Wednesday 26 November 2014

நல்லவன்

கே. வி. கே நல்லவன் தான் அவர்கள் வீட்டு சமையல் அறை தரையை கடப்பாரை வைத்து நோண்டும் வரை. நான் அவர்கள் வீட்டில் நுழைந்த பொழுது அவனது தங்கை உத்ரா "போடா போய் கே.வி.கேக்கு ஒரு கை கொடு" என்று சமையலறை நோக்கி கை நீட்டினாள். "என்னவோ உன் நண்பன் செய்வது ஒன்றும் பிடிக்கவில்லை" என்றாள். நான் சமையலறை நோக்கி சென்றபொழுது அவன் கடப்பாறையை கையில் கொடுத்து நீயும் நாலு குத்து குத்து என்றான். அப்படியே சீதாராமன், ரவி, சீனா, சுந்து எல்லோரையும் கூப்பிட்டு வா என்றான்.

நான் தயங்கிய பொழுது போடா சொன்ன வேலையை செய், அந்த பெருமாளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றான். பெருமாள் அவர்கள் வீட்டுகாரரின் இளைய மகன். இந்த இடத்தில் கே.வி.கேவிற்கும் பெருமாளுக்கு உள்ள கொடுக்கல் வாங்கலை சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் பெருமாள் தான் கே.வி.கே வீட்டு வாடகை வாங்க வருவான். அதை அவன் கொடுக்கும் விதத்தை நாங்கள் ரசித்ததில்லை. ஏதோ பிச்சைக்காரருக்கு போடுவது போல் முன்னூறு ரூபாயும் பத்து ரூபாவாக மாற்றி அவனது கையில் பிச்சைக்காரனுக்கு போடுவதுபோல் போடுவான்.

பெருமாளுக்கு அம்மா கிடையாது, அவனது சின்ன வயசிலேயே இறந்துவிட்டாள். அப்பா சமீபத்தில்தான் காலமானார். ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. தங்கை ஒரு மனநோயாளி. அடிக்கடி காட்டு கடத்தல் கத்துவாள். அந்த சத்தம் கேட்டால் எனக்கு உடம்பு என்னவோ செய்யும். அண்ணனும் கிட்டத்தட்ட அப்படித்தான், ஆனால் அவர் டை கட்டிக்கொண்டு சில நாட்கள் எங்கோ சென்றுவருவார். நாங்கள் அவருக்கு பைத்தியம் தெளிந்துவிட்டது அதனால்தான் ஆபிஸ் போகிறார் என்று நினைத்துக் கொண்டோம். அதற்கேற்றாற்போல் சில நாட்களில் அவருக்கு கல்யாணம் நடந்தது. அவர்கள் வீட்டிற்கு வந்த மருமகள் இப்பொழுது பொறுப்பை எடுத்துக்கொண்டாள். ஆனால் இதெல்லாம் சில காலம்தான். ஒரு நாள் இரவு அண்ணனுக்கு உடம்பு சரியில்லை என்று ஆம்புலன்ஸ் வரவைத்து பெருமாள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றான், பின்னர் பெருமாள்தான் திரும்பி வந்தான், அண்ணன் என்ன ஆனார் என்று தெரியவில்லை.  சில நாட்கள் கழித்து பெருமாளின் அண்ணியும் அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டாள்.

பெருமாள் தன் தங்கையையும் தானே கவனித்துக் கொண்டான். வேலை ஒன்றிற்கும் செல்வதாக தெரியவில்லை. எங்கள் யாருக்குமே பெருமாளை கண்டால் அவ்வளவாக பிடிப்பதில்லை, அதன் காரணம் இன்று வரை தெரியவில்லை. விளையாடும் பொழுது பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் மாடியிலிருந்து கத்துவான். அவர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்தால் இங்கெல்லாம் உட்காரக்கூடாது என்று விரட்டி விடுவான். முக்கியமாக எங்களைக் கண்டால் ஒரு இருகிய முகத்துடன் திட்டிக்கொண்டே செல்வான். இதைத் தவிர வலுவான காரணம் ஒன்றும் இல்லை.

 கே. வி. கேவும்  அவனை வெறுக்க வலுவான காரணம் இருப்பதாகத் தெரிய வில்லை. இருந்தாலும் பெருமாள் மாடியில் இறங்கி வந்தாலோ அல்லது வெளியே செல்லும்பொழுது அவர்கள் வீட்டை கதவை ஓங்கி சாத்துவான். எனக்கு என்னவோ அந்த பகை வீட்டுக்காரருக்கும் குடித்தனக்காரருக்கும் உள்ள பகையாகவே தோன்றியது. ஆனால் கே.வி.கே எங்கள் எல்லோருக்கும் நிறைய உதவிகள் செய்வான். அவன் எங்களை விட பத்து வயதுப் பெரியவன். நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது அவன் ஒரு மருந்துக் கம்பெனியில் பிரதிநிதியாக வேலை செய்துகொண்டிருந்தான். நண்பர்கள் வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் மருந்து சீட்டை அவனிடம் கொடுத்தால் போதும் இலவசமாக மருந்து கொடுப்பான். மேலும் எங்கள் கிரிக்கட் டீமில் உள்ள பொருட்கள் யாவும் அவன் வாங்கிக்கொடுத்தது. ஆதலால் அவன் எங்களுக்கு ரொம்ப நல்லவன்.

ஒரு நாள் பெருமாளுக்கும் அவனுக்கும் பெரிய வாக்குவாதம் அதன் காரணம் எங்களுக்கு தெரியவில்லை. முடிவில் பெருமாள் அவர்களை வீடு காலி செய்ய சொல்லிவிட்டான்.

அவர்களும் காலி செய்ய ஏற்பாடும் செய்துவிட்டார்கள். வீட்டு வாசலில் வண்டியில் சாமான்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவன் வீட்டாருக்கு உதவி செய்யலாம் என்று அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுதுதான் கே.வி. கே சமையலறை தரையை இடித்துக்கொண்டிருந்தான்.

சீக்கிரம் எல்லா சாமான்களை வண்டியில் ஏற்றுவதற்கு முன் ஹால், பெட்ரூம் தரைகளையும் நோண்டவேண்டும் போய் மற்றவர்களை கூட்டிவா என்றான்.

அவனது அம்மாவும் தங்கையும் வேணாண்டா போனாபோறது விடு என்றாலும் அவன் கேட்பதாக இல்லை.

அவன் என்னை நோக்கி "நீ போய்  அவர்களை கூப்பிட்டுக்கொண்டு வருகிறாயா இல்லையா" என்று கத்தினான்.

நான் தயங்க "போடா போ இனி என் மூஞ்சியில் முழிக்காதே நன்றி கெட்டவனே" என்று கூறிக்கொண்டு இன்னும் தரையை ஒங்கி கடப்பாரையால் குத்தினான்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

அது என்ன கோபம்? புரியவில்லை!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் said...

அந்த லூசு கூட சேர்ந்து இவனும் லூசாகி விட்டானா.....?

இதில் யார் நல்லவன் என்று தெரியவில்லை கும்மாச்சி அண்ணா....(

திண்டுக்கல் தனபாலன் said...

அச்சச்சோ...!

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

யார் லூசு என்று புரியவில்லை.

mage said...

அருமையான உண்மை கதை, ஏன் என்றால் சுந்து நடந்தது அனைத்தையும் சொன்னான் அப்புறமாக.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.