Wednesday 31 March 2010

நியூட்டனின் விதிகள்


உபயம் (மின்னஞ்சல்)


நம்ம பயபுள்ள ஒருத்தனுக்கு ஒரு விபரீத ஆசை. இந்த உலகத்தில ஏதாவது புதுசா கண்டு பிடிச்சு பிரபலம் ஆய்டனும்னு.
ரொம்ப நாளா ரூம் போட்டு யோசிச்சானாம்.

ஒரு நாளைக்கு திடீர்னு துள்ளி குதிச்சு “ நான் கண்டு பிடிச்சிட்டேன் நான் கண்டு பிடிச்சிட்டேன்” னு ஆர்கிமிடிஸ் மாதிரி தெருவில ஓடினானாம்.

எதிர்க்க வந்தவன் நிறுத்தி கேட்டானான் என்னாடா “விஷயம் இந்த குதி குதிக்கிறே”

நியூட்டனின் “LAWS OF MOTION” இன்னும் ஒரு விதி கண்டு பிடிச்சிருக்கேன் அப்படின்னு சொன்னானாம்.

இன்னாடா விதி சொல்லுன்னு கேட்டானாம் எதிர்க்க வந்தவன்.

Loose motion can never be done in slow motion


பயபுள்ள பெருமையா சொன்னானாம்.

“ங்கொக்க மக்கா ஒரு தினுசாத்தான் இருக்கானுங்க.”

ஒரு ரெண்டு நாளா நான் ரூம் போட்டு யோசிச்சு இதை எப்படி நம்ம தமிழ் பாடத்தில கொண்டு வருதுன்னு கண்டு பிடிச்சிட்டேன்.

“வைத்தால மெதுவா(ல) தான் போக முடியும்”.

“பதிவர் சங்கத்து ஆளுங்க அடிக்க வரானுக ஓடு ஓடு”

“சும்மா சிரிச்சுபுட்டு வோட்டப் போடுங்க, தவறாம பின்னூட்டமும் போடுங்க, உங்களுக்கு நியூட்டனின் புதிய விதி பிரச்சனை வராம எல்லா சாமியாருங்களும் அருள் புரிவாங்க”.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 30 March 2010

யானைப் படுத்தா, எலி ஏறி.....................


யானைப் படுத்திடுச்சு, எலி ஏறிடுச்சு

ஒன்னும் இல்லைங்க நம்ம பென்னாகரம் முடிவை நினைத்து வந்த நெனப்புதான்.

சூரியன் முதலிடம்
மாம்பழம் இரண்டாமிடம்
இலை மூன்றாமிடம் (டெபாசிட் வேற காலி)

யாரும் “பணநாயகம்” வென்றது, “ஜனநாயகம்” தோற்றதுன்னு குரல் விடமுடியாது. எல்லாக் கட்சியும் பணப் பட்டுவாடா பலமா செய்ததா தொகுதி பக்கம் சொல்லிகிறாங்க. தேர்தல் “கங்காணி” என்ன செய்துகொண்டு இருந்தார்னு விவரம் இல்லை.


தி.மு.க. வெற்றி ஒன்றும் ஆச்சர்யமில்லை. (கொஞ்ச நஞ்சமா செலவு பண்ணியிருக்காங்க). ஆனா அவங்க யாரு இரண்டாவதா வரக்கூடாதுன்னு நினைத்தாங்களோ அவங்க வந்தது அடுத்தகட்ட சச்சரவுக்கு வழி.


தேர்தலில் நின்ற முப்பத்தியொரு வேட்பாளர்களில் இருபத்தி ஒன்பது பேருக்கு டெபாசிட் காலி. இது நம்ம பண்டைய கால மன்னர்கள் போரில் “முதுகில்” வேல் பாய்வதற்கு சமம். இதில் இருபத்தியேழு சுயேச்சைகளை விட்டு விடுவோம், அவர்கள் அதற்காகவே நிறுத்தி வைக்கப் பட்டவர்கள். மேலும் அவர்கள் ஏதாவது ஒரு பிரதானக்கட்சியின் பலிகடாக்கள். ( வோட்டை பிரிப்பதற்கு)

மற்றைய இரண்டு அவமானத்திற்கு உரியவர்கள், புரட்சிதலைவிக் கட்சி வேட்பாளரும், புரட்சிக் கலைஞர் கட்சி வேட்பாளரும். (முதலில் இரண்டு பேரும் என்ன புரட்சி பண்ணாங்கன்னு தெரியலை அதை விட்டுவிடுவோம்).

