Monday 14 May 2012

ஆதீனத்தில் குண்டர் படையா?


இரண்டு வாரங்களாக பரபரப்பு செய்தியாகிக்கொண்டிருக்கிறது, மதுரை ஆதீனம் விவகாரம்.

முதலில் ஆதீனத்தின் ரிஷிமூலத்தை பார்ப்போம். கிட்டத்தட்ட ஆயிரத்து  நானூறு வருடங்களுக்கு முன்பு  திருஞானசம்பந்தரால்  தோற்றுவிக்கப் பட்டது மதுரை ஆதீனம்.

மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் எனும் பாண்டிய மன்னன் சமண மதத்தைத் தழுவிய போது அவனது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் பகுதி முழுவதும் சமண மதம் இருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மானியும்(மங்கையர்க்கரசி) சைவ சமயத்தில் பற்றுக் கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும், மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார் இம்மடத்தில் தங்கவைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர்  திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயை குணப்படுத்தினார். 

ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். இச்செய்திகள் முழுவதும் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும், சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும் காணப்படுகிறது. தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக இடம்பெற்று உள்ளன.(நன்றி விக்கிபீடியா)

ஆதீனத்தின் சந்நிதானம்  (மடாதிபதி) அருணகிரி அவர்கள் இளய சந்நிதானமாக 
 நித்தியானந்தாவை நியமித்ததுதான் இப்பொழுது பெரும் 
 சர்ச்சையைகிளப்பியிருக்கிறது.  

நித்யானந்தா ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருப்பதால் அவரை சந்நிதானமாக்கியது மற்றைய ஆதீனங்களை வியப்படைய செய்திருக்கின்றன. போதாத குறைக்கு  நித்யானந்தா வேறு ஒரு பேட்டை ரவுடி போல் மற்றைய ஆதீனங்களுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் பட்டமேற்ற அந்த விழாவில் தெரிந்த ஆடம்பரம் வருமான வரித்துறை ரெய்டு வரை மதுரை ஆதீனத்தை கொண்டு வந்திருக்கிறது.
ஆதீன மீட்புக்குழு ஆதீனத்தை மீட்போம் என்று கூறியதால், நேற்றைய தினம் ஆதீனத்தின்முன் போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு இன்ஸ்பெக்டர் மேல் நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. மேலும் கலவரத்தை எதிர்நோக்கி மதுரை ஆதீனத்திற்குள் நித்யானந்தா குண்டர் படை வைத்திருப்பாரோ என்று போலிஸ் சந்தேகிக்கிறது.

பணம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.  இதில் நீதித்துறையும் ஓரளவுக்குமேல் தலையிட முடியாது. 

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.