Saturday 27 June 2009

கவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை முயற்சி)




கோயிலாண்ட வந்தான் கோவாலு,
கூவிக்கினு இருந்தா கோயிந்தம்மா,
"இன்னாயா ரவைக்கி வூட்டாண்ட வல்லே,
எவகூடயா இருந்தே” என்றாள்.

தனம் அங்கே தண்ணி பிடிக்க வந்தாள்
தனத்தின் தனங்களுக்கு கனம் அதிகம்,
கோவாலின் கண்கள் தனத்தின் மேலே,
கோயிந்தம்மா கண்டுக்கினா......

“இன்னா தனம் இங்கே ஆட்டவந்தியா,
இந்தா நம்ம ரூட்லே வராதே,
வந்தாகண்டி மவளே அருத்துருவேன்” என்றாள்
கோயிந்தம்மா.

“தனமோ, ஐயா இன்னா நம்மகயிலே,
ராங் காட்டுறே, கோயிந்தம்மா உன்னையே,
பத்தி தெரியாத, குப்பமே கூவுதே,
குப்புசாமி இட்டுகின்னு குப்புற படுத்தே”.
கோயிந்தம்மா கொறல் வுட்டு, "இன்னாமே
பேஜர் பண்ணாதே, நீ ஏண்டி, கொழுந்தனே,
கொதறிக்கினு,, இங்கே கும்மியடிக்கிறே"

கோவாலு மப்பிலே, "தா இன்னாமே,
அத்தே சொல்லுறே" என்றான்
"மவனே மப்புளுகிரயா,
தனதாண்ட வூடு கட்டுறியா,
மவனே ரவைக்கி வருவேல்லே,
வக்கிரயான்யா ஆப்பு"


"யோவ் இன்னாயா" என்று என்னைக் கண்டு,
கோயிந்தம்மாவும் தனமும் கோரசாக கூவினார்கள்,
"மவனே இன்ன இங்கே படமா காட்டுறாங்கோ, ரப்ச்சர் ஆயிடுவே போவியா................."


பதிவு போட மேட்டர் கிடைக்குமா என்று நோட்டம் வுட்ட நான் அங்கிருந்து அரை நொடியில் அம்பேல் ஆனேன்..........

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 23 June 2009

மெல்லத் தமிழ்...........................




மெல்ல தமிழ் இனி சாகும்,
பாரதியின் வரிகள்,
அவரவர் வசதிக்கேற்ப,
மேடைகளிலும் ஏடுகளிலும்,
சாகடிக்கப்படுகிறது.

மெல்ல தமிழ் இனி சாகும்,
பாரதியின் வரிகள்,
பொய்யாகும் நேரம்,
மேடைகளிலும் ஏடுகளிலும்,
புதிய வேகத்துடன் சாகடிக்கப்படுகிறது.

மேடைப் பேச்சாளினி, பெயரோ,
எழிலரசி, உச்சரிப்பில்,
எலிலர்ஸி.
"தமில் வலர்பொம்" தலைப்பில்
கவிதைப் படிக்கிறாள்.
“இனியத் தமில் மக்கலே,
தமில் வலர்பொம்,
தமிலில் பேசுவோம்,
தமில் எங்கல் மூச்சு.
வீல்வது நாமாகினும், இனி
வால்வது தமிலாகட்டும்.
வால்கத் தமில்”.

யார் சொன்னது, மெல்ல தமிழ் இனி சாகும்,
என்று.



நட்பு


எனக்குள்ளிருக்கும் உன் நினைவு,
உனக்குள்ளிருக்கும் என் நினைவு,
சடுதியில் நின்ற நம் உறவு,
வாழ்வில் மறையும் இந்நிகழ்வு.


மேலே உள்ள இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது, ஊகிக்க முடிந்தவர்கள் ஊகித்துக் கொள்க.

ஆனா மறக்காம வோட்டபோடுங்க சாமி................

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 13 June 2009

அழகிய அலைகள் (பாகம் இரண்டு)

இந்த அழஅகிய அலைகளின் இரண்டாம் பாகம் உங்கள் பார்வைக்கு


















பிடித்தால் வோட்டப் போடுங்க

Follow kummachi on Twitter

Post Comment

அழகிய அலைகள் (பாகம் ஒன்று)

இந்த வினோதமான அழகிய அலைகள் உங்களின் பார்வைக்கு















பிடித்தால் வோட்டப் போடுங்க................

Follow kummachi on Twitter

Post Comment

Friday 12 June 2009

வைதேகி-என் மீரா


வைதேகிக்கு வகுப்பில் ஏத்தம் அதிகம் தன்னுடன் நிறைய மாணவர்கள் பேசுகிறார்கள் என்று. அப்படி ஒன்றும் நல்ல பிகர் எல்லாம் கிடையாது. சொல்லப் போனால் அட்டபிகுர். தேய்ந்துபோன கிராமபோனில் வரும் பி.யு. சின்னப்பா குரலில் பேசும். எங்கள் வகுப்பில் மொத்தம் இருபது ஆண் பிள்ளைகள், பத்து பெண் பிள்ளைகள். வைதேகியைவிட வகுப்பில் சில சுமாரான பிகர்கள் உண்டு. விஜயலட்சுமி, நேத்ரா, மீராவேல்லாம் கொஞ்சம் பெட்டெர்.

வைதேகியின் அலட்டலுக்கு காரணம், ரங்கராஜன், ஆறுமுகம், கோபி. மூவரும் குடம் குடமாக ஜொள்ளு விடுவார்கள். ரங்கராஜனின் அப்பா ஒரு பவுடர் கம்பெனியில் மேனேஜர். நாங்களெல்லாம் பள்ளிக்கு பையில் புத்தகங்களை கொண்டு வருவோம். ரங்கராஜன் ஒரு அலுமினியப் பெட்டி கொண்டு வருவான். அதெல்லாம் பணக்கார குடும்பங்களில்தான் வாங்கிக்கொடுப்பார்கள்.

வகுப்பில் நுழையும்பொழுதே வைதேகியை ஓரக்கண்னால் பார்த்துக்கொண்டு அவன் அப்பாவின் பெருமையை எங்களிடம் கூறுவான். அதில் பாதி பொய் இருக்கும். எங்கப்பா இன்னிக்கி பம்பாயிலிருந்து விமானத்தில் வந்தார், டிக்கெட் கிடைக்கலை, பைலட் பக்கத்திலேயே உட்கார்ந்து வந்தார் என்றெல்லாம் கதை விடுவான். அதைக் கேட்டு அந்தப் பெண்கள் எல்லாம் வாயைப் பிளந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும்.

ரங்கராஜன் அவன் அப்பா கம்பெனியிலிருந்து எடுத்து வரும் லெட்டர் பேட், பேனா, பென்சில், சாம்பிள் பவுடர் டப்பா எல்லாம் கொண்டு வந்து வைதேகிக்கு கொடுப்பான், அவளும் எல்லாப் பல்லையும் காட்டி வாங்கிக்கொள்வாள். இதயெல்லாம் கவனித்த கோபி அவன் தங்கையின் புதிய நோட்டுப் புத்தகங்கள் இரண்டை எடுத்து வந்து அவன் பங்குக்கு வைதேகியிடம் கொடுத்தான். அடுத்த நாளே அவன் அம்மா வந்து வைதேகியிடம் குய்யோ முறையோ என்று கத்தி, “அவன் கொடுத்த நீ வாங்கிப்பியோ” என்று பிடுங்கிச் சென்றுவிட்டாள்.

ரங்கராஜன் வைதேகியிடம் தன காதலை தெரிவிக்கப் போவதாக எங்களிடம் சொன்னான். அன்று மாலை பள்ளி முடிந்ததும் அவளை தனியாக தள்ளிக் கொண்டு போனான்.
அடுத்த நாள் அவன் காதலை சொல்லியிருப்பான், நாங்கள் எல்லாம் அவன் வரும்பொழுது, "விழியில் நுழைந்து பவுடர் கொடுத்து உயிரில் கலந்த உறவே" என்று பாடக் காத்திருந்தோம். ஆனால் அவன் வரும்பொழுதே மூஞ்சியை தொங்கப் போட்டுகொண்டு "மாமியார் வீட்டுக்கு போகும் குரங்குபோல வந்தான்". நாங்கள் இடைவேளையில் அவனை விசாரித்த பொழுது "இல்லைடா அவள் "பி" செக்ஷன் நந்துவை விரும்பராடா என்றான்.

பின்பு ஒருவாரம் ரங்கராஜன் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு டல்லாக இருந்தான்.

அடுத்த வாரம் ஒரு நாள் நிறைய பேனாக்களும், லெட்டர் பேடும், பவுடர் டப்பாவும் கொண்டு வந்து மீராவிடம் கொடுத்தான்.

"என் மீரா அதை வாங்க மறுத்து விட்டாள்".

கமுக்கம்மா கடலைப் போடணும்.

Follow kummachi on Twitter

Post Comment

க்யூ.......................................