பு.க. கட்சிக்கு வருவோம், இவர் வாய் உதார் எடுபடலேன்னு தெரியுது. வேற எதாவது வீட்டுலே அம்மணியக் கேட்டு புதுசா செய்யணும். (மச்சானை மறந்துடாதீங்க, உலகத்திலேயே ரொம்ப முக்கியமான உறவுங்க)

பு. த. தோல்வி புடனியில விழுந்த அடின்னு நான் சொல்லலை அரசியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க. (அப்படி இருக்காங்களா?).
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஊடால குண்டு வைக்க முடியாது. ஒரு முறை போய் பாட்டியைப் பார்த்து தோல்விதான். இப்பொழுதுக்கு கொடநாட்டில போய் குப்புறப் படுத்து குமுறி குமுறி யோசிக்கணும். எதிரி வெளியிலே இல்லை, கூடவே இருக்காங்க. கொடுத்த பணத்த ஒழுங்கா பட்டுவாடா பண்ணாம “சந்துல சிந்து பாடினதா” தொகுதியில பேசிக்கறாங்க, இன்னா விஷயம்னு பார்க்கணும். மொத்தத்தில் வோட்டு வங்கியில தாத்தா “ஆட்டைய” போட்டுட்டாரு.

யானைப் படுத்தா எலி ஏறி விளையாடும்னு சும்மாவா சொன்னாங்க.

Follow kummachi on Twitter

Post Comment

பென்னாகரம் தேர்தலடா......


பென்னாகரம் தேர்தலடா
பெரிசா வந்து போனதடா
கண்ட கண்ட கட்சியடா
காசை அள்ளிக் கொட்டுதடா

கருப்புக் கட்சி “கம்மல்”டா
மஞ்சக் கட்சி “மூக்குத்தி”டா
நீலக் கட்சி “கட்டிங்” டா
பச்சைக் கட்சி “கத்தை”யடா

வண்ண வண்ண சேலையடா
வரிஞ்சுக் கட்ட வேட்டியடா
பட்டா பட்டி இல்லையடா
பக்குன்னு ஆகுதடா


கட்டிங் வுட்ட கணவன் எல்லாம்
கண்மணிகளின் கையை முறுக்கி
முதுகினிலே மொத்துதடா
காலடியில் தங்கமடா

பிச்சை எடுக்கும் பெருமாளடா
லெக்பீசு பிரியானியடா
சரக்கடிச்ச “ஜனா”டா
சரசாவோட “ஜல்சா”டா

மப்பு இறங்கிப் போகுதடா
மண்டை மெர்சல் ஆகுதடா
மறுபடியும் தேர்தல் வர
மனசு ரொம்ப ஏங்குதடா

இப்படியே தேர்தல் வந்தால்
ஆணி புடுங்க வேண்டாமடா
பில்கேட்ஸ் பிர்லா எல்லாம்
பின்னாடி வருவானடா

அடிக்கடியே தேர்தல் வர
அடிமனசு ஏங்குதடா
உடுக்கடிச்சு கூழ் ஊத்தி
கருப்புசாமிக்கு கிடா வெட்டி
படையல் வைக்கப் போறோம்டா

Follow kummachi on Twitter

Post Comment

Monday 29 March 2010

கூலி மிககேட்பாள், கொடுத்தவுடன் அம்பேல் ஆவாள்


கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;


பாரதி வேலைக்காரன்களோட மாரடிச்சு “நொந்து நூடுல்ஸ்” ஆன பின்னதான் இந்த மாதிரி பாடியிருக்கனும்.

நான் ஒவ்வொருமுறையும் ஊருக்கு செல்லும் பொழுதும், மனைவி ஏதாவது ஒரு வேலைக்காரி கதை வைத்திருப்பாள். அந்தக் கதை நான் விடுமுறை முடிந்து திரும்பும் வரையில், புது புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு நாளும் மெருகேறும். அவள் சொல்லும் கதைகளில் அவளது சொந்த ஜோடனைகளும், விவரிக்கும் விதமும் நேரில் பார்த்தது போல் இருக்கும்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அவர்களை மாற்றி விடுவாள். இப்பொழுது இருப்பவள் தான் எனக்கு தெரிந்து சற்று நெடுங்காலம் இருக்கிறாள், மூன்று வருடம் என்று நினைக்கிறேன்.

முன்பு இருந்தவள் "சுனிதா" ஒரு இரண்டு வருடம் வேலை செய்தாள். வீட்டு வேலை எல்லாம் மிக பொறுப்பாக செய்வாள். வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். மனைவிக்கு அவள் இல்லை என்றால் கை ஒடிந்தது போல் ஆகிவிடும். விடுமுறை எடுக்க மாட்டாள், கூலி அதிகம் கேட்கமாட்டாள், ஆனால் "கை சற்று நீளம்".

