Pages

Thursday 27 September 2012

உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உள்குத்துகளும்

இன்று உச்சநீதிமன்றம் சரித்திர புகழ்வாய்ந்த இரண்டு தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. முதலில் அந்த தீர்ப்புகளை பார்ப்போம். முதலாவது கூடங்குளம் அனுமின்நிலையம் பற்றிய வழக்கில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

கூடங்குளம்  


இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக்மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது கூடங்குளம் அணு உலைக்கு தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அணு உலைக் கழிவால் கடல்வளத்துக்கு ஆபத்து என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார். ஆனால் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜப்பானின் புகுஷிமாவை விட மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது கூடங்குளம் அணு உலை என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். அப்போது, கூடங்குளத்தில் எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது? செலவு செய்யப்பட்டுள்ளது என்பது முக்கியம் அல்ல. கூடங்குளத்தில் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். கூடங்குளத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் அணு உலையை இழுத்து மூட வேண்டியதுதான் என்று கூறியுள்ளனர்.

சொத்து  குவிப்பு வழக்கு

மற்றைய தீர்ப்பு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சசிகலா தரப்பிற்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

சசிகலாவின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகெய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆவணங்களைப் பாவையிட அனுமதி கொடுத்தார். இதேபோல் தேவைப்பட்டால் இளவரசி, சுதாகரனும் ஆவணங்களைப் பார்வையிடலாம். அதே நேரத்தில் 21 நாட்களுக்குள் ஆவணங்களைப் பார்வையிட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படியெல்லாம் இழுத்தடிப்போம்னு உங்களுக்கெல்லாம் தெரியாது என்கிறது சசிகலா தரப்பு!

இப்பொழுது இரு வழக்குகளின் உள்குத்துகளையும் பின் என்ன நடக்கும் என்பதை ஊகிப்போம்.

கூடங்குளம்  வழக்கில் தமிழ் நாட்டு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பதிலை கேட்டிருக்கின்றனரே தவிர எரிபொருள் நிரப்புவதற்கு தடைவிதிக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.  உச்சநீதிமன்றம் தன் பங்கிற்கு அம்மா செய்த வேலையைத்தான் செய்திருக்கிறது போல் தோன்றுகிறது. இந்தப் போராட்டமோ அல்லது இந்த வழக்கோ, அரசின் பிடிவாதமோ இத்துடன் முடிந்துவிடும் என்று தோன்றவில்லை.

இரண்டாவது சொத்துகுவிப்பு வழக்கில் ஆவணங்களை கேட்பது, கொடுப்பது எல்லாம் கண் துடைப்பு வேலைகளே.

இந்த வழக்கில் அம்மா தப்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.  மற்றவர்கள் கதை அம்பேல்தான்.







Tuesday 25 September 2012

கூடு தேடும் காக்கைகள்

கூடு தேடும் காக்கைகள்

விளைநிலங்கள் வறட்சியில்
வெட்கி  தலை கவிழ்ந்து
பூமியிலே புதைந்து
புண்பட்டு போகையில்
மனிதம் தேயும் பேராசையில்
கான்க்ரீட் கனவுகளில்
தங்காத இடத்திற்கு
கூடு தேடும் காக்கைகள்.



அற்ப மாயைகள்

காடு மலை கழனி என்று
கணக்கேதும் பாராமல்
நாட்டு வளம் நலிவிழக்க
கூறு போட்டு கொள்ளையடிக்கும்
மெத்தப் படித்தும்
சித்தத்தில் சில்லறை எண்ணம்
ஆழ்ந்த பொருளில்லாத
அற்ப மாயையில்
அழியும் மானிடம்.


25/09/2012

 

Monday 24 September 2012

கலக்கல் காக்டெயில் 87

மண் குவாரி மோசடி

விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவிற்கும் அதிகமாக செம்மண் அள்ளியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி உட்பட 3 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

நாட்டில்  பல பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்க முன்னாள் அமைச்சர்களை தேடி வளைத்து உள்ளே தள்ளிக்கொண்டிருப்பதில் அரசு கவனம் செலுத்துவதுபோல் தெரிகிறது.

ஒரு  விஷயம் அத்துமீறி போகும்போது அதனுடைய உண்மையான காரணம் நீர்த்துப்போகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஒன்றும் கறை படியாதவர்கள் அல்ல, அதே சமயத்தில் இந்நாள் அமைச்சர்களும் அந்தக் கட்சியுடன் ஒட்டி உறவாடி தேனை நக்கிய விஷயங்களும் அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆக மொத்தம் இப்பொழுது இருக்கும் மின்சாரப் பிரச்சினை, காவிரி பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்பவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் நமக்குள் எழுகிறது. 

பர்ஃபி

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பர்ஃபி நிஜமாகவே பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று. இயக்குனர் பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார். முக்கியமாக காதுகேளாத, பேசமுடியாத கதாநாயகன் தான் காதலித்தவள் நிராகரிக்கும் பொழுது கொடுக்கும் உணர்ச்சிகள் பாராட்டத்தக்கவை.

ஆட்டிசம்  உள்ள பெண் நடிப்பில் ஒரே ஒரு குறை. கண்களில் புத்திசாலித்தனத்தை மறைக்க முயற்சி செய்யவில்லை என்பதை தவிர படத்தில் ஒரு குறையும் இல்லை.

