Pages

Tuesday 30 August 2011

சில சரித்திர பிரசித்திபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்கள்

ஊழலுக்கு எதிரான அன்னா ஹஜாரேவின் உண்ணா விரதம், பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரும் உண்ணா விரதங்கள் என்று தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் சரித்திரத்தை சற்று பின் நோக்கி பார்ப்போம்.

மகாத்மா காந்தி

உண்ணாவிரத போராட்டம் என்றால் காந்தியின் நினைவு வருவது தவிர்க்க இயலாது. சரித்திரத்தில் அதிக முறை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டவர் காந்தி. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறையே 1922, 1930,1933,1942 என்று நான்கு முறை சிறையில் அடைக்கப்பட்ட பொழுது காந்தி உண்ணா விரதம் மேற்கொண்டார். இதில் அதிக பட்சம் 21 நாட்கள் மே 08, 1932 முதல் திட உணவை தவிர்த்து சிறையில் உண்ணா விரதம் மேற்கொண்டார். தான் சிறையில் மரணமடைந்தால் அது ஆங்கிலேயர்களுக்கு ஏற்படும் அவமானம், ஆதலால் உலகம் இந்த நிகழ்வை திரும்பிப் பார்க்கும் என்று எண்ணினார். அதற்கு பிறகு 1946 ல் இந்து முஸ்லிம் கலவரத்தை தடுக்க மேற்கொண்டது பின்பு 1947 ல் மேற்கொண்ட உண்ணா விரதங்களும் நாம் அறிந்ததே.

ஜாடிந்திரா தாஸ்

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயரால் சிறை பிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் இந்திய கைதிகளும் ஆகிலேய கைதிகளும் நடத்தப் படும் விதத்தில் இருந்த பெரிய வித்யாசத்தை எதிர்த்து அறுபத்திமூன்று நாட்கள் உண்ணா விரதம் மேற்கொண்டார் இந்த வங்காள வீரர். இந்திய கைதிகளுக்கு பல வாரங்கள் துவைக்கப் படாத சிறை சீருடை, கரப்பான் பூச்சிகளும் எலிகளும் ஓடும் சமையலறை, சிறை கைதிகள் நடத்தப் படும் விதம் என்ற எல்லாவற்றையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். பல முறை ஆங்கிலேய சிறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக உணவை திணிக்க முயன்ற போதிலும், செப்டம்பர் 13, 1929 சிறையில் உண்ணாவிரதத்தை முடிக்காமல் உயிர் துறந்த முதல் சுதந்திர தியாகி.

பகத்சிங்
பஞ்ஜாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் தலைமையில் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பகத்சிங். இவரும்  ஆங்கிலேயரால் சிறை பிடிக்கப் பட்டபொழுது சிறையில் இந்திய கைதிகளும் சுதந்திர போராட்ட வீரர்களும் நடத்தப் பட்ட விதத்தை  எதிர்த்து சிறையிலேயே தொடர்ந்து 41 நாட்கள் உண்ணா விரதம் மேற்கொண்டார்.
லாலா லஜபதி ராயின் மீது லத்தி சார்ஜ் செய்த ஆங்கிலேய போலிசை சுட்டு கொன்ற காரணத்தினால் பகத் சிங் ஆங்கிலேய அரசால் பின்பு தூக்கிலடப்பட்டார்.

பொட்டி ஸ்ரீராமுலு
சுதந்திர இந்தியாவில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த முதல் போராட்ட வீரர் பொட்டி ஸ்ரீராமுலு. மாநிலங்களை மொழி அடிப்படையில் பிரிக்க அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடந்தது. சென்னையையும் ஆந்திராவில் இணைத்து புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது இவரது கோரிக்கை. எண்பத்தி இரண்டு நாட்கள் உண்ணா விரதம் இருந்து 16/12/1952 உயிர் நீத்தார். இவரது உடலை சுமந்து சென்னையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் கண்டு நாடே ஸ்தம்பித்தது. பிறகு இந்தப் போராட்டம் ஆந்திராவில் பரவி கடப்பா, நெல்லூர் என்று கட்டுக்கடங்காமல் போனது. அப்போதைய பிரதமர் நேருவும், கவர்னர் ஜெனரல் ராஜாஜியும் பின்பு சென்னை மாகாணத்திலிருந்த ஆந்திராவை பிரித்து பின்னர் தெலுங்கானாவை இணைத்து ஐதராபாதை தலைநகரமாக கொண்ட ஆந்திராவை  உருவாக்கினார்கள். மேலும் இவர் நடத்திய போராட்டம் கேரளா, குஜராத், கர்நாடகா உருவாக வழி கோலியது. இன்றும் இவர் ஆந்திர மக்களால் “அமர ஜீவி” என்று போற்றப் படுகிறார்.

