Thursday 30 August 2012

தூக்கு தண்டனை தேவையா?

முகம்மது அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து விட்டது. இப்பொழுது தூக்கு தண்டனை தேவையா? என்ற விவாதம் மீண்டும் தொடரும்.

கசாபின் விஷயத்தில் இது அநியாயமாகப்படும்.  பாம்பே வி.டீ ஸ்டேஷனில் எல்லோரையும், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என்று பாராமல் வெறியாட்டம் ஆடி குருவி சுடுவது போல் சுட்டும் கையெறி குண்டை வீசி கொலை செய்தவனை என்ன செய்வது?ஏறக்குறைய வீ.டீ ஸ்டேஷனை கசாப்பு கடை ஆக்கியவன்.

இந்தியாவில் இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை 1995 ல் அலிபாகை சேர்ந்த சுதாகர் ஜோஷி, புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். மூன்று கொலைகள் செய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

தூக்கு தண்டனை நிறைவேற்ற "Hangmen" தூக்கிலிடுபவர் என்று ஒருவர் இருப்பார். தற்பொழுது அது போன்று ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு  எழுபத்தியிரண்டு வயதாகிறது. அவரை இப்பொழுது கேட்டபொழுது நான் இது வரை செய்ததற்கே வருத்தப்படுகிறேன், ஆதலால் நான் தூக்கிலிட வரவில்லை என்று சொல்லிவிட்டார்.

கசாபின்  தூக்கு தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர காவல்துறை ஒரு காவலர் மூலமாகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது.

ஒய்வு பெற்ற நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர் வாதம் மீண்டும் சந்தைக்கு வருகிறது. இந்த உலகில் ஒரு உயிரை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. பின்னர் கசாபுக்கும் அரசாங்கத்திற்கும் வித்தியாசம் என்ன?

மிகவும் விவாதத்திற்கு உரிய ஒரு விஷயம் இது. தற்போழுது கசாபின் மனு ஜனாதிபதியிடம் உள்ளது, என்ன நடக்கப் போகிறது என்பது கேள்விக்குறி.


நம் மனதில் அன்று மும்பையில் நடந்த அந்த கொடூரம் மறக்க முடியாதது. அதை செய்தவர் யாராக இருந்தாலும் கொடூரமாக  தண்டிக்கப்பட வேண்டியவரே.


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 29 August 2012

துபாயில் கம்பி எண்ணப் போனேன்

துபாய்க்கு வேலைக்கு வந்து ஒன்பது மாதங்களாகிவிட்டது. எங்களுடைய பிரம்மச்சாரிகள் குகையை விட்டு எங்களது நட்புறவு சற்று வெளியே பரவிக்கொண்டிருந்த காலம். அப்படி நட்பானவர்களில் ஒருவர்தான் எஸ்.ஆர்.கே. எங்களுக்கெல்லாம் ரொம்ப வேண்டப்பட்டவர். அதற்கு பிரத்தியேகக் காரணம்(சரக்கு வள்ளல்) உண்டு. அவரால்தான் நான் துபாயில் கம்பி எண்ணப்போனேன்.

இருங்க  அவசரப்படாதீங்க, அதற்கு முன் எஸ்.ஆர்.கே வீட்டுதீர்த்தவாரிகளைப் பற்றி எல்லாம் சொல்லவேண்டும்.

அன்றைக்கு காலையில் எஸ்.ஆர்.கே அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்பொழுது போனில் கூப்பிட்டார்.

யோவ் என்னய்யா பிடுங்கிட்டிருக்க, என்றார்.

வேறென்ன ஆணிதான், சொல்லுங்க என்ன விஷயம் என்றேன்.

ஈவினிங் என்ன ப்ரோக்ராம் என்றார்.

என்ன வழக்கம்போல வெட்டிதான் என்றேன்.

சரி அப்போ வீட்டுக்கு வந்திடு என்றார்.

இல்லை ஸார் வேண்டாம் என்றேன்.

