Pages

Thursday 29 November 2012

கலக்கல் காக்டெயில்-94

500 வது இடுகை.

இந்திய கிரிக்கட் வீரர்களுக்கே உள்ள பிரத்யேக நோய் நமக்கும் தொற்றிக்கொண்டு விட்டது. 500 வது இடுகை  என்ற இலக்கை எட்டிவிட்டதை பறைசாற்ற ஒரு பதிவு. எழுதியதில் எத்தனை உருப்படி என்று வாசித்தவர்களுக்கு தான் தெரியும்.

இருந்தாலும் பதிவுலக நண்பர்களின் ஆதரவில் 500 பதிவுகள் போட்டாகிவிட்டது. இனி வழக்கம்போல் மொக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.

அவதூறு வழக்குகள்

இது தமிழ்நாட்டிற்கே உரிய தனி அடையாளம். குறிப்பாக அம்மா ஆட்சியில் இது அதிகம். அம்மாவை பற்றியோ அல்லது அவரது நடவடிக்கைகளையோ  யாராவது விமர்சித்தால் மேற்படி ஒரு வழக்கு அவரது அல்லக்கைகளால் தொடரப்படும். இதன் உச்சகட்டமாக கைது, கஞ்சா கடத்தல், குண்டாஸ் என்று விமர்சித்தவரின்  தரத்திற்கேற்ப அது விஸ்வரூபம் எடுக்கும்.

அம்மா விமர்சனத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பது ஏன் தான் இவர்களுக்கு தெரியாமல் போகிறதோ?

கெம்மனகுண்டி - அரசர்களின் உல்லாச நகரம்

இது என்னடா பேரு?, ஏதோ வில்லங்கமான விஷயம் என்று படிக்கப்போனால், கர்நாடகாவில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள உல்லாசபுரியாம். எப்படியெல்லாம் பேர் வைக்கிறாய்ங்கபா.

என்னாது கெம்மன குண்டியா?

கிரிக்கட்

இலங்கை கிரிக்கட் டீமுக்கும் கிட்டதட்ட இந்திய கிரிக்கட் டீமின் நிலைமைதான். மூத்த வீரர்கள் விலகாமல் இளைஞர்களுக்கு வாய்ப்பு தர மறுக்கின்றனர். அதன் விளைவு இன்று நியூஜிலாந்திடம் மூகடைபத்து நிற்கின்றனர்.

தில்ஷன், சங்கக்காரா, மகிளா எல்லாம் இனி ரொம்பநாள் தாக்கு பிடிக்க முடியாது. இல்லை வில்சேர் வைத்தாவது ஆடுவோம் என்றால், இனி பங்களாதேஷ் கூட  இந்த வயசான டீம்களை பந்தாடலாம்.

புத்தகம்

 வெகுநாட்களாக படிக்கவேண்டும் என்று நினைத்து கைவராமல் போன புத்தகத்தை இப்பொழுது விடுமுறையில்  வந்திருக்கும் என் மகள் அதை எனக்கு பரிசளித்திருக்கிறாள். ஜ்ஹோன் கிரேயின் "MEN ARE FROM MARS AND WOMEN ARE FROM VENUS".

படிக்க வேண்டும்.


ரசித்த  கவிதைகள்

காற்று வீசவும் 
அஞ்சும் ஓர் இரவில்
நட்சத்திரங்களிடையே
இருக்கிற
அமைதியின் அர்த்தம் 
என்ன என்று 
நான் திகைத்த ஓர் கணம்
கதவருகே யாருடைய 
நிழல் அது?

இந்த கவிதையின் தலைப்பு "எமன்"------------சேரன் 


ஆடித்தோற்ற காளியின்
உக்கிரம் தணிக்க 
அருகிலுள்ள ஊர்த்துவ தாண்டவர் 
மேல்
விசிறியடித்த  வெண்ணையாய்
எதையோ  நினைத்து 
எதையோ பற்றி 
உருகி வழியும்வாழ்க்கை.

----------------------------ந. ஜெயபாஸ்கரன்

நகைச்சுவை 

மச்சி எவ்வளவு அடிச்சாலும் மப்பு ஏறமாட்டேங்குதுடா.