மேதா பட்கர்.
1991, 1993,  1994 வருடங்களில் மூன்று முறை இவர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இதில் அவர் 1991 ல் மேற்கொண்ட 22 நாட்கள் உண்ணாவிரதத்தில் உயிர் இழக்கும் நிலைமை சென்று மீண்டார். நர்மதா நதியில் கட்டப் போவதாக இருந்த அணைகளை தடுத்த நிறுத்தி விவசாய நலன்களை பாதுகாக்கவே இவர் உண்ணாவிரதங்களை மேற்கொண்டார். பின்பு மும்பையில் “கோலிபர்” குடிசை வாசிகளுக்கு ஆதரவாக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு பணிந்த மகாராஷ்டிர அரசாங்கம் அந்த நிலங்களை தனியாருக்கு விற்கும் யோசனையை கை விட்டது.

திலீபன்
ஈழத்தில் திலீபன் மேற்கொண்ட உண்ணா விரதம் ஒரு சோகக் கதை. 15/09/1987 தொடங்கி பதினொரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உணவு தண்ணீர் இரண்டையும் தவிர்த்து 26/09/1987 ல் உயிர் நீத்த தமிழ் ஈழப் போராட்ட வீரர். திலீபனின் உண்ணாவிரதம் ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத சோகம்.
மேற்கூறிய உண்ணாவிரதங்கள் யாவும் சரித்திரத்தில் புகழ் பெற்றவை. இதைத்தவிர இன்னும் உலகளவில் நிறைய இருக்கின்றன.

இவையும் உண்ணா விரதங்களே
இவை தவிர அவ்வப்பொழுது சில மாநில முதல்வர்களாலும், இல்லை டி ஆர்.பி ரேட்டிங் ஏற்ற சினிமா கலைஞர்களாலும் வெவ்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவை நாடு அறியும். நடிகர்கள் தங்களது இருப்பை பறை சாற்றிக் கொள்ளவே நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. இதில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. எல்லோரும் விதவிதமாக ஆடையணிந்து, கருப்பு கண்ணாடி அணிந்து காலையில் இரண்டு நாட்களுக்கு வேண்டிய உணவை உண்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு பாட்டில் திறக்க போய் விடுவார்கள். இதில் எங்களது போராட்டம் வெற்றி ஏராளமானவர் பங்கு கொண்டனர். ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் போராததால் இன்னும் ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் சொல்லியிருக்கிறோம் என்று மைக் பிடித்து கூவியவர்களும் உண்டு.
இதற்கெல்லாம் சிகரமாக தமிழ் ஈழத்திற்கு போராட மனைவி, துணைவி, குளிர்சாதனம் என செட் அமைத்து காலையில் இட்லியும் மீன் குழம்பும் உண்டு, பின்பு பொரிச்ச பொட்டை கோழியும், அவிச்ச ஆமை குஞ்சும் அழைக்க போர் முடிந்தது, போராட்டம் நின்று விட்டது என்று அறிவித்து மதிய உணவிற்கு மூட்டை கட்டி ஓடி பின்பு வெற்றி என்று போஸ்டர் ஒட்டிய நிகழ்வும் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.

Monday 29 August 2011

மீண்டும் வள்ளி


இந்த சிக்னல் ஒரு பெரிய தலைவலி. தி. நகரிலிருந்து அண்ணா சாலையை கடக்க ஒரு இருபது நிமிட நேரமாவது ஆகிவிடும். அங்கிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு அந்த இடம்தான் வசூல் அமோகமாக நடக்குமிடம். நான்கு முறை கிரீன் சிக்னல் விழுந்தாகிவிட்டது இன்னும் கடக்க முடியவில்லை. அப்பொழுதுதான் அவளை பார்த்தேன் கையில் ஒரு குழந்தையை மார்போடு அனைத்து காரின் கண்ணாடியை தட்டி பிச்சை கேட்டாள். அவளை அடையாளம் கண்டுகொண்டேன். அவளை அந்த நிலையில் பார்த்ததிலிருந்து எனக்கு அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. மனைவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவள் ஏழு எட்டு வருடம் முன்பு இருந்த வள்ளியை நினைவு கூர்ந்தாள்.

