Pages

Wednesday 31 October 2012

"நீலம்" கொண்டதென்ன? கொடுத்ததென்ன?

நீலம் புயல் மகாபலிபுரம் அருகே இன்று மாலை கரையைக் கடந்தது. இதில் முக்கியமான ஒன்று உயிரிழப்புகள் எதுவுமில்லாதது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. இந்த முறையும் வானிலை மையம் "தானே" புயலைப்போல துல்லியமாக இந்த இடத்தில்தான் கடக்கப்போகிறது என்பதை தெள்ளத்தெளிவாக கணக்கிட்டுவிட்டது.

அரசாங்கமும், மக்களும் "தானே" புயலில் கற்றுக்கொண்டதை இந்த முறை நடைமுறை படுத்திவிட்டார்கள். பொருட்சேதம் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை, இருந்தாலும் பொருட்சேதம் பற்றி அவ்வளவு கவலைப்படத் தேவையில்லை. எல்லா மாவட்டங்களும் தயார் நிலையில் இருந்ததை அறிய முடிகிறது. அரசு அதிகாரிகளுக்கு நமது பாராட்டுக்கள்.

இந்த நீலம் புயல் மற்றொரு விஷயத்தையும் நமக்கு உணர்த்தி இருக்கிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் எந்த பாதிப்பும் இல்லை. ஆதலால் கூடங்குளம் பற்றிய கருத்து மாறுபடக்கூடும்.

தொடர்ந்து  சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பழுதடைந்தது உண்மை. பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் கடக்க ஆறு மணிநேரம் ஆனதை வாகன ஓட்டிகள் மறக்கமாட்டார்கள். கோயம்பேடு அருகே எரிபோல ஆனதையும் மறக்கமாட்டோம். கோயம்பேடு பேருந்து நிறுத்தம் எதிரில் இருக்கும் சாலை அரை மணிநேர கனமைழையையே தாங்குவதில்லை. இதற்கு எந்த அரசும் நடவடிக்கை எடுக்காதது வருத்தமே.

அய்யா, அம்மா, யார் ஆட்சியில் இருந்தாலும் அப்பப்போ இந்த மாதிரி விஷயங்களிளும் சற்று கவனம் செலுத்துங்கள்.


Tuesday 30 October 2012

அகில உலக அம்மாவும், கேப்டனும், நீலம் புயலும்.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டை இரண்டு புயல்கள் மையம் கொண்டுள்ளன. யாரோ சொன்னதுபோல "இதுவும் கடந்து போகும்". ஒரு புயல் எப்படியும் கொட்டி தீர்த்துவிட்டு, அடித்து ஆரவாரமாய் போய்விடும். கடலூரா நாகையா, இல்லை நெல்லூரா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அரசு போனமுறை செய்த தவறை இந்த முறை செய்யமாட்டார்கள் என்று எதிர் பார்ப்போம்.

தானே புயல் எப்பொழுது எந்த நொடியில் எந்த இடத்தை கடக்குமென்று அதிசயமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த பொழுதிலும் அரசின் மெத்தனத்தால் இழப்பை சந்தித்தது கடலூர். மின்சாரத்தை சரி செய்யவே கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் ஆனது. இந்த முறை முன்னேற்பாடுகள் செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.

மற்றொரு புயல் சட்டசபையில் மையம்கொண்டு விமானநிலையத்தில் தீவிரமடைந்தது. தே.மு.தி.க தலைவர் கேப்டனை தாக்கிக்கொண்டிருக்கிறது. அவரது கட்சியிலிருந்து ஆட்களை இழுக்கும் கேடுகெட்ட அரசியல் வேலைகள் தொடங்கிவிட்டன. இப்பொழுது அவர்மீது கொலைமிரட்டல் தொடங்கி எல்லா வழக்குகளிலும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதைவிட ஒரு கேவலமான அரசியல் வேறெங்கும் பார்க்கமுடியாது.

அம்மாவை  எதிர்த்தால் என்ன ஆகும் என்பதை கேப்டன் புரிந்து கொண்டிருப்பார். ஆனால் இவையெல்லாம் அவருக்கு சாதகமாக மாறும் சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. எப்படியும் வெள்ளிகிழமை கேப்டன் களி உண்ண நாள் குறித்திருப்பதாக தெரிகிறது.

