Pages

Wednesday 29 July 2015

அப்துல் கலாம்- பாரத் ரத்னா விருதுக்கு அழகு சேர்த்தவர்

அப்துல் கலாம் அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்பதில்  எந்த வித ஐயாப்பாடும் இல்லை. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் ஒரு சாதாரண படகோட்டி குடும்பத்தில் பிறந்து உலகம் வியக்கும் விஞ்ஞானியாகவும், ராக்கெட் நாயகனாகவும் உயர்ந்து, சுதந்திர இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாக ஐந்தாண்டு காலம்  அந்த பதவிக்கு பெருமை சேர்த்தவர்..

அவர் ஜனாதிபதியாக இருந்த பொழுது டில்லி ராஷ்ட்ரபதி பவனை தினமும் மூவாயிரம் பொதுமக்கள் வந்து செல்லும் அழகிய பூங்காவாக மாற்றியவர். நூறு அறைகளைக் கொண்ட அந்த மாளிகையில் தனக்கென்று இரண்டு அறைகளை மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டு மற்றவைகளை கணினி கல்வி மையங்களாக மாற்றியவர். அவரது எளிமையான வாழ்க்கை இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு புரிந்திருக்க நியாயமில்லை. தன்னுடைய பதவி ஏற்பிற்கு வந்த தனது குடும்பத்தினரின் பயன செலவுகளை தனது செலவாக ஏற்றுக்கொண்டவர்.


அவர் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதிபவனை விட்டு  வெளியேறிய பொழுது தனது உடமைகளை இரண்டு பொட்டிகளில் அடைத்துக்கொண்டு எடுத்துச்சென்றார். தனது புத்தகப்பையை சந்தேகத்துடன் நோக்கிய ஊடகங்களிடம் அவை எனது சொந்த புத்தகங்கள் என்று அதே கண்களை நோக்கி புன்முறுவலுடம் பதிலளித்தார். தனது பதவிக்காலத்தில் வந்த பரிசுப்பொருட்களை அரசுக் கருவூலத்தில் சேர்க்க சொல்லிவிட்டார். அவருக்கு முன்பும் பின்பும் அந்த இடத்தில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை நாடு அறியும்.

தனது ஓய்வுக்காலத்தில் தனக்குப் பிடித்த ஆசிரியத்தொழிலை மிகவும் விருப்பத்துடன் செய்து கொண்டிருந்தார்.

அவரது மேற்கோள்கள் இளைஞர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தன.

"தூங்கும் பொழுது காண்பது கனவல்ல, நம்மை தூங்கவிடாது செய்வதே கனவு" என்றார்.

"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்".

இவை இரண்டும் அவரது மேற்கோள்களில் ஒரு சிலவே. இன்னும் அவர் சிந்திய முத்துக்கள் ஏராளம்.

அவரது மனதிற்கு பிடித்த விஷயத்தை அவர் செய்து கொண்டிருக்கும் பொழுது உயிர் பிரிந்திருக்கிறது. யாருக்குக் கிடைக்கும் இத்தகைய மரணம்?

ஒரு தமிழன் மறைவிற்காக இன்று ஒட்டு மொத்த இந்தியாவே துக்கம் கொண்டுள்ளது என்பதை காணும் பொழுது அவரது வாழ்வின் அருமை தெரிகிறது. நாடுகடந்து, மதம் கடந்து மொழி கடந்து இன்று உலகம் அவர் மறைவில் கலங்கி நிற்கிறது.

இந்திய அரசாங்கத்தால் எத்தனையோ பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விருதுக்கே பெருமை தேடி தந்தவர் கலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.

அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது என்றோ  நாம் செய்த நற்செயல் பலன்.

கலாம் ஐயா உம்மால் நான் இந்தியன் என்று பெருமை கொள்கிறேன். உம்மால் நான் தமிழன் என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறேன். நீ கற்ற தமிழ் மொழியில் நானும் கல்வி பயின்றேன் என்று  இறுமாந்து நிற்கிறேன் என்று ஒவ்வொரு தமிழனும் உவகை கொள்கிறான்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

சந்தேகம் என்ன? கலாம் அவர்களைப் போன்று தேச நலத்தில் அக்கறைக் கொண்டு வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்தவர்கள் தாம்.

