Monday 30 April 2018

கலைக்கப்படும் கூடுகள்

சமூக ஊடகங்களின் பெருக்கம் ஒருமைப்பாட்டிற்கு வைக்கும் வேட்டு. என்னதான் மூஞ்சி புத்தகம், வாட்சப், ட்விட்டர் போன்றவை இழந்த, மறந்த சுற்றங்களையும், புதிய நட்புக்களையும் உண்டாக்குவது போல தோற்றம் கொடுத்தாலும் உண்மையில் நட்புகள் நாட்பட நாட்பட தேவையில்லாத விவாதங்களால் முறிந்து போகின்றன. கருத்து சுதந்திரம் ஒரு வித பொருப்பின்மையோடு கரகம் ஆடுகிறது. என்ன புலம்பல் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.

சில வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் வேலை செய்த கம்பனி பெயரில் ஒரு வாட்சப் குழுமம் தொடங்கினேன். ஏனென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பு எங்களது இயந்திர வாழ்க்கையை அங்கே தொடங்கியவர்கள் இன்று காலப்போக்கில் அருப்புக்கோட்டையிலிருந்து அண்டார்டிக்கா வரை பரவிவிட்டோம். தூரங்கள் நம்மை பிரித்தாலும் மனதளவில் ஒன்று சேர்ந்திருப்போம் என்ற நப்பாசையில்!!! தொடங்கப்பட்ட குழுமம். ஆரம்பித்து சில வருடங்கள் மிகவும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.  குடும்ப நலன்களை பகிர்ந்து கொண்டோம், புதிய வேலை வாய்ப்புகளை குழுமத்திற்கு தெரிவித்தோம். ஏன்? அடுத்த சந்ததிகளை வாழ்க்கை பயணத்தில் ஒன்று சேரவிட்டோம், சிலர் காதலித்தார்கள், சிலர் கைப்பிடித்தார்கள். 

ஆனால் தற்பொழுது குழுமத்தில் அரசியல், பக்தி, பகுத்தறிவு என்ற கிருமிகள் அழைப்பில்லாமல் நுழைந்து மதம், ஜாதி, ஆரியம், திராவிடம் என்று நட்புக்கூட்டை கலைத்துக்கொண்டிருக்கிறது. எத்துனை முறை சம்பந்தப்பட்டவர்களிடம் விண்ணப்பம் வைத்தாலும் நிறுத்துவதாக இல்லை.

அனைவரையும் இணைப்பதற்கு ஒரே காரணம் கொண்டு இணைந்தோம், ஆனால் சில பிரிவினைவாதிகள் பல காரணங்களை வைத்து கூட்டை கலைத்துகொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது "சமூக ஊடங்களின்" பணி செவ்வனே நடக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 29 April 2018

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்

இந்த முறை தமிழ் நாடு விஜயம் மூன்று நாட்கள் மட்டுமே. ஆறு மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வருவதால் டேமஜரிடம் பத்து நாட்கள் விடுமுறை வேணும், ஊரில் வேலை இருக்கிறது என்றால், என்னது பத்து நாளா போயா போயி ஆணி பிடுங்கு என்று சிடுசிடுக்க, இல்லை ஐயா எல்லா ஆணியும் பிடுங்கிட்டேன் என்றதற்கு, பரவாயில்லை புதுசா ஆணிய அடிச்சு பிடுங்கு என்று கடுப்படித்துவிட்டார்.

பின்பு ஒரு வழியாக வார விடுப்புடன் ஒரு நாள் என்று ஜல்லியடித்து மூன்று நாட்களுக்கு சென்னை வந்து பத்து நாட்கள் வேலையை முடித்துவிடலாம் என்றால் எல்லாம் வேலையையும் முடிக்க முடியவில்லை. ஆனால் எந்த வேலைக்காக முக்கியமாக வந்தேனோ அதை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. அதில் பிரச்சினை என்ன வென்றால் சென்னை வந்தவுடன் திருக்கோயிலூர் பயணம். விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை எல்லாம் வெயில் தகிக்கிறது. நடு இரவில் முப்பத்திரண்டு டிகரியா? அப்பா முடியல. பாலைவன நாட்டிலேயே பகலில் இருபத்தைந்து டிக்ரீ தான் வெட்பம்.

அது சரி இருக்கிற மரங்கள் எல்லாவற்றையும் வெட்டியாகிவிட்டது. போகிற வழியில் பாலாறு, பெண்ணையாறு எல்லாம் வறண்டு கிடக்கிறதை பார்க்கும் பொழுது நாம் இயற்கையை எப்படி சிதைத்துகொண்டிருக்கிறோம் என்பது உறுத்துகிறது.

சமீபத்தில் திருச்சியின் உய்யகொண்டான் வாய்க்கால் மற்றுமொரு கூவமாக மாறிக்கொண்டிருப்பதை இணையத்தில் படிக்க நேர்ந்தது. மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.

பாட்டில்தான் " என்ன வளம் இந்த திருநாட்டில்" என்று பாடிக்கொண்டிருக்கிறோம்.