அடச்சே  ஏற்கனவே நீ மப்புலதான் இருக்கே, நான் உன் நண்பன் இல்லை, உங்கப்பண்டா.

கணவர்கள் எல்லாம் ஸ்பிளிட் ஏசி மாதிரி...

எப்படி ராஜா சொல்றீங்க..??

ஏன்னா, வெளியிலதான் சவுண்டு ஜாஸ்தியா இருக்கும். ஆனா வீட்டுக்குள்ள படு கூலா, அமைதியா, கன்ட்ரோலா இருப்பாங்க...!

 ஜொள்ளு 





29/11/2012

Wednesday 28 November 2012

சில்லறை வர்த்தகமும், சில்லறை பிள்ளைகள் அரசியலும்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒற்றைக்காலில் நிற்கும் இந்த வேலையில் " இது தேவைதானா?" என்ற கேள்வி எழுகிறது.

சரிந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலைமையை சரி செய்ய இது ஒரு குறுக்கு வழியாக நிதியமைச்சர் நினைக்கிறார்.

இதனால்  சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற சந்தேகம் எல்லோருக்கும் உள்ளது. இதேபோன்ற நிலை கட்டாரில்  பத்து வருடங்களுக்கு முன்பு இருந்தது.ஆனாலும் இங்கு அந்நிய முதலீடு அனுமதி செய்யப்பட்டு சில்லறை வியாபாரிகளும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

மச்சான்ஸ் சில்ரே வர்தகமா? என்ன மச்சான்ஸ் இது?

ஆனால்  தமிழ்நாட்டில் உள்ள   பிரதான அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து ஒட்டு வங்கியை அதிகரிக்க என்ன தகிடுதத்தம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நாள் வரை எதிர்ப்போம் என்று சொல்லிவந்த கலைஞர், முடிவை மாநில அரசிற்கு விட்டுவிடுவோம்  என்ற ஒரு பிரிவை பிடித்துக்கொண்டு, இப்பொழுது ஆதரித்து, காங்கிரசுடன் உறவை பலப்படுத்திக்கொண்டு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தன் முடிவை அறிவித்துவிட்டார். மேலும் 2ஜி விவகாரத்தில்  பி.ஜே.பி. இன் தகிடுத்தத்தம் வெட்ட வெளிச்சமான பின்பு தாங்கள் நிரபராதி என்று ஊருக்கு பறைசாற்ற இது சரியான தருணம் என்று நினைத்து மத்திய அரசின் பலம் தங்களுக்கு தேவை என்பதை மனதில் கொண்டு மேற்படி முடிவை அறிவித்து விட்டார்.

ஆத்தாவோ இது தான் தருணம் "அள்ளலாம் நாடார் ஓட்டை" என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். ஆதலால் நாடார் சமூகத்தை வளைக்க அவர் மும்முரமாக வேலையில் இறங்கிவிட்டார்.

பிரதான கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் முட்டுகொடுக்கும் உபரி கட்சிகள்  இதை பற்றி பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.

 மொத்தத்தில் இவர்களுக்கு கொள்கை என்று ஒரு ...ரும் கிடையாது. சந்தரப்பவாத அரசியல்தான் இவர்களின் கொள்கைகளை நிர்ணயிக்கிறது.

இதையெல்லாம்  புரிந்தோ புரியாமலோ "மாறி மாறி ஒட்டு போட்டு" ஜனநாயகத்தை தக்க வைத்துக்கொண்டு சகித்துகொண்டிருக்கின்றரனர் "தமிழ் கூறும் நல்லுலக மக்கள்".


 

Tuesday 27 November 2012

டெண்டுல்கர் பயோடேட்டா


இயற்பெயர்
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
நிலைத்த பெயர்
டெண்டுல்கர்
தற்போதைய பதவி
எம்.பி.
தற்போதைய தொழில்
பெவிலியனில் நகம் கடிப்பது 
உபரி தொழில்
விளம்பரங்கள்
பலம்
பி.சி.சி.ஐ, கவாஸ்கர் முதல் எல்லா “கர்” களும்
பலவீனம்
உண்மையான கிரிக்கட் பிரியர்கள்
தற்போதைய சாதனை
ஸ்டம்புகள் விழுவது   
நீண்டகால சாதனை
நூறு சதங்கள்   
சமீபத்திய எரிச்சல்  
எல்லா பந்து வீச்சாளர்களும்  
நீண்டகால எரிச்சல்
இந்தியாவின் வெற்றிக்கு ஆடாதது  
தற்போதைய சொத்து
ஏராளம்  
பிடித்த வார்த்தை
சதம்
பிடிக்காத வார்த்தை
ஒய்வு
எதிர்கால திட்டம்
மகனை இந்திய டீமில் சேர்ப்பது.
அடுத்த ரெகார்ட்
அப்பாவும், மகனும் இந்திய டீமில் ஆடுவது