சமீபத்தில் பதிவர் பரிசல்காரனின் க்யூ பற்றிய பதிவைப் படித்தேன், ஸ்விஸ்ஸில் தற்கொலைக்கு எண்ணூறு பேர் க்யூவில் இருப்பதாக, மேலும் நேற்று நான் இரண்டு இடங்களில் சுமார் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நேரத்தில், இந்தப் பதிவின் பொருள் கிடைத்து விட்டது.

நமது க்யூ வாழ்கை எங்கு தொடங்கியது என்று பார்ப்போம்.



நாம் நமது அன்னையின் கருவில் இருக்கும் போதே தொடங்கி விடுகிறது.






கருவை உறுதி செய்ய மருத்துவமனையில் க்யூ,
பிறப்பதற்கு முன் வார்டு கிடைக்க க்யூ,
பிறந்தவுடன் சொட்டு மருந்திற்கு க்யூ,
பின்பு பள்ளியில் சேரக் க்யூ,
பள்ளிபடிப்பு முடிந்தவுடன் கல்லூரியில் சேரக் க்யூ,
கல்லூரி முடிந்தவுடன் மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்ல க்யூ,
உள்நாட்டு வேலையென்றால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் க்யூ,
இவையெல்லாம் செய்ய அப்பப்போ வங்கியில் க்யூ,
ரேஷன் கடையில் க்யூ,
சினிமா தியேட்டரில் க்யூ,
இடைவேளையில் சுசு போக க்யூ,
டாஸ்மாக்கில் க்யூ,
கறி வாங்க க்யூ,
ஓட்டலில் தோசைக்கு க்யூ,
வேலையில் சேரக் க்யூ,
சம்பளம் வாங்கக் க்யூ,
பாஸ்போர்ட் வாங்கக் க்யூ,
விசா வாங்கக் க்யூ,
இங்கேதான் க்யூ,
என்று வெளிநாடு போனால்,அங்கே இமிக்ரஷனில் நீண்டக் க்யூ,
ஹெச் ஒன் விசா வாங்கக் க்யூ,
விடுமுறைக்கு வீடு திரும்பக் க்யூ,
கல்யாணத்தை பதிவு செய்யக் க்யூ,
கார் வாங்கக் க்யூ,
கக்கூஸ் போகக் க்யூ,
எங்குக் க்யூ, எதிலும் க்யூ,

இன்னும் எத்தனைக் கோடி க்யூ வைத்திருக்கிறாய் இறைவா...................


படிச்சுட்டிங்களா க்யூவில் வந்துப் போடுங்க ஒட்டு.........

Follow kummachi on Twitter

Post Comment

சூப்பெர் ஸ்டார் பஞ்சாயத்து



சமீபத்திய செய்தி, பிரபு தேவாவும், நயன்தாராவும் லவ்விட்டு, கல்யாணம் செய்வதாக முடிவு செய்தவுடன், முடிவை, பிரபு தேவா மனைவி ரம்லதிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். பிறகு மனைவி சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் முறையிட்டதாக கூறப்படுகிறது.


“ரஜினி சொன்னா பிரபுதேவா கேட்பார்னு நினைச்சாங்க. ரஜினியும் போன் பண்ணி பிரபுதேவா, நயன்தாரா ரெண்டு பேரையுமே வீட்டுக்கு வரச் சொல்லி, ரம்லத் முன்னாடியே பக்குவமாகப் பேசிப் பார்த்தார். தன் மனக்குமுறலை அடக்கமுடியாமல் கொட்டினார் ரம்லத். பிரபு தேவாவிடம் மூன்று பிள்ளைகள் பெற்ற பிறகு, இதெல்லாம் நல்லதில்லை என்று கூறியிருக்கிறார்.



நயன் தாரவிடமும் வேறு ஒருத்தி வாழ்க்கையைக் கெடுக்காதே, மேலும் பீல்டில் உனக்கு எதிர்காலம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதற்கு நயன்தாரா அப்போது பிரபுவை எனக்கு போன் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று விட்டேத்தியாகப் பதில் அளித்திருக்கிறார்.

பிரபு தேவாவின் தரப்பிலோ தன் பிள்ளையை இழந்து தவித்தப் பொழுது, நயன்தாரா மிகவும் ஆறுதலாக இருந்தாராம், ஆதலால் கல்யாணம் செய்து கொள்கிறாராம்.

பிரபு தேவாவின் அப்பாவோ ரம்லத்தை விட்டு வந்தால் போதும் என்று சம்மதம் கொடுத்திருக்கிறார். (அப்படி என்ன குரோதம்)

இதெல்லாம் செய்திகளாக வருகின்றன. அனால் இவற்றையெல்லாம் எண்ணி பார்க்கும் பொழுது, நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

இது அவர்களின் சொந்த வாழ்க்கை, அதில் நமக்கு கருத்து சொல்ல உரிமையிருக்கிறதா என்பதை விவாதத்திற்கு விட்டு விடுவோம். இதை செய்தியாக பார்க்கும் பொழுது கருத்து சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

நமக்குள் தோன்றும் சில கேள்விகள்.

பிரபு தேவா ரம்லத்தை விரும்பிதான் இரு வீட்டரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அப்படிஎன்றால் அந்தக் காதல் பொய்த்துவிட்டதா?

பிரபுதேவா மகனை இழந்த சோகத்தில் நயன்தாராவிடம் காதல் கொண்டுள்ளதாக சொல்கிறார்.அவரது மனைவியும் அதே சோகத்தில் தான் இருக்கிறார், அவர் இவரை விட்டு வேறு ஒருவரிடம் சென்றால் ஒத்துக்கொள்வாரா? சமுதாயம் ஒத்துக்கொள்ளுமா?

இவருடைய மற்ற இரண்டு குழந்தைகளின் கதி என்ன?

நாளை வேறு நேரத்தில் ப்ரபுதேவவிற்கு ஒரு நெருக்கடி, அப்பொழுது வேறு ஒருவர் ஆதரவாக இருந்தால் அவருடன் போய் விடுவாரா? இதை நயன்தாரா எண்ணிப் பார்த்தாரா?
இப்படியே போனால் இதற்கு எங்கே முடிவு.
எங்கே போகிறது நமது சமுதாயம்.

சரிங்க பிரபு மீனா என்ன ஆனாருங்கோ...................?

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 11 June 2009

கவர்ச்சியும் ஆபாசமும்



இன்று காலையில் ஒரு பதிவர் "க்ரிஷ்ணவானீ" என்று நினைக்கிறேன் ஒரு நடிகையைப் பற்றிய செய்தி கொடுத்துவிட்டு திரையில் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள ஆறு வித்யாசங்களை கேட்டிருந்தார்கள்,

என்னுடையக் கருத்தில் உள்ளதை பட்டியலிடுகிறேன்.




1) ஒரு திரைப்படத்தில் நடிகை ஆடை அவிழ்ப்பதைக் காண்பித்தால் அது கவர்ச்சி, அவிழத்தபின் காண்பித்தால் ஆபாசம்.

2)ஒரு கதாநாயகன் திரையில் கதாநாயகி குளிப்பதை மறைந்திருந்து பார்த்தால் அது கவர்ச்சியில் வந்துவிடும். கதாநாயகியின் சகோதரியோ, அம்மாவோ குளிப்பதைப் பார்த்தால் அது ஆபாசம், முதுகு தேய்த்துவிட்டால், அருவருப்பாகிவிடும். (இல்லிங்கோ நான் வருங்கால முதல்வரைச் சொல்லலீங்கோ)

3)கதாநாயகி மத்தியப் பிரதேசத்தையும், மார்பின் பிளவும் காண்பித்தால் கவர்ச்சி, அதே கதாநாயகி மத்தியப்ரதேசத்தில் ஒட்டுத்துணி கட்டி மற்ற ப்ரதேசத்தில் காற்று வாங்க விட்டால் அது ஆபாசம்.

4)நடனக்கட்சியில் ஒரு முழம் துணியை இடுப்பில் செருகிக்கொண்டு, மத்தியப் பிரதேசத்தையும் அல்குலையும் பக்கவாட்டில் அசைத்தால் கவர்ச்சி, முன்னும் பின்னும் அசைத்தால் ஆபாசம்.

5)கதாநாயகன் கதாநாயகியின் தொப்புளில், முத்தம், பம்பரம், மண், தக்காளி, ஆம்லட் முதலியவற்றை இடலாம், இதெல்லாம் கவர்ச்சிக்குள் அடங்கிவிடும், மவனே கொத்து பரோட்டா போடறது ட்டூ....மச்... ஆபாசமாயிடும்.