கோடை மழை ஒரு அரை மணி அடித்து விட்டு ஓய்ந்திருந்தது. மின்சாரம் தடைபட்டு போய் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்தேன். வெளியில் லாரி சத்தம் கேட்டது. வெளி விளக்கை போட்டு பார்த்தேன். என் வீட்டு வாசலில் மணல் லாரி வந்து மணலை இறக்கிக் கொண்டிருந்தார்கள். எதிர் வீட்டு காலி மனையில் கவுண்டர் வீடு கட்டப் போகிறது உறுதியாக விட்டது. ஒரு நான்கு மாதம் முன்புதான் வீடு கட்டப் போவதாக சொன்னார். தண்ணீர் உங்கள் வீட்டில் தான் எடுத்துக் கொள்ளவேண்டும் நீங்க பெரிய மனசு பண்ணவேண்டும் என்றார். அதனால் என்ன எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

அடுத்த நாள் காலையில் இரண்டு பெண்கள் கைக்குழந்தைகளுடன் மணலில் அமர்ந்திருந்தார்கள். கூட இரண்டு; ஆண்களும் ஒரு பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியும் இருந்தார்கள். அந்த பெண்கள் குழந்தைகள் பசி ஆறியவுடன் ஆடையை சரி செய்து கொண்டு குழந்தைகளை அந்த சிறுமியிடம் ஒப்படைத்துவிட்டு அந்த ஆண்களுடன் கடக்காலுக்கு பள்ளம் தோண்ட சென்று விட்டார்கள். அந்த சிறுமி குழந்தைகளை கவனித்துக் கொண்டு அழுதால் அவர்கள் தாயிடம் ஒப்படைத்துவிட்டு பிறகு அவர்களை தூங்க தூளியிலிட்டு தூங்க செய்வாள். மிகவும் சூட்டிகையான சிறுமி. என் மனைவி அவளின் பொறுப்புணர்ச்சியை கண்டு வியந்தாள். அவர்களுடன் பேச்சு கொடுத்ததில் அந்த சிறுமியின் பெயர் வள்ளி என்றும் அவள் ஒரு அநாதை என்றும் தெரிந்து கொண்டோம். அந்த வேலை செய்யும் சித்தாள்கள் இந்தப் பெண்ணை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுடன் தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். மாலை வேலை முடிந்தவுடன் அவர்கள் எங்கள் வீட்டு பின்புறம் உள்ள கிணற்றில் நீர் இறைத்து குளித்துவிட்டு அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று விடுவார்கள்.

கிட்டத்தட்ட அந்த வீடை கட்டி முடிக்க ஒரு வருடம் ஆகியது. இந்த ஒரு வருடத்தில் வள்ளி என் வீட்டில் சுதந்திரமாக அந்தக் குழந்தைகளை வைத்துக் கொண்டு புழங்க ஆரம்பித்தாள். என் மனைவிக்கு வள்ளியை மிகவும் பிடித்து போய் விட்டது. ஏங்க இந்த வள்ளியை நாம் வளர்க்கலாமே என்றாள். சரி என்று அந்த சித்தால்களில் பெரியவனிடம் நான் கேட்ட பொழுது “ஸார் அது எங்க பொண்ணு ஸார் என் பெண்டாட்டிக்கு தான் பெத்ததைவிட இது கிட்ட தான் ஸார் ஆசை அதிகம் இன்ன கேள்வி கேட்டுட்டிங்க ஸார்” என்றான். என் மனைவி அவர்களின் பெரிய மனதை எண்ணி வியந்தாள்.

அந்த வள்ளியைதான் இப்பொழுது கையில் குழந்தையுடன் பார்த்த அதிர்ச்சியில் மனைவியுடன் சொன்னேன். ஒரு இரண்டு மணி பிறகு மனைவி போன் செய்தாள், நீங்க வள்ளியை பார்த்ததை சொன்னதிலிருந்து எனக்கு வேலை ஓட வில்லை, என்ன அலுவலகத்தில் கிழிக்கிரீர்கள் அரை நாள் லீவ் போட்டு வாங்க என்றாள்.

“ஏய் என்ன விளையாடுறியா நான் ரொம்ப பிஸி இன்னிக்குள் அந்த டெண்டரை முடிக்கவேண்டும் இல்லை என்றாளல் என்னுடைய டேமேஜர் சுலுக்கு எடுத்து விடுவான்” என்று சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.  

அன்று இரவு எங்களுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் முதல் காரியமாக அந்த சாலை சந்திப்பு அருகில் உள்ள தலைப்பாகட்டு பிரியாணி கடை வாசலில் காரை நிறுத்திவிட்டு வள்ளியை தேட சென்றோம். அவளை அங்கு காணவில்லை. இந்த பிச்சைகார்களை பிச்சை எடுக்க விட்டு காசு சேர்க்கும் கூட்டத்தின் கங்காணி எங்கு இருப்பான் என்று மக்களுக்கு தெரியும் ஆனால் போலிசுக்கு தெரியாது.