அன்று காலை என் பெண்ணின் பிறந்த நாள், பள்ளி செல்லும் முன் எங்களை வணங்கிய பொழுது ஐந்நூறு ரூபாய்க் கொடுத்தேன். அதை பத்திரமாக வாங்கி தன் சிறிய பையில் வைத்து அதை அவள் புத்தக அலமாரியில் வைத்து சென்றதைப் பார்த்தேன். மாலையில் அவள் வீடு திரும்பியவுடன் ஒரே அமர்க்களம். ஐந்நூறு ரூபாயைக் காணவில்லை என்று அழுதாள். வேறு யாரும் அதை எடுக்க வாய்ப்பில்லை. அடுத்த முறை என் பையனின் கைகடிகாரம் காணவில்லை. வீட்டை தலைகீழாக தேடி விட்டோம். என் மனைவி வேலைக்காரி தான் எடுத்திருப்பாள், அவளைக் கேட்கலாம் என்றாள். நான் கூடாது என்று சொல்லிவிட்டேன், தக்க ஆதாரம் இல்லாமல் அவளை கேட்டு அவள் அப்படி எடுக்க வில்லை என்றால் அவள் மனது கஷ்டப் படும், மேலும் நாம் அஜாக்கிரதையாக இருந்தது நம் தவறு என்று தடுத்துவிட்டேன். பிறகு அவளே வேலையை விட்டு நின்று விட்டாள்.

அடுத்து வந்தவள்தான் “வள்ளி” இப்பொழுது இருப்பவள். வேலை மிக துல்லிய மாக செய்வாள். வீட்டில் எந்தப் பொருள் வைத்தாலும் தொடுவதில்லை. அந்த விஷயத்தில் நம்பிக்கையானவள். ஆனால் திடீரென்று விடுமுறை எடுப்பாள். கேட்டால் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு காரணம் சொல்லுவாள்.

கலைஞர் டிவி கொடுக்கிரார்னு வாங்கப் போனேன்மா என்பாள். ஏன் உன் வீட்டுக்காரர் போய் வாங்க வேண்டியது தானே என்றால், அவர் போ மாட்டார்மா, மேலும் என்கிட்டதான் கொடுப்பாங்கன்னு ஆபிசர் சொல்லிட்டார் என்பாள்.

மற்றொரு நாள் நான் வெளியே சென்று மாலை வீடு திரும்பிய வுடன் தான் மாலை அவள் வள்ளி இரண்டு நாள் வராதக் கதையை என்னிடம் சொன்னாள்.

“பாருங்க இரண்டு நாள் முன்பு வள்ளிக்கு சம்பளம் கொடுத்தேன், இரண்டு நாள் வரவில்லை, என்ன எதுன்னு கேட்டா, ஒரே அழுகைங்க. அவ வீட்டுக்காரன் சரக்க அடிச்சுட்டு அவள காலாலேயே எட்டி வுட்டுட்டு சம்பளத்த பிடிங்கிட்டானான். இரண்டு நாட்களாக ஒரே உடம்பு வலியாம், பாவம் அழுகிறாள். என்ன மனுஷன் அவன். அதனாலே ஒரு ஐந்நூறு ரூபா கேட்டா, பாவமா இருந்தது கொடுத்திட்டேங்க” என்றாள்.

நான் என் மனைவியிடம் உன்னை அவள் ஏமாற்றுகிறாள் என்று சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டாள். “உங்களுக்கு ஒன்னும் தெரியாது, அவங்க வீட்டில் எல்லாம் அப்படித்தான்,” என்பாள்.

நான் இதான் சாக்கு என்று “பார்த்தாயா அவள் புருஷன் சரக்கடிச்சுட்டு எட்டி விடுறான், நான் ஏதோ கிளப்புக்கு போய் ரெண்டு பெக் அடிச்சா ஒரே ஆர்பாட்டம் செய்யறே” என்று நக்கல் அடித்தேன்”.

இரண்டு வாரம் கழித்து நான் வெளியே ஏதோ வேலை விஷயமாக சென்று வீடு திரும்பும் பொழுது துணிகள் தோய்க்கப்படாமல் இருப்பதைக் கண்டு மனைவியிடம் இன்று வள்ளி வேலைக்கு வரவில்லையா என்று கேட்க, “இல்லை காலையிலே வந்து புருஷனுக்கு உடம்பு சரியில்லை அவசரமாக ஆஸ்பத்திரி போகணும் என்று ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றாள்” என்றாள்.

“நீ திருந்தமாட்டே அவள் பொய் சொல்கிறாள், நான் வரும்பொழுது நம்ம ஊரு சினிமா கொட்டகை வாசலில் அவளைப் பார்த்தேன் அவள் புருஷனுடன் வரிசையில் புதுப் படத்திற்காக நின்று கொண்டிருக்கிறாள்” என்றேன்.

