Pages

Saturday 31 December 2011

புதிய ஆண்டு


எதிர்பார்ப்புகள் அனைத்தும்
கடந்த ஆண்டில் கழிந்து போன
நினைவுகளாய்

எழுதப்படாத நாட்குறிப்பில்
அழித்து எழுதமுடியா
நிராசைகளாய்

நினைவில் வந்துபோகும்
புதிய எண்ணங்கள்
கனவுகளாய்

தொடரும் புத்தாண்டில்
நிறைவேறும் நினைப்பில்
எதிர்பார்ப்புகளாய்

எல்லோர் எண்ணங்களும்
விருப்பங்களும் இனிதே ஈடேற
வரும் புத்தாண்டில்

கடலளவு ஆனாலும்
மயங்காமல்
கையளவு என்றாலும்
கலங்காமல்


எல்லோரும் இன்புற்றிருக்க
வேண்டும்,  நல்லெண்ணங்கள்
வேண்டி
பிறக்கட்டும் புத்தாண்டு

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Tuesday 27 December 2011

லோக்பால் அரசியல்


இன்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி திருத்தப்பட்ட லோக்பால் வரைவு மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் இன்று நாள் முழுவதும் தொடர்ந்தது.
இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பா.ஜ.க. யின் சுஷ்மா ஸ்வராஜ் எதிர் பார்த்தது போல் தங்கள் முன்கூட்டியே தீர்மானித்த விவாதங்களை எடுத்து வைத்தார். மசோதாவில் உள்ள தீர்மானங்களில் சில மாநில உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது. மேலும் இதில் இட ஒதுக்கீடு தேவையற்றது என்பது அவர்களின் பிரதான வாதம். மேலும் அவர்களது பேச்சில் குறைந்தது நாற்பது திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சிகளோ தங்கள் பங்கிற்கு ஒரு பத்து திருத்தம் முன் வைத்திருக்கிறார்கள்.

பின்னர் பேசிய கபில் சிபல் மசோதாவை எதிர்க்கட்சி சரியாக படிக்காமல் விவாதம் செய்கிறார்கள் என்ற வாதிட பின்னர் குழாயடி சண்டையாக மாறியதை இன்று என்.டி.டி.வி பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். இதற்கு நடுவில் ஒரு கூட்டம் எப்பொழுதும் எழுந்து நின்று கத்திக் கொண்டு இருந்தனர்.

சி.பி. ஐ யை இந்த வரம்புக்குள் கொண்டுவருவதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

சபாநாயகர் மீரா குமாரோ “நூறு ரூபாய் வாங்கியது” போல் சிரித்துக் கொண்டே எல்லோரையும் அமைதியாக அமருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கெல்லாம் மேலாக நம்ம “சிங்கு” கம்மென்று இருந்தார்.

ஆளும் கட்சிக்கு வருகின்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்குள் இந்த மசோதாவை நிறைவேற்றவேண்டும் என்ற துடிப்பு, எதிர் கட்சிகளுக்கோ இதை எதிர்த்தே தீருவது என்பது, ஆளும் கட்சிக்கோ நாங்கள் ஊழலை எதிர்க்க சட்டம் கொண்டு வந்தோம் மற்ற கட்சிகள் நிறைவேற்றவில்லை என்ற வாதத்தோடு தேர்தலை சந்திக்கலாம் என்ற எண்ணம்.

மொத்தத்தில் இவர்கள் யாவர்க்கும் ஊழலை ஒழிக்க இந்த மசோதா கொண்டு வருவதில் அக்கறை இல்லைபோல் தோன்றுகிறது. எல்லோரும் இதை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

போதாகுறைக்கு அன்னா ஹசாரே திட்டமிட்டபடி மும்பையில் தன் உண்ணாவிரதத்தை துவங்கினார். எதிர் பார்த்த அளவு கூட்டம் இல்லை என்பது மக்கள் இவர் மீது வைத்திருந்த மதிப்பு குறைவதுபோல் உள்ளது. அவர் பேச்சில் இப்பொழுது வீசும் அரசியல்நெடி இந்தப் போராட்டத்தை வலுவிழக்க செய்கிறது. மேலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அமைப்பை சற்று அதிகமாகவே நிர்ப்பந்திப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கடைசியாக வந்த செய்திப்படி அவருடைய உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் முடியும் வரை உண்ணாவிரதத்தை கைவிட்டு அடுத்த கட்ட போராட்டம் தேவையென்றால் அதை பற்றி யோசிக்கலாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து.

ஊழலை ஒழிக்க  ஒரு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதில் மக்களின் மத்தியில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இவர்கள் செய்யும் அலம்பலை பார்த்தால் இதை எப்படியும் வரவிடாமலோ அல்லது வந்தால் வேறு ஒரு அமைப்பு சம்பாதிப்பதற்கு வழிவகை செய்வது போல் உள்ளது.

