நிஜமாகவே எங்கள் வீட்டு கிணற்றை காணவில்லை. இது ஏதோ
இல்லாத கிணற்றை காணவில்லை என்று “வடி”வாக புலம்பும் பதிவல்ல. இந்தக் கிணற்றுக்கும்
எனக்கும் உள்ள உறவு மிகவும் பிரத்தியேகமானது. அவளுக்கும்தான்.
கிணறு ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல. சுமார் எட்டு அடி
விட்டம்தான் இருக்கும். ஆனால் வற்றாத ஊற்று. அந்த வீட்டில் குடியிருந்த இரண்டு
குடும்பங்களில் கிட்டத்தட்ட மொத்தமாக ஒரு இருபது பேர்களின் தண்ணீர் தேவையை ஊரே
வறண்ட காலங்களிலும் பூர்த்தி செய்து கொண்டிருந்தது. கிணற்றில் நீர் இறைத்துத்தான்
உபயோகித்துக் கொண்டிருந்தோம். மோட்டார் பம்ப் செட் எல்லாம் எங்களுக்கு எட்டாத
உயரத்தில் இருந்தது. நிற்க. நான்
சொல்லவந்தது கிணற்றின் ஊற்றுப் பெருமையை பற்றி அல்ல.
எங்களுடன் இருந்த மற்றொரு குடும்பத்தில் உள்ள
அவர்களது இரண்டாவது பெண்ணும் நானும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம். அவள்
எப்பொழுதும் பள்ளியில் முதல் ரேங்க் தான்.
அவளுடைய இடத்தைப் பிடிக்க நான் போராடிக் கொண்டிருந்தேன். நம்ம வீட்டில்
எதற்கெடுத்தாலும் என்னை அவளோடு ஒப்பிட்டு கடுப்பேத்திக் கொண்டிருப்பார்கள்.
அப்பொழுதெல்லாம் அவள் டீச்சர்கள் எல்லோருக்கும் பிடித்தமானவள் ஆதலால் தான் முதல்
ரேங்க் பொது தேர்வு வந்தால் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். இருவரும்
மொட்டை மாடியில் ஒன்றாக படிப்போம். அவளின் நியாபக சக்தி என்னை வியப்படைய வைக்கும்.
அந்த பொதுத் தேர்வும் வந்தது. எல்லாம் முடிந்து
விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தோம். அன்று ரிசல்ட் வரும் நாள்.
காலை பதினொரு மணிக்கே மாலைமுரசு வந்துவிட்டது. பள்ளி பரீட்சை இறுதி ரிஸல்ட்டுக்காக
ஸ்பெஷல் எடிஷன். நான்தான் கடைக்குப் போய் பேப்பர் வாங்கிக்கொண்டு வந்தேன். இரு
வீட்டாரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.
என்னுடைய நம்பர் 124670, பேப்பரில் 124670-124674 என்றிருந்தது. நானும் அடுத்தடுத்த நண்பர்களும்
பாசாகிவிட்டோம். அவளுடைய நம்பர் 124634. அவளுடைய நம்பர் இல்லை. 124633 இருந்தது. பின்பு 124636 இருந்தது. எனக்கு நம்பிக்கையில்லை
அவள் பெயில் ஆக சான்சே கிடையாது. ஆனால் அவள்
முகத்தில் கவலை தெரிந்ததே தவிர அவள் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவள்
அம்மாதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் இது ஏதோ பதிப்பில் தவறு
இருக்கிறது, நாளை ஆங்கில நாளிதழில் போடுவார்கள் அதில் பார்க்கலாம் என்றேன்.
அன்று மாலை தெருவில் விளையாட நண்பர்கள் வந்து
அழைத்தார்கள். நாங்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் வேளையில்தான் அந்த விபரீதம்
நிகழ்ந்தது. அவள் கிணற்றில் குதித்துவிட்டாள். அவள் அம்மா கத்தவே எங்களில் இருந்த
ஒருவன் ஓடிச்சென்று அவனும் கிணற்றில் குதித்தான். தண்ணீரில் தத்தளித்துக்
கொண்டிருந்த அவளை முடியை பிடித்து தண்ணிக்கு மேலே கொண்டுவந்தான். இப்பொழுது மேலே
கூட்டம் கூடவே அவர்கள் இருவரையும் கயிறு கட்டி மேலே இழுத்துப் போட்டார்கள்.
அடுத்த நாள் காலையில் ஆங்கில பேப்பரில் பரீட்சை
ரிசல்ட்டுகள் வந்தன. அதில் 124633-124636 அவள் பாஸான செய்தி
இருந்தது. நடுவில் உள்ள கோடு நேற்றைய பேப்பரில் அச்சுப் பிழையில் விட்டுப் போனது
தெரிய வந்தது. எல்லோரும் அவளிடம் அவசரப்பட்டு கிணற்றில் குதித்தாயே என்று
கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவளை பற்றி நன்றாக தெரியும். அவள் கட்டாயம்
பரீட்சை ரிசல்ட்டுக்காக கிணற்றில் குதித்திருக்க மாட்டாள். வேறு ஏதோ? காரணம்
இருக்கிறது. அதை கேட்கலாம் என்றால் இப்பொழுது அவள் என்னை தவிர்த்தாள்.