ஏன் என்ன விஷயம் சொல்லு என்றார்.

நான் அங்கே போனால் அவரின் மனைவி சட்டசபையில் எதிரே வந்தமர்ந்த கேப்டனை  அம்மா பார்ப்பதுபோல் என்னை பார்க்கிறார்கள். அதை அவரிடம் சொல்ல முடியாது.

விஷயம் இதுதான் வியாழக்கிழமைகளில் சரக்கடித்து எல்லோரையும் ஒரு வழி பண்ணிவிடுவார்.  மனைவி முறைத்தால் பாட ஆரம்பித்துவிடுவார். அதுவும் குலாம் அலியின் "ஹாங்காமா க்யூன்" என்று அப்படியே தமிழாக்கம் செய்து " ஏனிந்த  கலாட்டா, கொஞ்சம்தானே குடித்திருக்கிறேன், திருடி ஒன்றும் குடிக்கவில்லையே " என்று  அந்த கஸல் பாட்டை ஸ்வரம் பிரித்து  பாடுவார்.

யோவ் என்னய்யா யோசனை வாயான்னா, அவளும்  குழந்தையும் வேறே இங்கே இல்லை ஊருக்கு போயிருக்கிறார்கள் போரடிக்குதுயா என்றார்.

சரி  என்று அவர் வீட்டில் மாலை சென்றேன். வழக்கம் போல தீர்த்தவாரி.  இரவு எல்லோரும் மட்டையாகி காலையில் ஒன்பது மணிக்குதான் முழிப்பு வந்தது. அவர் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லோரும் காலை எழுந்தவுடன்  வீட்டிற்கு சென்றுவிட்டார்கள் போலும்.

அவர்  எழுந்தவுடன் மணி என்னய்யா? என்றார். ஸார் மணி பத்தரை என்றேன்.  பிரேம் எங்கே அவனை ஓட்டலுக்கு போய் இட்லி வாங்க சொல்லு என்றார். ஸார் அவனுக எல்லாம் போயிட்டாணுக. எழுந்திருங்க ஒரு வழியா லஞ்சே சாப்பிட்டுவிடலாம் வாங்க என்றேன்.

எழுந்து ஒரு வழியாக கிளம்பினார். கிளம்புமுன் தன்னுடைய கேமராவை எடுத்துக்கொண்டார். யோவ் கொஞ்சநேரம் துபாயில் போட்டோ எடுத்து விட்டு ஓட்டலுக்கு போகலாம் என்றார். அவர் வண்டியில் கிளம்பி பீச் ஓரம் நின்று சிறிதுநேரம் போட்டோ எடுத்தார். பின்னர் ஃபால்கன் ரௌண்ட்டானா அருகே வண்டியை நிறுத்தி போட்டோ எடுத்தார். அடுத்தது அந்த வங்கியிடம் வண்டியை நிறுத்தினார்.  யோவ் வண்டியைவிட்டு இறங்கி எடுக்கலாம் என்றார். அந்த வங்கியை ஒரு இருபது நிமிடமாக போட்டு எடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு போலிஸ் வண்டி எங்கள் முன் வந்து நின்றது.

போலீஸ்காரர் எங்கள் இருவரிடமும் அரபியில் அடையாள அட்டையைக் கேட்டார். பின்னர் எஸ்.ஆர் கேயின் கேமராவை பிடுங்கிக்கொண்டு எங்களிருவரையும் போலிஸ் வண்டியில் ஏறச்சொன்னார், நண்பர் ஏன் வண்டியை என்னபண்ணுவது என்று போலீசாரிடம் கேட்கவே அவரது அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு அவரை அவரது காரில் வர சொல்லிவிட்டு என்னை போலிஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டனர்.  நல்லவேளை வெள்ளிக்கிழமை மதியம் ஆதலால் தெருவில் கூட்டம் இல்லை, யாவரும் என்னை பார்க்கவில்லை என்றாலும் ஸ்டேஷனில் என்ன பண்ணுவார்களோ, எதற்கு வர சொல்லுகிறார்கள் ஒரு மண்ணும் எனக்குப் புரியவில்லை.