“சும்மா ஒளராதீங்க, அது வேற யாரவது இருக்கும், அது சரி நீங்க ஏன் அங்கேயெல்லாம் போறீங்க” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 28 March 2010

அனுபவம் -வாக்கினிலே வரைந்து, வாரிக்கொடுத்து


ஏடெடுத்து படிக்கையிலே விளங்காத சொந்தபந்தம்
பாடுபட்டு சேர்த்ததை கேடு கேட்டு தொலைத்து
மாடு மேய்க்க வக்கில்லா மடையன் என்று
மக்கள் சுற்றம் மேடுறுத்தி கூறுகையில்
காசு பணம் வேண்டும் என்று கையேந்தி
கூறு கெட்டு பொய்யுரைத்த பந்தம்
கேடு கெட்டு போனதனால், உழைப்பு மற்றும்
ஊன் உருக்கி சேர்த்து வைத்த செல்வமெல்லாம்
போன இடம் தெரியலே, ஏட்டினிலே எழுதாமல்
வாக்கினிலே வரைந்து, வாரிக்கொடுத்து
போக்கிடம் தெரியாமல் புழுங்கி நிற்கையில்
ஏட்டினிலே இல்லாத எவரும் சொல்லாத
பாடம் இன்று விளங்குது.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 19 March 2010

ஒரு அரபிய இரவில் “நித்திப்புகழ்” நடிகையும் நானும்


“அதிகமா ஜொள்ளு விட்ட ஆண்மகனும் அடுப்படிக்கு வராத புருஷனும் சந்தோஷமா வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை”. கலை நிகழ்ச்சி முடிந்த அந்த இரவில் என் தங்கமணி விட்ட பஞ்ச் டயலாக். தங்கமணிக்கு என்னை நக்கலடித்துப் பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சி.

இந்த பஞ்சின் நந்திமூலம் ரிஷிமூலம் தெரியனுமுன்னா நீங்க ஒரு எட்டு ஒன்பது வருஷம் என்னோட பின்னோக்கி வரணும்

அரபு நாடுகளில் பொங்கல், தமிழ் புத்தாண்டிற்கு வருடா வருடம் கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் தமிழ்ச் சங்கங்களால் நடத்தப்படுவது ஊரறிந்த விஷயம். தமிழ் புத்தாண்டிற்கு அந்த வருடமும் நடத்தினார்கள். அந்த வருடம் மெல்லிசை விருந்தாக இளையராஜாவை கேட்டுப் பார்த்து அவர் வர முடியாத காரணத்தினால் ஒரு சிறிய மெல்லிசைக் குழு, சில புதிய பழைய பாடகர், பாடகிகள், சில மார்க்கெட் போன நடிகைகள், சில நடனமணிகள், இரண்டாம்தர நகைச்சுவை கலைஞர்கள் என்று ஒரு கூட்டத்தை கூட்டி வந்தார்கள். எல்லாம் கலந்துக்கட்டி கதம்பமாக ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்கு வந்த ஒரே சுமாரான நடிகை நம்ம “நித்திப் புகழ்தான்”.

கலைஞர்களை ஒரு இரண்டு நாளுக்கு முன்பு வரவழைத்து ஒத்திகைப் பார்க்க அரங்கத்திற்கு அழைத்து வந்து கொண்டு விடுவது என்று சில சங்க உறுப்பினர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சியன்று இடை வேளையில் பொருளாளர் என்னைப் பார்த்து நிகழ்ச்சி முடிந்தவுடன் கலைஞர்களை அவர்கள் தங்கும் விடுதியில் கொண்டு விடவேண்டும் என்னால் முடியுமா என்று கேட்டார். அதற்கென்ன செய்துவிடலாம் என்றேன்.

இடைவேளை முடிந்து நிகழ்ச்சி தொடங்கியவுடன் தங்கமணி என்னிடம் பொருளாளர் என்ன சொன்னார் என்று கேட்டாள். நான் உண்மையைச் சொன்னேன். நாளைக்கு பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் உண்டு தெரியுமில்லை, நேரமாகப் போகிறது என்றாள்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் வெளியே வந்து காரில் காத்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலப் பார்த்தா ரஜினி படத்துல வராமாதிரி ஒரு இருபது முப்பது கார்கள் கதவை திறந்தபடி நின்றன. எல்லா ஆளுங்களும் கோட் சூட் போட்டபடி அரங்கின் வாயிலையே “வளர்த்த நாய்” மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலைஞர்கள் வெளியே வந்தார்கள். முதலில் வந்தவள் நடிகை தான். எங்கள் காரை நோக்கி வந்தாள். நான் விறு விறுவென்று இறங்கி காரின் பின் பக்கக் கதவை திறந்தேன். அவள் நேராக வந்து எனக்கு அடுத்து கோட் சூட் போட்டுக் கொண்டு பென்ஸ் காருடன் காத்திருந்த என் மேனேஜர் காரில் ஏறிச சென்றாள். அவர் என்னை திரும்பி “உன் காரேல்லாம் ஒரு காரா” என்ற பார்வை பார்த்து “மூத்திரம் குடித்த மாடு போல்” நடிகையுடன் சென்றார்.