Monday 26 November 2012

சச்சினின் சோக கீதம்

சமீபகாலமாக சொதப்பிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் மாமேதை சச்சினின் சோக கீதம்.

போனால் போகட்டும் மெட்டில் மூன்றுக்கு நாலு தாள ஜதியில் பாடிக்கொல்ல(ள்ள)வும்

தோற்றால் தோற்கட்டும் போடா
இந்தியா தொடர்ச்சியாய் வென்றது ஏதடா?
தோற்றால் தோற்கட்டும் போடா?

பனேசார் போட்டது தெரியும்
பந்து  வந்தது தெரியும்
ஸ்டம்பு போனது தெரியாது
அடுத்து வருபவனும்
அவுட்டாவான் என்று
முன்பே எனக்கு தெரியாது
நமக்கும் முன்னே அம்பயரடா
நாலும் தெரிந்த வில்லனடா
அவுட்டு கொடுக்கும் அறிஞனடா
தோற்றால் தோற்கட்டும் போடா?


ரெகார்டுக்கும் பணத்திற்கும்
வழியினைக் கண்டேன்
இந்தியா வெல்வதற்கு
வழியினைக் கண்டேனா?
கண்டிருந்தால்  இன்று
ஓய்வினை பற்றி நினைப்பேனா
கிரிக்கட் என்பது வியாபாரம்
அதில் விளம்பரம் என்பது வரவாகும்
ரசிகர்கள்  என்பது எரிச்சலாகும்
தோற்றால் தோற்கட்டும் போடா............


தோற்றால்  தோற்கட்டும் போடா
இந்தியா தொடர்ச்சியாய் வென்றது ஏதடா
 தோற்றால்..................  தோற்கட்டும் போடா .....................

ஓ  ஓ ஓ.................ஊ ஊ ஊ




Sunday 25 November 2012

கலக்கல் காக்டெயில் 93

கசாப்  செத்துட்டானா?

கடந்த சிலநாட்களாகவே பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை. வேலை பளுவினால் உலக விஷயங்களும் ஒன்றும் தெரியவில்லை. இன்றுதான் சற்று ஓய்ந்த வேலையில் செய்திகளை பார்க்க முடிந்தது. இன்னாது "கசாப் செத்துட்டானா?" ரேஞ்சுக்கு ஆகிவிட்டது நிலைமை. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அப்பாவி மக்களை குருவி சுடுவதுபோல் சுட்டவனை ஒரு வழியாக தூக்கில் போட்டுவிட்டார்கள். முன்னாடியே அறிவித்து விட்டால் எங்கு ஒரு கூட்டம் எதிர் கூச்சல் போடுமோ என்று அமைதியாக முடித்துவிட்டார்கள் வேலையை. இவன் விஷயத்தில் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது அவன் செய்த மனிதாபமற்ற செயலின் எதிரொலிதான். புனே, மும்பை பக்கமெல்லாம் இனிப்பு கொடுத்து வெடி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த வேட்டையையும், சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய கோரத்தையும் யாரும் எளிதில் மறக்க முடியாது. இவன் வெறும் அம்புதான். ஏவி விட்டவன் பழிவாங்குவேன் என்று கொக்கரித்துக்கொண்டிருக்கிறான். அவனை என்ன செய்யப்போகிறார்கள்?