ஜுமேராவில் உள்ள போலிஸ் நிலையத்திற்கு சென்று உயர் அதிகாரியிடம் என்னை ஒப்படைத்தார். அவரை பார்த்தவுடன் எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அந்த உயர் அதிகாரி அரபியில் ஏதோ என்னிடம் கேட்டார். ஒன்றும் புரியவில்லை பின்னர் ஆங்கிலத்தில் எத்தனை நாட்கள் இங்கிருக்கிறாய் இன்னும் அரபி கற்றுக்கொள்ளவில்லையா? எதற்கு போட்டோ எடுத்தாய் நீ எந்த க்ரூப் சொல்லு, அதுவும் ஏன் அந்த வங்கியை எடுத்தாய் என்று  கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார்.

சரிதான்  சரியாக மாட்டிக்கொண்டுவிட்டோம்  இந்த மனுஷன் எங்கே இன்னும் வரவில்லை, சரிதான் நமக்கு சிறை நிச்சயம், அடப்பாவி ஒன்றும் செய்யாமல் மாட்டிகொண்டுவிட்டோமே சே அதுவும் இந்த நேரத்தில் அம்மா வேறு பெண் பார்க்க வர சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள், வேலை போய்விடும் என்று ஏதோ ஏதோ எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

பின்னர் எஸ்.ஆர். கே வந்தார் அவரிடம் விசாரணை தொடங்கியது. என்னை ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றனர். கிட்டதட்ட அழும் நிலைக்கு வந்து விட்டேன். அங்கு வந்த மேலும் இரண்டு மூன்று போலீசார்கள் நீதான் அந்த வங்கியை போட்டோ எடுத்தவனா? என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் சென்றனர்.

அந்தப்  பதினைந்து நிமிடத்தில் எனக்குள் என்னென்னவோ தோன்ற ஆரம்பித்து விட்டது. நாம்  கம்பி எண்ணப்போவது நிச்சயம் வீட்டிற்கு எப்படி செய்தி சொல்லுவது என்று ஒரே கவலை. ஏற்கனவே ஜுமேரா ஜெயில் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், சே என்ன எழவுடா இது என்று நொந்து கொண்டிருந்தேன்.

எஸ்.ஆர். கே நிலைமை என்ன ஆகும், அவருக்கு கொஞ்சம் அரபி தெரியும் ஆதலால் அவர் எப்படியும் எஸ் ஆகிவிடுவார், என்றெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தது.

அரை மணி கழித்து எஸ்.ஆர்.கே வந்தார், வாயா போகலாம், ஏன்யா இந்த பயம் பயப்படுற, என்ன தப்பு பண்ணிட்டோம் என்ன பண்ணிடுவாணுங்க. வா போகலாம் என்றார்.

என்ன ஸார் நம்மளை ரிலீஸ் பண்ணிட்டாகளா. என்னது ரிலீசா என்று சிரித்தார்.

யோவ் பயப்படாதே, அந்த  வங்கியை போட்டோ எடுக்கக் கூடாதாம், நமக்கு தெரியாத, சரிடா இந்தா வச்சிக்கோ என்று கேமாராவிளிருந்து பிலிமை உருவி கொடுத்து விட்டேன் என்றார். மேலும் அந்த வங்கியில் கண்ணாடி அறைக்குள் இரண்டு போலீசார் இருக்கிறார்கள் போலும் நீ ஏன் என்னிடம் சொல்ல வில்லை என்றார். ஸார் நான் கவனிக்க வில்லை என்றேன்.

பின்னர் ஊருக்கு சென்று கல்யாணமாகி துபாய் வந்து அங்கிருந்து வேறு வேலை தேடி இங்கு வந்து பல வருடங்கள் ஓடிவிட்டன.