என் காரில் ஏறியவர்கள் பழையப் பாடகி (“பயம் புகழ்”), பாடகரும் வந்தார்கள். அவர்களை விடுதியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தவுடன் தான் நான் மேற்கூறிய பன்ச் டயலாக் வந்தது.

பிறகு அந்த பிரசித்திப் பெற்ற காணொளி வந்தவுடன் தங்கமணி இப்போதெல்லாம் “நித்யானந்தா உங்களைத்தான் போங்க அடுப்புல ரசம் கொதிக்குது போய் பாருங்க” என்று விரட்டுகிறாள்.

(“இதெல்லாம் சும்மா உவ்வாகாட்டிக்கு கற்பனைன்னு சொன்னா நம்பவாப் போறீங்க”

புடிச்சா வோட்ட “நித்திய” நெனைச்சு குத்துங்க, அப்படியே “கதவைத் திறந்து வையுங்க காசு வரும்”.)

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 18 March 2010

விட்டல்ராவ் ஸார்


நம் வாழ்வில் எவ்வளவு ஆசிரியர்களின் பாடங்கள், அறிவுரைகள் கேட்டு வளர்ந்திருக்கிறோம், அதில் எத்தனை ஆசிரியர்களை நியாபகம் வைத்துள்ளோம், நான் அவ்வப்போது எண்ணிப் பார்ப்பது உண்டு. ஆனால் சில ஆசிரியர், ஆசிரியைகள் நம்முள் ஒரு மாறாத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

என் ஒன்றாம் வகுப்புத் தொடங்கி (கே.ஜி, பி.ஜி எல்லாம் நான் போகவில்லை) பட்டப் படிப்பு வரை வந்த ஆசிரியர்களில் ஒரு சிலர் என் நினைவில் எப்பொழுதும் நின்று கொண்டிருப்பார்கள். அவ்வகையில் “விட்டல் ராவ் ஸார்” என் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியவர்.

கரிய மெலிந்த தேகம். எப்பொழுதும் சிரித்த முகம், முக்கியமாக ரௌத்திரம் பழகியவர். தன் வாழ் நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைப் பிடித்தவர். காசு ஆசை துளிக்கூடக் கிடையாது.

ஸார் என்னுடைய ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பாடமும் அறிவியல் பாடமும் போதித்தார். மதிய இடை வேளைகளில் என்னையும் ராஜசேகரனையும் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருப்பார்.

பள்ளி கோடை விடுமுறையில் எங்கள் ஊரில் கோவில் சித்திரை திருவிழா நடக்கும். மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்து நடு இரவு வரை நடக்கும். எங்கள் வீட்டில் திருவிழாப் போக அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஸார் வந்து என்னையும் ராஜசேகரனையும் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி கூட்டிகொண்டு செல்வார். இரவில் அங்கு கடைகளில் கிடைக்கும் சூடான மசாலாப் பாலும், பழங்களும் வாங்கிக்கொடுப்பார். பிறகு வீட்டில் எங்களை விட்டுச் செல்வார்.

திரு விழாவில் நடக்கும் கச்சேரிகளின் இசை நயத்தை எங்களுக்கு விளக்குவார். அவருக்கு இசையில் தீவிர நாட்டம் உண்டு. எங்களுக்கு நாட்டு நடப்பை புரிய வைப்பார். அவ்வப்பொழுது எங்களுக்கு புரியாத தத்துவங்களை உதிர்ப்பார். பாரதியின் கவிதையில் ஈடுபாடு கொண்டவர்.

பின்பு நான் கல்லூரி சென்றவுடன் கூட அவருடன் தொடர்பு வைத்திருந்தேன். சனி ஞாயிறுகளில் வாடகை சைக்கிள் வைத்துக் கொண்டு அவர் இருந்த அறைக்கு சென்று பேசிவிட்டு வருவேன்.

கல்லூரி முடித்து ஒரு வங்கியில் விடுமுறை வாய்ப்பில் ஆறு மாதம் பணி புரிந்தேன். பின்னர் எனக்கு ஒரு மருந்துக் கம்பனியில் நிரந்தர வேலைக்கு தேர்வாகி இருந்தேன். முபையில் பயிற்சிக்கு வர சொல்லி ஆர்டர் அனுப்பியிருந்தார்கள் ரயில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்தேன், கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பு டைபாயட் காய்ச்சல் வந்து போக முடியாததால் கம்பெனி ஆர்டரை ரத்து செய்து விட்டார்கள்.