இருக்கானா "இலியானா" அறிமுகமாம்.நன்றாகவே செய்திருக்கிறார்.

ரசித்த கவிதைகள்

குழந்தை அழும்போதெல்லாம்
நான் குதிரை ஆக
வேண்டியிருக்கிறது.
இம்மண்ணில் 
என்னை சவாரியாக்கி
கைகொட்டி சிரிக்க,
குழைந்தைக்குமா  ஆனந்தம்?

------------------------

குழந்தை
அவனுக்கு 
ஒரு நிமிடம்
அவளுக்கு
வாழ்க்கை.

---------------------ஆண்டாள் பிரியதர்ஷினி

இந்தவார ஜொள்ளு
 



24/09/2012







Sunday 23 September 2012

அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு உடனடியாக மத்திய அரசில் இருந்து விலகிவிடமாட்டோம்

சென்னை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து ஆத்திரப்பட்டோ, அவசரப்பட்டோ உடனடியாக திமுக விலகிவிடாது என்று அக்கட்சியின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?

தலைவர் சொல்லாத பதில்: எவண்டா அவன் இவன அறிவாலயத்தில் விட்டது, கேள்வியே கேட்க தெரியவில்லை?. எவன் முதலீடு பண்ணா எங்களுக்குஎன்ன? எங்க கிட்டே இருப்பதை கேட்காமல் இருந்தால் சரி. ஏற்கனவே அஞ்சாநெஞ்சனும், தளபதியும் கேட்குற கேள்விக்கே எனக்கு பதில் தெரியவில்லை.

கேள்வி: மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உறுதியாக இருக்கிறீர்களா?

தலைவர் சொல்லாத பதில்:  அந்த அம்மையார் என்ன அலைக்கற்றை வழக்கில் இருக்கிறார்களா? இல்லை நிலக்கரியில் தான் ஆட்டையைப் போட்டார்களா? அவர்கள் மத்திய அரசிலிருந்து விலகலாம். எங்களது கழகம் அண்ணா வழியிலே தோன்றி, பெரியார் போதித்த பகுத்தறிவு பயின்று வந்தவர்கள். மக்களுடைய நன்மை கருதி நாங்கள் இத்தாலி அம்மையார் வெளியேற்றும் வரையில் கூட்டணியில் இருந்து அத்துனை தமிழனின் மானங்களை சுத்தமாக விற்றுவிட்டு, அம்மையார் அடித்து துரத்தும் வரை அங்கேயே இருப்போம்.

கேள்வி: அமைச்சரவை விரைவில் மாற்றப்படவுள்ளது. ஏற்கனவே தி.மு.கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதிரியான சூழலில் நீங்கள் அமைச்சரவையில் மேலும் இடங்களை எதிர்பார்க் கிறீர்களா? அளித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

தலைவர் சொல்லாத பதில்: காலி இடங்களை நிரப்புவது அன்னை சோனியாவின் வேலை, அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வழியில் வந்த நாங்கள் அம்மையார் ஏதாவது பார்த்து போட்டுக்கொடுத்தால் வாங்கமலா இருப்போம். .

கேள்வி: உங்கள் கட்சிக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

தலைவர் சொல்லாத பதில்: இதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவிலே விவாதித்து பின்னர் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

கேள்வி: இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்தள்ளது. பிரதமரே அவருக்கு விருந்தளித்திருக்கிறார். இது முறையா?
யோவ் யாருயா அது என் படத்தை போட்டது?

தலைவர் சொல்லாத பதில்:  கழகம் என்றுமே ராஜபக்ஷேவை ஆதரித்தது இல்லை. சில பார்ப்பனீயஊடகங்கள்தான் அவரை ஆதரித்தன. ஆனால் அண்ணா வழியில் வந்த நாங்கள் மத்திய அரசு மாறி நமது தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழனை கொத்து கொத்தாக போட்டு தள்ள சிங்கள அரசிற்கு உதவிய பொழுது நான் கண்ணீர் வடித்தேன், பின்னர் காலை எட்டுமணி தொட்டு பதினோரு மணி வரை எனது உடலை வருத்தி உண்ணா விரதமிருந்தேன். மற்றபடி பகுத்தறிவு பாசறையில் பயின்ற நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுகொடுக்க முடியாமல் தொடர்ந்து அரசு பதவி வகித்து இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கிறோம்.

ஆனால் ஒன்று நாங்கள் அவசரப்பட்டு , ஆத்திரப்பட்டு மத்திய அரசிலிருந்து விலகமாட்டோம். (தக்காளி எங்களுக்குத்தான் தெரியும் புலி வாலை பிடித்த கதை)

( பழக்கடை: எவன் அவன் தலைவரிடம் ஏடாகூடமா கேள்வி கேட்கிறது. )

Thursday 20 September 2012

கலக்கல் காக்டெயில்-86

பீஸ் பிடுங்கிட்டானுங்க

ஒரு வாரமா பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. ஆணிபிடுங்க நடுக்கடலில் போனதால் பதிவு போடமுடியவில்லை.சரி அங்கே போய் போடலாம் என்றால் WIFI பீஸ் பிடுங்கிட்டானுங்க. மேலும் பதிவுலகம் பக்கம் ஓரிரு நாட்கள் போகமுடியவில்லை என்றால் டாஸ்மாக் மூடிய நாட்களில் நடுக்கம் வருவதுபோல் கைகால்கள் நடுங்குகிறது.