சமீபத்தில் நானும் மனைவியும் வெளியே சென்றுகொண்டிருந்த பொழுது ஒருடிராபிக் நிறுத்தத்தின் அருகில் ஒரு போலிஸ் வேனை பார்த்தேன் முன்னே இரு போலீசார் அமர்ந்திருக்க பின் சீட்டில் ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார். அதை பார்த்தவுடன் இந்த கதை நியாபகம் வர அவளிடம் சொன்னேன்.

சரிதான் ஒரு கிரிமினலை நான் கல்யாணம் செய்து கொன்டிருக்கிறேனா? இதை ஏன் கல்யாணத்திற்கு முன்பு என்னிடம் சொல்லவில்லை என்று என்னை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்..

அது  முதல் எந்த வாக்கு வாதத்திலும் "ஆமாம் நீங்க ஒரு கிரிமினல் உங்களுக்கு என்னைத்தவிர யார் வாழ்க்கை கொடுப்பார்கள், சரி சரி இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி அடுக்கிட்டு கிட்சனை சுத்தம் பண்ணிட்டு வாங்க" என்பது வழக்கமாகிவிட்டது.

"சரி நாளைக்கு என்ன சமையல் செய்யப்போறீங்க" என்று நக்கலடித்துக் கொண்டிருக்கிறாள்.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 28 August 2012

கலக்கல் காக்டெயில்-83


காசும், கரியும்

நான்கு  நாட்களாக நாட்களாக தொலைக்காட்சி செய்திகள் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் வெறுத்து போயிருப்பார்கள். எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் நேற்று மதியம் ஒரு சில அமைச்சர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. நடுவில் சிங்கு கூட ஏதோ விளக்கம் கொடுத்தார். ஒரு மண்ணும் புரியவில்லை. பிறகு வெளியே வந்து பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அதுவும் விளங்கவில்லை.

ப. சிதம்பரம் வேறு இன்னும் நிலக்கரியே வெட்டவில்லை அப்புறம் எங்கே நஷ்டம் என்கிறாறு. 

“மண்ணு மோகனு சிங்கு” இந்த மாதிரி அமைச்சர்கள் உங்களிடம் இருக்கும்வரை உங்களை யாராலும் அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது.

சும்மா ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க, அதுக்குள்ளே இவனுக அடங்கிடுவாணுக.

நத்தமும் நாறும் அறிக்கையும்

அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடு அறவே ஒழிக்கப்படும் என்று உதார் விட்டாய்ங்க. ஆனால் நடந்தது இன்னும் அதிகநேர மின்வெட்டே. கோவையில் சிறுதொழில்கள்  இயங்க முடியா நிலைமை. திருப்பூரிலே இன்னும் மோசம், அவனவன் மில்லை இழுத்து மூடிவிட்டு ஓடும் நிலைமை. இந்த வருட பருவ மழை இருபத்திமூன்று விழுக்காடு குறைவு என்று சொல்லுகிறார்கள். ஆதலால் நிலைமை இன்னும் மோசமாகும்.

அம்மா இனி அறிக்கைவிட்டால் மதிப்பிருக்காது என்று இப்பொழுதெல்லாம் நத்தம் தினமும் அறிக்கை விடுகிறார். அறிக்கை வைத்து மக்கள் என்ன செய்வார்கள்?

வலைப்பதிவர் திருவிழா

சென்னையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவை இணையத்தில் கண்டேன். சரியான நேரத்திற்கு ஆரம்பித்து சரியான நேரத்தில் மிகவும் அருமையாக நடத்திக்காட்டினார்கள்.

அவற்றை பற்றிய செய்திகள் தினமும் திரட்டிகளில் வந்துகொண்டிருக்கின்றன.

இதன் பின்னணியில் உள்ள அணைவருக்கும் எத்துனை முறை நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தாலும் போறாது.

நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு புதியதலைமுறை தொலைக்காட்சியில் எப்பொழுது வருமென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ரசித்த கவிதை(கள்) 

இந்த மாலையில் வீடு திரும்பும் நீ
உன் வீட்டிற்கான பாதை துவங்கும்
புள்ளியில்
உன் தலையிலிருந்து மலர்களை
விடுவிக்க துவங்குகிறாய்

------------------மனுஷ்யபுத்திரன்   

நான் இல்லாது போன பிறகும்
ஒழுங்காகத் தேடிப்பாருங்கள்
இங்குதான் எங்காவது இருப்பேன்

எவ்வளவு பெரியது
பூமி
வானம்
அண்டம்
பேரண்டம்...?

--------அழகுநிலா   


இந்த வார ஜொள்ளு 28/08/2012

Follow kummachi on Twitter

Post Comment

Monday 27 August 2012

பயணக்கட்டுரை-இங்கிலாந்து

பாரிசில்  தங்கிய விடுதியிலிருந்து காலை ஒன்பது மணியளவில் கிளம்பி யூரோ ஸ்டார் தொடர்வண்டியை பிடிக்க "கரே டு நோர்ட்" என்ற ஸ்டேஷனை அடைந்தோம். இங்கு யூரோ நாடுகளின் விசா முடிவடைவதால் யூ.கே விசா முத்திரையை கடவுச்சீட்டில் பெற்றுக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் யூரோ ஸ்டார் வண்டி ஏறத்தயாரானோம்.

எங்களது தொடர்வண்டி காலை பதினொன்றரை மணிக்கு லண்டனில் உள்ள செயின்ட் பென்க்ராஸ் நோக்கி கிளம்பியது. இந்த வண்டி கடைசி நாற்பது கிலோமீட்டர் தூரத்தை கடலுக்கடியில் ஏற்படுத்தியுள்ள குகையின் ஊடே கடந்தது புதிய அனுபவமாக இருந்தது. இது மிக அதிவேக ரயில். சில இடங்களில் நேரான பாதைகளில் மணிக்கு முந்நூறு கிலோமீட்டர் வேகத்தை தொட்டது.
யூரோ ஸ்டார் தொடர்வண்டி
லண்டன் ஐ, ராட்சத ராட்டினம்


மதியம் இரண்டு மணியளவில் லண்டனை அடைந்தோம். பின்னர் அங்குள்ள ஒரு இந்திய ஓட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு “லண்டன் ஐ” என்கிற ராட்சத ராட்டினத்தில் ஏறி லண்டனை ரசித்தோம். பின்னர் மாலை ஆறுமணிக்கு தேம்ஸ் நதியில் படகு சவாரி. லண்டன் பாலத்திலிருந்து கிளம்பி டவர் பாலம் வரை சென்று திரும்பினோம். பின்னர் இரவு உணவை முடித்துக்கொண்டு விடுதிக்கு திரும்பினோம்.
ஹௌசெஸ் ஆப் பார்லிமென்ட் 
லண்டன் டவர் பிரிட்ஜ்

அடுத்த நாள் கலையில் சிற்றுண்டி முடித்துவிட்டு பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றோம். போன முறை நான் லண்டன் சென்றபொழுது அரண்மன்னையின் உள்ளே செல்ல முடிந்தது, இந்த முறை அரண்மனையின் காவலர்கள் மாற்றத்தைதான் காணமுடிந்தது. பின்னர் மதியம் மெழுகு அருங்காட்சியகம் (Madame Tussauds) சென்றோம், இந்த முறை ஹுசைன் போல்ட் பொம்மையின் முன்னே அதிகக்கூட்டம். போன முறை சென்ற பொழுது (September 1997) டயானா பொம்மையின் முன்னே புகைப்படம் எடுத்துக்கொள்ள கூட்டம் அலைமோதியது. காந்தியும், இந்திரா காந்தியும் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யாராயை அடையாளம் காணமுடியவில்லை.பின்பு டவர் ஆப் லண்டன் அருங்காட்சியகம். அங்கே நம்மகிட்டே ஆட்டையைபோட்ட கோஹினூர் வைரத்தை நமக்கே காட்டுறானுங்க.
காந்தி மெழுகு சிலை
ஹுசைன் போல்ட்
 
மாலை ஆக்ஸ்போர்டு சாலைக்கு சென்று கடைகளில் மீதமிருந்த பவுண்ட்சை ஒழித்துக் கட்டினோம்.
பக்கிங்காம் அரண்மனை
காவலாளிகள் மாற்றம்

அடுத்த நாள் காலையில் லண்டனை விட்டு கிளம்பி ஆணிபிடுங்கவேண்டிய நினைப்புடன் தோஹா வந்து சேர்ந்தோம்.  