நான் மிகவும் நொந்து போயிருந்த நேரம், அவர் என் நிலைமையை ராஜசேகரனிடம் தெரிந்து கொண்டு என்னைக் காண வீட்டிற்கு வந்தார். அவர் வந்தவுடன் நான் என் முதல் நிரந்தர வேலை பறி போன கதையை சொல்லி தேம்பி தேம்பி அழுதேன்.

அவர் என்னை முதன் முறையாக கடிந்து கொண்டார். “பெண் பிள்ளை மாதிரி அழாதே, இந்த வேலை இல்லையெனில் இன்னொரு நல்ல வேலை உனக்கு காத்திருக்கிறது” என்றார். பின்பு எனக்கு நல்ல அறிவுரை வழங்கினார். மருந்துத் தொழில் எனக்கு ஏற்றது அல்ல என்றும் என்னுடைய படிப்பிற்கு வேதியல் சம்பந்தப் பட்ட உற்பத்தித் தொழிலுக்கு சென்றால் நல்ல முன்னுக்கு வரலாம் என்றார்.

சொல்லி வைத்தார்ப் போல் எனக்கு உரத்தொழிற்சாலையில் வேலைக் கிடைத்தது, அதன் பிறகு நான் இந்தத் துறையில் கண்ட வளர்ச்சி அபாரம். இதையெல்லாம் அவரிடம் சொல்லி நான் அவரை மகிழ்விக்க அவர் ரொம்பக் காலம் எங்களுடன் இல்லை. முதுமை அவரை நிரந்தர நித்திரையில் ஆழ்த்திவிட்டது.

இப்பொழுது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், நான் என்று பெருமை கொள்ள என்னது எதுவும் இல்லை, எல்லாப் பெருமைகளும், என்னை உருவாக்கிய ஆசிரியர்களையே சாரும்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 17 March 2010

ரஞ்சிதா(ம்)


சஞ்சிதம் அகலாத ரஞ்சிதம்
கொஞ்சி குலாவிய காட்சி
சஞ்சிகைகளும், காணொளி
காட்சி கடை விரிக்க
கணவனை துறந்து
கற்பு ஏலம் கல்லா கட்ட
ஆந்திரம், அமெரிக்கா,
சிங்கை, மலேசியா,
நிற்காத ஓட்டம்
மனம் நிலைப் பட்டிருந்தால்
ஓட்டம் தேவையில்லை
அமைதி நாட சாமியார் மடம்
ஒன்றும் அமைதியை
கூறு போட்டு கொடுப்பதில்லை
பணக்கார பாவத்தின்
சம்பளம் அங்கு முதலாக்கி
கோடிகளில் கொழுத்து
பாவங்கள் பயிரடப்படுகின்றன.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 16 March 2010

நித்யானந்தா(ம்)


நித்ய ஆனந்தம் நித்தமும் வேண்டி
சத்திய வழி துறந்து சகதியில் விழுந்து
சீயும் செங்குருதியும் வழிந்தெழுந்து பாயும்
சேலை இல்லாத பொழுது பகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகும் யோனிக்குள்
இரவு பகலாய் மாயும் மனிதரை
மாயாமல் வைக்க மருந்தொன்றை மறந்து
காவி உடையிலே காமக்களியாட்டம்
கதவைத் திற காற்று வரட்டும் என
கதவைத் திறந்து காற்றுடன், கன்னிகைகளும்
கதவை அடைத்து காதல், கலவி கலப்படம்
கோடிகளில் குவியும் இடங்கள்
கேடிகளின் கிடிக்கிப் பிடியில்
காவி உடை துறந்தக் காதல் செய்தி ஆகா
காவி உடை திறந்து காதல்
டி. ஆர். பி எகிற உதவும்
காவி மேல் விழுந்துத் தழுவிய நடிகை
காலம் மறந்து கை தட்டும்
இனி கோடிகள் கை மாறும்
சத்தியம் சட்டத்தின் பிடியில்
சிக்கி சின்னா பின்னமாகி
வாய்மை சில சமயம் வெல்லும்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 15 March 2010

புத்தகம் படித்தல்.


இந்தப் பழக்கம் என்னிடம் எப்படி வந்தது என்று யோசிக்கிறேன். சிறு வயதில் கோடை விடுமுறை சித்திரை வெயிலில் ஓயாது தெருவில் ஆடி, காய்ச்சல் வந்து வீட்டில் படுத்துக்கொண்டு, காய்ச்சல் சரியானவுடன் வீட்டில் விதித்த தடையால் அம்மாவிடம் நச்சரித்து காசு வாங்கி, நண்பன் பத்து பைசா வாடகையில் தரும் காமிக்சில் தொடங்கியது இப்பழக்கம்.

