Wednesday 29 July 2015

அப்துல் கலாம்- பாரத் ரத்னா விருதுக்கு அழகு சேர்த்தவர்

அப்துல் கலாம் அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்பதில்  எந்த வித ஐயாப்பாடும் இல்லை. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் ஒரு சாதாரண படகோட்டி குடும்பத்தில் பிறந்து உலகம் வியக்கும் விஞ்ஞானியாகவும், ராக்கெட் நாயகனாகவும் உயர்ந்து, சுதந்திர இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாக ஐந்தாண்டு காலம்  அந்த பதவிக்கு பெருமை சேர்த்தவர்..

அவர் ஜனாதிபதியாக இருந்த பொழுது டில்லி ராஷ்ட்ரபதி பவனை தினமும் மூவாயிரம் பொதுமக்கள் வந்து செல்லும் அழகிய பூங்காவாக மாற்றியவர். நூறு அறைகளைக் கொண்ட அந்த மாளிகையில் தனக்கென்று இரண்டு அறைகளை மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டு மற்றவைகளை கணினி கல்வி மையங்களாக மாற்றியவர். அவரது எளிமையான வாழ்க்கை இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு புரிந்திருக்க நியாயமில்லை. தன்னுடைய பதவி ஏற்பிற்கு வந்த தனது குடும்பத்தினரின் பயன செலவுகளை தனது செலவாக ஏற்றுக்கொண்டவர்.


அவர் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதிபவனை விட்டு  வெளியேறிய பொழுது தனது உடமைகளை இரண்டு பொட்டிகளில் அடைத்துக்கொண்டு எடுத்துச்சென்றார். தனது புத்தகப்பையை சந்தேகத்துடன் நோக்கிய ஊடகங்களிடம் அவை எனது சொந்த புத்தகங்கள் என்று அதே கண்களை நோக்கி புன்முறுவலுடம் பதிலளித்தார். தனது பதவிக்காலத்தில் வந்த பரிசுப்பொருட்களை அரசுக் கருவூலத்தில் சேர்க்க சொல்லிவிட்டார். அவருக்கு முன்பும் பின்பும் அந்த இடத்தில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை நாடு அறியும்.

தனது ஓய்வுக்காலத்தில் தனக்குப் பிடித்த ஆசிரியத்தொழிலை மிகவும் விருப்பத்துடன் செய்து கொண்டிருந்தார்.

அவரது மேற்கோள்கள் இளைஞர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தன.

"தூங்கும் பொழுது காண்பது கனவல்ல, நம்மை தூங்கவிடாது செய்வதே கனவு" என்றார்.

"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்".

இவை இரண்டும் அவரது மேற்கோள்களில் ஒரு சிலவே. இன்னும் அவர் சிந்திய முத்துக்கள் ஏராளம்.

அவரது மனதிற்கு பிடித்த விஷயத்தை அவர் செய்து கொண்டிருக்கும் பொழுது உயிர் பிரிந்திருக்கிறது. யாருக்குக் கிடைக்கும் இத்தகைய மரணம்?

ஒரு தமிழன் மறைவிற்காக இன்று ஒட்டு மொத்த இந்தியாவே துக்கம் கொண்டுள்ளது என்பதை காணும் பொழுது அவரது வாழ்வின் அருமை தெரிகிறது. நாடுகடந்து, மதம் கடந்து மொழி கடந்து இன்று உலகம் அவர் மறைவில் கலங்கி நிற்கிறது.

இந்திய அரசாங்கத்தால் எத்தனையோ பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விருதுக்கே பெருமை தேடி தந்தவர் கலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.

அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது என்றோ  நாம் செய்த நற்செயல் பலன்.

கலாம் ஐயா உம்மால் நான் இந்தியன் என்று பெருமை கொள்கிறேன். உம்மால் நான் தமிழன் என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறேன். நீ கற்ற தமிழ் மொழியில் நானும் கல்வி பயின்றேன் என்று  இறுமாந்து நிற்கிறேன் என்று ஒவ்வொரு தமிழனும் உவகை கொள்கிறான்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

சந்தேகம் என்ன? கலாம் அவர்களைப் போன்று தேச நலத்தில் அக்கறைக் கொண்டு வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்தவர்கள் தாம்.

ஐயா உம்மை  காலன் கொண்டு சென்றிருக்கலாம்  இந்த உலகம் இருக்கும் வரை உமது புகழை, நீவிர் எங்கள் மனதில் விதைத்த நல்லெண்ணங்களை எந்த காலமும் கொண்டு செல்ல இயலாது.

ஒவ்வொரு உண்மையான இந்தியன் மனதிலும் நீங்கா இடம் பெற்று நிற்கிறீர்கள்.

RIP என்றால் REST IN PEACE என்று எண்ணியிருந்தோம். ஆனால் இன்றைய இந்தியன் உமது மறைவில் RETURN IF POSSIBLE என்று அழுகிறான்.
Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Mahesh said...

theriyaatha pala thakavalakal kalam sir patri therinjukka mudinjathu
ungal intha pathivin vaayilaaka.திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

குல்ஜார் (அ) குல்ஷன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

'பரிவை' சே.குமார் said...

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.