அடுத்த வித்யாசம் ரொம்ப முக்கியமுங்கோ....;

கதாநாயகன். கொப்பும் கொலையுமா இருக்கிற கதாநாயகியைப் பார்த்து நாக்கை வெளியே நீட்டி உதட்டைச் சுழித்து "ஏய் நீ எனக்கு வேணும்" என்றால் கவர்ச்சி. ஆனால் வில்லன் மப்பும் மந்தாரமாக இருக்கும் பொழுது அதே கொப்பும் கொலையுமா இருக்கிற கதாநாயகியைப் பார்த்து "ஏய் நீ எனக்கு வேணும்" என்றால் அது ஆபாசம்.

இன்னும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன, ஆறு வித்யாசமே கேட்டதால் ஆறு தான் கொடுத்துள்ளேன்.

சரிங்க படிசுட்டிங்க இல்ல, வோட்ட சும்ம்மா கவர்ச்சியா குத்துங்கோய்............

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 10 June 2009

ஹைக்கூ.........?


நம்பிக்கை

வெறிச்சோடும் தொடர்வண்டி நிலையம்,
கையிழந்த சிறுமி, கூடையில்
வெள்ளரிப்பிஞ்சு.




எதிர்காலம்

அகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.





மெத்தனம்

சுகாதார மாநாடு,
தலைவர் எழுச்சியுரை,
தரையில் எச்சிலை.



தீர்மானம்

உன் வீடு வந்தேன்,
உன்னைக்கண்டேன், ஊருக்குச்
செல்லேன்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 9 June 2009

ராஜேந்திரன் மாறவில்லை............................








ராஜேந்திரன் என்னுடன் ஆறாவது வகுப்பிலிருந்து பள்ளிப்படிப்பு முடியும் வரை படித்தான். எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் வீடு. சிறுவயதில் தந்தையை இழந்தவன். அவனது தாய் ஐந்தாறு எருமை மாடுகள் வைத்துக் கொண்டு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு தங்கையும் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவான், எங்களுடன் விளையாடுவான். பரீட்சை நேரத்தில் பாஸ் செய்வதற்காக என்னிடம் வந்து பாடம் கற்றுத்தரச் சொல்லி உதவிக் கேட்பான்.

நல்ல கட்டுமஸ்தான உடல். அவன் அம்மாவுக்கு உதவியாக மாடு கறப்பான். மாட்டிற்கு புண்ணாக்கு உடைத்து, கரைத்து வைப்பான். அவனது புஜங்கள் நல்ல முருக்கேறியிருக்கும். எங்கள் வீட்டுக்கு வந்தால் சில சமயம் அம்மா அவனை தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து போடசொல்வாள். சடுதியில் மரத்து மேல் ஏறி தேங்காய் பறித்துப் போடுவான். அவன் சரளம்மாக பேசுவது என்னிடம் மட்டும் தான்.

.....த்தா சங்கரு என்ன உங்க கிரிக்கெட்லே சேர்த்துக்கோ என்பான்.
அந்த வார்த்தை இல்லாமல் அவனால் ஒரு வாக்கியம் கூட பேச முடியாது. நான் கேப்டன் ஆன பொழுது பலத்த எதிர்ப்புக்கிடையே அவனை பதினொன்றாவது ஆளாக இணைத்தேன். ஓடி வந்து வேகமாக பந்து எறிவான். எதிராளி அவனை திறமையாக அடித்து விட்டால், அடுத்த பந்தை "குஞ்சாவைப்" பார்த்து எறிவான். அவர்கள் விக்கெட்டை விட்டு நகர்த்து போல்ட் ஆகி விடுவார்கள்.

அவன் பரீட்சை வினாத்தாளைப் பார்த்தால் எல்லோருக்கும் சிரிப்பு வரும். முதல் இரண்டு மூன்று கேள்விகளுக்கு என்னிடம் முதல் நாள் கற்றுக்கொண்டதை வைத்து ஒப்பேற்றி விடுவான். வாத்தியார் அசந்திருக்கும் பொழுது என் பேப்பரில் ஒன்றை உருவி காப்பி அடித்து விடுவான். பிறகு எல்லா பக்கத்திலு ஒரே மாதிரி சங்கிலிபோல சுழிதுசுழித்து எழுதுவான். அதை எந்தக் கொம்பனாலும் படிக்க முடியாது. அதற்கு அர்த்தமும் கிடையாது. சிலசமயம் அடிஷனல் சீட் வாங்கி அதேபோல சுழிப்பான். வாத்தியார் திருத்தி திரும்பக் கொடுக்கும் பொழுது அவனைத் திட்டிக்கொண்டே கொடுப்பார்.

பிறகு நான் படிப்பை முடித்து வெளிநாட்டுக்கு வேலைக்குசென்று விடுமுறையில் திரும்பிய பொழுது, என்னைப் பார்க்க வந்தான்.

..............த்தா டேய் எனக்கு டீஷர்ட் வாங்கியாந்தயா...., ......த்தா வேறே என்ன வாங்கியாந்த.? அப்போது அவனுக்கு கல்யாணமாகி இருந்தது, ராஜேந்திரா இப்போ என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்றதற்கு, ....த்தா பால் வியாவாரம் தான் எனிக்கி என்ன தெரியும் என்றான்.

இப்போது வெகு நாட்களுக்குப் பிறகு அவனை சந்தித்தேன். த்தா எப்போடா வந்தே, ...த்தா எங்கேடா இவ்வளவு நாளா காணோம் என்றான். நாங்களும் இப்போ வூடு மாத்திக்கினோம் கோயம்பேடுக்கு அப்பால்லே என்றான்.

உனக்கு எவ்வளவு குழந்தைகள் என்றேன், ....த்தா ஒரு பையன் ஒரு பொண்ணு என்றான். என்ன செய்கிறார்கள் என்றேன், பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சிட்டேன், மருமவன் மளிகைக் கடை வைத்திருக்கிறான் என்றான். பையன் என்றேன், பையனைப் பற்றிக் கேட்டதில் அவன் முகத்தில் ஒரு பெருமிதம். டேய் அவன் என்னைப்போல் இல்லை +2 படிக்கிறான், நல்லாப் படிக்கிறான் என்றான்.

சமீபத்தில் அப்பாவுக்கு இதயக் கோளாறு என்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவசர விடுப்பில் சென்றேன், ஊர் சென்றவுடன் நேராக அப்பாவைப் பார்க்கச்சென்றேன். அப்பா ICU விலிருந்து வெளியே வந்து வார்டில் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்து விட்டார். “என்னை கவனித்த இதய நிபுணர் டாக்டர் ராஜ்குமார் யார் தெரியுமா, உன்னுடன் சின்ன வயதில் இருப்பானே ராஜேந்திரன் அவனுடைய மகன்” என்றார்.

பின்பு நான் டாக்டரை சந்தித்து, சிறிது நேரம் பேசிய பின்பு, ராஜேந்திரனைப் பற்றி விசாரித்தேன். அவன் இன்னும் கோயம்பேடில் இருப்பதாகவும், எவ்வளவு அழைத்தும் தன்னிடம் வந்து வசிக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டான்.

அடுத்த நாள் நான் ராஜேந்திரனின் வீட்டுக்கு போனேன். சிறிய வீடு நன்றாக இருந்தது. வீட்டிற்கு பின்புறம் மாட்டுதொழுவம். இன்னும் பால் வியாபாரம் பண்ணிக்கொண்டு இருந்தான்.

மனைவிக்குத் கேளாமல் மெலியக் குரலில் ".....த்தா எப்போடா வந்தே என்றான்". விவரங்களைக் கூறி அவன் மகனிடம் என்னுடைய அப்பா மருத்துவம் பார்த்துக் கொள்கிறார் என்றேன்.

ஏண்டா இன்னுமா பால் வியாபாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறாய், மகனுடன் மகிழ்ச்சியாக இருப்பது தானே என்றதற்கு
ராஜேந்திரன் "...த்தா இப்போகூட மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன், என் தொழிலை நான் எப்படிடா விடுவேன் " என்றான்.

ராஜேந்திரன் மாறவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 5 June 2009

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் பூதம்


அவன் ஆத்மா, அவள் சீமா. இருவருக்கும் கல்யாணமாகி சில நாட்கள்தான் ஆகிறது. இருவரும் தேன்நிலவுக்கு அந்த மலைப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறார்கள். முதல் நாள் வந்து விடுதியில் தங்கி காலையில் இந்த கோல்ப் மைதானத்திற்கு வந்து ஜாலியாக கோல்ப் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆத்மா அடித்த டீ ஷாட் அந்த மைதானத்தை தாண்டி வெளியே உள்ள ஒரு பங்களாவின் கண்ணாடி ஜன்னலை உடைத்து பந்து வீட்டின் உள்ளே விழுந்தது. ஆத்மா சீமாவின் முகத்தைப் பார்த்தான்.

சீமா "என்னங்க இப்படி பண்ணிட்டீங்க வாங்க அந்த வீட்டில் மன்னிப்புக் கேட்டு வருவோம் என்றாள்.

இருவரும் அந்த வீட்டை நெருங்கினார்கள். அழைப்பு மணியை அடித்தார்கள். சிறிது நேரம் காத்திருந்தும் ஒருவரும் வரவில்லை. ஆத்மா கதவைத் திறந்தான். வாசல் கதவு திறந்தே இருந்தது.