ட்ராபிக் போலிசு அருகில் நின்ற அவனை அனுகினேன். அவனிடம் வள்ளியின் அடையாளத்தை சொல்லி கேட்டபொழுது “ஸார் நீ யாரு போலிசா இன்னாத்துக்கு கேட்கிறே, பொத்தினு போய்க்கினே இரு” என்று ஒரு முறை முறைத்தான்.

“வந்துட்டானுகபா நம்ம பொழைப்புல மண்ணை போட நாங்களே பத்தாயிரம் முதல் போட்டு எடுத்திருக்கிறோம்” என்று அந்த ட்ராபிக் போலீசிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

இருந்தாலும் என் மனைவி விடுவதாக இல்லை, இன்னிக்கி அவள் வரவில்லை என்றால் என்ன எப்படியும் அவளை கண்டு பிடித்துவிடலாம் என்றாள்.

இதெல்லாம் நடக்கிற கதை இல்லை என்றால் அவள் புரிந்து கொள்ளமாட்டாள்.

Sunday 28 August 2011

கலக்கல் காக்டெயில் -39


ஜன்லோக்பால வுட்டுட்டு இனி அமலா பால பாருங்க


ஒரு வழியாக மத்திய அரசு இறங்கிவந்து பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தவுடன் அன்னா ஹசாரே இன்று காலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். மத்திய அரசு கொண்டு வரப்போகும் மசோதாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எந்த விதத்தில் நடைமுறைப்படுத்தமுடியும் என்பது போக போக தான் தெரியும். ஆனால் ஜன்லோக்பாலில் பிரதமரையும், தலைமை நீதிபதியையும் சேர்க்கும் விஷயம் வரவேற்கத்தக்கதுதான் ஆனால் அதனால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என்ற கூற்று எப்படி என்று தெரியவில்லை?. தவறாக ஊழல புகார் அளிப்பவரும் தண்டனைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதும் நல்ல விஷயம்தான்.

இனி ஊடகங்கள் லோக்பாலை விட்டுவிட்டு அமலா பாலை பார்க்கப் போகலாம்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. என்றார் நடிகை நமீதா.

............................ பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நமீதா, அன்னா ஹசாரே மானாட மயிலாட வந்து கலந்துகொண்டு குத்தாட்டம் போட்டால் ஊழல் ஒழிந்து விடும் மச்சான்ஸ் என்றார்.  

 தமிழக சட்ட சபை நடவடிக்கைகள்

 தமிழக சட்டசபை நடவடிக்கைகளை போலிமேர் தொலைக்காட்சியிலும், ஜெயா தொலைக் காட்சியிலும் தினமும் காட்டுகிறார்கள். இந்த அவையின் நோக்கம் ஒன்று தெளிவாக தெரிகிறது. தி.மு.கவை எப்படியாவது வெளியேற்றிவிட்டு முதலமைச்சர் கடந்த ஆட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் தவறு என்று சொல்லி அவைக்குறிப்பில் எற்றுவதே தலையாய கடமை போல் செயல்படுகிறார்.

நூறாவது நாள் கொண்டாட்டம் சட்டசபையில் கொஞ்சம்  ஓவர்தான்.



அன்னா ஹசாரேவுக்கு தமிழ் திரையுலகம் ஆதரவு

 தமிழ் திரையுலகம் ஜன்லோக்பாலுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்ல கேலிக்கூத்து, முதலில் வருமான வரியை எல்லா நடிகர்களும் ஒழுங்கா கட்டினாலே போதும், இவர்கள் பங்கிற்கு நாட்டுக்கு நல்லது செய்யலாம்.

 மொக்கை


"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"

"மாமூலன்!"
 
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு....
 

ஜொள்ளு

Monday 22 August 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5



பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் தொடரில் இந்த வாரம் எனக்குப் பிடித்த பதிவர் சும்மா (தேனம்மை லக்ஷ்மன்)


சும்மா என்று வலை பூவிற்கு பெயர் கொடுத்து சும்மா சூப்பர் கவிதைகளையும், கட்டுரைகளையும் அள்ளி விட்டுக்கிட்டே இருப்பாங்க.

