Monday 31 May 2010

புட்டுக்கோ புடிச்சிக்கோ (நூற்றி ஐம்பதாவது இடுகை)


இப்பொழுது எல்லாம் செய்திகளை பெரிதும் ஆக்கிரமிப்பது விமான விபத்து, ரயில் கவிழ்ப்பு, சாலை விபத்து. பெரும்பாலும் விபத்தை பற்றிய விவரங்களை கொடுத்து செய்திகள் அடுத்து தருவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு என்ற பெயரில் பிரதமரோ அல்லது முதல்வரோ கொடுக்கும் பிச்சைக் காசு.

நஷ்ட ஈடு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்த அரசாங்கம் “crisis management” எந்த அளவுக்கு உருவாக்கியிருக்கிறார்கள். தவறாக எண்ண வேண்டாம் இதற்காக ஒரு தனி பிரிவு உண்டு. அதற்காக ஒரு வட்டமோ அல்லது மாவட்டமோ தலைவராக்கப்பட்டு அவருக்கு உண்டான சம்பளமும் உண்டு. மக்களே சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் சம்பவ இடத்திற்கு வருவது என்பது “செத்த அன்றைக்கு வர சொன்னால் பத்துக்கு வருவார்கள்” இது தான் நிதர்சனம். போபால் விஷவாயுக் கசிவின் பொழுது ஆர்ஜுன் சிங் எங்கு ஒளிந்திருந்தார் என்பது நாடறிந்த ரகசியம்.

இதை எல்லாம் நாம் கேட்காமல் இருக்கத்தான் இந்த நஷ்ட ஈடு. இந்த உதவித் தொகையை நினைத்து மக்கள் அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறது அரசாங்கம். மேலும் இது ஒட்டு பொறுக்கும் வழி முறைகளில் முக்கியமான ஒன்று.


கவிழ்ந்தது ரயில்
இழந்தது உயிர்
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ””:


இறங்குது விமானம்
இழந்தது ஏராளம்
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ”.


பேருந்துப் பயணம்
ஆற்றிலே பிணம்
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ”.

பள்ளியில் நெருப்பு
பிள்ளைகள் எரிப்பு
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ”.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 27 May 2010

சிறுதாவூர் சீமாட்டி..............


சிருதாவூர் சீமாட்டி
சிரிச்சு ரொம்ப நாளாச்சு
கொடநாடு கோகிலம்
கூவி ரொம்ப நாளாச்சு

கழகக் கண்மணிகள் எல்லாம்
கலைஞர் கட்சியில் சேர்ந்தாச்சு
மன்னார்குடி பார்ட்டி மட்டும்
மடியோடு சேர்ந்தாச்சு

அறிக்கை விடும் வழக்கமெல்லாம்
அடியோடு மறந்தாச்சு
புதுரத்தம் பாய்ச்சல் எல்லாம்
புஸ்வாணமா போயாச்சு

குளிர்சாதன அறையிலிருந்து
அரசியல் கும்மியடிச்சாச்சு
பட்டுப்போன இலைகள்
பழுதையில் கலந்தாச்சு

புரட்சித் தலைவர் கொடுத்த
கட்சி பூண்டோடு அழிய
எல்லா வழியும் எடுத்தாச்சு

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 22 May 2010

பண்பாடு காத்த தலைவனுக்கு பன்னாடைகளின் பாராட்டு விழா.


பாசத்தலைவனுக்கு பதினாலு லட்சத்தி இருபத்தாராயிரத்து எழுநூற்றி முப்பத்தெட்டாவது பாராட்டு விழா. விழா நடத்துவோருக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பங்கேற்றதற்கு அத்தாட்சியாக சான்றிதழ் விழா அரங்கிலேயே வழங்கப்படும். இதுவரை உலக வரலாற்றில் எந்த அரசும் செய்யாத, முதன் முறையாக ஐம்பதாயிரத்தை தொடப் போகும் பாராட்டு விழாக்கள்.

சொம்படிக்க சொட்டையான சொண்ட்டி நடிகர்களும், குனிந்து கும்மியடிக்க, ...டி கொழுத்த குமரிகளும் அழைக்கப் படுவார்கள். பாசதலைவன் பதினாலு டிகிரி கோணத்தில் ஜொள்ளு விடுவதை புகழ்ந்து பாடும் கவிஞருக்கு மேல்சபை பதவி.

இந்த அரசு யாரையும் கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைப்பதில்லை. ஆனால் வராத ஊழியர்கள் கட்டாயப் பணி நீக்கம் செய்யப் படுவார்கள்.