அம்மாவிற்கு, நீலம் புயலோ, இருளில் மூழ்கியிருக்கும் தமிழகம் பற்றியோ கவலை இல்லை. அவர்களின் முதல் அஜெண்டா.............

கேப்டனை எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து இறக்கி  தன் ஆணவத்தை நிலைநிறுத்த வேண்டும்.

அம்மா அகில உலக அகிலாண்டேஸ்வரி தாயே, நடக்கட்டும், அடுத்த இந்திய பிரதமராக வேண்டிய தகுதி உங்களுக்கு நன்றாகவே இருக்கிறது.

வாழ்க தமிழகம்.


Monday 22 October 2012

கலக்கல் காக்டெயில்-90

மல்யா எனும் மலை முழுங்கி

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பாட்டுள்ளது. விஜய் மல்யா ஒன்றும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர் தன் சொந்த விமானத்தை எடுத்துக்கொண்டு எங்கோ வெளிநாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் மகனோ கிங்கபிஷர் கேலண்டருக்கு குட்டி வேட்டையாடிக்கொண்டிருக்கிறார். 

ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் சம்பளம் தரவில்லை. ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.  அதை பற்றிய கவலையெல்லாம் "இந்த பெருச்சாளிகளுக்கு" இல்லை.  ஏர்லைன்ஸ் நஷ்டக்கனக்கில் ஒழிந்தது ஊரான் பணம்.


இவர்களது  இல்லாத கடனை ஒழிக்க மத்திய அரசுவேறு சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

வாழ்க பணநாயகம்.

இல்லாத மின்சாரமும், கொல்லும் டெங்கும்

இந்த அரசு மின்சார தட்டுப்பாட்டிற்கு ஆர்காட்டாரையே காரணம் சொல்லி அவரை நல்லவராக்கிவிட்டார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் கர்நாடகாவும், ஆந்திராவும் 2000 MW அளவிற்கு உற்பத்தியை பெருக்கிவிட்டார்கள். தமிழ் நாட்டிலோ மின்சாரத்தேவை 2001லிருந்த 7000 MW லிருந்து 11000 MW அளவிற்கு அதிகரித்திருக்கிறது. அனால் இரண்டு கழகங்களும் சேர்ந்து உற்பத்தியை வெறும் 483 MW அளவே உயர்த்தியிருக்கிறது. போறாத குறைக்கு ஓடிக்கொண்டிருந்த டர்பைன்கள் படுத்துக்கொண்டு பராமரிப்பிற்கு காத்துக்கொண்டிருக்கின்றன.

அரசு ஒன்றும் செய்வதாக தெரியவில்லை. மின்சாரம் இல்லாததனால் கொசுக்களின் தொல்லை அதிகரித்து டெங்கு வேட்டையாடிக்கொண்டிருக்கிறது.

இலவசம் வாங்கி கொண்டு, தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அந்தர்  பல்டி ஆதீனம்

மதுரை ஆதீனம் விஷயம் கோர்ட்டுக்கு வந்து அரசு தரப்பின் நிலைமை தெரிந்தவுடன் நித்தியை இளைய மடாதிபதி பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் அருணகிரிநாதர்.

முடிவெடுக்காவிட்டால்சொத்து அரசிடம் போய்விடும் என்று கவலையினால் வந்த முடிவு. நித்யானந்தா அடியாட்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று புலம்ப வேண்டிய நிலை.

பிடதியில் குத்தாட்டம் செய்த விளைவு.

ரசித்த கவிதை

"துயிலா இரவுகளில்
அப்பா என்று அலறித் துடிக்கிற
சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய்
உலவித்  திரிந்த நிலவைக் காட்டி
மார்பில் தாங்கி
அப்பா கடவுளிடம் போனார்
என்று சொல்லாதே
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்
குருதி படிந்த கதையைச் சொல்
கொடுமைகள் அழிய போரிடச் சொல்..."