அடுத்த தலைமுறைக்கு நாம் துரோகம் செய்துகொண்டிருக்கிறோம். இது எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 24 April 2018

வன்கொடுமைகளும் ஊடகங்களும்

இப்பொழுதெல்லாம் டி.வீ பெட்டி சீண்டுவாரற்று கிடக்கிறது. வீட்டில் ரிமோட் சண்டை இல்லை. பொதுவாகவே எங்களுக்கு இந்த சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லை. சிலசமயம் இரவு நேரங்களில் உறங்கப்போவதற்கு முன் காமெடி சேனல் ஒரு பதினைந்து நிமிடங்கள் பார்போம். மற்றபடி செய்திகள் பக்கம் செல்வதே இல்லை. முன்பெல்லாம் காலையில் ஒரு செய்தி, மாலையில் ஒரு செய்தி என்று வழக்கமிருந்தது. இப்பொழுது அது வழக்கொழிந்துவிட்டது. காரணம் ஊரறிந்தது. இந்த விவாதங்கள் நடக்கும் பக்கம் செல்வதே இல்லை, எப்பொழுதாவது தவறுதலாக ரிமோட்டில் கை பட்டு விவாதங்கள் மீது மோதினால் மனைவி முன் "எஃப்" சேனல்😍 வந்த கதையாக மனசு பதைபதைக்கும். சரி விஷயத்திற்கு வருவோம்.

சரி டி.வீ வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தால் வாட்சப்பிலும், மூஞ்சி புத்தகங்களிலும் கேள்வி கேட்காமல்  வன்புணர்வு செய்திகளும், அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களின் உளறல்களும் நம்மிடம் வந்து குவிகின்றன.

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, சிறுமியிடம் கூட்டு வன்புணர்வு, சிறுமி கற்பழித்து கொலை என்று செய்திகள் ஜாதி நிறம் பூசப்பட்டு நம்மை வந்தடைகின்றன. இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தனிமனித உரிமையோ அல்லது அவர்களது குடும்பத்தின் உரிமையையோ பற்றி ஊடங்கங்களும் சரி, இணையப் போராளிகளும் சரி துளியும் கவலைப்படுவதில்லை.

பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளோ இல்லை கொலை வழக்குகளோ ஊடகங்களால் விவாதிக்கப்பட்டு "Media Trial"  தீர்ப்பும் வழங்கப்பட்டு விடுகிறது. வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியே தான் .........தக்காளி தூக்கில் போடணும் என்று ஆளாளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். பிறகு மூன்று பேர் அமர்வு பெஞ்ச் தீர்ப்பு சொன்னாலும் காசு வாங்கிட்டாகப்பா என்று ஏற்கனவே முடிவு செய்த தீர்ப்புக்கு வால் பிடிக்கிறார்கள். இதற்கு காரணம் நமது நீதித்துறைமேல் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மையே.

அதுவும் சமீப காலத்தில் வரும் செய்திகள் அடுத்த பொது தேர்தலுக்கான அச்சாரம் போல் தோன்றுகிறது. கொள்கைரீதியாக விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு திறன் இல்லை, ஆதலால் நாளொருமேனியும் பொழுதொரு கற்பழிப்புமாக செய்திகள் வந்து தெறிக்கின்றன. இதில் மட்டும் கட்சி பாகுபாடின்றி ஒரே கொள்கை குறிக்கோளோடு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியா வல்லரசாகும் என்ற நம்பிக்கைக்கு எண்ணெய் ஊற்றி அணையாமல் பாதுகாக்கிறார்கள்.

வாழ்க இந்தியா, வாழ்க ஜனநாயகம்.


Follow kummachi on Twitter

Post Comment

Monday 23 April 2018

பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)

நமது ரத்தத்தின் ரத்தங்களுக்கும், உடன் பிறப்புகளுக்கும் "பழமொழிகளின்" மீது அப்படி என்ன வெறுப்போ தெரியவில்லை, ஆளாளுக்கு பழமொழி பேசுகிறேன் என்று மேடையில் பழமொழிகளை புது மொழிகளாக அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மீன்வளத்துறை அமைச்சர் உதிர்த்த புது மொழி இது.........எதிர் கட்சி செயல கடுப்பேத்த.............

கடல் வத்தி கருவாடு சாப்பிடலாம் எனக் காத்திருந்து குடல் வெந்து செத்ததாம் கொக்கு..........

அதற்கு செயல் பதிலடியாம் இது..............

மீன் கருவாடு ஆகலாம், கருவாடு மீன் ஆகாது........

மேலும் செயலின் சமீபத்தில் உதிர்த்த புதுமொழிகள் நாம் அறிந்ததே...

பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் உருண்டைனுச்சாம்.

பூனை மேல் மதில்.............

இது போன்று நிறைய நம்மிடம் கைவசம் உள்ளது..........மேலும் நாடாளுமன்ற தேர்தல் நேரம் நெருங்கி வருவதால் மேடைப்பேச்சில் உபயோகிக்க நம்மிடம் நிறைய பயமொயி..........சீ பழமொழிகள், மிகவும் சல்லிசாக கிடைக்கும்........அதற்கான டீசர்தான் இது .......