பந்தல் வரை வந்து “சொம்படிக்காத” ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு ஆளாவார்கள்.

மேலும் மேடையில் ஏறி உண்மை உரைத்தால் “கட்டம் கட்டி பட்டா பட்டி உருவி” குனிய வைத்து குமுறப்படுவார்கள்.

நவீனக் கம்பரும், மனித துதி பாடியே வயிறு வளர்க்கும் அம்பிகாபதிகளின் கவிதை ஊற்று ஓடும்.செம்மொழி காத்து வளர்த்த
சேக்கிழார் பெருமானே
ராஜதந்திரி ராஜ ராஜனின்
ஒன்றுவிட்ட பேரனே
ஈழம் ஈன்றெடுக்க
பரோட்டா பாயா தின்று
பத்து நிமிடம் உண்ணாவிரதமிருந்த
பண்பாட்டுக் கலைஞனே
ஒருமைப் பாடு வளர்க்க
ஊரெங்கும் “குடி” கண்ட கோமானே
செம்மொழி வளர்க்க
குடும்பதொழில் செழிக்க
தமிழில் பெயர் மறந்தும்
சூட்டாத மாவீரனே
மக்கள் வரிப்பணம்
(தம்)மக்கள் வளர
வழிவகை செய்த
வள்ளல் பெருமானே
நிதி நிறைந்தவரிடம்
பொற்குவையும் நிதி
குறைந்தோரிடம் கோடிகளும்
பஞ்சம் பிழைப்பவரிடம்
லட்சங்களும் பெற்று
பாராட்டு விழா காணும்
பாசதலைவனே நீவிர்
பல்லாண்டு வாழவும்
உமது குடும்பம் கோடிகளில்
கொழிக்கவும் ஈரோட்டு
எம்பெருமான் எழுந்தருளி
எட்டாயிரம் ஆண்டுகள்
வாழ வேண்டுகிறோம்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 20 May 2010

கொட்டகையில் “அட்டு பிட்டு” படம்


விஷயம் இது தான். முழுப் பரீட்சை முடிந்து நாங்கள் “பிட்டு” படம் பார்க்கப் போனோம். இப்போதிருக்கும் காசி தியேட்டர் எதிரில் தான் பழைய ஜாபர்கான்பேட் “விஜயா”. அப்படியே நேரே அந்தத் தெருவில் உள்ளே போனால் ஜாபர்கான்பேட் “சாந்தி”. இங்குதான் கோடை விடுமுறையில் நாங்கள் படம் பார்க்க எங்கள் நிதிநிலமைக்கு ஏற்ற கொட்டகைகள். நாற்பத்தைந்து பைசா தான் டிக்கெட். தரையில் தான் அமரவேண்டும். ஏதோ சிமென்ட் போட்ட தரை என்று நீங்கள் நினைத்தால் அப்படியே இதை படிக்காமல் அம்பேல் ஆகிவிடுங்கள். மணல் தரை. நீங்கள் “குள்ளமனி”யாய் இருந்தால் மணலைக் குமித்து மேடை அமைத்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

அன்றுதான் எங்கள் கடைசிப் பரீட்சை, வீட்டுக்கு வந்தவுடன் எல்லா நோட் புத்தகங்களில் உள்ள எழுதியப் பக்கங்களைக் கிழித்து எடைக்குப் போட்டு காசு சேர்த்தோம். பாடப் புத்தகங்களை ஏதாவது டுபுக்குவின் தலையில் பாதி விலைக்கு மேல் விற்று காசு அடிக்க பரீட்சை முடிவு வரக் காத்திருக்க வேண்டும்.

அன்று ஏதாவது படம் பார்க்கவில்லை என்றால் எங்கள் ஒருவருக்கும் நிம்மதியிருக்காது. மேலும் அன்று பெற்றோர்கள் எங்களை தடுக்கமுடியாது, பிள்ளைகள் பாவம் கஷ்டப்பட்டு விடிய விடிய படித்திருப்பர்களோ என்ற சந்தேகத்தில் கெடுபிடி இளகியிருக்கும் நேரம். பெரும்பாலும் நைட் ஷோ தான் போவோம். இதன் காரணம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