நுழைந்தவுடன் அந்த வீட்டின் ஹாலில் ஒருவன் சோபாவில் படுத்திருந்தான். பக்கத்தில் ஒரு பூ ஜாடி உடைந்திருந்தது.

சோபாவில் படுத்திருந்தவன் "வாங்க உங்களைத்தான் எதிர் பார்த்தேன்" என்றான்.

ஆத்மா "மன்னிக்கவேண்டும்" என்றான்.

படுத்திருந்தவன் "மன்னிப்புத் தேவையில்லை", மேலும் "நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்றான். நான் முன்னூறு வருடங்களாக இந்த ஜாடியில் அடைபட்டிருந்த பூதம், நீங்கள் என்னை விடுவித்தீர்கள். ஆதலால் எங்களுடைய பூத உலக வழக்கப்படி நான் உங்களுக்கு பெரியதாக கொடுக்க வேண்டும்" என்றான்.

"நான் உங்களுக்கு நூறு கோடி ரூபாயும், இந்த வீட்டையும் கொடுக்கிறேன்" என்றது பூதம். ஆனால் ஒரு நிபந்தனை "நான் முன்னூறு வருடம் ஜாடியில் இருந்ததால் பெண் வாசனையே அறியாமல் இருந்து விட்டேன், ஆதலால் உன் மனைவியை சிறிது நேரம் என்னிடம் தனியாக விடு" என்றது.

சீமா அதிர்ச்சியில் ஆதமாவை நோக்கினாள். ஆத்மா அவளை தனியாக வெளியே அழைத்து சென்றான்.

"டியர் இதற்கு நீ ஒத்துக்கொள்ள வேண்டும். நாம் கனவிலும் நினைத்தாலும் கிடைக்காத நூறு கோடியும் இந்த வீடும் கிடைக்கப் போகிறது. அதலால் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள். நாம் பிறகு குஜாலாக இருக்கலாம். மேலும் பூதம் தானே யாருக்கு தெரியப் போகிறது" என்றான்.

ஆத்மா சீமாவை புதியவனிடம் விட்டுவிட்டு மைதானத்தை நோக்கி நடந்தான்.
புதியவன் சீமாவிடம் ஜாலியாயாகப் பொழுதைக் கழித்தான். எல்லாம் முடிந்தவுடன் பூதம் சீமாவிடம் கேட்டது.

"உன் கணவன் என்ன லூசா இந்த இருபத்தொயோன்றாம் நூற்றாண்டில் பூதத்தை எல்லாம் நம்புகிறான்".

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 3 June 2009

"பிந்து"....ரயில் சிநேகம்


வண்டி புறப்பட இன்னும் நாற்பது நிமிடம் இருந்தது. என்னோட பெர்த்தைக் கண்டுபிடித்து பெட்டியை சீட்டுக்கு கீழே வைத்து அமர்ந்தேன். பெட்டியிலிருந்து ஞாபகமாக புத்தகத்தை வெளியில் எடுத்துக்கொண்டேன். நான் எப்போதும் பக்கவாட்டில் இருக்கும் இரண்டு பெர்த்துள்ள படுக்கையைதான் தேர்ந்தெடுப்பேன். இது எனக்கு மிகவும் வசதியான ஒன்று. இரண்டு சீட்டையும் இழுத்துப் போட்டுக்கொண்டு புத்தகத்தை படித்துக்கொண்டு எப்போது வேணும் என்றாலும் தூங்கிக்கொண்டு போகலாம். எதிர்ப்புறம் உள்ள ஆறு இருக்கைகளில், ஒரு இளம் கணவன் மனைவியும், இரண்டு பிள்ளைகளும், ஒரு முதிய கணவன் மனைவியும் இருந்தனர். நான் வேலை நிமித்தமாக ஒரு நேர் காணலுக்கு சென்று கொண்டிருந்தேன்.

என்னுடைய பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. நான் கொண்டுவந்த புத்தகத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன். வண்டி புறப்படுவதற்கு இருபது நிமிடம் முன்பு ஒரு பெண்ணும், ஒரு இளைஞனனும் என் இருக்கையின் கீழே தன் பெட்டிகளை வைத்தனர். பின்பு இளைஞன் அவளிடம் "ஓகே, நான் கிளம்பறேன் போனவுடன் தாத்தாவை போன் பண்ணச்சொல்" என்று சொல்லிவிட்டு வண்டியை விட்டு இறங்கினான். வண்டி சென்ட்ரலை விட்டுக் கிளம்ப ஆரம்பித்தது. அப்போது நான் அவளை நோக்கினேன். அவள் என்னைவிட இரண்டு மூன்று வயது சின்னவளாய் இருப்பாள் போல் தோன்றியது. சமீபத்தில் டிகிரி முடித்தவள் போல் இருந்தாள்.

சிறிது நேரம் போன பின் அவள் தான் பேச்சை ஆரம்பித்தாள். நான் எங்கு போகிறேன் எதற்காகப் போகிறேன் என்றும் என்னைப் பற்றி எல்லாம் விசாரித்ததால் நான் தற்காலிகமாய் என் வாசிப்பை நிறுத்தி விட்டு, பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளை விசாரித்ததில் அவள் பெயர் "பிந்து" என்றும், அவள் சென்னையில் பட்டப் படிப்பை முடித்து விட்டு ரிசல்ட் வருவதற்குள் தன்னுடைய தாத்தா பாட்டியுடன் விடுமுறையை கழிப்பதற்க்காக டெல்லி செல்வதாக கூறினாள். அப்போதுதான் அவளை நன்றாக கவனித்தேன். நல்ல கோதுமை நிற தோலும், கரிய கூந்தலும், திருத்தப்பட்ட புருவமும், இவளை வேறே ரேஞ் என்று நினைக்கத் தோன்றியது. பிறகு சிறிது மௌனத்துக்குப் பிறகு, தூங்கலாமா, என்றவுடன், நிலைமையை உணர்ந்து நான் மேலே உள்ள பெர்த்தில் படுக்க சென்றேன். பிறகு புத்தகத்தில் என் மனம் செல்லவில்லை, அவளை பற்றியே யோசித்துக்கொண்டு, தூங்கிப்போனேன்.

காலையில் என்னை அவள் தான் எழுப்பினாள், குட் மார்னிங், ரமேஷ் எழுந்திருங்க. குட் மார்னிங் என்று சொல்லிவிட்டு "toothbrush" ஐ எடுத்துக்கொண்டு, வாஷ்பசின் நோக்கி நடந்தேன். நான் முகம் கழுவி வருவதற்குள் எனக்காக சூடாக காபியை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். பின்பு எங்களது பேச்சைத் தொடர்ந்தோம் நான் படிக்கும் புத்தகம் பற்றியும், அவளின் ரசனையைப் பற்றியும் பேச்சு தொடர்ந்தது அவள் பேசப் பேச நானும் என் கூச்சத்தை தவிர்த்து பேச ஆரம்பித்தேன். எங்கள் பேச்சு "The other side of Midnight" ல் வந்த நோயால் பேஜ், கதேரின் டோக்லஸ், அலெக்சாண்டர் டோக்லஸ், மற்றும் "Kane and Able" புத்தகத்தின் தொடக்கமே "He who started screaming, when she stopped screaming" என்று ஆசிரியரின் வாசகரின் கதைக்குள் இழுக்கும் திறமை,மற்றும் "கரையெல்லாம் செண்பகப்பூ" கல்யாணராமன், வள்ளி, ச்நேகம்மா என்று போய்க்கொண்டிருந்தது.பின்பு கொஞ்ச நேரம் நான் கொண்டு வந்த செஸ் போர்டில் ஒரு கேம் ஆடினோம்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அவள் ரமேஷ், "எங்கே பெண்களுக்கு சுருள் முடி அதிகம்" என்று கேட்டாள். நான் இதை பிந்துவிடமிருந்து சற்றும் எதிர் பார்க்கவில்லை. நான் அவள் கண்களை நேராகப் பார்த்த பொழுது, அதில் தெரிந்த விஷமத்தனத்தில் திக்குமுக்காடினேன். இந்த நேரம் ஒரு "மில்லி செகோண்ட்தான்" பிரம்மாவுக்கு "சூசூ போற நேரமாக வேனால் இருக்கலாம்" , ஆனா எனக்கு அவளின் மேல் இத்தனை நேரம் இருந்த மதிப்பு சிதறுவதற்குள்
"Come on Ramesh don't be naughty In Africa" என்றாள்.