மேலும்  உலக நடப்பு எதுவும் தெரியவில்லை. அரசியல் நிகழ்ச்சிகள் ஒன்றும் தெரியவில்லை. எந்த சாமியார் யாருடன் இருக்கிறார்? ஒன்றும் தெரியாமல் ரொம்ப குஷ்டமப்பா.

இனி கரைக்கு வந்தாகிவிட்டது, மொக்கைகள் தொடர வேண்டியதுதான்.

லா.ச.ரா

லா.ச.ரா வின் எழுத்துக்களைப் பற்றி கேள்விப்பற்றி இருக்கிறேன். அவருடைய சிறுகதை தொகுப்புகளில் ஒன்றான "புற்று" கையில் கிடைத்தது.அவருடைய கதையை ஆழ்ந்து படிக்க வேண்டி இருக்கிறது. இது சத்தியமாக லைட் ரீடிங்கில் வராது.

"பாற்கடல்" கூட்டுக்குடும்பம் பற்றிய கதை. கணவனை பிரிந்திருக்கும் மனைவி கணவனுக்கு எழுதும் கடிதத்தில் மென்மையான உணர்ச்சிகளை நன்றாக "கேப்ச்சர்" செய்திருக்கிறார்.

ரசித்த  கவிதை 

மிஞ்சியிருப்பது
இரும்பும் சாம்பலுமே
மாமிசத்தாலும்
சுவாசிப்பதுமாகிய
அனைத்தும்  சுட்டெரித்த பின்
தங்கத்தாலானதும்
துருப்பிடிக்காதுமாகிய
அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
மாமிசத்தாலாகததும்
துருப்பிடிக்ககூடியதுமாகிய
இரும்பை எல்லாம் சேகரித்து
உப்புக்களியில்
குவித்து வைத்திருக்கிறார்கள்.
இருபோக மழையில்
துருவேறிக்கிடக்கிறது
கனவு
காடுகளில் சூரியன்
நந்திக்கடலில்
உருகி வீழ்கிறான்
கானாங்கோழி
காணாமற்போனவரின்
கடைசி சொற்களை
அடைகாத்திருக்கிறது.

-------------------------------------------நிலாந்தன்

இந்த வார ஜொள்ளு 



20/09/2012




Wednesday 12 September 2012

உதயகுமாரும், கேஜ்ரிவாலும், கொடநாட்டு குந்தானியும், கோபாலபுரம் கோமாளியும்

கூடங்குளம் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நேற்று போலீசிடம் சரணடைவேன் என்று சொன்ன பிறகு இப்பொழுது கூத்தங்குழியில் பதுங்கியிருப்பாதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சரணடைய தயாராகும் பொழுது போராட்டக்காரர்கள் அவரை குண்டுக்கட்டாக கொண்டு சென்றதாக செய்திகள் கூறுகின்றன.  அப்படியென்றால் போராட்டக்காரர்கள் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இதில் குறுக்கே பூந்து கும்மியடிக்க கேஜ்ரிவால் வந்து இறங்கியிருக்கிறார். அவர் உதயகுமார் இருப்பிடத்தில் சந்தித்து பேசியிருப்பதாக தெரிகிறது. உதயகுமார் இருக்கும் கூத்தங்குழியில் போராட்டக்காரார்கள் காவல் துறையினர் நெருங்க முடியாதபடி வெடி குண்டுகளை மண்ணில் புதைத்திருப்பதாக ஒரு செய்தி அறிவிக்கிறது.

மெத்தப்படித்த  ஆத்தா, நிர்வாகத்தில் திறமையானவர் என்று சொல்லப்படும் முதலமைச்சர் இதை முதலில் இருந்தே சொதப்பினார் என்பது ஊரறிந்த உண்மை. அப்பொழுது அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பெரியதாக தெரிந்தது. ஆதலால் கூடங்குளத்தில் சென்று "நான் உங்களில் ஒருத்தி" என்று ஒட்டு வேட்டையாடி பின்னர் தனது கோர முகத்தை கட்டவிழ்த்திருக்கிறார்.

அதை  தான் இப்பொழுது கோபாலபுரம் கோமாளி நக்கல் செய்கிறார். அவருக்கு கூடங்குளமோ, தமிழினமோ, பற்றி கவலையில்லை.  அவருக்கு அம்மாவை தாக்க வேண்டும். அதற்கு இது ஒரு காரணம்.  மேலும் அவரது குடும்பத்தினர் எல்லா வழக்குகளிலும் சிக்கி சின்னபினாமாகிக் கொண்டிருக்கின்றனர்.

காங்கிரஸ், பி.ஜெ.பி. , அ.தி.மு.க, தி.மு.க  என்று எல்லோரும் இந்த விஷயத்தில் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்கள். அதில்  வேறுபாடு இல்லை. ஆனால் வெளியே ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரி  போல் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில்  பா.ம.க, ம.தி.மு.க  குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கின்றன.  கேப்டன் எங்கே போனார்? என்று தெரியவில்லை. மேலும் இந்த விஷயத்தில் அவருக்கு அனுபவம் பத்தாது. ஆதலால் க்வார்ட்டர் அடித்து குப்புறப்படுப்பதே மேல்.

திருவாளர் பொதுஜனம் என்ன நடக்குமோ? என்று காத்திருக்கிறது.

Tuesday 11 September 2012

கூடங்குளம் நிலைமை என்ன?