2 ஜியும் கட்சி பேரமும்

மேற்படி  ஊழலில் சிக்கி சின்னாபின்னமாகி வெளியே வரவே உன் பிழைப்பு என் பிழைப்பு என்றாகிவிட்டது கையை நக்கியவர்களுக்கு. இப்பொழுது முழுவதுமாக ஆட்டையைப் போட்டவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். சி.ஜி. ஏ வை அப்படி ஒரு அறிக்கை தயார் செய்து கையெழுத்திட வைத்தவரே முரளி மனோகர் ஜோஷிதான் என்று சி.ஜி. எவே ஒப்புக்கொண்டவுடன் காங்கிரசோ பி.ஜே.பி. இன் கோரமுகம் தெரிகிறது என்று தப்பிக்க அச்சாரம் போடுகிறார்கள். நடந்தவற்றில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்பதை எப்போழுதிலிருந்தோ  மக்கள்உணர்ந்துவிட்டார்கள். எல்லோரும் அடிச்சதில் நன்றாக பேரம் பேசி எடுத்துக்கொள்ளுங்க. வரி கட்ட நாங்க இருக்கிறோம்.

2013 ல் மின்வெட்டே இருக்காதாம்

2013 ல் மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்று ஆத்தா சொல்லிடிச்சு. ஓடிக்கொண்டிருந்த மின்நிலயங்களே இப்பொழுது நொண்டிக்கொன்டிருக்கின்றன. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள ஐந்து யுனிட்டுகளுமே ஒரே சமயத்தில் ஓடியதாக சமீப காலத்தில் சரித்திரம் இல்லை. இதுலே இவங்க எப்போ புதியதாக திட்டம் போட்டு நமக்கெல்லாம் மின்சாரம் வரப்போகுதோ தெரியவில்லை. பதினாறு மணிநேரம் மின்வெட்டை எப்படித்தான் ஊரு பக்கம் தாங்குகிறார்களோ தெரியவில்லை.

ரசித்த கவிதை

நிலம் பிடிக்கும் ஆனால்
புதைய மாட்டேன்

நீர் பிடிக்கும் ஆனால்
கரைய மாட்டேன்

வான் பிடிக்கும் ஆனால்
பறக்க மாட்டேன்

நெருப்பு பிடிக்கும் ஆனால்
ஏரிய மாட்டேன்

காற்று  பிடிக்கும் ஆனால்
மிதக்க மாட்டேன்

சாப்பாடு பிடிக்கும் ஆனால்
ஃ புல் கட்டு கட்டுவேன்.

----------------------------விகடன் பேயோன் பக்கத்திலிருந்து


ஜொள்ளு



25/11/2012



Monday 19 November 2012

படிதாண்டா பத்தினியும், முற்றும் துறந்த முனிவரும்



கடந்த சில வாரங்களாகவே கலைஞர் தொலைக்காட்சியும், ஜெயா டீவியும் ஆர்த்திராவ் பேட்டியை ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆர்த்திராவ் சில ஆவணங்களை வைத்துக்கொண்டு அவ்வப்போது நித்தியின் மேல் குற்றசாற்றுகளை அடுக்கிக்கொண்டு போகிறார். இதை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு ஆர்த்திராவின் மேல் பச்சாதாபம் வர வாய்ப்பே இல்லை, மாறாக இவரது குற்றசாட்டுகளில் உள்நோக்கம் இருப்பதாகவே படுகிறது. நித்தி ஒன்றும் யோக்கியர் அல்லதான்.

பிட்ஸ் பிலானியில் பொறியாளர் படிப்பை முடித்துவிட்டு பின்னர் அமெரிக்காவில் மேல் படிப்பை தொடர்ந்து அங்கேயே சில வருடங்கள் வேலை செய்திருக்கிறார். தான் விரும்பியவரையே திருமணமும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்திகொண்டிருந்தவர் விடுமுறைக்கு நாடு திரும்பிய பொழுது நித்தியை சந்தித்து பின்னர் ஆசிரமத்திலேயே ஐக்கியமாகி அவருக்கு பணிவிடைகள்?(மிகவும் அந்தரங்கமாக) செய்திருக்கிறார். அப்பொழுது அங்கே சேருமுன் அவர் கருவுற்று இருந்ததால் கடவுளை அடைய குழந்தை ஒரு தடையாய் இருக்குமென்று நித்தி சொன்னதால் கருவைக் கலைத்து கணவரிடம் பொய்யும் சொல்லியிருக்கிறார். பின்னர் நித்தியுடன் குஜாலாக (அறுபத்தைந்து முறையாம் எப்படி கணக்கு வைத்தார்களோ தெரிய வில்லை, சுவற்றில் கோடு போட்டிருப்பார்களோ?) இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் அவருக்கு நித்தியின் குணம் தெரியவில்லையாம்.