பருவவ வயதில் வக்கிரத்தின் வடிகாலாக அனானி வகை கொக்கேகப் புத்தகங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டில் கிளிப் அடித்த “நம்ம ஊரு சிங்காரிகளின் லீலைகள்”. படித்தவுடன் மறக்காமல் கிழித்து எறியப்படும்.

பின்பு வாரப் பத்திரிகை தொடர் கதை என்று படிப்படியாக வளர்ந்தது. சுஜாதாவின் தொடர் கதைகளுக்காகவே அடிக்கடி வாரப் பத்திரிகைகளை மாற்றி வீட்டில் எல்லோரையும் கடுப்பேத்துவேன். பின் தொடர்கதை முடிந்தவுடன் அந்த இதழ்களில் உள்ள பாகங்களைப் பிய்த்து சேர்த்து பைன்ட் செய்த சேர்த்து வைப்பேன். சுஜாதாவின் கதைகளும் ஜெயராஜின் ஓவியங்களும் எங்கள் சமகால வாசகர்களுக்கும் பசுமை நினைவு.

பின்பு தமிழில் கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, தேவன, சாண்டில்யன், லா.ச.ரா, சுந்தரராமசாமி, என்று தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.

அதே காலத்தில் ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேசில் தொடங்கி, சிட்னி ஷெல்டன், ஆர்தார் ஹைலே, கேன்போல்லே, இர்விங் வாலஸ் என்று தொடங்கி பின்பு படிக்க ஆரம்பித்த பத்துப் பக்கத்திலேயே துகில் உரியும் தலைகாணி வகை “பெஸ்ட் செல்லர்கள்”.

வீட்டில் தங்கமணியின் “எப்போ பாரு என்னப் புத்தகமோ, வீடு முழுக்க அடைத்துக் கொண்டு, குழந்தை கக்கா பண்ணியிருக்கான், கழுவி விடுங்கள் என்ற பல்லவி எரிச்சல் தருவதில்லை”.

பின்னர் ஓரளவு படிப்பதில் முதிர்ச்சி வந்த பின் தேடி தேடி கட்டுரைகள், கவிதைகள், விஞ்ஞான கதைகள், சரித்திர ஆய்வுகள் என்று படிப்பது வாழ்வின் ஒரு இன்றியமையாத செயல் ஆகிவிட்டது.

நீண்ட நேரப் பயணங்களில் புத்தகங்கள் தவறாமல் கொண்டு செல்வது வழக்கமாகி விட்டது.

பின்பு படிப்படியாக வருடத்திருக்கு ஒரு நாற்பது ஐம்பது புத்தகங்கள் என்று வாங்கி படித்து வீட்டில் அடுக்கிக் கொண்டிருக்கிறேன். இரண்டு அலமாரிகளைத் தாண்டி மூன்றாவதில் அடுக்க ஆரம்பித்துள்ளேன். (புத்தகம் இரவல் வாங்கிச் சென்றவர்கள் திரும்ப கொடுக்காதது இன்னும் ஒரு அலமாரி பெறும்)

இப்பொழுது பதிவுலகில் வரும் பதிவுகளைப் படிக்கும் பொழுது, நிறையப் பதிவர்கள் எல்லா வகை தலைப்பிலும், கவிதை, கதை, கட்டுரை, நையாண்டி, சமூக அக்கறை என்று கலக்குகிறார்களே, இவர்களெல்லாம் நிறையப் படித்திருக்க வேண்டும், படிக்காமல் எழுத முடியாது என்று தோன்றுகிறது.

இப்பொழுது என் குழந்தைகள் பாடங்களுடன் மற்ற புத்தகங்களும் படிக்க ஆரம்பிக்கிறார்கள், நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களையும் ஒரு நாள் படிக்கத் தொடங்குவார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 1 March 2010

கோவிந்து


நாங்கள் அந்த வீட்டில் எதிரில் உள்ள காலி மனையில் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்போம். அந்தவீட்டு வாசற்படிதான் எங்கள் பவிலியன். அந்த வீடு வெகு நாட்களாகப் பூட்டியிருந்தது.

பின்பு அந்த வீட்டிற்கு ஒரு விதவை தாயும், இரண்டு இளைஞரும் குடிவந்தார்கள். மூத்தவனுக்கு ஒரு இருபத்தெட்டு வயதிருக்கும். இளையவன் அவனைவிடன் ஒரு இரண்டு மூன்று வயது சிறியவனாக இருப்பான்.

மூத்தவன் காலையில் வேலைக்கு கிளம்பி இரவில் தாமதமாக வருவான். இரண்டாமவன் தான் “கோவிந்து”. கொஞ்சம் மனவளர்ச்சிக் குன்றியவன். வேலைக்கு ஏதும் செல்லவில்லை. அவனுக்கு அதற்குரிய உந்துதலோ தகுதியோ இருப்பதாகத் தெரியவில்லை. சம்பந்தமில்லாமல் பேசுவான். அவனின் வாயைக் கிண்டுவதுதான் எங்கள் கூட்டத்தில் உள்ள சில விடலைகளின் பொழுது போக்கு.