ஐயா உம்மை  காலன் கொண்டு சென்றிருக்கலாம்  இந்த உலகம் இருக்கும் வரை உமது புகழை, நீவிர் எங்கள் மனதில் விதைத்த நல்லெண்ணங்களை எந்த காலமும் கொண்டு செல்ல இயலாது.

ஒவ்வொரு உண்மையான இந்தியன் மனதிலும் நீங்கா இடம் பெற்று நிற்கிறீர்கள்.

RIP என்றால் REST IN PEACE என்று எண்ணியிருந்தோம். ஆனால் இன்றைய இந்தியன் உமது மறைவில் RETURN IF POSSIBLE என்று அழுகிறான்.




Monday 27 July 2015

டீ வித் முனியம்மா--------பார்ட் 33

டேய் மீச இன்னாடா கடியாண்ட யாரையும் காணோம், அல்லாம் எங்கே போய்கினாங்க?

அறிஞ்சிட்டில்லா முனிம்மே.............

டேய் இன்னாடா ஆளுங்க எங்கடான்னு கேட்டா ஆடுமாறி மே...மே.... ங்குற........உன் தமிய தூக்கி உன் கடை பாயிலருல போட..........நாடாரு.......லோகு.....செல்வம்.........பாய் அல்லாரும் எங்கடா போய்கினாங்க?

இன்னா முனிமா என்ன மறந்துகினே..............

ஐயோ பானலிங்கம் சாரு...........உன்னிய மறப்பேனா? கொண்டித்தோப்பே உன் பேரு சொல்லுது...........நீ கடியாண்ட ஓடியாருத கண்டுகினேன் அத்தான் உன்னிய சொல்லல........

அடே அப்புகுட்டா............லிங்கம் சாருக்கும்  எனிக்கும் ஸ்ட்ராங்கா டீ போடுறா.....

அது சரி முனிமே நாட்டுல இன்னா சேதி.............

டேய் இருடா.........அல்லாரும் வருவாங்க அப்பால நூசு சொல்றேன்....

ஐயே முனிம்மா இன்னா மீசைய ஒட்டிகினுகீர......

வாடா செல்வம் பழம் வியாவாரம் எப்படி போவுது? எங்கடா உன்னோட கூட்டாளிங்க.............

வந்துகினே கீறாங்க முனிம்மா...........

தோடா லோகு, நாடாரு,  பாய் கூட்டமா வராங்க.........

இன்னா முனிம்மா அம்மா செந்தில் பாலாஜிக்கு ஆப்பு வச்சிட்டா போல........

ஆமாண்டா  செல்வம் அந்தாளுதான் அம்மா ஊதுவத்தி உருட்ட சொல்ல அல்லா கோயிலாண்ட போயி காவடி எடுத்தவரு..........அவருக்கு ஆப்பு வச்சிட்டாங்க.

இன்னா காரணமாம் முனிம்மா.........

லிங்கம் சார் அதெல்லாம் நமக்கு தெரியாது........கமிஷன் கிமிஷன் கொடுக்கலையாங்காட்டியும்............

முனிம்மா இன்னா மருத்துவரு, ஐயா அல்லாரும் டாஸ்மாக்க மூடனும் சொல்லிகினு புது மேட்டரு கெளப்பறாங்க.........

ஆமா நாடார் சரக்குல லாவம் அல்லாரும் அடிச்சுப்பானுங்க ...........இப்போ எலிக்சன் வரசொல்ல ஓட்டுக்கு கும்மி அடிக்கிறாங்க..........

ஆனா அம்மா கடியா அல்லா மார்கெட்லையும்  தொறக்க சொல்லுது.........

பின்னா இன்னா பாய் இம்மா வர்சம் காசு பாத்துகிறாங்க...........அத்தே போய் மூடுவாங்களா? சொம்மா எலிக்ஸனுக்கு டபாய்க்கிறாங்க.........

முனிம்மா இன்னா அம்மா கேசு இன்னிக்கு சுப்ரீம் கோர்ட்டுல தொடங்கிட்டாங்க........

அது முடிஞ்சு போன கேசு லோகு.............சொம்மா த... அப்படி இப்படின்னு சொல்லி ஊத்தி மூடிடுவானுங்க..........அல்லாம் செய்ய வேண்டியது செஞ்சுகினாக............

இன்னா முனிமா நீ கடியாண்ட வராத சொல்ல எத்தினி விசயம் நடந்துகீது தெரியுமா..........