பின்னர் ரஞ்சிதாவுடன் இருந்ததை படம் பிடித்தவுடந்தான் அவர் தன்னை ஏமாற்றியது தெரிந்ததாம். சக்களத்தி வந்துவிட்டதை பொறுக்காமல்தான் இப்பொழுது சேனல் சேனலாக புலம்பிக்கொண்டிருக்கிறார். அவர் கணவரிடம் சொல்லும்பொழுது ஏன் முதல் முறை குஜாலாக இருக்கும்பொழுது உனக்கு தெரியவில்லையா? என்றாராம். அதே கேள்விதான்  இந்த பேட்டியை காண்பவருக்கும் தோன்றுகிறது.

படித்தவர்கள், சிந்திக்க தெரிந்தவர்கள் இதுபோன்ற செயல்களை  செய்வார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். படித்து நல்ல வேலையில் இருந்துகொண்டு நல்ல கணவரையும் அடைந்து நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கை சின்னாபின்னமாகிவிட காரணமாக இருந்தது நித்தி மட்டுமல்ல ஆர்த்திராவும் கூடத்தான்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரையில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். என்று ஒரு படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன் சொல்லுவது போல் “one can be a cheat but not a fool”  ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனுக்குத்தான் அதிக தண்டனை கொடுக்கவேண்டும்.

அது ஆர்த்திராவுக்கும் பொருந்தும்.

Tuesday 13 November 2012

யோவ் முருகதாசு துப்பாக்கி ஏன் வெடிக்கலை?

"யோவ் முருகதாசு ஏன்டா துப்பாக்கி வெடிக்கல?"
என்று மாமா இருநூறு டெசிபலில் கேட்டது எங்களுக்கு எல்லாம் ஆச்சர்யம். மேலும் அங்கு கூடிய கூட்டம் மாமாவை ஏதோ நாய் கவ்வி போட்ட மேட்டர் போல நோக்கியது.

அண்ணா டாகுடர் பற்றி மேட்டர்னு உள்ளே வந்தவங்க எல்லாம் அப்படியே அபீட் ஆகி அடுத்த ப்லாகுக்கு போயிடுங்கணா.

 இந்த மேட்டர் துப்பாக்கி ஏன் வெடிக்கவில்லை? என்று எங்கள் மாமா காண்டு ஆகி முருகடாசிடம் மல்லுக்கு நின்றது பற்றியது.

இந்த வருட தீபாவளிக்கும் நைனா வழக்கம்போல் பத்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கி ஏய் நீங்க எட்டு பேரும் சண்டை போடாம பங்கு போட்டுக்குங்க என்று கடா மார்க் கடை நோக்கி நகர்ந்து விட்டார்.

அவர்  வாங்கியதில் பெரும்பாலும் கேப்புகளும், பாம்பு மாத்திரையும் ஊசி வெடிகளும்தான். தக்காளி இதில் என்ன பெரிய பங்கு. நாங்கள் வழக்கம் போல் தங்கைகளுக்கு போக்கு காட்டி எல்லாவற்றையும் அமுக்கிவிட்டோம். இதில் கேப்பு மட்டும் நாலு டஜன். இதை வருடா வருடம் கதவிடுக்கில் வைத்து வெடித்ததில் மஜா இல்லாது கதவின் கீல் உடைந்ததுதான் மிச்சம். ஆதலால் ஒரு துப்பாக்கி வாங்கிவிடுவது என்று ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று எல்லோரும் ஒரு மனதாக முடிவு செய்தோம்.

ஆனால் காசிற்கு எங்கேபோவது? அப்பொழுதுதான் ஓசி கறிசோறு உள்ளே இறக்க வந்த மாமா கண்ணில் பட்டார். அவர் அப்பொழுதுதான் சைக்கிள் கடையில் பதுக்கிய அரை பாட்டில் ப்ராந்தியை திறந்து மூடியை முகர்ந்து முழுசாக உள்ளிறக்கிய நேரம், எங்கள் கோரிக்கையை ஏற்று  முருகதாசு "பிள்ளைங்களுக்கு ஒரு டுப்பாக்கி குது" என்று முன்மொழிந்தார்.