அஞ்சிலே வளையாதது அம்பதில் புட்டுக்கும்.
அப்பன் அருமை அறிவாலயத்தில் தெரியும்
கன்னம் இட்டவர் வீட்டில் அன்னம் இடலாமா?
ஆரியக்கூத்தாடினாலும் திராவிடத்தில் கண்ணாயிரு
ஆற்றிலிருந்து எடுத்தாலும் அளவில்லாமல் (மணல் கொள்ளை)எடு
பூனைக்கு ஒரு காலம் வந்தா ஆணைக்கு ஒரும் காலம் வரும்.
பயமறிந்தது இளம் கன்று ஆகாது.
இறைத்த கேணி ஊரும், வறுத்த கருவாடு நாறும்.
அம்பு இருக்க எய்தவனை நோவதேன்
நக்குற மாட்ட மேயற மாடு கெடுத்துச்சாம்
ஒரு சோற்று பானைக்கு ஒரு பானை பதம்
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராசா.......அகப்பட்டவளுக்கு அஷ்டமத்திலே கனி.
கடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.
கட்டினவனுக்கு  ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடு
கற்றது உலகளவு கல்லாதது கையளவு
குடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்
சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.
குஞ்சு மிதித்து கோழி கறியாகுமா?
வெட்டி வேலை!! நித்திரைக்கு கேடு.
பூனைக்குப் பிறந்தது புலியாகுமா?


மேலும் இது போல மேடைக்கு பேச்சிற்கு எடுத்து விட பயமொயிகள் நிறைய உண்டு...........தேவைக்கு அணுகவும்.

கொருக்குப் பேட்டை கும்மாச்சி
பழைய எண் 13,  புதிய எண் 13,
டாஸ்மாக் 13ம் நெம்பர் கடை மிக மிக அருகில்
கொலைகாரன் தெரு
வீச்சரிவா குறுக்கு சந்து.
கொருக்குப் பேட்டை.

பார்வை நேரம்: காலை பத்து மணி முதல் மாலை கண்டிப்பாக ஆறுமணி வரை. பின்னர் டாஸ்மாக் மூடியபின்...........விடிவிடிய......😇

பின்குறிப்பு: கூட்டம் அதிகமாயிருப்பின் அஞ்சலையிடம்😘 டோக்கன் பெற்றுக்கொள்ளவும்.


Follow kummachi on Twitter

Post Comment

Sunday 22 April 2018

கலக்கல் காக்டெயில்-183

கைய பிடிச்சு இழுத்தியா?

தமிழ் நாட்டில் இப்பொழுது போராட்டங்களுக்கு குறைவில்லை. எதுக்கு? யார் யார் போராடுவது? என்று வகை தொகை இல்லாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் உண்மையான போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இது வேண்டுமென்றே திசை திருப்பப்படுகிறதா? இல்லை இந்த அரைகுறை அறிவிலிகளின் அறியாமையால் நடக்கின்றதா என்பது புரியவில்லை. ஸ்டெர்லைட்டும், காவிரி மேலாண்மை வாரியமும் "ப்ரேகிங் நியூஸ்" என்று ஒரு சொத்தை இசைக்கோர்வையுடன் வரும்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் கையபிடிச்சி இழுத்தியா? கன்னத்த தடவினியா? அவன் கூட படுத்தியா? எவன் கூட படுத்த? என்று செய்திகள் விற்கப்படுகிறது. புது புதிதாக போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சமீபத்தில் ஊடகவியலாளர்களின் கற்பை ஏலம்விட்டவர் வீட்டில் "கல்லெறியும் போராட்டம்"😑 என்று அறிவித்து கல்லெறிந்தனர் இப்படியே போனால் இனி வரும் போராட்ட அறிவிப்புகள் இப்படியும் இருக்கலாம்.

கொலை செய்யும் போராட்டம்😆
கற்பழிப்பு போராட்டம்😋😏
கத்தி குத்து போராட்டம்😜
வெடி வீசும் போராட்டம்.😕

நடத்துங்கடா?

வேலை நிறுத்தம்

சமீபத்தில் நடந்த கூத்தாடிகளின் வேலை நிறுத்தம்தான் எனக்கு தெரிந்து யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு வேலை நிறுத்தம். பொதுமக்கள் ஐயோ புதுப் படம் ஏதும் வரவில்லையே என்ன செய்வது என்று தவித்த மாதிரி தெரியவில்லை. மாறாக தக்காளி தொல்லை விட்டுதுடா என்று நிம்மதியாக இருந்தார்கள். ஏதோ தியேட்டர்காரர்களும், க்யூப் வைத்தவனுக்கும் இருந்த வாய்க்கா வரப்பு பிரச்சினை தீர்ந்ததா என்று தெரியவில்லை, ஆனால் ஹான்... ஹான்.... கூட்டம் கூடாத..பஞ்சயாத்து முடிஞ்சு போச்சு போ..போ என்று துண்டை உதறி துரத்திவிட்டு இப்பொழுது படத்திற்கேற்றார் போல் இனி டிக்கட் வசூலிக்கப்படும் என்று ஏதோ சொல்லிக்கொண்டு அவர்களே அழையா விருந்தாளியாக வந்துவிட்டார்கள்.

ஐ.பி.எல் நடந்தால் ஏற்கனவே உதாசீனப்படுத்தப்பட்ட தொழில் நாறி விடுமென்று இந்த காவிரி போராட்டத்தை சேப்பாக்கம் திருப்பிவிட்டதன் பெரும் பங்கு "ஏன் இனிய தமிழ் மக்களே" மற்றும் "டம்ளர் சாமான்" அவர்களையே சேரும்.