--------------------------------------------ஒரு ஈழக் கவிஞன்

ஜொள்ளு 




22/10/2012


Monday 15 October 2012

மானமுள்ள தமிழர்கள்

மானமுள்ள தமிழர்கள் நாங்கள்
ஈனமுற்று தண்ணீருக்கு அலையோம்
விண்ணுயரும் ஊழலுக்கு துணையிருப்போம்
மின்வெட்டுக்கு  தலையசைப்போம்
பஞ்சத்தை மஞ்சத்திற்கு அழைத்த
வஞ்சகர் கூட்டமென கொஞ்சுதமிழ்
மேடைப்பேச்சில் மயங்கியிருப்போம்
இலவசங்கள் தேடிப்பெற்று
தொலைக்காட்சியில் தொலைந்திருப்போம்
நாட்டை துண்டாடும் மந்திரிகளுக்கு
பேட்டை முழுவதும் விழா எடுப்போம்
சொந்த சகோதரர்கள் குடியறுக்க
பந்தங்களுடன்  துணை நிற்போம்
விளைநிலங்களை வளைத்திடுவோம் பின்
விளைச்சல் இல்லை என புலம்பிடுவோம்
விடிந்ததும் டாஸ்மாக்கை நாடிடுவோம்
குடிகெட குடித்திருப்போம்
தகதகக்கும் வெயில் என்றாலும்
தார்சாலையில் படுத்திருப்போம்
ஜதிபோட்டு ஆடும் குத்தாட்ட நடிகர்களின்
மதிகெட்ட படங்களை கண்டு களித்திருப்போம்
விலைவாசி மலை ஏறினாலும் பெண்டாட்டி
நகை வைத்து கடன் பெறுவோம்
அறைவேட்டியை உருவினாலும்
கரைவேட்டிகள் புகழ் பாடுவோம்
அடிமேல் அடி விழுந்தாலும்
அம்மா, அய்யா என்று
கழகங்களை வாழவைக்கும்
தமிழர்கள் மானமுள்ள
தமிழர்கள் நாங்கள்...


Friday 12 October 2012

கால ஓட்டத்தில் காணாமல் போனவை-பாட்டுப்புத்தகம்

நாங்கள் சென்னை நகரின் விளிம்பில் வசித்ததால் எங்கள் இருப்பிடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் போனால் ஏதோ சென்னையை விட்டு வெளியே போனதாகிவிடும். அசோக் நகருக்கு மேற்கே போனால் ஜாபர்கான் பேட்டை, தற்பொழுது இவையெல்லாம் சென்னை மாநகராட்சியின் கீழ் வந்து விட்டது.

ஜாபர்கான்  பேட்டை விஜயா, சாந்தி என்று இரண்டு கொட்டகைகள். எங்களது பட்ஜெட்டில் அடங்கும் கொட்டகைகள். பொதுவாகவே புதுப்படம் வந்து ஒரு இரண்டு வாரங்களில் இந்த கொட்டகையை வந்து சேரும். டிக்கட் விலை முப்பத்தைந்து காசுகள் தான். (தக்காளி இதை வைத்து எங்களது வயதை அனுமானிக்காதீர்கள், நாங்கள் எல்லாம் இன்றைக்கும் அதே மாதிரி தான் இருக்கிறோம்). இதயக்கனி, இன்றுபோல் என்றும் வாழ்க, கௌரவம், உலகம் சுற்றும் வாலிபன், மற்றும் ஜம்பு, அன்பே ஆருயிரே போன்ற சரித்திர புகழ் பெற்ற படங்களை இங்குதான் பார்த்தோம். மேலும் இரவுக்காட்சியில் கில்மா காட்சிகளை போடுவார்கள்.

இந்த ஏரியாவில் படம் பார்க்க எங்களுக்கு வீட்டில் அனுமதி கிடைக்காது. கிருஷ்ணவேணி, ராஜகுமாரி பக்கம் தான் போக அனுமதிப்பார்கள். இருந்தாலும் எங்களுக்கு இது வசதியானது தான். ஏனென்றால் அங்கு பெஞ்ச் டிக்கட்டே எழுபைத்தைந்து காசுகள். வீட்டில் அதை மன்றாடி பெற்று விட்டால் இரண்டு படங்களுக்கான காசு ஆகிவிட்டது.