ஒரு வழியாக பதினேழு நாட்களில் இத்தாலி தொடங்கி இங்கிலாந்து வரை எட்டு நாடுகளை பார்வையிட்டோம். எங்களது குழுவில் மொத்தம்  நாற்பத்தியொன்பது பேர் (பதினைந்து குடும்பங்கள்). இந்தியாவின் எல்லா மூலைகளில் இருந்தும் வந்திருந்தார்கள். அவர்களுடன் பழகியது ஒரு தனி அனுபவம். ஒவ்வொரு கேரக்டர்களையும் வைத்து இன்னும் பல பதிவுகள் தேற்றலாம். கர்நாடகாவிலிருந்து வந்திருந்த அரசு வழக்கறிஞருடன் பேசியதில் பதிவிற்கு நிறைய தீனி கிடைத்தது. விஜயவாடாவிலிருந்து வந்திருந்த டாக்டர் தம்பதிகள் எங்களுடன் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இன்னும் எழுத நிறைய இருக்கின்றன.
லண்டன் ஐ மேலிருந்து
பக்கிங்காம்அரண்மனை முன்பு
டவர்ஆப் லண்டன் முன்

இது வரை என்னை பொறுமையுடன் பின்தொடர்ந்தவர்களுக்கு நன்றி.Follow kummachi on Twitter

Post Comment

Sunday 26 August 2012

தமிழ் வலைப்பதிவர் திருவிழா-மாபெரும் வெற்றி

சென்னையில் இன்று நடந்த தமிழ் வலைப்பதிவர் திருவிழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது. எங்களைப் போன்ற வெளிநாட்டு பதிவர்கள் நேரில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இணையத்தின் வழியாக கண்டு களிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னுடைய வேலைப்பளுவின் நடுவே அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா பதிவர்களையும் அறிமுகம் செய்த நிகழ்ச்சி காலையில் நடைபெற்றது. கணினி மூலமாகவே பரிச்சியமான பல பதிவர்களை இன்று மேடையில் கண்ட பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

பிலாசபி பிரபாகரன், சேட்டைக்காரன் முதலியோரை மேடையில் பார்க்கும் பொழுது வியந்தேன். இவர்களின் எழுத்தின் துள்ளல் நடைகளை வெகுவாகவே ரசித்திருக்கிறேன். நேரில் காணவேண்டுமென்ற ஆவல் வெகுநாட்களாக இருந்தது. இன்று இணையத்தின் மூலமாக பார்த்தில் மிக்க மகிழ்ச்சி.


வீடு திரும்பல் "மோகன்குமாரு"க்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும். இந்த விழாவிற்கு வரமுடியவில்லை என்ற வருத்தத்தை பதிவில் தெரிவித்த  பொழுது இணையத்தில் காண "சுட்டி" அனுப்பி காண வழிவகை செய்தார்.

மதியம் மூத்த பதிவர்கள் மரியாதை விழா முன்பு நண்பர்  "எஸ். ரா. நண்டு@நொரண்டு" பேசினார். அவருடைய பேச்சைக் கேட்டவுடன் அவரை  உடனே அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது என் சொந்த வீட்டு விசேஷத்தில் பங்குகொண்டது போல் இருந்தது.

சசிகலா அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீட்டையும் பின்னர் நடந்த கவியரங்கத்தையும் வெகுவாகவே ரசித்தேன்.

