மனோகருக்கு அந்த ஜன்னல்தான் உலகம். அதன்
வழியாகத்தான் அவன் என்னை என் வீட்டு ஜன்னலையும் தாண்டி பார்ப்பான். நடுவில்
ராஜவேலு முதலியார் வீடு. அவர் வீட்டின் முன்னால்தான் நாங்கள் விளையாடுவோம். முதலியார்
வீடு பின்னடங்கியிருக்கும். அதற்கும் பின்னால் அடுத்த தெருவை வளைத்து தோட்டமும்
மாட்டுக் கொட்டகையும் இருக்கும். ஆதலால் எங்களுக்கு முன்னாலிருக்கும் இடத்தை
விளையாட தண்ணி தெளித்து விட்டார். மனோகர் எனக்கு அறிமுகமானது அவன் அக்கா
மூலமாகத்தான்.
உத்ரா அதுதான் அவள் பெயர். அவள் நான் படிக்கும்
பள்ளிக்கு ஒரு மைல் தள்ளியிருந்த பள்ளியில் படித்தாள். என்னைவிட இரண்டு வயது
மூத்தவள். ஒரு முறை பள்ளி விட்டு நான் வரும்பொழுது என்னை பார்த்து சிரித்தாள்.
பெண்களுடன் சேர்ந்தால் காது அறுந்துவிடும் என்ற காலத்தில் இருந்த எனக்கு ஏனோ அவள்
சிரிப்புக்கு பதில் சிரிப்பு விடுத்தேன். அன்றையிலிருந்து நானும் அவளும் ஒன்றாகவே
பள்ளிக்கு செல்வோம். வாய் ஓயாமல் பேசுவாள். திரும்பி வரும்பொழுது ஒருவருக்கு
ஒருவர் காத்திருந்து வீடு வருவோம். நண்பர்களின் கிண்டல் என்னை ஒன்றும் பாதிக்க
வில்லை. ஒரு நாள் அவளை பார்க்கவில்லை என்றால் எனக்கு பள்ளி போரடித்தது.
உத்ராவின் ஒரு கால் இளம்பிள்ளைவாதத்தினால்
பாதிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலை இழுத்து இழுத்து தான் நடப்பாள். அவளது
முகத்தில் உள்ள சிரிப்புக்கு இன்றும் நான் ஓடி ஓடி சம்பத்தித்த என் சொத்தை எழுதி
வைப்பேன். உத்ராவுடன் பேசவில்லை என்றால் எனக்கு உலகம் இருண்டுவிடும். அந்த உணர்வு
பின்னாளில் மனோகரிடம் ஏற்பட்டது அதற்கும் உத்ராதான் காரணம்.
அவளின் அழைப்பின் பேரில் அவள் வீட்டிற்கு சென்ற
பொழுதுதான் எனக்கு மனோகர் அறிமுகமானான். அவனுக்கும் என் வயதுதான் இருக்கும். அவன்
பள்ளிக்கு செல்லவில்லை, வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து சொல்லிக் கொடுத்துக்
கொண்டிருந்தார்கள். உத்ராவின் ஒரு காலை தாக்கிய விதி அவன் இரண்டு காலையும் பதம்
பார்த்திருந்தது. இரண்டு கைகளையும் உபயோகித்துதான் அவன் வீட்டுக்குள் நகர்ந்து
கொண்டிருந்தான். தன்னுடைய நிலைமையின் தாழ்வு மனப்பான்மையினால் மனோகருக்கு அந்த
ஜன்னல் தான் உலகம். அதன் வழியாகத்தான் அவன் என்னையும் உலகத்தையும் பார்த்துக்
கொண்டிருப்பான். உத்ராவிற்கு தம்பி மேல் அலாதி பாசம். அவன் எங்களை ஒத்த
பையன்களுடன் விளையாடுவதில்லை என்ற ஏக்கம் அவளுக்கு எப்பொழுதும் உண்டு. ஆதலால்
நாளடைவில் நாங்கள் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டில் மனோகர் அம்பயரும் ஸ்கோரரும்
ஆனான் எல்லாம் ஜன்ன வழியாகத்தான். பின் என்னுடைய நண்பர்களும் நானும் அவன்
வீட்டிற்கு சென்று கேரம் விளையாட ஆரம்பித்தோம். பிறகு மனோகர் வெளியே அமர்ந்து
எங்கள் விளையாட்டிற்கு நடுவரனான். இப்பொழுது எனக்கு மனோகரை பார்க்கவில்லை என்றால்
வேலை ஓடுவதில்லை. அவனை பார்க்காமல் அவனுடன் பேசாமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை.
இது நான் வெளி நாட்டிற்கு வேலைக்கு போகும் வரை நடந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறை விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்
பொழுதும் மனோகரிடம் என் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. மனோகர் உத்ராவின் திருமணத்திற்குப்
பிறகு மூன்று சக்கர வண்டியில் உலகை பார்க்க ஆரம்பித்த நேரம். அவர்கள் அந்த வீட்டை
விற்று விட்டு வேறு இடம் சென்று விட்டார்கள். அவர்கள் என்றால் அவனும் அவன்
அம்மாவும். இருந்தாலும் நான் ஊரிலிருந்து வந்த செய்தி தெரிந்தவுடன் தன் மூன்று
சக்கர வண்டியை கையால் ஒட்டிக்கொண்டு என்னை காண வந்து விடுவான். உத்ரா கல்யாணமாகி
டில்லியில் இருக்கிறாள்.
இந்த முறை நான் ஊருக்கு சென்றிருந்த பொழுது
உத்ரா தன் குழந்தையுடன் ஊருக்கு வந்திருந்தாள். என்னைப் பார்க்க வந்தாள், என்
அறையில் அமர்ந்து ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு பழைய நினைவுகளை அசை போட்டுக்
கொண்டிருந்தோம். மனோகர் இன்னும் சிறிது நேரத்தில் என்னை பார்க்க வருவான் என்று
சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் வரவில்லை.
அவன் வரும் வழியில் எந்த லாரிக்காரனோ எவனோ குடி
போதையில் அவன் வண்டியை இடித்து இருபதடி தள்ளி போட்டிருந்தான். விஷயம் தெரிந்தவுடன்
அவனை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு விரைந்தோம். மனோகர் பிழைக்க வேண்டுமே என்று
போகும் வழியெல்லாம் கவலை. எனக்கு அவனை பார்க்க தைர்யம் இல்லை. மருத்துவமனை ஜன்னல் வழியாக
அவனை வெறித்து நோக்கினேன். பாதியாக சுருங்கி இருந்தான், கைகள் இரண்டும் முழங்கைக்களுக்கு
கீழ் காணவில்லை. அப்பொழுதுதான் அவனுக்கு மயக்கம் தெளிந்திருந்தது. ஜன்னல் வழியாக
எங்களை பார்த்தான்.
வெளி வரும் வழியில் ஏனோ என் கண்ணில் மார்ச்சுவரி
ஜன்னல் தென்பட்டது.
4 comments:
வெளி வரும் வழியில் ஏனோ என் கண்ணில் மார்ச்சுவரி ஜன்னல் தென்பட்டது...
அருமை...
நன்றி ரேவ்ரி
அருமையான எழுத்து நடை
இன்று என் வலையில்
மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.