும்ப அதே பல்லவியைத்தான் பாடுவார்.

என்ன இப்பொழுது "கவரிமானிற்கு" காது கேட்பதில்லை என்றாள், அந்த விஷயத்தில் அவர் கொடுத்து வைத்தவர் என்றாள்.

Wednesday 23 June 2010

இந்நாட்டு மன்னர்கள்


நாட்டு நலன் நாமறியோம்
வீட்டு நலன் விட்டொழியோம்
கோட்டை கட்டி குடியிருப்போம்
“ஓசோனில்” ஓட்டை அடிப்போம்


ஏரிகளை வளைத்திடுவோம்
எட்டடுக்கு கட்டிடுவோம்
குடிநீருக்கு குடமெடுத்து
குடும்பத்துடன் அலைந்திடுவோம்.


வயல்வெளி வரப்பு எல்லாம்
வளைத்துப் போட்டு சேர்த்திடுவோம்
அரிசி, பருப்பு, காய்களையும்
அந்நியச் சந்தையில் வாங்கிடுவோம்.


"பார்"ல "பீர்" அடிப்போம்
“கார்””ல சென்றிடுவோம்
சாலை விதி மீறல்களை
காலையிலே விவாதிப்போம்.


தொலைக் காட்சி விட்டொழியோம்
கொலை காட்சி ரசித்திருப்போம்
பல கலைகள் பயில பிள்ளைகளுக்கு
பள்ளிகளை விலைக்கெடுப்போம்.


வரிகொடுக்க அழுதிடுவோம்
வசதிகள் வழங்கா அரசாங்கத்தை
வசைமாரி பொழிந்து
வசதிக்கேற்ப வறுத்தெடுப்போம்.


காசு வாங்கி ஒட்டு போடுவோம்
காலகாலம் புலம்பிடுவோம்
ஓசியிலே சோறு என்றால்
"ஏசி"யிலேத் தின்றிடுவோம்.


அயல் நாட்டுப் பெருமைகளை
அக்கக்காய் அலசிடுவோம்
இந்நாட்டு மன்னரென்று
இறுமாந்து இருந்திடுவோம்.

Tuesday 22 June 2010

செம்மொழியானத் தமிழ் மொழியாம்


செம்மொழி மாநாடு நாளைத் தொடங்கவிருக்கிறது. தமிழுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்று பொறுத்திருந்துப் பார்க்கவேண்டும். முதல்வரே அணைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த விழா வழக்கம் போல “சொம்படிக்கும்” விழாவாக இருக்குமோ என்ற ஐயம் இல்லாமல் இல்லை.

ஏற்கனவே தெருவெங்கும் முத்தமிழ் அறிஞர், சேக்கிழார், பாரிவள்ளல், ஓரி வள்ளல், ராஜ ராஜ சோழன் என்ற பெயர்ப் பலகைகள் பல்லிளிக்கின்றன. இன்னும் என்ன என்ன நாமறியாத, இல்லைக் கேட்ட மோசுக்கீரனார், சீத்தலை சாத்தனார் போன்ற பெயர்களும் தோண்டி எடுக்கப்படலாம்.

சென்னை மேயர் ஒரு படி மேலே போய் தமிழல்லாதப் பெயர்ப் பலகைகளை அகற்றுகிறார். சன் டிவி, க்லௌட் நைன், ரெட் ஜெயன்ட் முதலியவற்றை அகற்றுவாராத் தெரியவில்லை. நட்சத்திர விடுதிகளுக்கும் இதுப் பொருந்துமா? தெரியவில்லை.

இந்த விழாவுக்கு ஆகும் செலவு எவ்வளவு? இப்படி ஒரு விழா அவசியமா? இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள்? அரசாங்க செலவில் தனக்குத்தானே புகழாரமா? இந்த விழாக்களால் தமிழ் வளருமா? என கேள்வி மேல் கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த விழாக்களில் ஆகும் செலவில் நூறில் ஒரு பங்கு அரசாங்க நூலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் தமிழ் வளர தமிழ்ப் புத்தகங்களாக வழங்கப்படுமா? தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா?

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் விடை கிடைக்கும்.

Wednesday 9 June 2010

தமிழகத்தின் செல்லக் குரல்-----------எங்கிருந்து?.......... தொடர்ச்சி


இது வரை வந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் “அல்கா”தான் முதலிடம். வின்னரும் அவர்தான் என்ற கணிப்பு பரவலாக உள்ளது. அவர் கேரளா நாட்டை சேர்ந்தவர்தான் என்பது இப்போதைய சர்ச்சை. இரண்டாவதாக வரப் போகும் ரோஷனும் அந்த வகையே. அனால் இவர்களின் இசைத் திறமை வியக்க வைக்கிறது. “அல்கா” பதினொரு மொழிகளில் பாடி கின்னஸில் இடம் பெற்றிருப்பது கூடுதல் தகவல்.

ஆனால் இவர்களின் தமிழ் உச்சரிப்பை பார்க்கும் பொழுது இவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்வதில் சிறிதளவும் தயக்கம் இருக்காது. இன்று தமிழ் நாட்டில் பிறந்த தமிழ் தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் தங்க்லீஷில் பேசிக்கொண்டு “விலையும் பயிரை முலையிலே” தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனது முந்தைய பதிவில் “ஷான்” கேட்ட கேள்வி சிந்திக்க வைக்கிறது. தமிழன் என்பவர் யார்? தமிழ் நாட்டில் பிறந்தவனா?, தமிழ் படித்தவனா? தமிழில் பேசுபவனா? தமிழ் பெற்றோர்களுக்குப் பிறந்தவனா?

ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் தமிழ் திரையிசையில் கோலோச்சிய சுசீலா, ஜானகி, பி.பி. ஸ்ரீனிவாஸ் எல்லோரும் பிறப்பால் தமிழர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தமிழ் திரை இசைக்கு செய்த சேவை மகத்தானது. மேலும் அவர்கள் வாழ்ந்துகொண்டு சுவாசித்துக் கொண்டிருப்பது “தமிழ்”.

இசை அமைப்பாளர்களில் எம்.எஸ்.வி பிறப்பால் தமிழர் அல்ல, ஆனால் அவரின் திரை இசைச் சேவைக்கு விளக்கம் தேவை இல்லை. அவரும் தமிழரே.

தமிழில் எண்ணற்ற கவிகள் புனைந்த “பாரதி” நம் பார்வையில் தமிழனே. ஆனால் மற்ற குறுகிய எண்ணம் படைத்தவர்களின் பார்வையில் அவர் “வந்தேறி”. அவரது படைப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுவது உலகறிந்த விஷயம். பொதிகை தொலைக் காட்சி தவிர மற்ற தொலைக் காட்சிகள் அவரது நினைவு நாளை நினைவு கூர்வதில்லை.

இரண்டு வருடம் முன்பு தமிழ் நாட்டு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிடவிருந்த வெளியீட்டில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்கள், கலைகள் பற்றிய முன்னோட்டத்தில் இசை விழாப் பற்றிய குறிப்பு அரசியல் தலையீட்டால் நீக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால் நாம் இன்றும்
“காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு,
கலைகளுக்கேல்லாம் தாய் வீடு”
என்று உதட்டளவில் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த பிரிவினை பாகு பாடெல்லாம் யார் விதைத்தது? யார் வளர்த்தது? யார் லாபமடைகிறார்கள்? சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.

எனது முந்தையப் பதிவைப் படிக்க

http://kummacchi.blogspot.com/2010/06/blog-post.html

Tuesday 8 June 2010

தமிழகத்தின் செல்லக் குரல்-----------எங்கிருந்து?


இப்பொழுது பெரும்பாலும் தமிழ் இல்லத்தரசிகளும் அவர்களுடைய கூஜாக்களும், குட்டீஸ்களும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி “ஏர்டெல் சூப்பர் சிங்கர்” தான் என்று தோன்றுகிறது. எந்த ஒரு விழாவிற்குப் போனாலும் மேற்கூறிய நிகழ்ச்சியைப் பற்றிதான் பேச்சு.

சின்னஞ்சிறுசுகள் பாடுவது அற்புதம்தான். இந்த வாரம் தொடக்கம் இறுதிப் போட்டி.

“அல்கா”வின் “என்னை என்ன செய்தாய் வேங்குழலே” என்று தொடக்கத்திலேயே இது ஒரு அசத்தப் போகும் நிகழ்ச்சி என்பதற்கு கட்டியம் கூறும் பாட்டு. அருமையான குரல் வளம். நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

பொடியன் ஸ்ரீகாந்த் “இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை”, வயதுக்கு மீறியப் பாட்டுத்தான். ஆனால் இந்த வயதிற்கு இவ்வளவு பாட்டுக்களை மனனம் செய்து பயமில்லாமல் பாடுவது பெரிய விஷயம். அடுத்த பெரிய பாடகர் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைக்க பலமான வாய்ப்பு.

“ஷ்ரவன்” “பாட்டும் நானே” என்று பாடி தன் திறமையை வெளிக் கொணர்ந்தது அவரது இசைப் புலமையின் “Tip of the ice berg”. இந்த கௌரி மனோகரியை டி.எம். எஸ் கேட்டிருந்தால் கே.வி. மகாதேவனை நினைத்திருப்பார். ஷ்ரவன் எல்லா சங்கதிகளை விடாமல் பாடினதை வியந்திருப்பார். ஜதிகளும் ஷ்ரவனேப் பாடியது கூடுதல் ஆச்சர்யம்.

அடுத்தது நித்யஸ்ரீ “கண்ணோடு காண்பதெல்லாம்” ரசிக்க வைத்தது. நல்லக் குரல், இந்த முறை ஆட்டம் இல்லை. ஆனாலும் அற்புதமான “performance”.
ரோஷனின் “வந்தாள் மகாலக்ஷ்மியே” சிறுவனின் இசைத்திறமைக்கு சான்று. ரோஷனிற்கு நல்லக் குரல் வளம், திறமையாகப் பாடுகிறான். இவனின் “ஆயிரம் நிலவே வா” கேட்ட பொழுதே இவனின் திறமை தெரிந்தது.

இது இறுதிப் போட்டியின் முதல் வாரம். ஆனால் "வின்னர்" யார்? என்பதில்தான் இப்பொழுது சர்ச்சை. தமிழர் இல்லை என்பதுதான் விவாதத்திற்கு முன்னுரை. இதைப் பற்றிய அலசல்தான் அடுத்த இடுகை.