கல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம் தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட இரண்டாம் வசந்த காலம் இது , என்று தன்னை பற்றிய சுய அறிமுகத்தில் வித்தியாசம் காண்பிப்பவர்.
கிட்டத்தட்ட முன்னூற்றி ஐம்பது பதிவுகள், முன்னூற்றி என்பது வாசகர் பட்டாளம் வைத்துக்கொண்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இவரது இயல்பான, யதார்த்தமான கவிதைகளின் விசிறி நான்.
“உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா நீங்கள் நலம்” என்ற தந்தையர் தின கவிதையை படியுங்கள்.

“நீ எனக்காக உன் தூதனைக் காற்றிலும்
கடல் கடந்தும் அனுப்பும் வரை..
உன் நினைவு நெருப்பு பற்றியெரிய...
சோக மரத்தின் கீழ்
உன் கணையாழியுடன் நான்”

ராமனின் மனைவி என்ற கவிதையின் இறுதியில் மேற்படி சொற் பிரயோகம் இவரது பலம்.

இப்பொழுது இவர் பல பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரிடம் பத்திரிகைகளில் தமது இடுகைகள் வர யோசனை கேட்பவர்களுக்கு அறிவுரைகள் அள்ளி வழங்குகிறார்.

அவர்களின் எழுத்துப் பணி தொடர எனது வாழ்த்துகள்.


காணாமல் போன பதிவர்கள்

சாய்ர பாலா, அருமையான எழுத்து நடை, கொண்ட பதிவர். இவர் என்னைப் போன்ற கடல் வாசி. மலேசியாவில் கடலில் (மிதக்கும் கப்பலின் உண்மையான கேப்டன்) வாழ்ந்துகொண்டு கவிதைகளையும், கதைகளையும் புனைபவர்.
இவரைப் பற்றிய விவரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

Thursday 18 August 2011

ஜன்னல்



மனோகருக்கு அந்த ஜன்னல்தான் உலகம். அதன் வழியாகத்தான் அவன் என்னை என் வீட்டு ஜன்னலையும் தாண்டி பார்ப்பான். நடுவில் ராஜவேலு முதலியார் வீடு. அவர் வீட்டின் முன்னால்தான் நாங்கள் விளையாடுவோம். முதலியார் வீடு பின்னடங்கியிருக்கும். அதற்கும் பின்னால் அடுத்த தெருவை வளைத்து தோட்டமும் மாட்டுக் கொட்டகையும் இருக்கும். ஆதலால் எங்களுக்கு முன்னாலிருக்கும் இடத்தை விளையாட தண்ணி தெளித்து விட்டார். மனோகர் எனக்கு அறிமுகமானது அவன் அக்கா மூலமாகத்தான்.

உத்ரா அதுதான் அவள் பெயர். அவள் நான் படிக்கும் பள்ளிக்கு ஒரு மைல் தள்ளியிருந்த பள்ளியில் படித்தாள். என்னைவிட இரண்டு வயது மூத்தவள். ஒரு முறை பள்ளி விட்டு நான் வரும்பொழுது என்னை பார்த்து சிரித்தாள். பெண்களுடன் சேர்ந்தால் காது அறுந்துவிடும் என்ற காலத்தில் இருந்த எனக்கு ஏனோ அவள் சிரிப்புக்கு பதில் சிரிப்பு விடுத்தேன். அன்றையிலிருந்து நானும் அவளும் ஒன்றாகவே பள்ளிக்கு செல்வோம். வாய் ஓயாமல் பேசுவாள். திரும்பி வரும்பொழுது ஒருவருக்கு ஒருவர் காத்திருந்து வீடு வருவோம். நண்பர்களின் கிண்டல் என்னை ஒன்றும் பாதிக்க வில்லை. ஒரு நாள் அவளை பார்க்கவில்லை என்றால் எனக்கு பள்ளி போரடித்தது.

உத்ராவின் ஒரு கால் இளம்பிள்ளைவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலை இழுத்து இழுத்து தான் நடப்பாள். அவளது முகத்தில் உள்ள சிரிப்புக்கு இன்றும் நான் ஓடி ஓடி சம்பத்தித்த என் சொத்தை எழுதி வைப்பேன். உத்ராவுடன் பேசவில்லை என்றால் எனக்கு உலகம் இருண்டுவிடும். அந்த உணர்வு பின்னாளில் மனோகரிடம் ஏற்பட்டது அதற்கும் உத்ராதான் காரணம்.