இந்தக் கொட்டகைகளில் இடைவேளையில் தவிட்டு பிஸ்கட்டுடன், படத்தின் பாட்டு புத்தகங்களும் விற்பார்கள். விலை பத்து பைசா தான். பெரும்பாலும் பார்க்கும் எல்லா படங்களின் பாட்டுப்புத்தகங்களையும் எங்கள் கூட்டத்திலேயே சற்று வசதியான பையன் வாங்கி விடுவான். இதயக்கனி படம் பார்த்து விட்டு வரும் பொழுது "இதழே இதழே தேன் வேண்டும்" பாட்டில்  அவன் மயங்கி அன்று பாட்டுப்புத்தகம் வாங்க மறந்து விட்டான். இருந்தாலும் விடாமல் அடுத்த நாளே படம் மற்றும் ஒரு முறை படத்தை பார்த்துவிட்டு புத்தகத்தை வாங்கி வந்து விட்டான். அதில் இருக்கும் "மெல்ல மெல்ல தொடுங்கள்" என்று ராதா சலூஜா கொஞ்சுவதை  மிகவும் கிறக்கத்துடன் பாடிக்கொண்டிருப்பான்.

அவனுடைய வீட்டில் மாடியில் அவனுக்கென்று கொட்டகை போட்ட தனி அறை அவனுக்கு உண்டு. அவனுடைய அலமாரியில் கிட்டத்தட்ட எல்லா பட்டுப்புத்தகங்களும் இருக்கும். முக்கியமாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் எல்லா பாட்டுப் புத்தகங்களையும் வைத்திருப்பான். சற்றே கீழுள்ள டிராயரை திறந்து பார்த்தால் அவன் அண்ணனின் தொகுப்புகளான "கொக்கோக" ஐட்டங்களை பார்க்கலாம்.

 கால ஓட்டத்தில் இந்த சினிமா பாட்டுப்புத்தகங்கள் வழக்கொழிந்து பொய் விட்டன,  மேலும் தற்பொழுது கரோக்கே போன்ற சமாச்சாரங்கள் இணைய தளத்தில்  வந்து விட்டதால் அவைகளை பார்க்க முடியவில்லை. அந்த தொழில் செய்தவர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை.

மின்வெட்டும், வராத தண்ணீரும் மற்றும் சினிமா ஹீரோக்களும்

தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மின்சாரம் போகும்? என்ற நிலைமை மாறி எப்பொழுது மின்சாரம் வருமென்ற நிலைமையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் சரி பண்ணுகிறேன்,  ஒரு வருடத்தில் சரி செய்கிறேன் என்று உதார் விட்டு ஆட்சி பிடித்த கூட்டம் ஒன்றும் செய்யாமல் கைபிசைந்து நிற்கிறது.

இது இப்படியிருக்க சம்பா சாகுபடிக்கு கர்நாடகாவை எதிர்பார்த்து ஏமாற்றத்தையே பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்நாட்டின் நிலைமை. யார் சொல்லியும் கேட்கமாட்டேன் என்று அடம் பிடிக்கும் கர்நாடகாவை நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களோ சும்மா ஒப்புக்கு பிரதமரிடம் முறையிட்டு சட்டை மாற்றிக்கொண்டிருக்கிரார்கள்.

ஆளும் கட்சி போன ஆட்சியை குறை சொல்லி பொழுதை போக்கிக் கொண்டிருக்கின்றனர்.  புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் மக்கள் பத்து மணிக்கு மேல் தினமும் மின்வெட்டு என்பதால் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இது வெறும் முன்னோட்டம்தான். நிலைமை இப்படியே போனால் அங்கங்கே இது போன்ற போராட்டங்கள் தலை தூக்கும். எத்தனை நாட்கள்தான் காவல் துறையை வைத்து கட்டுப்படுத்த முடியும். மேலும் அவர்களுக்கு எதிர் கட்சி ஆட்களை வளைத்துப் பிடிக்கவே நேரம் பற்றவில்லை.
சத்தியமா நான் சொல்லித்தான் திறந்துவிட்டாங்க

போன ஆட்சியில் அரசியலுக்கு வருவேன், ஆட்சியைப் பிடிப்பேன் என்று ஏதோ மக்களுக்காக பாடுபட போவதாக மேடையில் நடித்த நடிகர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அது சரி அவர்களுக்கு தங்கள் கல்லா நிரப்புவதிலேயே நேரம் சரியாக இருப்பதால் இதற்கெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை இல்லை அல்லது இஷ்டமில்லை.