அன்று நாங்கள் கொட்டகையை அடைந்த பொழுது, டிக்கெட் கொடுத்து மூடிவிட்டார்கள். எங்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதில் அந்தப் படத்தை ஏற்கனவே பார்த்த ஒருவன், இந்தப் படத்தில் அந்தக் கன்னட நடிகை காட்டில், ஹீரோவுடன் அடிக்கும் கொட்டங்களும், மேலும் ஆற்றில் உள்ளாடை அணியாமல் குளிக்கும் ஏகப்பட்ட காட்சிகள் பத்து நிமிடத்திற்கு வரும் என்று எங்கள் ரத்தத்தை சூடாக்கிவிட்டான். அப்பொழுது வந்த அந்தப் பேட்டை ஆள் ஒருவன் அவனுக்கு சாராயத்திற்கு ஏற்பாடு செய்தால் டிக்கெட் வாங்கித் தருவதாக சத்தியம் செய்ததால் அங்கேயே ஒரு அவசர பட்ஜெட் கூட்டம் போட்டு, உடனடியாக மசோதா நிறைவேற்றி டிக்கெட்டை பெற்றுக்கொண்டு அவசரமாக நுழைந்தோம். கிடைத்த மணலிடத்தில் அவரவர் அமர்ந்தோம். திரையில் “பீகாரில் வெள்ளம் முடியும் தருவாயில் உணவுப்பொட்டலம் ஹெலிகாப்டரில் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள், எல்லாப் பொட்டலங்களும் பெரும்பாலும் ஆற்றிலேயே விழுந்தன”.

செய்திகள் முடிந்து படம் தொடங்கியது, ஆனால் படம் “பக்திப் படம்”, கூட வந்தவனில் ஒருவன் டேய் அப்படித்தாணடா டைட்டிலில் போடுவார்கள். பொறுத்திருங்கள் என்றான். நாங்கள் பொறுத்திருந்து அந்தப் படம் முழுவதுமாக முடிந்தது, மேலும் வெள்ளி முளைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. நண்பன் உசுப்பேத்தியக் காட்சி ஏதும் வரவில்லை. கொட்டகையில் எல்லா ஜனங்களும் ஒரே கூச்சல், இதற்குள் ப்ரொஜெக்டர் ரூமில் ஒரே சத்தம். படம் முடிந்து மணி அடித்தும் யாரும் கொட்டகையை விட்டு நகரவில்லை. மேனேஜரை தேடினார்கள் அவர் அம்பேல் ஆகிவிட்டார், நாற்காலிகளை உடைக்க முடியாத ஒரு கொட்டகை.

அடுத்த நாள் என் நண்பனின் அம்மா என் அம்மாவிடம், “என் பையன் ரொம்ப நல்லப் பையன், பரீட்சை முடிந்தவுடன் சாமி படத்திற்குத் தான் போவான், வேறெந்தப் படமும் பார்க்கமாட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு என் அம்மா “என் பையன் சாமிபடம் கூட பார்க்கமாட்டான்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 16 May 2010

நான் நடத்திய வழிப்பறி.


எப்பொழுது மாயா அக்காவைப் பார்த்தாலும் என்னிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். விஷயம் இதுதான்.

மாயா அக்காளின் கணவர் புறநகரில் உள்ள தொழிற்சாலையில் என்னுடன் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஷிப்ட் வேலை. காலை, மாலை, இரவு என்று ஷிப்ட் மாறிக்கொண்டிருக்கும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்களுக்கு ஒரு பிரச்சினை வரும். சம்பள நாள் மாலை ஷிப்டில் வரும்பொழுது அதை வாங்கிக் கொண்டு வீட்டில் சேர்பதற்குள் இதயம் தொண்டைக்கு வந்து விடும், ஏனென்றால் நாங்கள் வடசென்னையைக் கடந்து வரும் வழியில் வழிப்பறி அதிகம். முக்கியமாக சம்பள நாட்களில் கொள்ளையர்கள் கரெக்டாக ஆஜராகி விடுவார்கள். இந்தப் பிரச்சினை சமாளிப்பதற்காக வேறு வழி எடுத்துப் பார்த்தோம், கொள்ளையர்கள் எல்லா வழியிலும் தொழில் நடத்திக் கொண்டிருந்தார்கள். சம்பளக் கவரை எங்கும் மறைக்க முடியாது, “கோமணத்தில் வைத்தாலும் குடைந்து விடுவார்கள்”.

மாயாக்கா குடும்பம் எங்கள் தெருவுக்கு முன்பு உள்ள குறுக்கு சந்தில் இருந்தது. அக்கா தன் ஒரே தம்பியை மதுரையில் நடந்த ஒரு கோர சாலை விபத்தில் இழந்தவர்கள். அவர்களுக்கு என்னிடம் மிகுந்த அன்பு உண்டு. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் என் அம்மாவிடம் உதவிக்கு வருவார்கள்.