Monday 26 December 2011

2011 ஒரு பார்வை


இன்னும் சிறிது நாட்களில் 2011 முடிந்து 2012 தொடங்கவிருக்கிறது. கடந்த வருடம் நடந்த நிகழ்வுகள் ஒரு பார்வை.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழ் நாட்டில் நடந்த பேயாட்சி ஒழிந்து பிசாசு ஆட்சி தொடங்கியது.

மின்வெட்டு: தமிழ்நாட்டில் இரண்டு மணிநேரம் வரை இருந்த மின்வெட்டு நான்கு மணி நேரம் ஆக்கிய சாதனை பொன் எழுத்தில் பொறிக்கப்படவேண்டியது. 

பரமக்குடி: பரமக்குடியில் நடந்த வன்முறையின் பொழுது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழுபேர் பலியாயினர். இதை விசாரிக்க ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை இன்னும் ஐந்து வருடங்கள் நடக்கும், முடிவில் எல்லோராலும் மறக்கப்படும்.

2ஜி அலைக்கற்றை: வரலாறு காணாத நஷ்டத்தினை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கில் பல பேர் சிறையில் அடைக்கப்பட்டு சி.பி.ஐ வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. முடிய எத்தனை வருஷம் ஆகுமோ?

மணல்கொள்ளை: முற்றும் ஒழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்பு கொள்ளை ஒரு கூட்டத்திடமிருந்து இன்னொரு கூட்டத்திற்கு கை மாறியது.

கூடங்குளம்: அனுமின் நிலயம் மத்திய அரசால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கும் நேரத்தில் சுற்றுப்புற மக்கள் நடத்திய போராட்டத்தால் தடம்புரண்டு எப்பொழுது தொடங்கும் அல்லத்து தொடங்காதா? என்ற கேள்வியுடன் நிற்கிறது.

முல்லை பெரியாறு: முல்லை பெரியாரில் புதிய அனைகட்டுவோம் என்று கேரளா அரசாங்கம் திரி கிள்ளியதின் விளைவு இன்னும் இரு மாநிலங்களிலும் எரிந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையும் இத்தோடு தீரப்போவதில்லை. அடுத்த காவிரியாகி தொடர்ந்து கொண்டிருக்கும்.

மீனவர்கள்: கடலுக்கு மீன் பிடிக்க  செல்லும் தமிழக மீனவர்கள் சிங்கள அரசின்  துப்பாக்கிக்கு பலியாவது தொடர்ந்து கொண்டிருக்க முதலமைச்சர்கள் மாய்ந்து மாய்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

சமச்சீர் கல்வி: கல்விக் கொள்கையில் இரண்டு கட்சிகளும் அடித்த கும்மியில் பள்ளிக்கூடங்களில் மூன்று மாதங்கள்  பாடப் புத்தகங்கள் வழங்காமல் மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர், பெற்றோர்கள் கவலையில் இருந்தனர்.

புதிய சட்டசபை வளாகம்: சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சட்டசபை வளாகம் வீண் பிடிவாதத்தால் வீணடிக்கப்பட்டது.

மக்கள் நல பணியாளர்கள்: பதிமூன்றாயிரம் பணியாளர்கள் எதிர் பார்த்ததுபோல் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 

மன்னார்குடி மாபியா: கடந்த இருபது ஆண்டுகாலமாக பேசப்பட்ட உறவு ஒரு நாளில் முறிந்தது. குடும்பம் கூண்டோடு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

விலைவாசி: பேருந்து கட்டணம், பால் என தொடங்கி எல்லா பொருட்களிலும் விலையேற்றம்  வழக்கம் போல் ஏறியது.

நில அபகரிப்பு: புதிய ஆட்சி வந்தவுடன் ஒரு தனி இலாகா தொடங்கப்பட்டு எல்லோரையும் பிடித்து உள்ளே போட்டு வழக்கு தொடர்ந்து கொண்டிருப்பது. இதில் எவ்வளவு உண்மை எவ்வளவு ஜோடனை என்று தெரியாமல் மக்கள் குழம்பிக்கொண்டிருப்பது ஒரு பெரிய சாதனை.

எல்லாமே எதிர்மறையாக இருக்கும் பொழுது நல்லதே நடக்கவில்லையா? என்று கேட்பவர்களுக்கு, ஆறுதலாக

டாஸ்மாக் விநியோகம் தங்கு தடை இல்லாமல் வழங்கியது, புதிய எலைட் பார்களின் வருகை.

தமிழ் திரையுலகம் வாரம் தவறாமல் நான்கு மொக்கை படங்கள் வழங்கியது என்ற சாதனையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.