பட்டுக்கோட்டை  பிரபாகர் அவர்களின் முடிவுரை அருமை. அவர் சொன்ன ஒரு விஷயம் நாம் யாவரும் மனதில் கொள்ளவேண்டியவை. இந்த வலைப்பதிவை தனிமனித தாக்குதலுக்கு பயன்படுத்தாதீர்கள் என்றார். நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமானதாகும்.

வெகு விமர்சையாக நடந்த இந்த விழாவின் காரணகர்த்தாக்கள் புலவர் ராமானுசம் அய்யா அவர்கள், சென்னை பித்தன் அவர்கள், கேபிள் சங்கர் அவர்கள், செந்தில், இன்னும் மற்றைய எல்லோருக்கும் நன்றி. அனைத்துப் பதிவர்களையும் ஒரே இடத்தில் கொண்டு சேர்த்து ஒரு மிகப்பெரிய விழாவை அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

உங்கள்  அணைவருக்கும் ஒரு பதிவராக என்னுடைய நன்றி கலந்த வணக்கங்களையும் பாராட்டுக்களையும் மிகவும் பணிவன்புடன்  தெரிவித்துகொள்கிறேன்.


வாழ்க தமிழ், வளர்க தமிழ் பதிவுலகம். 

26/08/2012Follow kummachi on Twitter

Post Comment

Saturday 25 August 2012

சென்னை பதிவர்கள் மாநாடு (எங்கள் வீட்டு விசேஷம்)

நாளை நடக்கவிருக்கும் சென்னை பதிவர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள்   மிகவும் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் இதைப் பற்றிய பதிவுகள் எக்கச்சக்கமாக வந்துவிட்டது. இதில் என்னுடைய பங்கிற்கு பதிவு போடா விட்டால் பதிவுலகத்திற்கு நம் பங்கு என்ன ஆவது?


சமீபத்திய மோகன்குமார்(வீடு திரும்பல்)அவர்களின் பதிவு மாநாட்டிற்கு வருபவர்களுக்கான வழிமுறைகளை சொல்லுகிறது. எல்லா ஊரிலிருந்து வருபவர்களுக்கும் பேருந்து  எண்கள், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வரும் வழிகள் என விஸ்தாரமாக போட்டிருப்பது இதை நடத்தும் நிர்வாகிகளின் கடமை உணர்ச்சியைக் காட்டுகிறது.
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்


என்னைப் போன்ற வெளிநாட்டு பதிவர்கள் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற  ஏக்கம்  மேலோங்கி நிற்கிறது. பதிவர் மாநாடு நடக்குமிடம் என்னுடைய சென்னை வீட்டிலிருந்து பொடிநடையாக  போகும் தூரம்தான் என்று நினைக்கையில் அங்கில்லாமல் போய்விட்டோமே என்றும், மேலும் இங்கு வந்து ஆணி  பிடுங்கவதை நினைத்து வெறுப்பு வருகிறது.

ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த பொழுதே சி.பி. யை தொலைபேசியில் அழைத்து எங்களால் கலந்துகொள்ள முடியாத  ஏக்கத்தை வெளிப்படுத்தினேன். இது போன்ற மாநாடுகளால் அடையைப் போகும் நன்மைகளை இழக்கிறோம் என்ற வேதனை மேலோங்கி கண்கள் பனிக்கின்றான.எழுத்தால் மட்டுமே நண்பர்களான எத்தனையோ அன்புள்ளங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை இழக்கிறேன்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாத ஏக்கம் என் சொந்தங்களின் விசேஷங்களில் கலந்துகொள்ள முடியாத பொழுது ஏற்பட்ட ஏக்கத்தைப் போல உணருகிறேன்.

இந்த  மாநாடு சிறப்புடன்  நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.