பின்பு அவர்கள் குடும்பம் அந்த வீட்டை காலி செய்து
கொண்டு இரண்டு தெருக்கள் தள்ளி குடியேறி விட்டார்கள். பின்பு அவளை பார்ப்பது
அரிதாகிவிட்டது.
எத்துனையோ முறை முயன்று அவளுடன் பேச முடியவில்லை.
பிறகு நாங்கள் கல்லூரியில் சேர்ந்தோம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு
தான் ஒரு நாள் அவளை தனியாக மடக்கி விசாரித்தேன். அன்று அவள் கிணற்றில் குதித்த காரணத்தை சொன்ன
பொழுது அவளின் மதிப்பு என்னிடத்தில் உயர்ந்தது. நாங்கள் மொட்டை மாடியில் படிப்பதை
அவள் அம்மா கொச்சை படுத்தியதே காரணம். பேப்பரில் நம்பர் இல்லை என்றவுடன் கோவத்தில்
அவள் அம்மா ஏதோ கூறியிருக்கிறார்கள்.
பிறகு அவள் கல்யாணமாகி வெளிநாடு சென்று விட்டாள். போன
முறை நான் விடுமுறைக்கு சென்ற பொழுது அவளை அவளுடைய பத்து வயதுப் பெண்ணுடன் அந்த
கடை தெருவில் பார்த்தேன். இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறாயா என்று
விசாரித்தாள். நாங்கள் அந்த வீட்டை விட்டு போய் வெகு காலமாகிறது என்றும் நானும்
இப்பொழுது வெளிநாட்டில்தான் இருக்கிறேன் என்றேன். அந்த வீட்டை எனக்கு மற்றுமொரு
முறை பார்க்க வேண்டும், அந்த மொட்டை மாடி அந்த கிணறு எல்லாம் பார்க்கவேண்டும்
போலிருக்கிறது, நாளை போலாமா நீ வருகிறாயா என்றாள்.
அடுத்த நாள் அந்த வீட்டிற்கு நான், அவள் அவள் பெண்
எல்லோரும் போனோம். வீட்டை கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது. முன் பக்கம் வீட்டை
கொஞ்சம் கொத்தி லாந்தி மாற்றி அமைத்து விட்டார்கள். பின் பக்கம் கிணற்றை பார்க்கப்
போனோம்.
கிணற்றை காணவில்லை. அருகில் இருந்த குளியறைகளும்
காணவில்லை.
முன் வீட்டு மொட்டை மாடியில் அஸ்பெஸ்டாஸ் கூரை
வேய்ந்து சில குடியிருப்புகள் இருந்தன. அங்கிருந்து கிணறு இருந்த இடத்தை
நோக்கினோம், அங்கிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு எங்களை ஏளனம் செய்வது
போலிருந்தது.
13 comments:
நம்முடைய வாழ்வில் சந்திக்கும் குறியீடுகள் சிலரை நினைவுபடுத்துகின்றன.......
வருகைக்கு நன்றி சுரேஷ் குமார்.
//கிணற்றை காணவில்லை. அருகில் இருந்த குளியறைகளும் காணவில்லை.
//
எண்கள் ஊரில் மின்சாரத்தை காணவில்லை
பாஸ் அந்த கஷ்டத்தை ஏன் இப்பொழுது நியாபகப் படுத்துகிறீர்கள்.
ஏதேதோ எண்ணங்களை கிளறிவிட்டது உங்கள் பதிவு. சார் அந்த படம் சூப்பரோ சூப்பர்! படமே ஒரு கவிதை போல் இருந்தது. பதிவும் அருமை. மனம் கவர்ந்த பதிவு. வாழ்த்துக்கள்!
இண்ட்லி, தமிழ்10 ஓட்டுக்கள் போட்டுவிட்டேன். ஆனால் இந்த தமிழ்மணம் வாக்குப்பட்டை என்னவாயிற்று சரி பண்ணவில்லையா?. பிளாக்கர் நண்பன் தளத்தை பாருங்கள். அருமையான வழி சொல்லியிருக்கிறார் நண்பர். நான் அப்படித்தான் சரி செய்தேன்.
வருகைக்கு நன்றி துரைடேனியல்
கும்மாச்சி சார்...
மனம் தான் பாழுங்கிணறு!
ஆனால் அந்தப் படம் நயாக்கரா நீர்வீழ்ச்சி!
சூப்பர்!
அருணா செல்வம் வருகைக்கு நன்றி.
அந்த நாள்!
நீர் பாட்டுக்கு கிளறி விட்டுபுட்டியலே..போங்கப்பு...ஞாபகம் வருதே!....
மாப்பிள வருகைக்கு நன்றி.
மனசாட்சி வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.