அன்று அக்காவின் கணவருக்கு ஓவர் டைம், மாலை, இரவு ஷிப்ட் என்று வேலை எதிர்பாராமல் வந்து விட்டது. அப்பொழுதெல்லாம் போன் வசதி கிடையாது. ஆதலால் நான் மாலை ஷிப்ட் முடித்து வீட்டுக்குப் போகுமுன் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர் காலையில்தான் வருவார் என்று சொல்ல கதவைத் தட்டினேன். அக்கா “யாரு?” என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தார்கள். குழந்தை தாரா மார்பில் ஒட்டிகொண்டிருந்தது. “ஏன் அவர் வரவில்லையா?”, என்று கேட்டுக்கொண்டே குழந்தையை படுக்கை அறையில் விட்டுவிட்டு வந்து என் எதிரே அமர்ந்தார்கள். அவர் காலையில் தான் வருவார் என்று சொல்லிக் கிளம்புமுன் “நாளை சம்பள தினம், எனக்கு கவலையாக இருக்கிறது” என்று பழைய பல்லவியை ஆரம்பித்தார்கள்.

நான் அவரிடம் எத்தனை முறை சொல்லிப் பார்த்தாலும் கேட்கமாட்டார். என்னை மாதிரி காலை ஷிப்ட் உள்ளவர்களிடம் லெட்டர் கொடுத்து சம்பளத்தை வாங்கி வீட்டில் சேர்க்கலாம் என்று சொன்னால், “ஏலே போடா தயிர் சாதம், நாங்களெல்லாம் திருநெல்வேலி ஆளுலே ஒரு ..........மவனும் என் மேலே கை வைக்க முடியாது”, என்று நக்கல் பண்ணுவார். நான் தொழிற்சாலையில் அவருக்கு மிகவும் ஜூனியர். ஆனால் அன்று மாயாக்கா கவலை என்னை மிகவும் பாதித்தது.

மறு நாள் சம்பள தினத்தன்று நான் லீவ் போட்டு விட்டு என் சம்பளத்தை வாங்கி வர வேறு ஒரு நண்பனிடம் லெட்டர் கொடுத்து விட்டேன். திருவொற்றியூரில் இருந்த என் கல்லூரித்தோழர்கள் “சிவகுமார், தவக்குமார்” பார்க்க சென்றேன். இருவரும் இரட்டையர்கள் அடிதடிக்கு அஞ்சாதவர்கள். அவர்களிடம் விஷயத்தை சொன்னேன். “சரிடா, அவரை தொழிற்சாலை வெளியே வந்தவுடன் மடக்கிடலாம்”, என்றார்கள்.

அடுத்த நாள் மாயாக்காவிடம் சம்பளத்தை ஒப்படைத்துவிட்டு விஷயத்தை சொல்லி “அக்கா இனி கவலை வேண்டாம்” என்று சொன்னேன்.

இரண்டு வாரம் கழித்து மாயாக்காவை கடைத்தெருவில் சந்தித்த பொழுது, “அவருக்கு நீ பணம் அடித்த விஷயம் தெரியும்” என்றார்கள். “எப்படிக்கா என்றேன்”.

“நான் சொல்லிவிட்டேன்” என்றார்கள்.

இப்பொழுதெல்லாம் மாயாக்கா கணவர் என்னிடம் பேசுவதில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 15 May 2010

ஹலோ குஷ்பூவா....................குனியப்டாதுடீ


ஹலோ யாரு குஷ்பூவா, நான்தான் அபி மாமிடி, அதாண்டி அபிதகுஜாம்பா மாமிடி, எங்காத்து எதிராத்துக்கு ஷூட்டிங் வரும்போது வந்து பாப்பேனே அந்த அபி மாமி.

ஏன்டி சுந்தர் சௌக்கியமா, அவனே நான் விசாரிச்சன்னு சொல்லு. கொழந்தைகள் எல்லாம் சௌக்கியமா.

இவர் ஜெயா டிவில உன்னோட ப்ரோக்ராம் வந்தா வாயத்தொறந்துண்டு “ஆன்னு” பாத்துண்டிருப்பார்.