கடந்த இரண்டு நாட்களாக கூடங்குளம்தான் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தியை ஒளிபரப்புவதில் எல்லா தொலைகாட்சி சேனல்களும் தங்களது அரசு சார்ந்த நிலையை தங்களது உண்மை முகத்தை காட்டியிருக்கின்றன. நடுநிலை என்று பறை சாற்றிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறையும் தனது அரசு சார்ந்த நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களின் தேவைக்கு ஏற்ப செய்து கொண்டிருக்கிறார்கள்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கைதுக்குப் பிறகு போராட்டம் அடங்கிவிடும் என்று அரசு நினைப்பது தவறு போல் தோன்றுகிறது. இந்த போராட்டத்தின் நோக்கை இடிந்தகரை மக்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

தமிழக அரசு இதில் செய்த முதல் தவறு, "நான் உங்களில் ஒருத்தி" என்று அம்மையார் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அவர்களுக்கு கொம்பு சீவிவிட்டடதுதான். அம்மையாருக்கு முதலிலேயே தெரியும் இன்றைய தமிழ்நாட்டு மின்சார தட்டுப்பாட்டை நீக்க கூடங்குளம்தான் ஆபத்பாந்தவன் என்று. இருந்தாலும் மத்திய அரசை எதிர்க்கவேண்டும் என்று சடுதியில் பேசப்பட்ட பேச்சு அது. மேலும் அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கு வேறு தலையை தின்று கொண்டிருக்கிறது.

தமிழீனத் தலைவரைப் பற்றி சொல்லவேண்டாம். அவர் வாயை மூடியிருப்பதே மேல். ஏற்கனவே ஊழல் வழக்குகளில் அவரது குடும்பத்தார் சிக்கிக் கொண்டிருப்பதில் இருந்து விடுபடவேண்மென்றால் ....த்தை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்.

இதில் வை.கோ எப்படியாவாது ஏதோ ஒரு பிரச்சினையை பிடித்துக்கொண்டு அரசியல் நடத்த வேண்டிய நிலைமை. முல்லை பெரியாறு, கூடங்குளம் என்றால் முதலில் கழுத்து நரம்பு புடைக்க பேசி மக்களை உசுப்பி விடுவார். இதில் அடுத்த டுபாக்கூர் தமிழ் குடிதாங்கிதான். .....த்தா இவருக்கு மின்சாரமும் வேண்டும் அதை அதிகரிக்க  அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் ஏதாவது முட்டுக்கட்டை போடவேண்டும். விமான தளம் விஷயத்தில் இவரடிக்கும் கூத்து நாடறிந்தது. இந்த அழகில் இவர் ஒவ்வொரு தேர்தலிலும் எவர் காலில் விழுந்தாவது காசு பார்ப்பார். மற்ற அல்லக்கை கட்சிகள் பற்றி இங்கு பேசுவது அபத்தம்.

எல்லா பிரச்சினைகளுக்கும் வாலாஜா தெருவில் உண்ணாவிரதம் இருக்கும் திரை பிரபலங்கள் எங்கே போனார்கள்? என்று தெரியவில்லை.

சுப. உதயக்குமார் எதற்கும் இறங்கமாட்டோம் என்று நிலைமை அவரது நேர்மையை சந்தேகிக்க செய்கிறது. இதில் அப்பாவி மக்களின் நிலை பரிதாபகரமானது.

இப்பொழுது விஷயம் உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கிறது.  என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.


Monday 10 September 2012

பாரதி நினைவு நாள்

நாளை மகாகவி சுப்பரமணிய பாரதியார் நினைவு நாள். தற்பொழுதெல்லாம் தேசியக்கவியின் பிறந்த நாளையோ, நினைவு நாளையோ கொண்டாடுவது வழக்கொழிந்து போய் விட்டது.  அரசாங்கமே அதைப் பற்றி ஒன்றும் பெரியதாய் கண்டுகொள்வதில்லை.



ஆனால் அவருடைய கவிதையமுதை அள்ளி அள்ளிப் பருகிக்கொண்டிருக்கும் வாசகர்கள் என்றும் மறப்பதில்லை. அவருடைய கவிதை தொகுப்பு எத்துனை முறை படித்தாலும் புதியதாய் படிப்பது போல் தோன்றும். சில கவிதைகள் நம்முடைய தற்கால மனநிலைக்கேற்ப வெவ்வேறு பொருள் தரும். படிக்கும்பொழுது நாம் தவறவிட்டவை தன் அழகு முகத்தை பளீரென்று காட்டும். இவ்வாறு வார்த்தைகளில் ஜாலம் புரிந்து, மரபை தகர்த்து இன்று சமகால புலவர்கள் கையாள ஏதுவாக புதுக்கவிதையின் அறிமுகத்தை முழு வீச்சில் தந்தவர்.

சமீபத்தில் அவருடைய ஆத்திச்சூடியை படிக்கும் பொழுது அதன் கடவுள் வாழ்த்தை கவனித்தேன். ஆஹா மதநல்லிணக்கத்திற்கு சரியான பாட்டு. ஒவ்வொரு பள்ளிகளிலும் இந்தப் பாட்டை கடவுள் வாழ்த்தாக வைக்கலாம்.

முன்டாசுக்கவியின் நினைவு நாளில் அவருடைய கடவுள் வாழ்த்து பாட்டை நினைவு கொள்வோம்.