ரசித்த கவிதை 

நீர்ப்பிடிப்பு நிலம் 

நகரமென எழுந்துகொண்டிருக்கிறது 
முன்பொரு நாளின் நீர்ப்பிடிப்பு நிலம்
புதிய வீட்டை  சிரத்தையோடு வடிவமைத்துக்கொண்டிருக்கும் 
பொறியாளனின் நனவில் 
எழுந்து சரிகிறது அவனது கனவு வீடு
சாந்து சுமக்கும் சித்தாள் பெண்
முதல் சாமத்தில் அரங்கேறிய இரண்டாம் கலவியை நினைந்து தானே நகைக்கிறாள் 
கட்டடக் காவலாளி இரவில் ‘தேன்கிண்ணம்’ கேட்கும்பொருட்டு பகலில் பண்டுவம் பார்க்கிறான் பண்பலைப் பெட்டியை
வேறிடம்  கிட்டாத இளஞ்சோடிகள் 
பூசப்படாத வீட்டுக்குள் காதலிக்கச் செல்கிறார்கள்
தூக்கச்சடவில் கிடாயை நோக்கிக் கம்பெறிகிறான் 
தூரத்தில் ஆடுமேய்ப்பவன்  
திருஷ்டியாய் நிற்கும் ஒற்றைப் பனையில் தொங்குகிறது தூரதேசம் போய்விட்ட தூக்கணாங்குருவியின் வீடு
சூரிய தீபம் சோர்கிற பொழுதில்
மகிழுந்துகளில் வந்திறங்கி
குத்துக்கற்களின் குறுக்கும்மறுக்குமாய் நின்று
நீளம் அகலம்  பட்டா சிட்டா
அடங்கலென நீட்டிமுழக்குவார்கள் 
யானைகட்டிப் போரடித்த மூதாதையரின்
திணை திரிந்த வழித்தோன்றல்கள்.

- ஸ்ரீதர்பாரதி   

சினிமா

தமிழ்நாட்டில் தான் போராட்டங்களுக்கு குறைவில்லை என்றால் ஆந்திராவிலும் அரைநிர்வாணப் போராட்டம்  "Casting couch" க்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு பொது இடத்தில் "டாப்பை" கழற்றி தெருவில் உட்கார்ந்துவிட்டார்.  இந்தம்மா ஸ்ரீ லீக்ஸ்  என்று  அப்பப்போ கில்மா படங்களை லீக்கிக்கொண்டு, ஆந்திர திரைத்துறையை ஆட்டிப்படைக்கும் மூன்று குடும்ப லீலைகளை துகிலுரிக்கிறேன் என்று  நாளுக்கு நாள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. அது சரி அங்கேயும் வாய்க்கா வரப்பு பிரச்சினை போல.............
 சீக்கிரம் அந்த மூன்று குடும்பங்களை அவிழ்த்துவிடுங்க சட்டுபுட்டுன்னு பார்த்துட்டு நாங்க போகணும், நெறைய வேலை இருக்கில்ல!!!

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 19 April 2018

தமிழா தமிழா.................

தமிழன் எப்போதும் உணர்ச்சிகளுக்கு அடிமை. அதில் என்ன பிரச்சினைனா எதுக்குப் பொங்கணும் எதுக்கு அடங்கனும்னு தெரியாத ஆட்டுமந்தைக் கூட்டம்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் தடை செய்யக்கோரி உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கும் பொழுது அதில் உள்ளே பூந்து அந்தப் போராட்டத்தை காவிரி பக்கமா திசை திருப்பினானுங்க கூத்தாடி கும்பலும், கமிஷன் வாங்கிய அரசியல் வாதிகளும்.

இப்போ ஸ்டெர்லைட் காரன் "மச்சி எங்கிட்ட காசு வாங்கின பிச்சைக்கார நாய்ங்களா ரொம்ப கூவினிங்க இருக்குடி உங்களுக்குன்னு" குரல் விடப்போக போராட்டம் பக்கம் போனவனுங்க எல்லாம் பம்மிக்கிட்டு காவிரி பக்கம் ஒதுங்கிட்டானுங்க.😵

சரி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கனுமுன்னு, போணியாகாத, படம் வராத டைரடக்கர்கள்😥 போராடுறேன் பேர்வழின்னு அதை ஐ.பி. எல் பக்கமா திசைதிருப்பி சேப்பாக்கம் வழியா காவா வெட்டி பக்கிங்காம் காவல கொண்டு உட்டானுங்க. இடையே குறுக்கே டேய் ரஜினி உன்னை நான்தான் வளர்த்தேன்........கன்னட வந்தேரின்னு அவருக்கு சேரை தெளித்து தங்களது வயிற்றெரிச்சலை தனித்துக்கொண்டார்கள். இப்போ வயிற்றில் நெருப்பை கட்டிக்கொள்ளாம டப்பா படங்கள ரிலீஸ் பண்ணலாம்.😂

அப்புறம் கொஞ்ச நாளைக்கு அசீபா பக்கம் திருப்பி விடப்பட்டு தடுமாறி நின்றது.