பின்பு நாங்கள் பேசிய பேச்சுகள், போபால் ஸ்டேஷனில் இறங்கி, வண்டி தாமதம் என்றவுடன் காலாற பேசிக்கொண்டு நடந்தது எல்லாம் எழுதவேண்டும் என்றால் இன்னும் குறைந்தது பத்து பதிபபுகளாவது வேண்டும். டெல்லியில் அவளை கூட்டிப் போவதற்கு தாத்தா வருவார் என்றும், டெல்லி வருவதற்கு முன்பு என் உச்சந்தலையில் கையை கவிழ்த்து வைத்து விரல்களால் ஒரு கோலம் போட்டு "பை பை" பிறகு சந்திப்போம் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அவள் சென்றவுடன் அவளிடம் அவள் முகவரியை வாங்க மறந்து விட்டோம் என்ற நினைவு எனக்கு வந்தது. ஆனால் அவள் காலையிலேயே என்னுடைய இருப்பிடம் பூர்வீகம் எல்லாவற்றையும் கேட்டுத்தெரிந்து கொண்டுவிட்டாள். ஆதலால் இனி எங்களுக்குள் மீண்டும் சந்திப்பு என்றால் அவள் தொடர்பு கொண்டால் தான் உண்டு.

பிறகு ஒரு இரண்டு வருடம் கழித்து ஒரு புத்தாண்டு வாழ்த்து அனுப்பி இருந்தாள். அதிலிருந்து எங்கள் கடிதப் போக்குவரத்து தொடங்கியது. அதுவும் எப்படி வருடத்திற்கு ஒருமுறை அல்லது தொடர்ந்து ஒரு மூன்று நான்கு வருடத்திற்கு ஒரு முறை என்று.அவள் தற்போது மணந்து, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகி. லக்னோவில் எங்கேயோ இருப்பதாக் தெரிவித்திருந்தாள். ஒரு முறை தன் குடும்பத்தின் புகைப்படம் அனுப்பியிருந்தாள். சில சமயம் தான் படித்த புத்தகம், பார்த்த சினிமா என்று எழுதுவாள். நானும் என்னுடைய குடும்ப நிலவரங்கள், என் மனைவி, இரண்டு பையன்களைப் பற்றியும் எழுதேவேன்.

பிறகு ஒரு முறை நான் சென்னைக்கு விடுமுறையில் ஒரு உறவினரின் மகள் கல்யாணத்திற்காக சென்ற பொழுது, கல்யாணக் கூடத்தில் என் உச்சந்தலையில் கை வைத்து யாரோ கலைத்தார்கள். திரும்புமுன் என் மனதில் ஆயிரம் என்ன ஓட்டங்கள். திரும்பியவுடன் "பிந்து நீ எங்கே இங்கே என்றேன்" . அவளும் அந்த கல்யாணத்திற்கு பிள்ளை வீடு உறவினராக வந்திருந்தாள். பின்பு என்ன இரண்டு குடும்பங்களுடனான அறிமுகம், நீண்ட நேரம் பேச்சு.

அவள் தன் முதல் பெண்ணுக்கு திருமணம் முடித்து பாட்டியாகி விட்டாலும், அந்த ரயில் பயணத்தில் என்னை திக்குமுக்காட வைத்ததை நினைவு கூர்ந்தாள்.
நாமும் அடிக்கடி பயணம் செய்கிறோம், சில ரயில் சிநேகங்கள் தொடர்கின்றன, ஒரு இன்ப நிகழ்வாய்.

Follow kummachi on Twitter

Post Comment

தெருநாய்க்கு மரியாதை...............


என்னடா திரைப்பட பெயரில் பதிவு, ஆதலால் ஏதோ திரைப்படம் என்று என்ன வேண்டாம். இது ஒரு சொந்த ஆனால் இப்போது நினைத்தாலும் காதோரம் சூடாகும் அனுபவம்.

நான் ஒரு உரத்தொழிற்சாலையில் உற்பத்திப் பிரிவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலம். தொழிற்சாலை ஊரிலிருந்து ஒரு முப்பது கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஆனால் எங்களை அழைத்துப் போக தொழிற்சாலை பேருந்து எங்கள் பேட்டையின் எல்லையில் உள்ள நகர பேருந்து நிறுத்தத்திற்கு வரும். அந்த இடம் என்னுடைய வீட்டிலிருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

எனக்கு மூன்று வேலை சிப்ட் டூட்டி. இதில் மிகவும் கடினமானது மாலை சிப்ட் தான். ஏனென்றால் இரவு வேலை முடித்து பேருந்து நிலையம் வர இரவு பதினொன்றை மணி ஆகிவிடும். அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முப்பது நிமிட இருட்ட்டோடும் தெருக்களில் நடை. இந்த நிறுத்தத்தில் நானும் மற்றொருவனும் இறங்கிக் கொள்வோம். நாங்கள் இருவரும் ஒரே சிப்டில் இருந்தவர்கள். பின்னர் நானும் இவனும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம், அது வேற கதை. கதையின் நாயகனை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம், ஆதலால் மற்ற தகவல்கள் இப்போது ஜுஜுபி மேட்டர்.

நிறுத்தத்திலிருந்து நாங்கள் வீடு சேரும் நேரம் வரை குறைந்தது ஒரு முப்பது தெரு நாய்களாவது எங்களை குறைத்து வழி அனுப்பும். இதில் மேலும் டார்ச்சர் என்னவென்றால் நண்பனின் வீடு முன்பே வந்து விடும். நான் பிறகு தனியாக நாய்க்கு பயந்துகொண்டு இன்னும் நெடுந்தூரம் போக வேண்டும். நாய்கள் அவ்வாறு குறைத்துக்கொண்டு வரும்போது நாயின் முகத்தைப் பார்த்து விட்டால் பயம் முட்டி நமக்கு காதோரம் சூடாகி விடும்.

கொடுமையிலும் கொடுமை மழைக்காலத்தில்தான். தொழிற்சாலையில் மழை காலத்திற்காக நல்ல "டக்பக்" ரெயின் கோட் கொடுத்திருப்பார்கள். அதை மழைக் காலத்தில் நாங்கள் அணிந்து கொண்டு நல்ல மழையில் வரும்போது நாய்க்கெல்லாம் மிகவும் ஆவேசம் வந்து வைக்கோ போல கழுத்து நரம்பு எல்லாம் புடைக்க எங்களை எதோ தீவிரவாதி போல திட்டிக்கொண்டே வரும். நண்பன் மிகவும் பயந்து ரெயின் கோட்டைக் கழற்றி அக்குளில் வைத்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டே வருவான். நான் அவனை ஏன்டா நாய்க்கு இவ்வளவு மரியாதை மாலை கிண்டலடிப்பேன், என்னுடைய ரெயின் கோட் கிழியும் நாள் வரை.

மற்றும் ஒரு நாள் நான் நாய்களுக்கு மரியாதை கொடுக்காமல் ரெயின் கோட்டுடன் வீரமாக நடந்த போது ஒரு ஏழெட்டு நாய்கள் என்னை ஒசாமா பின் லாடனை விட கேவலமாக எண்ணி என்னுடைய "மழை கோட்டை" சின்னா பின்னமாக்கி "மன்மத ராசா" பாட்டில் வருபவளின் உடை போல ஆக்கிவிட்டது. அப்போது நான் பயந்து உள்ளுடையை சூடாக்கியது சரித்திரம்.

கதையின் கிளைமாக்ஸ் இங்குதான். இந்த கிழிந்த கோட்டை நான் மாற்ற சென்ற போது என்னுடைய மேலாளர் என்னை நாய் கொண்டு போட்ட வஸ்து போல பார்த்தது தான் நூறு நாய்கள் துரத்தியதற்கு சமமாக எண்ணுகிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

மீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாமல் வந்த கதை













சென்னையில் ஒரு பொதுத்துறையில் வேலையில் சேர்ந்த நேரம். அப்போது தான் எனக்கு வோட்டுரிமை வந்து நான் ஓட்டுப் போடப் போகும் முதல் தேர்தல். தமிழ் நாட்டின் சட்டமன்றத்துக்கான தேர்தல் அது. ஒரு கட்சி பிளவு பட்டு இரண்டு கட்சிகளாகி தனி தனியாக தேர்தலை சந்திக்கும் நேரம். ஊரெங்கும் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து தேர்தல் நாள். அன்று எனக்கு காலை சிப்ட். வீடு திரும்ப மூன்றரை மணி ஆகி விட்டது. வீட்டுக்கு வந்தவுடன் முகம் கழுவி, காப்பி சாப்பிட்டு விட்டு, வோட்டுச் சாவடிக்கு கிளம்பினேன்.
வாசலைக் கடக்கும் போது, என் வீட்டு பெரிசு "எங்கடாக் கிளம்பிட்டே" என்று ஒரு குரல். "ஹுஉம் ஓட்டுப் போடா நைனா". கம்முன்னு போடா, போய் வூட்டுக்கு கறி வாங்கிக்கினு வா" என்றது. "அப்பாலே வாங்கியாறேன்" என்று நான் சொன்னதற்கு, "த வோட்டுப் போடா போவாதே போய் கறி வாங்கிக்கினு வாடா, சொல்றேன்லே". என்றது. நான் இந்த முறை பதில் ஏதும் சொல்லாமல், ஓட்டுச் சாவடியை நோக்கி நடையைக் கட்டினேன்.