பரம்பொருள் வாழ்த்து
 

ஆத்திசூடி யின்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசை கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை யெனப் பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒலியுறு மறிவோம்;
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.



Sunday 9 September 2012

கலக்கல் காக்டெயில்-85

சூப்பர் சிங்கரில் வைல்ட் கார்ட் எனும் டுபாகூர்

 சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் முதல் ஐந்து பேரை தேர்வு செய்துவிட்டார்கள். இனிமேல் வேண்டப்பட்டவர், குனிஞ்சு நின்றவர், கும்மியடிச்சவர், தொலைக்காட்சிக்கு தொண்டுசெய்தவர்  என்று ஒரு ஆளை உள்ளே கொண்டுவருவார்கள். அதற்கு வைல்ட் கார்ட் ரவுண்டு என்று பெயரிட்டு தனக்கு வேண்டப்பட்டவர்களை கடைசிவரை கொண்டு வந்து அவரை விட சிறப்பாக செய்பவர்களின் எண்ணத்திலே மண்ணை போடுவார்கள்.

இந்த விதி, எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் உண்டு. ஆனால் இதில் வரும் பிரபலங்கள் நீதிபதியாக வருவது அவர்களின் மதிப்பை குறைக்க செய்கிறது.
பணம்  பத்தும் செய்யும்.

தக்காளி இதை தான் எல்லா சேனல்களும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன, நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கூடங்குளம் போராட்டம்

கூடங்குளம்அணுமின் நிலையத்தின் உலைகளில் எரிபொருளை நிரப்பப் போகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நாராயண சாமீ  அறிவித்த பொழுதே தீவிர போராட்டத்தின் விதை விதைக்கப்பட்டு விட்டது.

போராட்டத்தில் கலந்துகொள்ளும் பெருவாரியான மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்கள் அந்த போராட்டகக்குழுவின் தலைவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்பி போராட்டத்திற்கு வருகிறார்கள். இந்த நிலையில்  இவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. மத்தியரசு அமைத்த நிபுணர் குழுவின் விளக்கங்களை இந்த போராட்டக் குழுவின் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் குறுக்கே பூந்து கும்மியடித்தது மாநில அரசு. உள்ளாட்சி தேர்தலின் பொழுது போராட்டக்காரர்களை உசுப்பிவிட்டு இப்பொழுது பம்முகிறார்கள்.

வினை விதைத்தவர்கள் வினையை அறுத்துதான் ஆகவேண்டும்.

ரசித்த கவிதை

எவர் சில்வர் ஏனம்

ஏனமெல்லாம் எவர் சில்வர்
இருந்துவிட்டால் அவர் செல்வர்
ஏழைப் பெண்களும் வேண்டும் என்று சொல்வர்-கணவர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்.

எவர் சில்வர் என்று கூவி
இல்லாதவரிடம்  உலாவித்
தவறாமல் சொக்குபொடி தூவிக்-கேட்பான்
தட்டைக்  கொடுத்து பட்டு சேலையைப் பாவி


சரிகைச்  சேலையைச் சுரண்டித்
தரவருவான் சிறு கரண்டி
அரசே அத்திருடர்களை அண்டி- நீ
ஐந்தாருநாள் சிறைக்குப் போகத் தண்டி

.....................பாரதிதாசன்

பாரதிதாசன் ரொம்ப அனுபவித்திருப்பார் போல. இப்பொழுது அதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது.

இந்தவார ஜொள்ளு (கள்)



09/09/2012


Saturday 8 September 2012

காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி...18++

படித்ததில் சுட்டது.

காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்!!!


நண்பன் 1 : மச்சான் காதலுக்கும், நட்புக்கும் என்னடா வித்தியாசம்?

நண்பன் 2 : மச்சி "காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, அத காக்கா ஈஸியா தூக்கிட்டு போயிடும். ஆனா நட்பு என்பது ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான்டா!"


நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
மனைவி : என்னங்க... நான் ஒன்னு சொன்னா, நீங்க என்ன அடிக்க மாட்டீங்களே!

கணவன் : என்னடா செல்லம், நான் உன்ன போய் அடிப்பேனா, சொல்லு என்ன?

மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க!!!

கணவன் : இது சந்தோஷமான விஷயம், இதுக்கு போய் நான் உன்ன அடிப்பேனா செல்லம்...

மனைவி : இல்லங்க... நான் ஸ்கூல் படிக்கும் போது, என் அப்பா கிட்டயும் நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னப்ப என்ன அடி பின்னிட்டாரு!!

 இப்ப என்னால முடியாது...! 

பெண்: சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறார். நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...

இன்ஸ்பெக்டர்: இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். கம்ப்ளைன்டு குடுத்துட்டு போங்க.

அடுத்த வீட்டுக்காரன் மாதிரியே இருந்தா...?

கேள்வி - பயாலஜிக்கும், சோஷியாலஜிக்கும் என்ன வித்தியாசம்?

பதில் - பிறக்கும் குழந்தை அப்பா மாதிரியே இருந்தா பயாலஜி. அடுத்த வீட்டுக்காரன் மாதிரி இருந்தா சோஷியாலஜி.
நகைச்சுவைக்கும் எனக்கும் சம்பந்தமில்லீங்கோ !!

போங்க டீச்சர், எனக்கு வெட்கமாருக்கு...!