அவளின் அழைப்பின் பேரில் அவள் வீட்டிற்கு சென்ற பொழுதுதான் எனக்கு மனோகர் அறிமுகமானான். அவனுக்கும் என் வயதுதான் இருக்கும். அவன் பள்ளிக்கு செல்லவில்லை, வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உத்ராவின் ஒரு காலை தாக்கிய விதி அவன் இரண்டு காலையும் பதம் பார்த்திருந்தது. இரண்டு கைகளையும் உபயோகித்துதான் அவன் வீட்டுக்குள் நகர்ந்து கொண்டிருந்தான். தன்னுடைய நிலைமையின் தாழ்வு மனப்பான்மையினால் மனோகருக்கு அந்த ஜன்னல் தான் உலகம். அதன் வழியாகத்தான் அவன் என்னையும் உலகத்தையும் பார்த்துக் கொண்டிருப்பான். உத்ராவிற்கு தம்பி மேல் அலாதி பாசம். அவன் எங்களை ஒத்த பையன்களுடன் விளையாடுவதில்லை என்ற ஏக்கம் அவளுக்கு எப்பொழுதும் உண்டு. ஆதலால் நாளடைவில் நாங்கள் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டில் மனோகர் அம்பயரும் ஸ்கோரரும் ஆனான் எல்லாம் ஜன்ன வழியாகத்தான். பின் என்னுடைய நண்பர்களும் நானும் அவன் வீட்டிற்கு சென்று கேரம் விளையாட ஆரம்பித்தோம். பிறகு மனோகர் வெளியே அமர்ந்து எங்கள் விளையாட்டிற்கு நடுவரனான். இப்பொழுது எனக்கு மனோகரை பார்க்கவில்லை என்றால் வேலை ஓடுவதில்லை. அவனை பார்க்காமல் அவனுடன் பேசாமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை. இது நான் வெளி நாட்டிற்கு வேலைக்கு போகும் வரை நடந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு முறை விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் பொழுதும் மனோகரிடம் என் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. மனோகர் உத்ராவின் திருமணத்திற்குப் பிறகு மூன்று சக்கர வண்டியில் உலகை பார்க்க ஆரம்பித்த நேரம். அவர்கள் அந்த வீட்டை விற்று விட்டு வேறு இடம் சென்று விட்டார்கள். அவர்கள் என்றால் அவனும் அவன் அம்மாவும். இருந்தாலும் நான் ஊரிலிருந்து வந்த செய்தி தெரிந்தவுடன் தன் மூன்று சக்கர வண்டியை கையால் ஒட்டிக்கொண்டு என்னை காண வந்து விடுவான். உத்ரா கல்யாணமாகி டில்லியில் இருக்கிறாள்.

இந்த முறை நான் ஊருக்கு சென்றிருந்த பொழுது உத்ரா தன் குழந்தையுடன் ஊருக்கு வந்திருந்தாள். என்னைப் பார்க்க வந்தாள், என் அறையில் அமர்ந்து ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தோம். மனோகர் இன்னும் சிறிது நேரத்தில் என்னை பார்க்க வருவான் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் வரவில்லை.

அவன் வரும் வழியில் எந்த லாரிக்காரனோ எவனோ குடி போதையில் அவன் வண்டியை இடித்து இருபதடி தள்ளி போட்டிருந்தான். விஷயம் தெரிந்தவுடன் அவனை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு விரைந்தோம். மனோகர் பிழைக்க வேண்டுமே என்று போகும் வழியெல்லாம் கவலை. எனக்கு அவனை பார்க்க தைர்யம் இல்லை. மருத்துவமனை ஜன்னல் வழியாக அவனை வெறித்து நோக்கினேன். பாதியாக சுருங்கி இருந்தான், கைகள் இரண்டும் முழங்கைக்களுக்கு கீழ் காணவில்லை. அப்பொழுதுதான் அவனுக்கு மயக்கம் தெளிந்திருந்தது. ஜன்னல் வழியாக எங்களை பார்த்தான்.

வெளி வரும் வழியில் ஏனோ என் கண்ணில் மார்ச்சுவரி ஜன்னல் தென்பட்டது.