ஓட்டுச் சாவடி முன்னால் உள்ள எதோ ஒருக் கட்சி கொட்டகையில் ஒரு ஐந்து ஆறு ஆட்கள் ஒருக் குறிப்பேட்டைப் பார்த்து, துண்டு சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அடையாள அட்டையெல்லாம் கிடையாது. அவர்களிடம் என் பெயரையும் விலாசத்தையும் சொல்லி சீட்டு வாங்கலாமே என்று அணுகினேன். அவர்கள் என்னுடைய விவரத்தைக் கேட்டவுடன், "உன் வோட்டப் போட்டாச்சுப்பா". இந்தா இந்த சீட எட்துகின்னு எங்க கட்சிக்குப் போடு, ஆபிசெர் கேட்டா உன் பேரு கபாலி, பத்தாம் நெம்பெர் வீடு, எல்லையம்மா கோயில் தெரு, அப்பா பேரு முனுசாமி, அம்மா பேரு பர்வதம்" என்ன தெரிஞ்சுகினியா, என்று சொல்லி ஒருத்தன் வாப்பா என்று ஒரு சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வோட்டு சாவடியில் இறக்கி விட்டு, கண்ணா நல்லா ஞாபகம் வச்சிக்கோ என்று சொல்லி போய் விட்டான். எனக்கு இன்னாடா இவன் நம்ம அட்ரஸ் ஆளையே மாத்திட்டானே என்ற யோசனையுடன் நடந்தேன். ஒரு பள்ளிகூடத்தில் இரண்டு வகுப்புகளை இணைத்து ஓட்டுச் சாவடி ஆக்கியிருந்தார்கள்.

ஒட்டுசாவடியின் முன்பு ஒரு நீண்ட வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் இருந்தவர் கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்து "கிச்னமூர்த்தி, அப்பா பேரு வத்தச்சரி, அம்மா பேரு நாய்ராணி (நாராயணி)" என்று முனுமுத்துக் கொண்டிருந்தார். எனக்கு இப்போது நான் செய்யப் போகும் செயலின் குற்ற உணர்வு தாக்க ஆரம்பித்தது. ஆதலால் நான் மெல்ல வரிசையை விட்டு அகன்று பள்ளியின் வாயிலுக்கு வந்தேன், அங்கு என்னை கொண்டுவிட்டவன் நின்று கொண்டு "இன்னா ஒட்டு போடலை, தா சீட்டைக் கொடு, வந்துட்டானுங்கப்பா" என்று என்னை ஒரு முறைத்து விட்டு சென்றான்.
திரும்பி நான் வீட்டில் உள்ளே போகும் முன்பு பெரிசு "இன்னாடா வோட்டு போட்டியாடா" என்றது.

“இல்லை நைனா எவனோ என் பேர்ல போட்டுட்டான்" என்றேன்.

“அதான் நான் அப்பவே சொன்னேன். உன் பேர்ல காலையிலே பதினோரு மணிக்கு நான் போ சொல்லவே குத்திட்டானுங்க. அவனுகளுக்கு தெரியும் நீ வேலைக்கு போய்கிறேன்னு. தோடா என்னமா கள்ள வோட்டு போடறானுங்க, இனி நாலு மணி ஆச்சின்னா, அல்லாம் கள்ள வோட்டு தான்" என்றார் நைனா.


இந்த வயதிலும் நாட்டு நடப்பு எல்லாம் சரியாக தெரிந்து கொண்ட நைனாவை வியந்தேன்.
அதன் பின்பு நான் பிழைப்புக்கு வேண்டி வெளி நாடு வந்து "NRI" ஆகி ஓட்டுரிமை இல்லாமல் இன்று வரை என்னுடைய ஜனநாயகக் கடமையை செய்ய முடியவில்லை.

நீங்களாவது ஓட்டுப் போடுங்கப்பு.

Follow kummachi on Twitter

Post Comment

புரைதீர்த்த (நைய்யப்புடைத்த) பொய்


நண்பர்களே பொய் சொல்லாதீர்கள், (முக்கியமாக அம்மாக்களிடம்) அப்படி சொன்னாலும் கூட்டு சேர்ந்து சொல்லும் நேரம் வந்தால் உங்கள் வாயால் சொல்லாமல் கூட்டாளியை சொல்லவிடுங்கள். காரணம் என் அனுபவம். சொல்கிறேன் கேளுங்கள்.

உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். என் வீட்டில் அருகில் இருக்கும் நண்பர்கள் நாங்கள் நான்கு பேர் நான், வாசு, கண்ணன், குமார் ஒன்றாக பள்ளிக்கு செல்வோம். நால்வரும் ஒரே வகுப்பு பிரிவும் கூட. ஒரு பொன்னான காலம். பள்ளி முடிந்து வீடு வந்தவுடன், தெருவில் கிரிக்கெட், இருட்டும் வரை விளையாடுவோம்.

பள்ளியில் மதிய இடைவேளையில் கையில் கொண்டு வந்த சாப்பாட்டை முடித்து விட்டு, பள்ளி மைதானத்தில் ஒரு பாட்டம் கிரிக்கெட். விளையாட்டு ஆசிரியர் துரத்தினால் மெயின் ரோடு வந்து பள்ளிக்கு மிதிவண்டியில் வரும் மாணவரின் வண்டியை எடுத்து கற்றுகொள்ளும் முயற்சி.
சம்பவம் நடந்த அன்றும் மதிய இடை வேளையில், விளையாட்டு ஆசிரியர் துரத்தியதால் பள்ளி மதிற்சுவரின் ஓரம் நின்று பேசிக்கொண்டு இருந்தோம். மிதிவண்டி பயில்வதற்கு வண்டியும் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் இந்த குமாருக்கு அந்த விபரீத ஆசை தோன்றியது. பள்ளியை ஒட்டியிருந்த வீட்டில் குதித்து மாங்காய் பறிப்பது என்று. அந்த வீட்டில் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. வீட்டை நோட்டம் விட்ட பொழுது ஆள் நடமாட்டம் தென் படவில்லை. ஆதலால் வாசு, கண்ணன், நான் மூவரும் சுவரேறி குதித்தோம். வாசு உடனே ஒரு மாமரத்தின் மீது கிடுகிடுவென்று ஏறி விட்டான். நானும் வாசுவும் அவன் பறித்துப் போடுவதை பிடிக்க தயாராக நின்று கொண்டிருந்தோம்.

நங்கள் சற்றும் எதிபாராத தருணத்தில், வீட்டிலிருந்து ஒரு குரல், "யாருங்கடா அது பிடி பிடி", தொடர்ந்து ஒரு கன்று குட்டி சைசில் ஒரு நாய் 120 டெசிபெல் சத்தத்தில் குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. நானும் கண்ணனும் ஒரே எத்தில் எகிறி மதிர்ச்சுவரைத் தாண்டி பள்ளிப் பக்கம் குதித்து விட்டோம். வாசு பதட்டத்தில் ஏறிக் குதித்ததில் ஒரு பல் உடைந்து, உதட்டைக் கிழித்து நன்றாக ரத்தம் வடிய ஆரம்பித்தது. இரண்டு முழங்கால் முட்டியிலும் சிராய்த்து நல்ல காயம். குமாரைக் காணவில்லை.

அப்பொழுது பள்ளி இடைவேளை முடிந்து மணியும் அடித்து விட்டார்கள். நாங்கள் வாசுவை நொண்ட வைத்துக் கொண்டு வகுப்பில் நுழையும் பொழுது ஆராவமுது சார் கரும் பலகையில் கணக்கு பாடம் எழுத ஆரம்பித்திருந்தார். நாங்கள் தாமதமாக வருவதற்க்கு திட்ட ஆரம்பிக்கும் முன் அவர் வாசுவைப் பார்த்து “என்னடா ஆயிற்று” என்றார். அவன் பேச்சு வராமல் "சைக்கிள்" என்பதை எங்களுக்கே புரியாமல் சொன்னான். ஆராவமுது சார் கண்ணனையும் என்னையும் நோக்கி சரி அவனை வீடிற்கு பத்திரமாக அழைத்துப் போங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

போகும் வழியெல்லாம் வாசு அழுது கொண்டே அவன் அம்மாவிடம் சைக்கிள் ஓட்டும் பொழுது விழுந்ததாக சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொண்டே வந்தான். உண்மையை சொன்னால் அவர் அப்பா அவனை நைய்யப்புடைத்து விடுவாராம். அவன் வீட்டிற்குள் நுழையும் பொழுது வாசு பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டான். அவன் அம்மா கண்ணனையும் என்னையும் பார்த்து "என்னடா ஆச்சு குழந்தைக்கு நீங்க கீழே தள்ளி விட்டுட்டீங்களா" என்றாள். உடனே கண்ணன் என் முகத்தைப் பார்த்தான், நான் "வந்து இல்லீங்கம்மா, வாசு சைக்கிள் ஓட்டும் பொழுது கீழே விழுந்துட்டான்" என்றேன்.