அவனோ "அட போ சார் நீ நிலையா இருக்க சொல்ல  காசு கொடுக்கமாட்டே, இப்பவேற மப்புல கீற நவுரு" என்றான்.

இருந்தாலும்  மல்லு கட்டி எப்படியோ ஒரு துப்பாக்கிய எங்கள் கையில் கொடுத்து  "மருமவனுங்களா பேஜார் பண்ணாம  வெடிங்க" என்று கொடுத்தார்.

அதைவாங்கி வந்து வீட்டில் உள்ள நாலு டஜன் கேப்பில் ஒரு இரண்டு டப்பாக்கள் வெடித்தோம். அது வரை பிரச்சினை இல்லை.

மாமா புல் மப்பில் வந்து "மருமவன்களா இன்னாடா சுடுறீங்க" என்று எங்கள் கையிலிருந்து பிடுங்கி ஒரு இரண்டு கேப் வெடிக்க  சொல்ல அதில் உள்ள  ஸ்ப்ரிங் தெறித்து காவாயில் விழுந்தது. அப்பால அது வெடிக்கவே இல்லை.

மாமா காண்டு ஆயிட்டார்.

மவன முருகதாசு என்று கடை நோக்கி ஆடிகிட்டே போயிதான்  அந்தக் கேள்வியைக் கேட்டார்.


Monday 12 November 2012

தீப ஒளி

தீப ஒளி திருநாளாம்
தீபாவளி என்பார்களாம்
ஈரைந்து மாதம் முன்பே
பீராய்ந்து வைப்பாராம்
கடைகள்  பல ஏறி
கணக்குகள் பல மாறி
பினக்குகளுடனே
துணிமணிகள் எடுப்பாராம்.

விடியலில் விழிப்புற்று
கையதனில் எண்ணெய்ப் பற்று
தலையினிலே வைத்தழுத்தி
கங்கைதனை காண்பாராம்

புதிய  உடை உடுத்தி
வெடிகள்தனை கொளுத்தி
பொடிசுகள்  இன்புற
பெரிசுகள் மகிழ்வாராம்

இனிப்புகள்  பல வழங்கி
இருளிலே உண்பாராம்
இல்லாத மின்சாரத்தை
இனியும் நினைப்பாரா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
சொந்தங்கள்  மூழ்காவண்ணம்
இருளிலே மூழ்கிய தமிழகத்தை  
இனிதுடனே  வாழ்த்திடுவோம்.

நூற்றி  இருபத்தைந்து
போற்றி இலக்கு வைத்து
அரசாங்கம்  செழிப்புற
அன்புடனே  அடித்திடுவோம்


தீபஒளி திருநாளாம்
தீபாவளி என்பாராம்

என்னது 125 கோடியா?






கலக்கல் காக்டெயில் 92

பிராமணாள் கபேயும், டாஸ்மாக்கும்

சமீபத்திய செய்திகளில் கவனிக்க வைத்தவை

ஸ்ரீரங்கம் பிராமணாள் கபே இழுத்து மூடப்பட்டது. அதன் ஓனர் அதை திருவானைக்காவலில் சொந்தக்கட்டிடத்தில் அதே பெயருடன் எப்படியும் திறப்பேன் என்று சொல்லுவது உபசெய்தி.

மற்றுமொரு செய்தி, அரசு தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் விற்பனை நிர்ணயம். எப்படியாவது இருநூற்றைம்பது கோடிக்கு விற்றாக வேண்டுமாம். கடையை ஒரு நாள் மூடுவோம் என்று அறிவித்தால் இருநூற்றைம்பது என்ன ஆயிரம் கோடிக்கு கூட விற்கலாம்.

ரெண்டு கட்டிங் விட்டால் மின்சாரத்தை மறந்து சாலைகளின் நெரிசலின் ஊடே நடுத்தெருவில் வேட்டி அவிழப்படுத்திருக்கலாம்.