Wednesday 17 August 2011

கலக்கல் காக்டெயில் -38


அன்னா ஹசாரேவும் அவிழ்ந்த  கோவணங்களும்



இந்த புதிய இந்தியன் தாத்தா லோக்பாலை கையில்  எடுத்துக்  கொண்டு நாளொருமேனி பொழுதொரு வண்ணமுமாகமத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க. மத்திய அமைச்சர்கள் மாறி மாறி இவருமட்டும் யோக்கியமா, உச்ச நீதிமன்றம் ஏதோ ஒரு அறிக்கையில் அன்னா பெயரை குறிப்பிட இவர் வந்துட்டார்பா என்று தெருவுக்கு தெரு கூவிக்கொண்டு இருக்கிறார்கள். இவரின் உண்ணாவிரதத்தை தடுக்க முயன்ற மத்திய அரசு எவ்வளவு முயன்று பார்த்து கடைசியில் அர்ரெஸ்ட் அஸ்திரத்தை உபயோகப்படுத்தி  தாற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்கள். ஊழலை எதிர்க்கிறேன் என்று அவரவர் கிளம்பியிருக்கிறார்கள். இதெல்லாம் வேலைக்கு ஆவாது. ஒரு பத்தாயிரம் இந்தியன் தாத்தாவை க்ளோனிங் செய்து எல்லா மாநிலத்திலும் விட்டுவிடவேண்டும் அப்புறம் ஊழல என்ற வார்த்தையே இருக்காது என்று சங்கர் ஐடியா கொடுப்பார்.



துரைமுருகன் பாடி லாங்க்வேஜ் சரியில்லை.................

சட்டசபையில் என்னத்தான் நடக்குதுன்னு பார்த்தா, தினமும் வெளிநடப்பு ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் கேலி செய்வது என்று போய்க்கொண்டிருக்கிறது. இதில் இரண்டு கட்சிகளும் விதிவிலக்கல்ல. இந்த முறை துரைமுருகன் உட்காரும் தோரணை சரியில்லை என்னை கிண்டல் செய்வது போல் இருக்கிறது என்று ஒரு அமைச்சர் சொல்லுகிறார், சபாநாயகர் சரியா உட்கார்பா என்கிறார். உடனே சமத்துவ மக்கள் கட்சி தானைதலைவர் சுப்ரீம் ஸ்டார் அவங்க கட்சி தலைவரே அப்படித்தான் உட்கார்வார் என்கிறார். என்ன ஒரு விவாதம். உடுங்கப்பா அவங்களுக்கு உட்காரும் இடத்தில் என்ன கஷ்டமோ.

ஏதாவது மக்கள்நல பிரச்சினையை எடுத்து விவாதம் பண்ணுங்கப்பு. இப்பெல்லாம் நர்சரி பள்ளிகளிலேயே டீச்சர் அவள் கிள்ளிட்டா, அடிச்சிட்டா, பலப்பம் பிடுங்கிட்டா, குரங்கு மூஞ்சி காமிச்சா போன்ற முறையீடுகள் வருவதில்லையாம். சட்டசபை எப்போது வயசுக்கு வரும் என்று தெரியவில்லை.

ரசித்த கவிதை  

இயற்கை

புகைவண்டி கூவினபடி
போய்க் கொண்டிருக்கிறது.
ஏறிட்டுப் கூடப் பார்க்கவில்லை
நடவு செய்ய
வயலில் குனிந்திருந்தவர்கள்.

அதிர்வடங்கும் வரை
தலைதூக்கி நகராமல் நின்றது
சோற்றுக் கற்றாழைப் புதரில்
ஒரு சிறு பாம்பு.

புல்லின் சிலிர்ப்பில்
மாற்றமே இல்லை

கல்யாண்ஜி

மரண மொக்கை



டாஸ்மாக் வாசலில் இருக்கும் குப்பைதொட்டி அருகே படுத்திருக்கும்
 நபர் தெளிந்தவுடன் எழுந்து எதிரில் தள்ளாடி வருபவரிடம் 
ஏம்பா மேலே கீதே அது சூரியனா சந்திரனா.

போடா பாடு என்னாண்ட கேக்குறியே நானே ஊருக்கு
 புச்சு.



பன்ச் டயலாக்  



“நான் சாமிக்கிட்டேதான் சாந்தமா இருப்பேன் சாக்க்க்க்க்கடை கிட்டே இல்லை”.



சாக்கடை கிட்டேயும் சாந்தமா தான் இருக்கணும் மீறி கையை வச்சே மவனே கப்பு ஆளை அம்பேலாக்கிடும்.



இந்தவார ஜொள்ளு



இன்ட்லியில் விழும் ஓட்டுக்கள் சமீபத்தில் மிகவும் குறைந்து விட்டது. 
ஆதலால் வாக்காளப் பெருமக்களே, பெரியோர்களே, பதிவர்களே வோட்டை (ஓங்கி)  நல்லா அழுத்தமா குத்துங்க ப்ளீஸ்.

Monday 15 August 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 4


பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் தொடரில் இந்த வாரம் எனக்குப் பிடித்த பதிவர் அட்ராசக்க சி.பி.செந்தில்குமார்.


செந்தில் ஈரோட்டுக்காரர், தன்னை பற்றிய சுய அறிமுகத்தில் மனிதர் மிக அவையடக்கத்தை காண்பித்திருக்கிறார்.