பிறகு அவன் அண்ணனுக்கு கல்யாணமாகி அவர்கள் வீட்டில் ஒரு புதிய பெண்மணி அவள் அண்ணியும் வந்தாள். நல்ல அழகாக இருப்பாள். அந்த மன்னிய சைட் அடிக்கவே எங்கள் டீமில் உள்ள சில விடலைகள் முதல் பாலில் அவுட் ஆகி பவிலயொனுக்கு திரும்பி விடுவார்கள், போதாதற்கு நான் பேட் செய்யப் போகும் பொழுது “டேய் நிதானமா ஆடிட்டு வா, சீக்கிரம் அவுட் ஆனேன்னா நீ அடுத்த மாட்சில் கிடையாது என்பார்கள்”.

அந்த கோவிந்துவின் வாயை அநியாயத்திற்கு கிண்டுவார்கள், அவனும் உளறிக் கொண்டிருப்பான். எனக்குப் பாவமாக இருக்கும்.

வெங்குட்டு எல்லை மீறி அவனிடம் கேள்விகள் கேட்பான்.
கோவிந்து உங்க அண்ணா ஆபீசில் வந்தவுடன் என்ன செய்வான்?

கோவிந்து இதில் உள்ள விஷமம் புரியாமல் பேப்பர் படிப்பான் சாப்பிடுவான் என்றெல்லாம் சொல்லிகொண்டிருப்பான். வெங்குட்டு மேலும் விடாமல் அப்புறம் அப்புறம் என்று படுக்கையறை விஷயத்திற்கு வருவான்.

கோவிந்து “எனக்கு என்னடா தெரியும் அவர்கள் தான் கதவை மூடி விடுகிரார்களே” என்பான்,
கோவிந்து தினமும் எங்கள் விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பதை நிறுத்துவதில்லை. எந்தக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால் முக்கிய ஏடா கூடக் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்லுவான்.

வெங்குட்டு என்னை முன் நிறுத்தி கோவிந்துவிடம் பேர் வை என்பான்,
கோவிந்து “ஏழுமன்டையன்” (தலை ஏழு போல் உள்ளதாம்), சந்துருவிற்கு “வட்டம்” (தொப்பையும் தொந்தியுமாக உள்ளதால்) குருவிற்கு “கஞ்சிமிட்டி” (கண்களை அவன் அடிக்கடி சிமிட்டிகொண்டிருப்பதால்) இப்படி எல்லோருக்கு சடுதியில் பேர் சொல்லுவான்.

எங்கள் வயதை ஒத்த பெண்கள் போனால், கோவிந்துவை விட்டு கூப்பிட சொல்லுவார்கள், அவனும் ஒன்றும் புரியாமல் “ரேவதி இங்க வாடி இவன் உன்னைக் கூபிடுறான்” என்று சொல்ல அவளோ எங்களைப் பார்த்து இரு “உங்கள் எல்லோரையும் வச்சிக்கிறேன் ஒரு நாளைக்கு” என்று கோபத்தில் கத்த, நம்மக் கூட்டம் “அதுக்குதாண்டி கூப்பிட்டோம்” என்பார்கள். கோவிந்து விஷயம் புரியாமல் எப்பொழுதும் போல் சிரித்துக் கொண்டு தானிருப்பான்.

ஒரு நாளைக்கு கோவிந்துவின் முகம் வாடியிருக்கவே அவனை என்ன கோவிந்து என்று நம்ம கூட்டம் புது விஷயத்திற்கு அலையை ஆரம்பிக்க.

கோவிந்து “இந்த அண்ணி பிசாசு, மூதேவி, எனக்கும் அம்மாவிற்கும் காலையிலிருந்து சோறு தண்ணி கொடுக்கலடா, அம்மா அழுதுண்டிருக்கா, இன்னிக்கு இரவு அண்ணா வந்தவுடன் எங்களை வீட்ட விட்டு விரட்டப் போறாளாம்”. என்றான்.

“டே மணி உங்க வீட்டில எனக்கும் அம்மாவுக்கும் சோறு கொடுடா, என்ன கெட்டி தயிரா போடணும் என்ன” என்று என்னைப் பார்த்து கேட்ட பொழுது எனக்கு அவனை வைத்து சிரித்த என் மேலும் நண்பர்களின் மேலும், அவன் அண்ணன் அண்ணி ஏனோ தெரியாமல் எல்லோர் மேலும் ஒரு வெறுப்பு வந்தது.

Follow kummachi on Twitter

Post Comment