என்ன இந்த மனுஷன் பொது அறிவெல்லாம் வளத்துக்கிராறு, இந்த வயசில்லேன்னு எனக்கு ஆச்சர்யம் சொல்லி மாளல. அப்படி ஒன்னும் நீ கேள்வி கேக்கறதில்லையே, கெக்கே பிக்கேன்னு தானே கேட்கறேன்னு இவர கேட்டா, உன் முதுக பாத்துண்டு இருக்காராம். “பாருடி அவ முதுகில எட்டு பேர் உக்காந்து ரம்மி ஆடலாம்” அப்படின்னு பெனாத்தறார்.

ஏன்டி இன்னிக்கு நான் கேள்விப்பட்டது உண்மையா.
நீ ஏதோ அரசிய கட்சியில சேர்ந்துட்டதா எங்காத்துக்காரர் சொல்றார் அப்படியா. நோக்கு ஏண்டி இந்த வம்பெல்லாம். இப்போதான் ஒரு வழியா கோர்ட்டுக்கேல்லாம் போய் உன் விவகாரம் சிக்கி சின்னா பின்னமாகி வெளியிலே வந்திருக்கே, இது என்னடி புது அக்கப்போர்.
தோ பாருடி, நீ ஏற்கனவே எதிர் கட்சி டிவிகாராள ஏகத்துக்கும் வடக்கதிக்காரா டிவில போய் காச்சின. உங்காத்துல கேமரா வச்சிருக்கா என்ன வாட்ச் பண்றான்னு அவாள நேர ஒருமைல திட்டின. இப்போ அங்கேயே போய் சேரர.

அவாளேல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு, அப்போப்போ அடிச்சிப்பா அப்புறம் சேர்ந்துண்டு, “கண்கள் பணிச்சுது காது புளிச்சுதுன்னுவா”, குறுக்கே நீ போய் குனிஞ்சா கும்மியடிச்சுடுவா.

“நாமெல்லாம் குனியப்டாதுடி, குனிஞ்சாலும் அக்கம் பக்கம் பாக்கணும், இல்லேன்னா கும்மியடிச்சுப்புடுவா”.

ஏதோ சொல்லறத சொல்லிட்டேன் சமத்தா நடந்துக்கோ.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 4 May 2010

உழைப்பவன் "கூமட்டை"- இன்றைய தமிழகம்


கோவாலு வந்துகிறான், அஞ்சு வருஷம் முன்னாடி ஆந்திராகாரிய இஸ்துகின்னு ஓடினவந்தான் இப்போ வந்துகிறான், புள்ள குட்டியோட,

நம்மளாண்ட கேக்குறான். இன்னா பண்ணிகினுகிறேன்னு.
“சொம்மாகிறேன்”னா, நம்மளாண்ட ஊதார் காமிக்கிறான்.

இவன் ஆந்திராவிலே நெலத்தை வைச்சு உழுதுகின்னுகிறான்.

நாங்க இன்னா “கூமட்டையா?” வேலை செஞ்சு பொழைக்க.

சாப்பாட்டுக்கு இன்னா பண்றேன்னு கேக்குறான்.

அதான் ரேசன்ல ஒரு ரூவாய்க்கு அரிசி கொடுக்கிறாங்க.
அதை உலையிலே போட அடுப்பு கேசும் இலவசம்.

கறி சோத்துக்கு இன்னா செய்வேன்னு நம்மளே மடக்குறான்.
அடப்போடா கேனப்பயலே, நாங்க இன்னா உன்னிய மாதிரி பொண்டாட்டிய உக்கார வெச்சு சோறு போடுவோமா, பொண்டாட்டிய கட்டிட வேலைக்கு அனுப்பிச்சு கறிக்கும் சரக்குக்கும் ஏற்பாடு பண்ணுவோம்.

பொண்டாட்டி பிரசவத்துக்கு அரசாங்கம் "ஐயாயிரம்" ரூவா கொடுக்கிறாங்க, எப்படியும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா வாங்கிடுவோம்.

ஏண்டா உழைக்காம பொழுத எப்படி போக்குறேன்னு கேக்குறான்.

அதான் அரசாங்கம் இலவசமா டிவி பொட்டி கொடுக்கிறாங்க, அதப்போட மின்சாரம் இலவசம்.

சும்மா நாள் முயுக்க, மானாட மயிலாட, படம், பாட்டு, எல்லாம் பாத்துக்கின்னு இருப்போம்.

சும்மா குந்திக்கின்னு சீக்கு வந்தா இன்னா பண்ணுவேன்னு கேக்குறான், வெவரம் புரியாம.

அடப் போடா டோமரு, எங்களுக்கு குடும்பத்தோட மருத்துவ செலவு இலவசம், அரசாங்கமே பாத்துகிது.