 ஆசிரியை (மாணவிகளைப் பார்த்து) - நமது உடலில் எந்த உறுப்பு வழக்கமான அளவை விட 5 மடங்கு நீளும் தன்மை கொண்டது?

ஒரு மாணவி - போங்க டீச்சர் எனக்கு வெட்கமாயிருக்கு, இதுக்கு எப்படிப் பதில் சொல்றது...

அதே கேள்வியை மாணவர்களைப் பார்த்து கேட்டார் ஆசிரியை.

ஒரு மாணவன் - கண்ணின் கருவிழி மேம்...

சுரங்கத்தை தோண்டினால்..........

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் உதவியாளர் அஜய் சன்செட்டிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் இதுவரை காங்கிரஸார் பெயர் மட்டுமே அடிபட்டு வந்த நிலையில் நேற்று திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் பெயரும் அடிபட்டுள்ளது. அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் லாபம் அடைந்தவர்களில் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் முக்கிய உதவியாளரான அஜய் சன்செட்டியும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

அடப்பாவிகளா  எல்லோருமே சேர்ந்து ஒட்டு மொத்தமா நாட்டை குத்தகைக்கு விட்டுவிட்டு மக்களுக்கு நல்லாத்தான் பிலிமு காட்டுறீங்க. என்ன எல்லோருமா சேர்ந்து கூப்பாடு போட்டுட்டு பாராளுமன்றத்து வாயில் நிக்கிற காவலாளியையோ , இல்லை டீ கடை பையனையோ பிடிச்சு உள்ளே போட்டு வழக்கு நாடகம் நடத்துவாங்க. நாமளும் அதை காசுவாங்கி, காசு சேர்க்கிற ஊடங்கங்களை உற்று நோக்கி நம் பங்கிற்கு கதையளப்போம்.

மொத்தத்தில் இந்த மழைக்கால கூட்டுத்தொடரில் முப்பத்திநான்கு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருந்தன, அதில் நான்கு தான் முடிந்தது, மீதியை கூப்பாடு போட்டு, ஒத்தி வைத்து டீலில் விட்டு  விட்டார்கள்.

மண்ணு மோகனு சிங்கு சைக்கிள் கேப்பில் வெளிநாடு போய் வந்துவிட்டார். மொத்தத்தில் எல்லா எம்.பி.க்களும் வேலை செய்யாமலே சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹூம், நடத்துங்க, நடத்துங்க.

Friday 7 September 2012

ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்..............



நாங்களும்  பாட்டு எழுதுவோமில்ல...............

கர்ணன்  பட "மரணத்தை என்னிகலங்கிடும் விஜயா" மெட்டில் முடிந்தால் சீர்காழி குரலில் பாடிக்கொள்ள(கொல்ல)வும்.

ஊழலை என்னி புலம்பிடும் மனிதா
ஊழலின் தன்மை சொல்வேன்
நாட்டினில் ஊழலுக்கு அழிவு கிடையாது
என்றென்றும் நிலைத்திருக்கும்
லஞ்சத்தை லஞ்சத்தை கொடுப்பாய்
ஊழலில் அதுவும் ஒன்று
நீ நிறுத்திவிட்டாலும் அந்த ஊழல்
இருந்துதான் தீர்ந்திடும் எந்நாளும்


கமிஷனை அறிவாய் எல்லா திட்டங்களிலும்
கையூட்டையும் அறிந்து கொள்வாய்
சட்டம், நீதி காப்பாற்றாதென்று
நம்பிக்கை  இழந்து விட்டாய்
நம்பிக்கை.....இழந்து விட்டாய்
நீதியிலும் ஊழல் சட்டத்திலும் ஊழல்
அரசு அங்கங்களில் அங்கங்கே ஊழல்
எங்கும்  ஊழல் எதிலும் ஊழல்
எங்கும்...........ஊழல்..................
நாம்  வாட ஆ.................................

ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்
அடுத்த ஆட்சி அவனுக்கே
கிடைக்கும் பெட்டிகளும்,கட்டுகளும், சொத்துகளும்
போகும்  அவனுக்கே
பின்னர் அவனே திட்டம் போடுவான்
அவனே...... ஒட்டும்...... வாங்குவான்
ஊழல்  நல் ஓங்குக
மற்றவர் அதை பார்க்க
நாமெல்லாம் நொந்துபோக 
ஆ...............ஆ.................ஆ..................

(பரித்ராநாய மெட்டில்)
காமன்வெல்த் என்பார், 2............. ஜி........... என்பார்
நிலக்கரி சுரங்க ஊழல்............... என்பார்......................
எல்லா வழக்குகளும் நீர்த்துப்போகம், நீர்த்துப்போகும்..................





Thursday 6 September 2012

சிவகாசி

சிவகாசி தீப்பெட்டி தொழிலுக்கும், பட்டாசு தொழிலுக்கும், அச்சுத்தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊர். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியிலும், பட்டாசு உற்பத்தியிலும் தொண்ணூறு விழுக்காடு நாட்டிற்கு அளிக்கிறது. இந்த நகரத்தின் சுறுசுறுப்பைப் பார்த்து இந்தியாவின் முதல் பிரதமர் நேரு இந்த நகரத்தை ஒரு குட்டி ஜப்பான் என்று அழைத்தார். சிவகாசியில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை. இங்கு எல்லோருக்கும் வேலை உண்டு.