டெங்கு  கொசு 

கேஜ்ரிவால் நாளொருமேனியும் பொழுதொரு குண்டுமாக கருப்பு பண பதுக்கல் பேர்வழிகள் என்று சரவெடி கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெருச்சாளிகளோ அவர் ஒரு கொசு என்கின்றனர். ஆமாம் நான் ஒரு டெங்கு கொசு என்கிறார்.

கிட்டத்தட்ட எண்ணூறு பேருக்கு மேல் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளனராம். நம்ம ஊரு ஸ்டேட்வங்கியில் கணக்கு தொடங்க, ரேஷன் அட்டை, ஐ.டி.கார்ட் லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் ஆவணங்கள் தரவேண்டும். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு தொலை பேசி அழைப்பு போதுமாம். நான் கூட பத்தாயிரம் ரூபாயை மனைவி கண்ணில் படாமல் வைக்க சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன், சுவிஸ் வங்கி அழைப்பு எண்தான் தெரியவில்லை.

தீபாவளி 

வருடா வருடம் வந்து ஷாப்பிங்கில் தொடங்கி, பர்சை பதம் பார்த்து, இனிப்பில் நனைந்து, வெடிகளில் விழுந்து தொலைக்காட்சியில் உறங்கிவிடுகிறது.

கவிதை, கவிதை............ ஏதோ ஒரு ஃப்லோவில் வந்துவிட்டது.

யோசித்துப் பார்த்தால் வருடா வருடம் இதே கதைதான். நம்ம வீட்டு பெருசுங்கதான் இன்னும் ஒரே அட்டவணையில் கொண்டாடிக்கொண்டு தீபாவளி பழைய எண்ணங்களுக்கு நீர் ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

ரசித்த  கவிதை 

அம்மா இங்கே
அசலான நெல்லூர்
அரிசி கிடைக்கிறது
டாலர் அதிகமில்லை
வடிப்பதும்  சுலபம்
மைக்ரோவேவ் அடுப்பில்
வெந்து முடிக்க
ஐந்தே நிமிடங்கள்
கஞ்சி வடிக்கும்
கஷ்டங்கள் இல்லை
கரிப்பிசுக்கு
கல் நெல்லில்லை
ஆனால் ஏனோ
இந்திய அடுப்பில்
அழுதுகொண்டு தினமும்
அரைக் குழைசலாய்
நீ  வடித்த ஐ ஆர் எட்டின்
சுவைகூட  இல்லை.

.........................வெ. அனந்தநாராயணன்

ஜொள்ளு








12/11/2012





 

Tuesday 6 November 2012

வளர்ப்பு



ன்று நாங்கள் வெளியே விளையாடிவிட்டு வந்தவுடன் வீட்டில் அவ்வளவு பெரிய பிரளயம் நடக்குமென்று நினைக்கவில்லை. அப்பா அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் நேரம், வீட்டில் ஒரே சத்தம். அவர் சத்தம் போடுவதென்றால் அதற்கு ஒரே காரணம்தான் இருக்க வேண்டும். ஏதோ ஒரு புண்ணியவான் எங்களைப் பற்றி கொளுத்திப் போட்டிருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்தோம் என்று தெரியவில்லை.

நாங்கள் என்றால் நானும் என் தம்பியும் பம்மிக்கொண்டு பின் பக்கமாக வீட்டுக்கும் நுழைந்து அறையினுள் பதுங்கிக்கொண்டோம். அவருடைய சத்தம் அறையினுள் தெளிவாக விழுந்தது. “இந்த பசங்களை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லோரிடமும் வம்பு வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். கண்டவனிடமெல்லாம் பேச்சுக் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று வரட்டும் அவனுங்க சோற்றை கண்ணில் காண்பிக்காதே” என்று அம்மாவிடம் கத்திகொண்டிருந்தார். அப்பொழுது அக்கா அறையினுள் நுழைந்து “அடப்பவிகளா இங்கேதான் இருக்கீங்களா, அப்பா கண்ணில் படாதீர்கள், பட்டா சட்னிதான்” என்று அவள் பங்கிற்கு பயமூட்டினாள்.