அம்மா ஆட்சியில் இவர்களெல்லாம் பம்மிக்கொண்டிருப்பார்கள், அதற்கான காரணம்  ஒன்றும் நமக்கு தெரியாததில்லை. அம்மாவை விமர்சித்தோ அல்லது அவரது ஆட்சியைக் குறை கூறி பேசினாலோ நில அபகரிப்பு வழக்கு பாயும் எனபது இவர்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆதலால் இப்பொழுது அரசியலுக்கு வருவேன் என்ற பாச்சா எல்லாம் பலிக்காது.

சும்மா  ஒரே செய்தியை பார்த்து போரடிக்கிறது. அரசியலுக்கு வர துடிக்கும் நடிகர்கள், தென்னாட்டு ஒபாமா, நாளைய முதல்வர், என்று ஒவ்வொரு பட ரிலீசுக்கும் முன்பு சீன் போடும் கதாநாயகர்களே வாங்க எல்லோரும் வாலாஜா ரோடு அரசினர்  மாளிகை எதிரில் வந்து பிலிம் காட்டுங்க. தொலைக்காட்சிகளும் எத்தனை நாட்களுக்குத்தான் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.









Monday 8 October 2012

கலக்கல் காக்டெயில் 89

கர்நாடகமும், காவிரியும் மற்றும் கிருஷ்ணாவும்

இன்று இரவு கிருஷனாராஜசாகர், மற்றும் கபினியின் ஷட்டர்களை மூடி  ப்ரதமரின் உத்தரவையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி போடாங்...........என்று ஜகதீஷ் ஷட்டர் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை மறுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் கிருஷ்ணா வேறு பிரதமரை சந்தித்து "நாட்டாமை தீர்ப்பை மாத்து" என்று மன்றாடியிருக்கிறார்.

மத்திய  அரசில் அங்கம் வகிக்கும் நம்ம ஊரு கருப்பு சட்டைகள்  வாயை திறந்தால் ..........ஏதாவது புண்ணாகிவிடும் என்று பொத்திகிட்டு இருக்கிறார்கள். மொத்தத்தில் தமிழ் நாட்டிற்கு ஆப்பு வைக்கிறது என்று ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

...........க்காளி நம்ம தலையெழுத்து.


கூடங்குளம்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடல்வழி முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து படகுகளில் புறப்பட்ட மீனவர்கள் தற்போது கூடங்குளம் அணு உலை அருகே 500 மீட்டர் தொலைவில் கடலில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடங்கங்களுக்கு  இன்னும் சிறிது நாட்களுக்கு நல்ல தீனி.

ரசித்த கவிதைகள்

விருத்தங்கள் எழுதுவது சுலபமல்ல
வீணான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்
வருத்தாத விஷயத்தை எடுத்துக்கொண்டு
"வார்முலைகள்" "தமிழன்னை" எதுவும் இன்றி
நிறுத்தாத  பஸ் பிடித்தல், காதல் செய்தல்,
நீண்டமுடி, நகங்கடித்தல் போன்றவற்றை
பொறுத்திருந்து பார்த்தமைத்து அனுப்பிணீரேல்
பொழுதிருந்தால் படித்துவிட்டு எழுதுகிறேன்.

........................சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

நகைச்சுவை 

சிரிச்சா அது காளை...!

பத்மா - பசுவுக்கும், காளை மாட்டுக்கும் என்ன வித்தியாசம், எப்படிக் கண்டுபிடிக்கலாம்...

ஜோதி - ரெண்டிலும் பால் கறந்து பாரு. எந்த மாடு 'சிரிக்குதோ' அதுதான் காளை...!!

ஜொள்ளு




08/10/2012

Saturday 6 October 2012

சூப்பர் சிங்கர்-----யாழினி

எல்லா தொலைக்காட்சிகளிலும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் வெவ்வேறு நிகழ்ச்சிகளை தந்து கொண்டிருக்கின்றன. அதில் சில மிகவும் பிரபலமாகின்றன பல மொக்கையாகின்றன. அழுவாச்சி மெகா தொடர்களிலிருந்து மக்களுக்கு உண்மையாகவே சற்று விடுதலைதான். ஆனால் அந்த ரியாலிட்டி ஷோக்களும் சில சமயம் அழுவாச்சி ஆவது வேறு விஷயம். சரி விஷயத்திற்கு வருவோம்.