அப்புறமாக வந்தாங்க நிர்மலாதேவி😣.........கணக்குப்பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டியவங்க கணக்கு பண்ண சொல்லப்போக போராட்டம் அப்படிக்கா கிளுகிளு மேட்டர் பக்கம் திரும்பி கிறங்கி போச்சு.


அப்புறம் நம்ம ஆட்டுதாடி ஐயோ "நான் அவனில்லை, நான் அவனில்லை"ன்னு கன்னத்தில என்னடி காயம்னு தொட்டு பார்க்க "ஐயோ பத்திகிச்சு"😜.

பிறகு "எச்சை" முறைதவறிய குழந்தை என்று உளறப்போக யாருகிட்ட தோ அவன் முறைதவறியவன், இதோ இவன், ராமன், கிஸ்ணன் அல்லாரும் அதேதான், எங்கிட்ட ஆதாரம் இருக்குதுன்னு இதிகாசங்கள நோண்டிட்டு இருக்கானுங்க.


மொத்தத்தில் காவிரிமேலான்மை வாரியம் அமைக்க பொங்கிய தமிழ்நாட்டை ஐ.பி.எல் விளையாட்டு பக்கம் மடைமாற்றி அங்கிருந்து நிர்மலாதேவி ஊடாக கவர்னர் மளிகை பக்கம் பாய்ந்தோட அதை லாவகமாக எச்சையால் கோபாலபுரம் திருப்பிவிடப்பட்டு இப்பொழுது பகுத்தறிவாதிகளால் இதிகாசங்களில் இழிபிறப்பு ஆராய்ச்சியில் போய் நிற்கிறது.

தமிழா தன்மானத் தமிழா................வீழ்வது நம் மானமாக இருப்பினும் வாழ்வது நாமாக இருக்க வேண்டும்............ஐயோ ஐயோ...




Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 11 April 2018

நடந்தாய் வாழி காவேரி.

உழவர் ஓதை, மதகு ஓதை
மடை நீர் ஓதை தன் பதம் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி

விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி

மருங்கு வண்டு சிறந்த ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழுத்தெல்கி
நடந்தாய் வாழி காவேரி

என்று இளங்கோவடிகள் காவிரி பாயும் அழகை வர்ணிக்கிறார். "கா" என்றால் சோலை, சோலைகளினூடே விரிந்து பாய்வதால் "காவிரி" என்று பெயர் வந்ததாம். ஆனால் சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் காவேரி என்று வருவது கவிதை இலக்கண விதிகளின் படியே எனினும், காவிரி, காவேரி இரண்டும் சரியே.

இதெல்லாம் பேசவோ படிக்கவோ அந்த காவிரி நதி போலவே இனிக்கிறது. ஆனால் காலம் செய்த கோலத்தில் உழவர் ஓதை நின்று போக அவ்வப்பொழுது மதகு ஓதை,  மடை நீர் ஓதை ஹொகனேக்கல்லில் கேட்டால் மேட்டூர் வரை நடந்தாய் வாழிதான். அதற்கு பிறகு "மாண்புமிகுக்கள்" தயவில் ஆடிப்பெருக்கு முன்போ இல்லை சம்பா, குருவை, தாளடி என்று எதாவது ஒரு போகத்திற்கு அணையின் கையிருப்பை வைத்து திறந்து விடப்பட்டால் பின்பு வீராணம் வரை ஊர்ந்தாய் வாழிதான்.

சரி விஷயாத்திற்கு வருவோம் மேற்சொன்ன யாவும் ஏதோ முப்பது வருடங்கள் முன்பு வரை,  இருந்த கதை. கரிகாலன் உபயத்தில் தஞ்சை வளமிக்க நாடாக இருந்த காலம். அதை வைத்து

வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்.

என்று இருந்த காலம் இப்பொழுது அதே காவேரி தண்ணிக்காக சொந்த சகோதரர்களே அடித்துக்கொள்ளும் காலம் இது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வாதி பிரதிவாதி இருவருமே சரியாக வாசித்தார்களா? இல்லை அவரவர் சுயநலத்திற்காக தங்கள் விருப்பபடி புரிந்துகொண்டார்களா? தெரியவில்லை. ஆனால் இதை வைத்து தற்பொழுது தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் எத்தனை பிரிவுகள் உள்ளன என்று உலகத்திற்கு படம் பிடித்து காட்டுகிறது.


இதே மக்கள் பிரச்சினைக்காக மற்ற மாநிலங்கள் போராடும் பொழுது அவர்களது குரல் ஒரே குரலாக ஒலிக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாளில் போராட்டம் பந்த் என அறிவித்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை வாழவிடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள். பந்த் என்பது நம் நாட்டில் "வேலை வெட்டி இல்லாதவர்கள் தெருவுக்கு வந்து வேலைக்கு போறவங்களையும் தெரு வியாபாரிகளையும் வேலையில்லாம செய்வதுதான்".  நேற்று ஒரு கட்சி போராட்டம் இன்னிக்கு ஒரு கட்சி பொது வேலை நிறுத்தம், நாளைக்கு உண்ணா விரதம் பின்னர் ரயில் மறியல் என்று தினமும் மக்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் நேற்று அண்ணா சாலையில் நடந்த போராட்டம் நமக்கு நாமே போராட்டம்? அது என்ன நமக்கு நாமே போராட்டம் என்றால் நமக்கு நாமே அடித்துகொள்வது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சா !!!நீதிமன்றத்துல போய் அடிங்க, இல்ல தண்ணி திறந்துவுடமாட்டோம்னு சொல்ற கர்நாடகாவில போய் அடிங்க. அதுவும் இல்லையா உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்து ஸ்கீமோ அல்லது மேலாண்மை வாரியமோ அமைக்க இரண்டு மாத கால அவகாசம் அளித்த போது தீர்ப்பை உடப்பில் போட்டு கள்ள உறக்கம் உறங்கிய  ராஜதந்திரிகளையோ  இல்லை இதை கண்டும் காணாமல் இருக்கும் ராஜ அடிமைகளையோ அடிங்க, அதென்ன நம்ம ஆளுங்களையே அடிக்கிறது.