அப்பொழுது நான் சற்றும் எதிர்பாராமல் வாசு அழுது கொண்டே "இல்லேம்மா ஸ்கூல் பக்கத்து வீட்டில் மாங்காய் பறிக்கும் பொழுது மரத்திலிருந்து விழுந்தேட்டேன்" மேலும் "கார்த்தி தாம்மா என்னை பறிக்க சொன்னான்" என்று என்னை மாட்டி விட்டுட்டான். உடனே வாசு அம்மா என்னை பார்த்து "திருட்டுத்தனம் பண்ணிட்டு பொய் வேறே சொல்லறியா" இரு ஜோதியிடம் (என் அம்மா) சொல்கிறேன் என்றாள்.

பிறகு நான் பயந்து கொண்டே வீட்டை அடைந்தேன். இருந்தாலும் என்னுள் ஒரு நப்பாசை வாசு அம்மா என் வீட்டில் வந்து சொல்லமாட்டார்கள் என்று. மேலும் அவர்கள் என் அம்மாவைப் பார்க்க இதற்காக நெடுந்தூரம் நடந்து வரமாட்டார்கள் என்று அசட்டு தைரியத்தில், மேலும் ஒரு நாலைந்து நாட்கள் கழித்து சொன்னால் விஷயத்தின் வீர்யம் குறைந்து விடும் என்றிருந்தேன்.

ஆனால் நடந்தது வேறு, என் அம்மா காய்கறி வாங்கச் செல்கையில் அன்று மாலையே வாசுவின் அம்மா எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் போலும். அம்மா வீட்டிற்கு வந்தவுடன் இன்று பள்ளிக்கூடத்தில் வாசுக்கு என்னடா ஆச்சு என்றாள். நான் வந்து சொல்ல ஆரம்பிப்பதற்குள் எனக்கு சரமாரியாக அடி முதுகிலும் கன்னத்திலும் விழுந்தது. "ஏன்டா ஏன் மானத்தே வாங்குறே, எங்கேயாவது செத்து ஒழியேன்". நான் எது சொன்னாலும் அவள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆதலால் நான் மெளனமாக இருந்தேன்.
பின்பு அம்மாவிடம் நடந்த உண்மையை சொன்னேன். அவள் எனக்காக வருந்தினாள்.
பிறகு நான் வாசுவிடம் ஒரு வருடம் பேசவில்லை. இப்பொழுது வாசு நியூயார்க்கில் இருக்கிறான். எப்பொழுதாவது என்னைத் தொடர்புகொண்டு பேசுவான். இத்தனை வருடம் ஆனாலும் அவன் என்னைக் காட்டிக்கொடுத்ததை என்னால் மன்னிக்க முடியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

எலி கடித்த வலை................................
















நான் விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பியதும் என் ப்லோகைத் திறந்தால் காணவில்லை. முதலில் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் புலப்படவில்லை.

எலிதான் என் வலைத்தளத்தை பிரித்து பிரித்து மேய்ந்து விட்டதோ.?

இல்லை மகிந்தவும், ங்க்கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவுடன் சேர்ந்து தமிழினத்தை அழிக்கும் பொழுது, என் வலைத்தளத்தையும் குண்டு போட்டு அழித்து விட்டார்களோ.?

இல்லை தமிழினத் தலைவர் குடும்பத்துடன் கூடி டில்லியில் கும்மி அடித்த பொழுது என் வலைக்கு வேட்டு வைத்தார்களோ. ?
இல்லை அம்மாவும், ஐயாவும், சைகொவும் தேர்தல் தோல்வியில் என் வலைக்கு ஆசிட் ஊத்திட்டாகளோ.?

ஒன்றும் புரிய வில்லை. முதலில் கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன். அவர் meta tag, html, என்று ஏதேதோ சொல்லி ஒரு வாரம் அலைக்கழித்து, பழுப்பு நிறத்தில் எலி கொதறிப்போட்ட வலை போல் உள்ளது. என் வலை சுத்தமாக காணவில்லை.

பிறகு சகப் பதிவரின் ஒரு பதிவைப் படித்த போதுதான் தெரிந்தது, இது "nTamil" கைவண்ணம் என்று. வாழ்க "nTamil"

முயற்சியில் மனம் தளராத விக்ரமன் போல், புதிய வலையை துவங்கினேன். கட்டம் கட்டமாக கட்டி அமைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. பிறகு ஒரு பதிவுப்போட்டு தமிளிஷ் லே வந்துள்ளது.

அனால் நான் இழந்தது என்னுடைய பின் தொடர்பவர்களை. "உப்பு மடச்சந்தி ஹேமா, அகநாழிகை, ஆதவா, நைஜீரியா ராகவன் இன்னும் எண்ணற்ற பலர்.மேலும் என்னுடைய பதிவுகளையும், அதைவிட அருமையானப் பின்னூட்டங்களையும்.

என்னுடைய பதிவுகளை நான் கோப்பி செய்தி வைத்திருக்கிறேன். அவற்றை மீள் பதிவாக இடுவதில் தயக்கமிருக்கிறது. படித்ததையே படிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன வேலை வெட்டியா இல்லை. இவனிடம் சரக்கு இல்லை என்று நினைத்து விடுவார்களோ போன்ற பல எண்ணங்கள். ஆனால் போடாமல் இருக்கவும் முடியவில்லை.
கை அரித்துக் கொண்டிருக்கிறது. எங்கு தொடங்குவது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 2 June 2009

அமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப் போடுகிறார்கள்)


அமராவதி எங்கள் வீட்டு வேலைக்காரி. குடுத்த பத்து ருபாய் சம்பளத்திற்கு காலை, மாலை இரண்டு வேளையும் வந்து பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, வீட்டைக் கூட்டி, மெழுகி, வாசலில் அழகாக கோலம் போட்டு விட்டுப் போவாள். அம்மா ஏதாவது சாபிடக்கொடுத்தால் அதை ஒரு பழைய பாத்திரத்தில் வைத்து தன் கணவருக்கும் எடுத்து செல்வாள். அவளுக்கு வீட்டில் முழு சுதந்திரம் உண்டு, சுருக்கமாக அவள் "அமரா".

அமரா நல்ல கரிய நிற அழகி. உண்மையில் பல நடிகைகள் இவளிடம் பிச்சை வாங்க வேண்டும். வரிசையான பற்கள், கன்றுக்குட்டி கண்கள், நல்ல வாளிப்பான தேகம். என்னைப் பார்க்க வரும் நண்பர்கள் எல்லோருக்கும் இவளின் மேல் ஒரு கண் என்றால் அது மிகையாகது. உள்ளத்தில் மிகவும் வெண்மை. நாங்கள் அவளை செய்யும் கிண்டல் கேலி எல்லாவற்றிற்கும் ஒரு புன்சிரிப்புதான். சிரிக்கும் பொழுது அவள் முன் எந்த உலக அழகியும் நிற்க முடியாது என்றால் அது இந்த ஜென்மத்தில் ஒரு "under statement"

ஒரு முறை அவள் வந்த பொழுது அம்மா வீட்டில் இல்லாததால் நான் பாத்திரங்களை உள்ளிலிருந்து எடுத்து வந்து வைத்தேன். அதிலிருந்து அவள் எப்போது வந்தாலும் வீட்டில் யாரிருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எதிரில் இருந்தால் "ராசா சாமான் போடு ராசா, தேய்க்கிறேன் என்பாள்". அவளுக்கு இதனுடைய உள் அர்த்தம் தெரியாது. அமரா “பாத்திரம் போடு என்று சொல்” என்று சொன்னாலும் கேட்பதில்லை. ஒரு முறை நான் எனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கும் போதும் அவ்வாறு சொல்ல நான் அவளைக் கடிந்துக் கொண்டேன். என் கோபம் அவளுக்கு விளையாட்டாகி விட்டது போலும். எப்போது என்னைப் பாத்தாலும் "சாமான் போடு ராசா" என்று சொல்லிவிட்டு இடி இடி என்று சிரிப்பாள். நிற்க எதையோ சொல்லவந்து எதோ சொல்லிகொண்டிருக்கிறேன். இந்தக் கதை அமரா வோட்டு போட்டதைப் பற்றி.