விஜய் டி.வி நடத்திக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி பற்றிதான் சமீபத்திய பேச்சு.வீட்டில் தொலைபேசி பிஸியாக இருந்தால் அம்மணி மற்றுமொரு அம்மனியுடன் யாழினி, பிரகதி, சுகன்யா, அகிலேஷ், கௌதம், ராஜகணபதி, ஆஜித் என்று அலசிக்கொண்டிருப்பார்கள், ஏதோ இவர்கள்தான் ஜுட்ஜுகள் போல.

முதல்  மூன்று இறுதி சுற்று போட்டியாளர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டார்கள். இப்பொழுது "காட்டான் அட்டை" (Wild Card) என்று ஒரு சுற்று வைத்திருக்கிறார்கள். இது எல்லா சூப்பர் சிங்கரிலும் நடக்கும் ஒரு கூத்து, பம்மாத்து வேலை. இங்குதான் எல்லா வெளி விசைகள்  (External forces) வீடு கட்டி ஆடும். இதற்கு ஏற்கனவே இருக்கும் சில நடுவர்களும் புதியதாக வந்த சில நடுவர்களும் பகடைக்காய்கள். இதில் ஸ்டாண்டிங் ஓவேஷன் என்று டுபாக்கூர் வேலை செய்து மக்களை திசை திருப்புவார்கள். ஆனால் கண்துடைப்பிற்கு மக்கள் ஒட்டு. இதுதான் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

முதல் சுற்றுகளில் நடந்த போட்டிகளிலேயே நான்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். இப்பொழுது அதை மூன்றாக குறைத்து மறுபடியும் வேறு ஒருவரை உள்நுழைக்க செய்யும் வேலை. மேலும் இதை சித்துவேலை காட்டி டி.ஆர்.பி ரேட்டிங் ஏற்றிக்கொள்ளலாம்.

ஆனால் தீவிர ரசிகர்கள் இருக்கும் வரை இதில் நியாயம், நேர்மை எல்லாம் வேலைக்கு ஆவாது.

லாஜிகலாக பார்த்தால் அந்த நான்காவது போட்டியாளர் "யாழினியே" மேலும் இந்த சுற்றிலும் நன்றாகவே பாடி வருகிறாள். காணொளியில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டு ஒரு சிறந்த உதாரணம். நெஞ்சம் உருகும் என்பதில் எந்த வித ஐய்யப்பாடும் இல்லை.

அடுத்த வாரம் தெரிந்துவிடும் அந்த போட்டியாளர் என்று.

Friday 5 October 2012

இங்கிலீஷ் விங்கிலீஷில் கும்மாச்சி

தமிழ்நாட்டின் ஏன் ஏறக்குறைய இந்தியாவின் "ஒருகாலத்து" கனவுக்கன்னி நடித்த "இங்கிலீஷ் விங்கிலீஷ்" இன்று உலகெங்கும் வெளிவந்துள்ளது. அந்தப் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று தங்கமணி சொன்னதால் இன்று படம் பார்க்கப்போனோம்.

படத்தின்  கதையை பஸ் டிக்கட்டில் எழுதிவிடலாம். லட்டு வியாபாரம் செய்யும் ஸ்ரீதேவி ஆங்கிலம் படிக்கவில்லை என்ற ஏக்கத்தையும், ஏளனங்களையும் சந்திக்கும் நடுத்தர குடும்பத்தின் மெழுகுவர்த்தி. அக்காவின் மகள் கல்யானத்திற்கு நியூயார்க் சென்று சுய முயற்சியில் நான்கு வாரத்தில் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்கிறாள்.

ஸ்ரீதேவியின் அமைதியான நடிப்பில் படம் அழகாக செல்கிறது. படத்தை இயக்கியிருக்கும் கெளரி ஷிண்டே ஒழுங்காக ஷாட் பை ஷாட் எல்லாவற்றையும் எழுதிதான் கேமராவை கையில் எடுத்திருப்பது போல் தெரிகிறது.