இன்னிக்கி ஒரு கூட்டம் பந்த் என்ற பெயரில் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ரயில்மீது ஏறி மறியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ரயில் மீது ஏறி மறியல் செய்துகொண்டிருக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து ஒருவர் நடைமேடையில் தூக்கி எறியப்படும் நேரடி காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியினரும், அமைப்பினரும் ஒவ்வொரு விதமாக போராட்டங்களையும் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை தாக்குவதும், மற்றபடி ஒரே மேடையில் போராடிக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் மற்றுமொருவரை இழித்துப் பேசுவதும் நமக்குள் இருக்கும் ஒற்றுமை இன்மையை உலகிற்கு பறை சாற்றுகிறது.

காவிரி மேலாண்மைக்காக நாம் உலகின் கவனத்தை ஈர்க்கிறோமோ இல்லையோ, "ஆயிரம் உண்டு இங்கு பிரிவு" என்று நமது பலவீனத்தை எதிரிக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

இந்த தான்தோன்றி அரசியல்வாதிகளும்,  கட்சிகளும் இருக்கும் வரை இனி காவிரி உழவர் ஒதை, மதகு ஒதை, விழவர் ஒதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி என்று பாயமாட்டாள்.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 10 April 2018

சீமான் பயோ(யங்கர)டேட்டா


இயற்பெயர்-------------------------------------சீமான்
பதவி-----------------------------------------------டம்ளர் ஒருங்கிணைப்பாளர்
கட்சியின் பெயர்-----------------------------நாம் தமிழர்(டம்ளர்) கட்சி
தற்போதைய தொழில்--------------------வந்தேறி, வடுகவந்தேறி, திராவிடன்,                                                                                       தமிழன் சான்றிதழ்கள் வழங்குவது
துறந்த தொழில்-------------------------------சினிமா
நிரந்தர தொழில்------------------------------ஈழ வியாபாரம்
சமீபத்திய சாதனை-------------------------அவிச்சு வெச்ச ஆமக்குஞ்சு???
நிரந்தர சாதனை-----------------------------பிரபாகரனை தமிழனுக்கு அறிமுகம்                                                                                      செய்தது !!!!!!
நண்பர்கள்---------------------------------------டம்ளர் பாய்ஸ்
எதிரிகள்------------------------------------------சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
சமீபத்திய எரிச்சல்--------------------------வை.கோ.
நிரந்தர எரிச்சல்------------------------------தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
பலம்------------------------------------------------முட்டி மடக்கி மைக் உடைப்பது
பலவீனம்-----------------------------------------நாக்கில் சனி
மறந்தது-------------------------------------------விஜயலட்சுமி
மறக்காதது--------------------------------------முப்பாட்டன் முருகன்

Follow kummachi on Twitter

Post Comment

Monday 9 April 2018

கலக்கல் காக்டெயில்-182

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை

மேற்படி பேரவை இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சத்தியராஜ், அமீர், செல்வமணி மற்றும் கவுதமன் அவர்களால் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் கொள்கைகள் கோட்பாடுகள் என்னவென்று தெரியாது, ஆனால் இப்பொழுதிற்கு காவிரி நீர் கிடைக்கும்வரை ஐ.பி.எல் போட்டியை நடக்கவிடமாட்டோம், மற்றும் கத்திபாராவை மூடியதுபோல் கவர்னர் மாளிகையை மூடுவோம், தேவைப்பட்டால் தலைமை செயலகத்திற்கு பூட்டுப்போடுவோம், மற்றும் சூரப்பாவை திரும்ப பெறவேண்டும். இயக்குனர் கவுதமன் எங்களை காப்பாற்றிக்கொள்ள ஆயுதம் ஏந்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளார். இதெல்லாம் சரி இதற்கப்புறம் பேசிய சத்தியராஜ் "தமிழன் உணர்வு இல்லாத யாரும் இங்கிருக்காதீர்கள் வெளியேறுங்கள்" என்று கூவினார்.

இவருடைய காண்டு யார்மீது, எதற்காக இப்படி பேசுகிறார்? தன்மீதும் வெளிச்சம் விழவேண்டும் என்று கூறுகிறார் என்பது போன்றவை எல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தமிழ் உணர்வு தேடி ஆந்திரா நடிகையை மணந்த இயக்குனரும், தமிழ் உணர்வு தேடிக்களைத்து என் இனிய மலையாள மங்கையே என்று மகனுக்கு மணமுடித்தவரும் அருகில் நின்று தலையாட்டுவதுதான் ஆகச்சிறந்த முரண்.