நேற்றைய தினம் எல்லா தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் சிவகாசி பற்றிய செய்திகள் ஆக்கிரமித்தன. சிவகாசியின் அருகே முதலிப்பட்டி கிராமத்தில் உள்ள ஓம் சக்தி ஃபயர் வொர்க்ஸ் என்ற பட்டாசு தொழிற்சாலையிலில் நடந்த கோரவிபத்து கிட்டத்தட்ட ஐம்பது உயிர்களை குடித்திருக்கிறது, மேலும் அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமுற்று கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த  தொழிற்சாலையில் உள்ள நாற்பத்தியிரண்டு அறைகளில் மொத்தம் நூற்றி என்பது பேர் விபத்து நடந்த வேளையில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.  ஒரு அறையில் தீப்பிடித்து வெடிமருந்துகள் வெடித்து மற்ற அறைகளுக்கு பரவி, பின்னர் வெடிமருந்து கிடங்கிலும் தீ பரவியிருக்கிறது. மதிய வேளையில் தொடங்கிய தீ மாலை வரை நீடித்திருக்கிறது.

தீயணைப்பு வண்டிகள் தொழிற்சாலையின் அருகே செல்ல சரியான பாதைகள் இல்லை. மேலும் இந்த தொழிற்சாலையில் ஒவ்வவொரு  அறைக்கென்று அனுமத்திக்கப்பட்ட அளவிலான வெடிமருந்தை விட  (மூன்று கிலோ மட்டுமே) அதிக அளவு வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விதிமுறைகளை கண்காணித்து உரிமம் வழங்குவதற்கு என்று அரசு ஒரு அதிகாரியையும் சில உதவியாளர்களையும் நியமித்து உள்ளது. ஆனால் சிவகாசியில் உள்ள  பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கைகளுக்கு இது மிகவும் சொற்பமே.

சிவகாசியில் அடிக்கடி பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

10 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் பிற பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கியமான பட்டாசு விபத்துகள்:
24.9.2002
கோவில்பட்டி அருகே முடக்கமிட்டான்பட்டி பட்டாசு தீ விபத்தில் 16 பேர் பலி. 34 பேர் காயம்.
2.7.2005
சிவகாசி மீனாம்பட்டி விபத்தில் 20 பேர் பலி. 15 பேர் காயம்.
22.2.2006
சிவகாசி பர்மா காலனி விபத்தில் 12 பேர் பலி.
12.6.2007
சிவகாசி நாராயணபுரம் விபத்தில் 4 பேர் பலி.
7.7.2009
மதுரை அருகே வடக்கம்பட்டி விபத்தில் 19 பேர் பலி.
20.7.2009
சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி விபத்தில் 18 பேர் பலி.
27.7.2009
சிவகாசி விபத்தில் 3 பேர் பலி.
16.6.2010
சிவகாசி விபத்தில் 7 பேர் பலி.
24.9.2010
சிவகாசி விபத்தில் ஒருவர் பலி.
21.1.2011
விருதுநகர் விபத்தில் 8 பேர் பலி.
26.4.2011
சிவகாசி விபத்தில் 2 பேர் பலி.
29.6.2011
தூத்துக்குடி குரும்பூரில் 4 பேர் பலி.

எந்த அரசும் இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இது வரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

விபத்திற்கு பின் நஷ்ட ஈடு, அமைச்சர்கள் செல்வது, பின்னர் முதல்வர் செல்வதெல்லாம் கண்கெட்ட பின்பு செய்யும் வேலை. ஊடகங்களுக்கு தீனி.

இம்மாதிரி வெடிமருந்து தொழிற்சாலைகளில் முதல் கட்ட தீயணைப்பு வசதி கண்டிப்பாக இருக்கவேண்டும். அங்கிருக்கும் மின்சார உபகரணங்கள் (Intrinsically safe) தீப்போறியோ அல்லது  அதிக வெட்பமோ உருவாக்காதவைகளாக இருக்க வேண்டும். இதெல்லாம் கட்டாயமாக இருக்க வேண்டியவை. இதைப்பற்றிய கேள்விகள் எழும்போது ஒப்பிற்கு ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

வருடா வருடம் இம்மாதிரி விபத்துகள் பலிவாங்கும் உயிர் சேதத்திற்கு என்ன விடை வைத்திருக்கிறார்கள்?  விசாரனைக்கமிஷன் அமைப்பதனால்  என்ன பயன்? யாருக்கு லாபம்?அப்படியே அந்தக் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு விதித்தாலும் என்ன நடக்கும், என்பது நமக்கு தெரிந்ததே.


Wednesday 5 September 2012

கடவுள் இல்லையா? யார் சொன்னது?

"அ"கர முதல எழுத்தெல்லாம்
அன்புடனே அறியவைத்து
பண்புடனே பாடங்கள்
பல புகட்டி

எம்மொழியின் பெருமைதனை
எனக்குள்ளே விதைத்து
செம்மொழி கொண்டே
உலகினை அறியவைத்து

அறிவியல் தொட்டு
ஆயிரம்  இயலிலும் 
தேடுதல் வேட்கை
தேவை என்ற சிந்தனையை
தெளிவுடனே விதைத்து

சிந்தனை செம்மையுற
செவிவழி அமுதூட்டி
எந்தன் வாழ்வு சிறப்புற
புவிதனை புரியவைத்து

கடவுள் என்ற சிந்தனை
எந்தனிடம்  தோன்றுமுன்
சிந்தனையின்  சிறப்புதனை
உண்மை என உணரவைத்த
தன்னலமற்றவர்கள்
நான் கண்ட கடவுள்கள்.