விடாம திரும்ப நம்மளையே மடக்குறான்.

புள்ளைங்கள எப்படி படிக்க வைக்கிறதாம் அப்படிங்கிறான்.

போடா லூசு, எங்கத் தமிழ் நாட்டில, புள்ளைங்க படிப்பு, சத்துணவு, முட்டை அல்லாம் இலவசம், ஒரு முட்டை இல்லை ரெண்டு முட்டை.

அதுங்க பள்ளியோடம் போக பஸ் பாஸ் இலவசம், வேணுன்னா சைக்கிளும் இலவசம்.

பொண்ணு வச்சிக்கிரேயே கண்ணாலத்துக்கு இன்னா பண்ணுவேன்னு கொக்கி போடுறான்,

போலே போக்கத்தவனே பொண்ணு வயசுக்கு வந்தா எங்க நாட்டுல கண்ணாலத்துக்கு இருபத்தைந்தாயிரம் அரசாங்கம் கொடுக்குது, அப்புறம் இன்னா கவலை, தாலிக்கு தங்கம் கொடுக்கிறாங்க, அது பிரசவ செலவுக்கும் காசு ஐயாயிரம் நியாபகம் வச்சுக்க.

எங்கத் தமியினாட்டுலே உன்னிய மாதிரி உழைக்கிற கேனயனுக்கு இன்னா தெரியுமா பேரு "கூமட்டை".

மவனே அப்பால நம்மகிட்டிய வரவேயில்லியே, ஆந்திராக்காரிய இட்டுக்கின்னு நெல்லூரான்டப் போயிட்டான்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 3 May 2010

மேல்சபையினால் யாருக்கு லாபம்?


கேள்விக்கு பதில் ஒன்றும் கடினமானதல்ல.

விரல் சூப்பும் சின்ன பாப்பாவிற்கு கூட தெரியும்!

தமிழக அரசு கடந்த வாரம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது. அனுமதி அய்யா “ஆயாவிடம்” சொன்னால் கிடைத்துவிடும். இதனால் செலவு அதிகமாகாதா என்ற கேள்விக்கு வெறும் “பதினைந்து லட்சம்” தான் ஆகும் என்கிறார். எது ஒரு உறுப்பினருக்கு ஒரு மாதத்திற்கா? ஐயோ கண்ணை கட்டிகிறதேடா சாமி.

உறுப்பினர் சம்பளம், தங்கும் விடுதி செலவு, கார், பாதுகாப்பு, அலவன்ஸ் லொட்டு லொசுக்கு என்று இன்னும் அதிகமே ஆகும்.

மேலும் மேலவையின் அவசியமென்ன? என்ன முடிவு கீழவையில் எடுக்க முடியாமல் மேலவையில் எடுத்து கிழிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் ஐயா இதயத்தில் இடம் கொடுத்த எல்லோரையும் மேலவையில் இறக்கி வைக்கப் போகிறார். இதயத்தில் பளு தாங்கவில்லை போலும்.

அதற்குள் குஷ்புவிற்கு இடம், குன்னாத்தவிற்கு இடம் என்று பேச்சு அடிபடுகிறது. கஷ்டம்டா சாமி. அது சரி இவ்வளவு விழா எடுத்து எத்தனை விருது கொடுத்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது போட்டால் தானே நாளைக்கு தேர்தலில் ஒட்டு பொறுக்க வருவார்கள். கூடவே சொம்படிக்கிற கும்பலுக்கும் கொடுங்கப்பா.

ஏற்கனவே இலவசம் என்ற பெயரில் பொது மக்கள் பையில் ஆட்டையைப் போட்டாகிவிட்டது. இப்பொழுது அவனிடமிருக்கும் மிச்சமீதிக்கும் வெச்சுட்டாங்க ஆப்பு.
மக்கள் எப்பொழுது விழித்துக்கொள்வார்கள்.

அது சரி “சரக்கும் சால்னாவும்” கிடைச்சா மேல்சபை, கீழ்சபை, நடுசபை, எது வந்தா நமக்கென்ன?, டாஸ்மாக் திறந்து சரக்கு கிடைத்தால் போதும்.

மின்சார பற்றாகுறை
தண்ணீர் பற்றாக்குறை
அரிசி தட்டுப் பாடு
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

ஆனால் டாஸ்மாக்கில் சரக்குக்கு தட்டுப்பாடே கிடையாது.

வாழ்க ஜனநாயகம். வாழ்க எங்கள் மணித்திருநாடு.

Follow kummachi on Twitter

Post Comment