காவிரி பாயும் கன்னித்தமிழ்நாடு

இது ஒரு பழைய தமிழ் பாடல் வரி, காவிரி பாயும் கண்ணிதமிழ்நாடு கலைகளுக்கு எல்லாம் தாய் வீடு. மரகதம் திரைப்படத்தில் டி. எம். சௌந்திரராஜன் அவர்கள் பாடிய பாட்டு.

அப்பொழுது காவிரியில் கர்நாடகம்  நிறைய தடுப்பணைகள் கட்டாத காலமாக இருக்க வேண்டும். பின்னர் வந்த உபரி தடுப்பனைகளாலும் கர்நாடக மாநிலம் விவசாய நிலங்களை பெருக்கியதாலும் காவிரி தமிழ் நாட்டில் பாய்வதற்கு யோசித்தாள். பின்னர் படிப்படியாக அவளை நீதிமன்றங்களை ஏலம் விட்டு அலைக்கழித்ததால் இப்பொழுது காட்சிப்பொருளாகி கர்நாடகத்திலேயே சிறைபட்டுவிட்டாள்.
எப்பொழுதாவது தென்மேற்கு பருவகாற்று தப்பித்தவறி திசைமாறி வீசி அபரிமிதமாக மழை பொழிந்தால், கர்நாடக அனைக்கதவுகளை திறந்து மேட்டூர் வந்து சிறைபடுவாள். அதற்கு மேலும் வரவேண்டும் என்றால் முதலமைச்சர் ஆணைப்படி முன்பெல்லாம் விடுவிக்கப்படுவாள்.

இப்பொழுது எதற்கு இதயெல்லாம்  பேசிக்கொண்டு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.........இனி அவள் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்க வேண்டும் என்றால் முதலில் ஸ்கீம் தயாராக வேண்டும், அப்படினா என்ன? அதானே> இருங்கப்பா இப்போதான் மத்திய அரசே உச்சா நீதிமன்றத்திடம் அர்த்தம் கேட்டிருக்கிறது. இனி உச்சா பதில் சொல்லி பிறகு ஸ்கீம் வந்து அடப்போங்கய்யா?

அப்போ காவிரி மேலாண்மை வாரியம்?

அது ஒட்டு பிச்சைக்கு சொன்ன வார்த்தை. யார் வேண்டுமென்றாலும் உபயோகித்து கொள்ளலாம்? சரி ஸ்கீமிற்கும், மேலாண்மை வாரியத்திற்கும்  என்ன வித்தியாசம் என்று கேட்டீர்களேயானால்.

மத்திய அரசும், கர்நாடக அரசும் இந்த வழக்கில் வாதாடிய விதத்திற்கும், தமிழகம் இதை எதிர்கொண்ட விதத்திற்கும் உள்ள வித்தியாசம் தான். ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நீரின் அளவை விட மேலும் குறைத்து இந்தப்பா இவளவுதான் போ..........இதுக்குமேல பேசக்கூடாது. என்னாது மேலாண்மை வாரியமா? போப்பா!! என்று முடித்துவிட்டார்கள்.

நானே கிறுக்கிய கவிதை 


காவிரி "யு டர்ன்" அடிக்கவேண்டும் 
கர்நாடக மக்கள் வேண்டுதல்.
கபினி கரை புரளும் பொழுது,
காவிரி தமிழ் நோக்கிப் பாயும்,
கண்துடைப்பு உண்ணாவிரதம்,
கதாநாயகர்கள் மேடைச்சண்டை,
கடந்த வருடம் போல் இந்த வருடம்,
கடற்கரையில் கிடையாது,
கவலையில் தொலைக்காட்சிகள்,
அரசியல் நாடக அரங்கேற்றம், 
அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்.

கவிஞர் கும்மாச்சி, ஜூலை 25, 2009.


சினிமா 

இத்தனை நாட்கள் "ஹீரோ டாக்கிஸ்" புண்ணியத்தில் மாத மாதம் ஏழு டாலர் கொடுத்து நல்ல பதிப்பில் (நல்ல படங்கள் அல்ல) படங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம், இப்பொழுது அவர்கள் கடையை கட்டுப்படி ஆகவில்லை என்று இழுத்து மூடிவிட்டார்கள். அதோடு நில்லாமல் போகிற போக்கில் "யப்" டிவியுடன் கனெக்ஷன் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். அங்கு வாடகை நான்கு டாலராம் ஆனால் நிறைய தமிழ் படங்கள் தென்படவில்லை. சமீபத்தில் "ரூபாய்" என்று ஒரு படம் பார்த்தோம், படம் நன்றாகவே இருந்தது. என்ன இந்த படம் தியேட்டரை அடைந்திருக்குமா தெரியவில்லை. அந்தப்படத்தில் வந்த கதாநாயகி மிகவும் இயல்பாக நடித்திருந்தார், அடுத்தவீட்டுப் பெண் போல தோன்றியது எனக்கு மட்டும்தானா?







Follow kummachi on Twitter

Post Comment

Sunday 8 April 2018

காவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிகளும்

வலைஞர்களுக்கு வணக்கம்.