இன்னாடா சொல்லுறே செல்வம் அஞ்சலா உண்டாயிகீதா.........

த சொம்மா கலாய்க்காத முனிம்மா..........நான் மெட்ராசு மேட்டர சொன்னேன்.

ஆமாண்டா மெட்ரோ ரயிலு வுட்டுகிறாங்க...........நான் கூட ஒரு தபா கோயம்பேடுல ஏறி ஆலந்தூருல எறங்கிகினேன்......ரயிலு பொட்டி டேசன் அல்லாம் நல்லாத்தான் கீது............ஆனா நம்மாளுங்க சரக்கு வுட்டு எச்சி துப்பி நாரடிச்சிடுவானுங்க............

ஆமாம் முனிம்மா..........அதுவும் கரீட்டுதான்.

முனிம்மா நம்ம மெல்லிசை மன்னரு இறந்துட்டாரே...........ஊர்வலத்துக்கு போன...

ஆமாண்டா போயிருந்தன்...........அவரே அல்லாம் பாட்டு பாடிக்கினே தூக்கிட்டு போனாங்க.........இன்னா மூஸிக்கு போட்டுகிராறு..........அவரு பாட்ட மறக்க முடியுமா?

ஆமாம் முனிமா தமியுக்கும் அமுதென்று பேரு.........

டேய் செல்வம் உன் வாயில பினாயில கயுவி ஊத்த.............தமிழுக்கும் அமுதென்று பேர்.............நல்லாத்தான் தமிழுன்னு சொல்லேண்டா...........இன்னா பாட்டுடா அது அத்த காலம் புல்லா கேட்டுகினு  இருக்கலாம்............


சரி முனிம்மா பாகுபலி பாத்த............

ஆமாண்டா லோவு . சூப்பர எத்துகிறான்..........இன்னா துட்டு அல்லுதாமே..........சரிடா நான் கடியாண்ட போவனும்..........


Saturday 25 July 2015

ஏறக்குறைய அம்பேலாயிட்டேன்.............

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வலைப்பூ பக்கம் வரமுடியவில்லை........

காரணம் வேறொன்றுமில்லை...............

நேரமில்லை...............தொடர்ந்து வேலைப்பளு.........ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுத்துவிட்ட மகிழ்ச்சியில் டேமேஜரிடம் விடுமுறை கேட்ட பொழுது சரி விடுமுறையில் செல்.............வந்தவுடன் அறிக்கை கொடுத்தால் போதும் என்று சொன்ன வேளையில் ஆறுவாரம் விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு எஸ் ஆகலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது மகளின் மேற்படிப்புக்காக விசா, அட்மிஷன் என்று ஒரே அலைச்சல்.

அதை முடித்து நமது மொக்கையைத் தொடரலாம் என்றால் பெற்றோர்களின் உடல் நிலை மோசம் அடைந்ததால் வீடு மருத்துவமனை என்று கடந்த நான்கு வாரங்களாக ஒரே அலைச்சல்.

மருத்துவமனை அனுபவங்களை பதிவாக எழுதினால் இன்னும் இருபது பதிவுகள் தேத்தலாம்.

மருத்துவமனை அனுபவங்கலிருந்து கற்ற பாடம் என்ன என்றால் கத்துக்குட்டி மருத்துவர்கள் நமது பணத்திலும் உடம்பிலும் வேலை கற்றுக்கொள்கிறார்கள். இது மிகைப்படுத்தியது அல்ல. அது அப்போலோவோ இல்லை அதை விட சிறந்த மருத்துவ மனையோ எல்லா இடத்திலும் இதே கூத்துதான்.

சரி விஷயத்திற்கு வருவோம் .................

பதிவு எழுத எவ்வளவோ இருந்தன .................தவற விட்டு விட்டேன்.

அம்மா இடைத்தேர்தல் வெற்றி, தொடரும் அம்மாவின் உடல்நிலை குறித்த சந்தேகங்கள், ஐயாவின் இடைப்பட்ட கும்மி, மருத்துவரின் மகன் ப்ரமோஷன் என்று நிறைய விஷயங்கள்.

போதாகுறைக்கு தமிழ் திரையுலகம் வேறு மொக்கை மொண்ணை என்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

பதிவுலகே இதோ வந்து விட்டேன், இனி மொக்கைகள் தொடரும்...........கில்மா படங்களுடன்..........