ஆனால் இவரது பதிவுகள் இவரின் பெருமைகளை பறை சாற்றுகின்றன. அப்பப்பா அருநூற்றி என்பது பதிவுகள் ஒன்றரை வருடத்திலா. இப்பவே கண்ணைக் கட்டுதே. அதற்கு சமமான தொடர்பவர்களின் எண்ணிக்கை, உண்மையை சொல்லப் போனால் தொடர்பவர்களின் எண்ணிக்கை எழுநூறு. தமிழ்மணத்தில் முன்னணி வரிசையில் (ஒன்னாம் நம்பர்பா) இருக்கும் பிரபல பதிவர். மனிதர் சரியான நக்கல் பார்ட்டி.

எல்லா விதமான தலைப்புகளையும் தனக்கே உரிய பாணியில் எழுதும் பதிவர். இருந்தாலும் இவரின் சினிமா விமர்சனத்துக்கு நான் ரசிகன்.

சமீபத்திய இடுகை ஆடிப் பதினெட்டில் ஆற்றில் இறங்கி குளிக்காத ஹைக்லாஸ் பிகர்களை தனக்கே உரிய பாணியில் இது நியாயமா? என்று சாடுகிறார். எல்லா பிகர்களுக்கும் மார்க் கொடுக்காமல் விடமாட்டார்.

சமீபத்தில் வந்த கில்மா படத்திற்கு “சாந்தி அப்புறம் நித்யா கில்மாவா ஜொள்மாவா”  என்ற விமர்சனம் படியுங்கள்.

“மன்மதன் அம்பு புரோட்யுசருக்கு சொம்பு” பயங்கர நக்கலான விமர்சனம். இவரின் கருத்துக்கு நான் ஒத்துப் போகிறேன். இந்தப் படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு இன்றும் என்னால் பார்க்க முடியவில்லை.

இன்று “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” படத்திற்கான விமர்சனம் இவருடைய பாணியில் எழுதியிருக்கிறார்.    

நெல்லை பதிவர் சந்திப்பை ஆறு பதிவுகள் லொள்ளை ஓரங்கட்டிவிட்டு எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வந்து சித்ரா கூட சந்திப்பில் பங்கு கொண்டிருக்கிறார், அவரது வேண்டுகோளின்படி நக்கலை அந்தப் பதிவில் தவிர்த்திருக்கிறார்.

செந்தில் உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்.

காணாமல் போன பதிவர்கள்.

ம.தி. சுதா தலைவர் ரொம்ப நாட்களாக காணவில்லை. சமீபத்தில்தான் எனக்கு பின்னூட்டம் போட்டார். ஆஹா வருகைக்கு நன்றி, வணக்கம். நம்ம சூப்பர் ஸ்டார் பதிவர் செந்தில் உங்களைப் பற்றி 2010ல் மிகச்சிறந்த பத்து பதிவர்களில் உங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

அதற்காக திரும்ப வலைப்பூவில் நிறைய எழுதுங்கள் சுதா. உங்களது ஈழத் தமிழிற்கு நாங்கள் ஏங்குகிறோம்.


Wednesday 10 August 2011

மூன்றெழுத்து டுபாக்கூர் கவுஜ


தொடங்கிய கட்சி மூன்றெழுத்து

கட்சி பெயர் மூன்றெழுத்து

கொண்ட கொள்கை மூன்றெழுத்து

தொண்டரின் அன்பு மூன்றெழுத்து

கொண்ட கடமை மூன்றெழுத்து

சேர்த்த ஒட்டு மூன்றெழுத்து

குத்திய கள்ள ஒட்டு மூன்றெழுத்து

உள் குத்து மூன்றெழுத்து

பிடித்த ஆட்சி மூன்றெழுத்து

கொண்ட பதவி மூன்றெழுத்து

---(கா)த்த தமிழ் மூன்றெழுத்து

அடித்த கொள்ளை மூன்றெழுத்து

வளைத்த நிலம் மூன்றெழுத்து

குடித்த புட்டி மூன்றெழுத்து

பிடித்த குட்டி மூன்றெழுத்து

சேர்த்த வைப்பு மூன்றெழுத்து

சுட்ட பணம் மூன்றெழுத்து

அதை போட்ட வங்கி மூன்றெழுத்து

அதன் இருப்பிடம் சுவிஸ் மூன்றெழுத்து

போன மானம் மூன்றெழுத்து

மக்களுக்கு கொடுத்த அல்வா மூன்றெழுத்து.