வெகுநாட்கள் கழித்து வலைப்பூவை தூசி தட்டி துவக்குகிறேன். சமீப காலமாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை. மற்றும் நாட்டு நடப்பு என்னத்த எழுதி என்னத்த கிழிக்கப்போற என்று செவிட்டில் அறைந்து கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் அனுமதிக்கப்பட்ட பொழுது தொடங்கிய போராட்டம் இப்பொழுது வலுபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களின் பயங்களும், கவலைகளும் நியாயமானது, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மாசுக்கட்டுப்பாடு வழிமுறைகளை நடைமுறை படுத்தாமல் இப்பொழுது விரிவாக்கம் செய்யப்போவதை நினைத்தால் அனைவருக்குமே சந்தேகம் வருகிறது. இது எந்த அரசுக்காலத்தில் முதலில் அனுமதிக்கப்பட்டது, பின்னர் கூடுதலான மாசுக்கட்டுப்பட்டு விதிமுறைகளுடன் மறுபடியும் உற்பத்தி தொடங்க அனுமதிக்கப்பட்டது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் மாசுக்கட்டுபாட்டு விதிமுறைகளின்படி தான் ஆலை இயங்குகிறதா என்பதை உறுதி செய்யவோ இல்லை பையை ரொப்பி அனுமதித்தார்களோ என்பது நாமறியோம். இந்த விவகாரம் முதலில் நீதிமன்ற படியேறிய பொழுது யார் தொழிற்சாலை நிர்வாக தரப்பில் ஆஜரானார்கள் என்று ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தால் கண்ணைக்கட்டும். தூத்துக்குடியில் மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் பொழுது, அரசியல் அல்லைக்ககளால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.  உச்சா!!! நீதிமன்ற தீர்ப்பு வந்து, ஸ்கீம்??? அமைக்க வலியுறுத்தப்பட்டு கெடு வைத்த நாள் காலாவதியாகி போன பின் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, லெப்டு கட்சி, ரைட்டு கட்சி என்று எல்லா கட்சிகளுக்கும் ஞானம் பிறக்கிறது. 


உடனே எல்லா கட்சிகளும் ஒரு பத்து பேருந்துகளை உடைத்து, தொடர்வண்டியின் பின்புறமும் மறியல் செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டு போராட்டம் வெற்றியென அறிவித்து "போராட்டத்தின் பலனை" டாஸ்மாக்கில் அனுபவிக்க கலைந்து சென்றனர். நடுவில் ஒரு சில இடுப்புக்கள் தடவப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தரப்பட்டது.  ஆளும்கட்சியோ உண்ணாவிரதம் என்ற பெயரில் உண்ணும் விரதம் மேற்கொண்டு போரட்டத்தை கேலிக்கூத்தாக்கியது. போதாத குறைக்கு நம்ம கூத்தாடிகள் வெறும் மௌன விரத போராட்டம் என்று அறிவித்து ஓயாமல் பேசிக்கொண்டு மீடியா வெளிச்சத்திற்கு அரிதாரம் பூசி பப்ளிக்குட்டி அரிப்பெடுத்து அலைந்து கொண்டிருக்கின்றனர். 

போட்டிக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடமாட்டோம் என்று "கன்னடவேதிகே" அவர்கள் பங்கிற்கு பேருந்தை கொளுத்த தயாராகிக்கொண்டிருக்கின்றனர். கர்னாடகத்தில்  ஆளும்கட்சியும் சரி எதிர்கட்சியும் சரி ஒரே முடிவோடுதான் இருக்கின்றனர், தமிழ்நாட்டிற்கு தண்ணி தரமுடியாது. அந்த விஷயத்தில் "ஒட்டு ஆசையில்" இருவரும் ஒரே குறிக்கோளோடு உள்ளனர். 

தமிழ் நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாத நிலைக்கு நீ காரணம், நான் காரணமா? இதோ அவன் காரணம், இதோ இவன் காரணம் என்று அவனவன் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். இணையத்திலோ அவன் காவிரிக்கு குரல் கொடுத்தானா? அவன் சங்கீஸ், மங்கீஸ், பொங்கீஸ் என்று சகட்டுமேனிக்கு பொங்கிக்கொண்டிருக்கின்றனர். நடுவில தமிழ்நாடு வாட்டாள் கூட்டம், நீ ஆரியன், நீ திராவிடன், நீ தமிழனா? நீ வந்தேறி, நீ மரமேறி, நடுவில தலைவரோட அவிச்சுவெச்ச ஆமக்குஞ்சு சாப்பிட்டேன், ஆமை ஓட்ட அண்டர்வேரில் உட்டேன் என்று குறுக்குசால் ஒட்டிகொண்டிருக்கின்றது.  

இந்த காமேடிகளால் ஸ்டெர்லைட் போராட்டம் அதன் தீவிரத்தை இழந்துகொண்டிருக்கிறது. இது மக்களால் தங்களது ஆரோக்கியமான வாழ்விற்காக வாழ்வா? சாவா? போராட்டம். இங்கு இன்னும் முழுமையாக அரசியல்வாதிகள் இறங்கவில்லை. அவர்களும் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும்? காவிரிபோல் ஆகிவிடும்.

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு!! (தமிழனுக்கு அல்ல) எப்போது விடிவுக்காலம்?

Follow kummachi on Twitter

Post Comment