படத்தில் நகைச்சுவைக்கு ஆங்கில வகுப்புகள். ஒரு பிரெஞ்சுக்காரர், மெக்சிகன் ஆயா, சீன அழகு நிலையப் பெண், பாகிஸ்தானி டாக்சி ஓட்டுனர், தமிழ் நாட்டு பொறியாளர், ஆப்ரிக்கன்  என்று தங்கள் பகுதிக்கு வந்து கலக்குகிறார்கள்.

எங்கிருந்து  பிடித்தார்களோ அந்த பிரெஞ்சுக்காரராக வரும் நடிகரை, முக பாவங்களில் அள்ளுகிறார்.

சத்தியமாக பார்க்க வேண்டிய படம்.

சரி தலைப்பிற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்கள் "இங்கிலீஷ் விங்கிலீஷில்" கும்மாச்சி எங்கு வருகிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.


Monday 1 October 2012

கலக்கல் காக்டெயில் 88

காவிரி யு டர்ன் அடிக்க வேண்டுமாம்

காவிரி நதிநீர் ஆணையம் வழங்கிய பரிந்துரையை நிறைவேற்று என்று உச்சநீதிமன்றம் கூறிய பொழுதிலும் கர்நாடக அரசியல்வாதிகள் திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்து அரசியல் செய்துகொண்டிருந்தனர்.  பின்னர் நம்ம பிரதமர் அதிசயமாக தனது திருவாய் மலர்ந்தருளி "ஷட்டர் ஷட்டரை திறப்பதுதான் பெட்டர்" என்று கூறிய பின்பு ஷட்டர் பலத்த போராட்டங்களுக்கு இடையில் ஷட்டரை திறந்து விட்டுருக்கிறார். அதுவும் நான்கு நாட்களுக்குத்தான் என்று சொல்கிறார்கள்.

யானை வாய்க்கு சோளப்பொறி.

இந்த வருடம் பருவமழை இருபத்திமூன்று விழுக்காடு கம்மியாம். கர்நாடக மின்சாரத்திற்கு புனல் சக்தியையே நம்புவதால் தண்ணீர் திறந்துவிட யோசிக்க வேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் தங்களது விவசாய நிலங்களை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆதலால்  காவிரியை யு டர்ன் அடிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

இந்தியாவை ஆளும் தகுதிபெற்றவர் அம்மாதான்

நாகப்பட்டினத்தில் நடந்த அ,தி.மு.க ஆலோசனைக்கூட்டத்தில் ஓ.பி. யாரின் கூற்றுதான் இது. இதில் யாவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் ஆள்வதற்கு தகுதிஎன்று ஒன்று இருக்கிறதா என்பதே நமக்கு விடை தெரியா கேள்வி.

ஏனென்றால் இந்திய அரசியல் சரித்திரம் எத்துனையோ தகுதியானவர்களை சந்தித்திருக்கிறது, அவர்களையெல்லாம் வரிசைப்படுத்தி நமது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

கவிழக்  காத்திருக்கும் மத்திய அரசு

அட இன்னும் கவிழவில்லையா? என்ன நடக்குது நாட்டில். திரிணாமூல் கழன்றபின் கூட்டணி நொண்டிக்கொண்டிருக்கிறது எனபது எல்லோருக்கும் தெரியும். இன்னும் குறைய நேரத்தை ஓட்ட  சில்லறை கட்சிகளை சேர்த்து எப்படியும் ஒப்பேற்றி விடுவார்கள்.

இன்னும் சில மந்திரி பதவிகள் காட்டி மீதி நாட்டை விற்க ஆள் கிடைக்காமலா போவார்கள்.

ரசித்த கவிதைகள் 

பின்னிரவின் நிலவொளியில்
தார்ச்சாலையில்
நசுங்கி செத்துக்கிடக்கும்
பெயர் தெரியாப் பறவையின்
மரணத்தை பகிர்ந்து
கொள்வதற்க்காவது
வேண்டும் உன் காதல்.
----------------------------------வே. இராமசாமி

விடைபெறும்போது
திரும்பாமல் விலகுகிறேன்
ஒரு வேளை
நீ திரும்பிப் பார்க்கலாம்.

--------------------------------------மார்கன்

ஜொள்ளு



01/10/2012