25/08/2012


Follow kummachi on Twitter

Post Comment

Friday 24 August 2012

பயணக்கட்டுரை—ஃபிரான்ஸ்


பிரஸ்ஸல்ஸ் அன்ட்வேர்ப் நகரை விட்டு பெட்டி படுக்கைகளை எடுத்துகொண்டு அடுத்த நாள் காலை ஃபிரான்ஸ் நாட்டை நோக்கி பயணமானோம். காலை பத்துமணியளவில் பாரிசின் வடக்குப் பகுதியில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள “சேண்டிலி” என்ற நகரத்தில் முதலில் இறங்கினோம்.
சேன்டிலி கோட்டை

அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு கண்ணாடி ஓவியம்
இங்கு ஒரு பழங்கால கோட்டை உள்ளது. அங்கு வந்த உள்ளூர் வழிகாட்டி கோட்டையின் பெருமையையும் அங்குள்ள அருங்காட்சியகத்தின் பெருமையும்  பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் பேச்சை பாரிஸ் நகரக்கனவில் கேட்டுக்கொண்டிருந்தோம். எங்களை அழைத்து சென்ற சுற்றுலா இயக்கி அந்தக் கோட்டையிலேயே மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவிற்கு பின் பாரிஸ் நகரை நோக்கி பயணமானோம்.
ஐபில் டவர்

கழுகு பார்வையில் பாரிசின் ஒரு பகுதி
பாரிஸ் நகரம் வந்தவுடன் நேராக உலகப் புகழ்பெற்ற “ஐபில்” டவர் சென்றோம். அங்கு நான்கு மின்தூக்கிகளில் மூன்று பழுது அடைந்திருக்கிறது ஆதலால் மேலே செல்வது கடினம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் வழிகாட்டி. ஆனால் நாங்கள் சென்ற வேளை இரண்டு வேலை செய்துகொண்டிருந்தது. ஆதலால் டவரின் உச்சி வரை சென்று பாரிஸ் நகரின் அழகை ரசித்தோம். பின்னர் "செயேன்" ஆற்றில் படகு சவாரி. மாலை பாரிஸ் நகரின் விடுதி ஒன்றில் சற்று இளைப்பாறி இரவு உணவை முடித்த பின் பிரசித்த பெற்ற “லிடோ” காட்சிக்கு சென்றோம்.
செயேன் ஆற்றில் படகு சவாரி

பாரிஸ் நகரின் ஊடே ஓடும் அழகிய ஆறு
இந்த காட்சியில் வரும் நடனப் பெண்கள் மேலாடை இல்லாது வருவார்கள் என்று கேள்விபட்டபடியால் மனைவிக்கு முதலில் தயக்கம். ஆனாலும் பார்த்துதான் வருவோமே என்று சென்றோம். காட்சி இரவு பதினோரு மணிக்கு தொடங்கி இரண்டு மணிக்கு முடிந்தது. நாங்கள் நினைத்தது போல் இதில் கேபரே வகை ஆபாச நடனங்கள் இல்லை. அவர்களின் கலாசார நடனம். மேலாடை இல்லை என்றாலும் துளியும் ஆபாசம் இல்லாத நடனம்.

யூரோ டிஸ்னி
கடை கன்னிகளை நோக்கி
அடுத்த நாள் காலை யூரோ டிஸ்னி சென்றோம். இது உலகத்திலேயே பெரிய டிஸ்னிலாண்ட். பிள்ளைகள் எங்களுடன் வாராததால் டிஸ்னிலாந்தில் எங்களுக்கு ஏனோ நாட்டம் ஏற்படவில்லை. மேலும் ஹாங்காங்கில் நாங்கள் ஏற்கனவே இதை முழு நாள் இருந்து அனுபவித்து விட்டோம். ஆதலால் குழுவில் இருந்த ஒரு சில பேர்  சேர்ந்துகொண்டு மெட்ரோ ரயில் பிடித்து அருகில் உள்ள ஷாப்பிங்மால் சென்று, கொண்டு வந்த பணத்தை காலி செய்தோம்.
யூரோ டிஸ்னி

லூவர் அருங்காட்சியகம்
அடுத்த நாள் காலை யூரோஸ்டார் ட்ரெயினில் லண்டன் நோக்கிப் பயணித்தோம்.

லண்டன்----------------------------பயணம் தொடரும்.

Follow kummachi on Twitter

Post Comment