என் வாழ்வு சிறப்புற எனக்கு அறிவூட்டிய  எண்ணற்ற ஆசிரியர்களுக்கு  சமர்ப்பணம்.

Tuesday 4 September 2012

கலக்கல் காக்டெயில்-84

கல்யாண ராணி, திருமண மோகினி, நான் அவளில்லை

பெங்களூரில் பிடிபட்டு இப்பொழுது விசாரணையில் இருக்கும் ஷனாஸ் என்கிற சஹானா ஒரு ஐம்பது பேருக்கு அல்வா கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் நான்கு பேரைத்தான் திருமணம் செய்துகொண்டுள்ளாராம். சொல்லிவைத்தார் போல் எல்லோரிடமும் ஆட்டையைப் போட்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் போலிஸ் வலயத்தினுள் பூந்து விளையாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்பொழுது சஹானா. ஜகஜாலக் கில்லாடிதான். இவங்க கொடுத்த அல்வாதான் "இருட்டுக்கடை" அல்வாவோ.

முதலில் அரசு வழக்கறிஞர், அடுத்தது நீதிபதி, பின்னர்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சார்யா விலகினார், அடுத்தது நீதிபதி ஓய்வு பெருவதால் புதிய நீதிபதி நியமனம். அடுத்தது என்ன. நிரபராதி தீர்ப்புதான். நல்லாத்தான் வைக்கிறாய்ங்க நமக்கு பூ.

எல்லா ஊழல் வழக்குகளும் ஒரே பாதையில்தான் செல்லுது. இந்த வழக்குகளில் யாருக்கு லாபம் என்பது மக்களுக்கு நல்லாவே தெரியும். வாழ்க ஜனநாயகம்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புதானாம் ஆர்பாட்டம் இல்லையாம்

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு வெறும் எதிர்ப்போடு விட்டுவிடுவார்களாம், ஆர்பாட்டம் செய்யமாட்டார்களாம் சொல்லுகிறார் தமிழினத்தலைவர். அதுசரி எவ்வளவோ மேட்டர் தலையை தின்றுகொண்டிருக்கிறது தமிழாவது, தமிழினமாவது. முதலில் பேரனை காப்பாத்துங்க.

ரசித்த கவிதை


இவன் கனவில்

அடிக்கடி
ஒயில் பெண்கள்
நிறையதரம்
புதையல்
அபூர்வமாய் 
மழை
ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா
சிலசமயம்
மழை
எப்போதாவது
ராட்சஷன் 
நேற்று
நீலவானம்
முந்தாநாள்
நீ
ஒரே ஒரு தடவை
கடவுள்
----------------விக்ரமாதித்யன்

இந்தவார ஜொள்ளு 


04/09/2012


Monday 3 September 2012

தமிழ் சினிமாவின் எதிர்காலம்-நாளைய இயக்குநர்

கலைஞர் டீ.வி யில் நாளைய இயக்குநர் இந்த வாரம் இறுதிப் போட்டி நடைபெற்றது. இயக்குநர் சிகரம், உலகநாயகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். கடைசி கட்டப் போட்டியில் மூன்று குறும்படம் காண்பித்தார்கள். அவற்றில் இரண்டு படங்களை முழுதாக பார்க்க நேர்ந்தது.

என் மனைவி மூன்று படங்களையும் பார்த்து மிகவும் ரசித்ததாக சொல்லிக் கொண்டிருந்தாள். அவற்றில் இரண்டை நான் மறு ஒளிபரப்பில் காணமுடிந்தது. நான் பார்த்த இரண்டு படங்களுமே நன்றாக இருந்தது.

அதில் எனக்குப் பிடித்தது "அ" என்ற குறும்படம். ஒரு முடிதிருத்தும் தொழிலாளி தனது மகனை ஆங்கிலப் படிப்பு படிக்க வைக்க பட்டணத்திற்கு அழைத்து வருவதில் கதை தொடங்குகிறது. அந்த சிறுவனின் நடிப்பு அபாரம். அவன் கேட்கும் கேள்விகள் ரசிக்கக்கூடியவை. தந்தை தன் மகனிடம் நீ நல்லா ஆங்கிலம் படித்தால் தான் கடவுள் நமக்கு நிறைய காசு பணம் எல்லாம் தருவார் என்று சொல்லும் பொழுது, சிறுவன் "ஏம்பா கடவுளுக்கு தமிழ் தெரியாதா" சரியான நெத்தியடி.

மற்றொரு  படம் ஒருவரின் வயதான தாயார் கர்ப்பம் ஆகிவிடுவதை பற்றிய கதை. இது மிகவும் உருக்கமாக இருந்தது. "புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்". (காணொளி இணைக்கப் பட்டுள்ளது)

இந்த இயக்குனர்களின் திறமை வியக்க வைக்கிறது. இவர்கள் நாளைய தமிழ் சினிமாவை நல்ல உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

என்ன  தற்கால தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்களிடம் சிக்கி நடப்பதையும், குத்துபாட்டையும், வைத்து ஜல்லியடிப்பவர்களிடமும் வட இந்திய நடிகைகளின் தொடை, தொப்புள் ஜோதியிலும்  ஐக்கியமாகாமல் இருக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.