விஷயம் வேறொன்றுமில்லை. முதலியார் வீட்டில் மாமரத்தை குத்தகைக்கு எடுத்தவன் வந்திருக்கிறான். பேசிய காசைவிட கம்மியாக கொடுத்துவிட்டு மாங்காய்களை பறித்துக்கொண்டு சென்று விட்டான். அவருக்கு பேசிய காசு கிடைக்காததற்கு நாங்கள் தான் காரணம். அவருடன் எங்கள் வீட்டு ஓனரும் சேர்ந்து அப்பாவிடம் “யோவ் உம்ம பசங்களை என்னையா வளர்த்திருக்கீர், அவனுகள் ரகளை தாங்க முடியவில்லை. கோடை விடுமுறை வந்தால் உங்கள் பையன்களுடன் சேர்ந்து மற்ற பையன்கள் செய்யும் லூட்டி எங்களுக்கு வருடா வருடம் நஷ்டம் வருகிறது. இதற்கெல்லாம் தலைவன் உம்ம மூத்தவன்தான்” என்று அப்பாவிடம் சத்தம் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள். வீட்டு ஓனர்க்கு தெரியாது அவர் பையன் சந்துருதான் மூலகாரணம் என்று.

உண்மையில் அவன்தான் எங்களை ஏவிவிடுவான்.  அவர்கள் வீட்டு மாமரத்திலேயே எங்களை பறிக்க சொல்லுவான். “ஏன்டா உங்க வீடுதான் நீயே பறியேன் என்றால், போடா எங்கப்பா எல்லா காய்களையும் காலையில் எண்ணிவிட்டு போயிருக்கிறார், மேலும் எங்க வீட்டில் நானே திருடக்கூடாதுடா, நீங்க பறிச்சிட்டு வாங்க நான் யாரிடமும் சொல்லமாட்டேன் என்று முதலியார் வீட்டில் இருந்துகொண்டு சொல்லுவான். பறித்த காய்களில் ஒன்றே ஒன்றை எங்களிடம் கொடுத்துவிட்டு மீதியை நாடார் கடைக்கு சென்று நாடார் “அம்மா கொடுத்துவிட்டாங்க ஒரு காய்க்கு எட்டணா மேனிக்கு வாங்கி வரசொன்னாக” என்பான்.

முதலியார் வீட்டில் பறிக்க அவனும் கூட வருவான். ஆனால் அவர்கள் வீட்டு ஜன்னல் அருகிலே நின்றுவிடுவான், நான் யாரும் வராம பார்த்துக்கிறேன் நீங்க பறியுங்க என்பான். “டே பார்த்துடா திலகா கண்ணில் படக்கூடாது” என்பான். திலகா முதலியாரின் பெண். ரேஸ் குதிரை மாதிரி ஒரு மாதிரி திமிறிக்கொண்டு நடக்கும். எங்கள் கூட்டத்தில் இரண்டு மூன்றுபேர் அவளிடம் வழிவார்கள்.

நாங்கள் பறித்த காய்களை எல்லாம் வாங்கிக்கொண்டு, இரண்டு காய்களை ரகசியமாக முதலியார் வீட்டில் ஜன்னலில் வைத்துவிட்டு நாடார் கடைக்கு போவான்.அவர் “தம்பி இது என்ன உங்க வீட்டு காய் போல இல்லையே என்றால், நாடார் இது எங்க கிராமத்து வீட்டிலிருந்து வந்தது, காலையில் போட் மெயிலில் மாமா கொண்டுவந்தார்” என்பான். .

அன்று வீட்டில் அப்பாவிடம் வாங்கிக்கட்டிகொண்ட பிறகு கொஞ்சம் அமைதியாக இருந்தோம். ஒருமாதம் கழித்து தெருவில் விளையாடிவிட்டு வரும் பொழுது மறுபடியும் வீட்டில் ஒரே சத்தம். ஆனால் இந்தமுறை சத்தம் போட்டுக்கொண்டிருந்தவர் முதலியார். வாங்கிகட்டிக் கொண்டிருந்தவர் எங்கள் வீட்டு ஓனர்.

நாங்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அக்கா இன்று சந்துரு உங்களுடன் விளையாட வந்தானா என்று கேட்டாள். இல்லையே அவன் ரெண்டு நாளாக விளையாட வரவில்லை என்றோம். ஏன் என்றதற்கு “சந்துருவும், முதலியார் பெண் திலகாவையும் இரண்டு நாளாக காணவில்லையாம்” என்றாள்