அந்த முறை பாராளுமன்றத்திற்கு தேர்தல் வந்தது. ஊரே அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக திரண்டிருந்த காலம். இப்போது போல நிறையக் கட்சிகள் எல்லாம் கிடையாது. இரண்டு கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி. புதியக் கட்சிதான் எதிர்க் கட்சி. எல்லாப் பெருந்தலைவர்களும் ஒன்று திரண்ட மக்கள் கட்சி. இளைஞர் பட்டாளம் எல்லோரும் "அவசர" நிலைக்குப் பிறகு மக்கள் கட்சிக்கு ஆதரவாக திரண்டிருந்தனர்.
அமராவுககு எந்த கட்சிக்கு வோட்டு போடுவது என்று குழப்பம். ராசா எந்த சின்னத்துல ராசாக் குத்தனும் என்று என்னிடம் கேட்டதால், நான் கட்சியின் சின்னத்தை சொல்லி போடச் சொன்னேன், “ஏன் ராசா மாடு சின்னம் காட்றாங்களே ராசா மாடுதானே நமக்கு பால் தருது” என்றாள். அதில்லை அமரா நமக்கு சோறு போடறது யாரு "உழவர்கள்தானே" அதால "ஏர் உழவனுக்கு போடு’ என்றேன் . தேர்தல் நாள் வரை இதே கேள்விதான். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தேர்தல் நாள் வந்தது, அமரா அன்று மாலை வீட்டுக்கு வந்த பொழுது, என்ன அமரா "ஏர் உழவணில" குத்தினயா என்று கேட்க, இல்ல ராசா "மயில் சின்னத்துல" போட்டுட்டேன் ராசா என்றாள். நான் ஏன் என்று கேட்டதற்கு “மயில் முருவரோட வாகனம் அவர் இல்லாங்காட்டி பசுவும் கிடையாது உழவனுக்கும் கிடையாது” என்று என்னை திக்கு முக்காட வைத்தாள்.

அந்த மயில் சின்னத்துல நின்றது எங்கள் ஊரில் உள்ள தேங்காய் மூடி வக்கீல் ஒருவர். தேர்தல் முடிவு தெரிந்த பொழுது மயில் சின்னத்தில் நின்ற வக்கீலுக்கு மொத்தம் பதிமூன்று வாக்குகள். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் மொத்தம் பண்ணிரெண்டு பேர்.

Follow kummachi on Twitter

Post Comment

கமலா டீச்சர்-மீள் பதிவு












இதுவரை 49 போட்டாகிவிட்டது, ஓரளவுக்கு வாக்குகளையும், பின்னூட்டங்களையும் பார்த்திருந்தும் எனக்கு போதித்த என்னுடைய "கமலா” டீச்சரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் மற்ற மொக்கைப் பதிவை இடுவதில் ஒரு குற்ற உணர்வு அரித்துக்கொண்டிருக்கிறது. ஆதலால் இந்தப் பதிவு முழுக்க முழுக்க கற்பனை கலக்காமல் கமலா டீச்சர் பற்றிய பதிவு, இதை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

நான் படித்தது ஒரு நடு நிலைப் பள்ளி, எட்டாவது வரை தான், மேல் நிலைப் பள்ளிக்கு ஊரை விட்டு இன்னும் வெளியே நான்கு மைல் போக வேண்டும். அந்த எட்டாவது வகுப்பின் கிளாஸ் டீச்சர் தான் கமலா டீச்சர். மொத்தம் உள்ள ஆறு பாடத்திற்கு, மூன்று டீச்சர்கள் தான். கமலா டீச்சர் எங்களுக்கு தமிழும், கணக்குப் பாடமும் எடுத்தார்கள். நல்ல இழுத்து பின்னிய தலை முடி, தங்க நிற தேகம், நெற்றியில் வட்டவடிவில் குங்குமப் பொட்டு. நல்ல துவைத்து நேர்த்தியாக கட்டிய பருத்திப் புடவை. மொத்தத்தில் டீச்சரைப் பார்த்தால் ஒரு மரியாதைத் தோன்றும்.

டீச்சர் தமிழ் சொல்லித்தரும் விதம் அலாதி, ஒரு செய்யுளை எடுத்தால், முதலில் செய்யுளை ஒரு முறை சொல்லி, பதவுரை, பின்பு பொழிப்புரை என்று இரண்டு முறை சொல்லுவார்கள். பின்பு வகுப்பில் உள்ள முதல் வரிசைப் பையன்களில் ஒரு இரண்டு பேர் பெண்களில் ஒரு இரண்டு பேரை திரும்ப மேற்படி வரிசையில் திரும்ப சொல்ல, விருப்பமுள்ள மற்ற மாணவர்கள் அதை கவனித்தால் போதும், குறிப்பு எடுக்கத்தேவையில்லை. வேணுமென்றால் கடினமான வார்த்தைகளின் பொருட்களை பென்சிலினால் பாடப்புத்தகத்தில் குறித்துக் கொண்டால் போதும். புரியாத மாணவர்களுக்கு எத்தனை முறை கேட்டலும், கோபப்படாமல் விளக்குவார்கள். டியூஷன் விவகாரமெல்லாம் டீச்சரிடம் கிடையாது. மற்ற டீச்சர்கள் இரண்டாவது முறை கேட்டாலே பெற்றோரை கூப்பிட்டு டுஷனுக்கு அச்சாரம் போட்டு விடுவார்கள். இதற்கு நமக்கு வீட்டில் பூசை கிடைக்கும், வீனா செலவு வைத்ததற்காக, அது தனிக் கதை.

தேடிச்சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
வாடித் துன்பம் மிக உழன்று,
பிறர் வாடப் பல இன்னல்கள் செய்து,
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி,
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்,
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ

இதை கமலா டீச்சர் சொல்லித்தரும் பொழுது, கவியின் வேட்கையை டீச்சரிடம் காணலாம். டீச்சரின் கையெழுத்து ஒரு கை தேர்ந்த "calligraphy". அடுத்த பாட ஆசிரியர் வரும் முன் வகுப்பு லீடரான நான் கரும்பலகையை சுத்தம் செய்ய வேண்டும். கமலா டீச்சர் வகுப்பு முடிந்தவுடன் அதை செய்யும் பொழுது என்னை அறியாமல் வரும் தயக்கத்தை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். டீச்சரின் கணக்குப் பயிற்சி, எந்தப் பரீட்சையிலும் நூறு மார்க் வாங்க வைத்துவிடும். முக்கியமான செய்தி கமலா டீச்சர் மற்ற ஆசிரியர்கள் போல பிரம்பு கொண்டு வரமாட்டார்கள். மற்ற ஆசிரியர்கள் வருமுன், பிரம்பு வகுப்பில் நுழைந்துவிடும். கமலா டீச்சர் யாரையும் கடிந்தோ, அடித்தோ நாங்கள் பார்த்ததில்லை. மாணவர்களிடம் சொந்த வேலை வாங்கமாட்டார்கள். "காட்டாள் வெங்கிடு" வாத்தியார் மதிய இடை வேளைக்கு இருபது நிமிடம் முன்பாகவே ஓட்டலில் தோசை வாங்க இருவரை அனுப்பிவிடுவார்.

நான் எட்டாம் வகுப்பு முடிந்து, மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, வேலை என்று கால ஓட்டத்தில் கரைந்த பின்னர், ஒரு பதினைந்து வருடம் கழித்து ஒரு நண்பனுடன் வெளியே சென்று கொண்டிருக்கும் பொழுது கமலா டீச்சர் தெருவில் நடந்து வருவதைப் பார்த்தேன். என்னைப் போல கமலா டீச்சரை கொண்டாடியவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். அவர்களின் முன்பு சென்று வணக்கம் சொல்லி பேசியிருக்க வேண்டும். நான் அவ்வாறு செய்யவில்லை காரணம், என் கையிலிருந்த பாழாய்ப்போன "சிகரெட்". அவர்களின் பார்வையைத் தவிர்த்து வேறுபுறம் திரும்பிக் கொண்டேன்.

பிறகு நான் வெளிநாடு வேலை என்று டொலர்களையும், பௌண்ட்சையும் துரத்தி ஒரு முறை விடுமுறையில் ஊருக்கு வந்த பொழுது எதேச்சையாக நண்பனிடம் கமலா டீச்சரைப் பற்றி பேச்சு வந்த பொழுது, கமலா டீச்சர் இப்பொழுது, கணவரை இழந்து, தன் ஒரே பிள்ளையாலும் கை விடப்பட்டு கஷ்டப் பட்டுக்கொண்டிருப்பதாக சொன்னான், இவ்வளவு சொன்னவனுக்கு டீச்சரின் தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை.

அன்று நான் வீடு வந்து என் மனைவியிடம் கமலா டீச்சரை ஸ்லாகித்து, மேலும் டீச்சரின் இன்றைய நிலைமையை சொன்ன பொழுது "அவள் நீயெல்லாம் ஒரு மனுஷனா" என்ற பார்வைப் பார்த்தாள். மேலும் ஒரு விஷயத்தை அவளிடம் சொன்னால் நான் மறந்தாலும் அவள் விட மாட்டாள். திரும்ப திரும்ப கமலா டீச்சரின் இருப்பிடத்தைக் கேட்டு நச்சரித்துக்கொண்டே இருப்பாள். மேலும் “அந்தப் பாழாய்ப்போன சிகரெட் பழக்கம் இல்லாமல் இருந்தால் டீச்சரைப் பார்த்து இருப்பீர்கள் இல்லையா, விட்டுத்தொலைங்களேன்” என்று உபதேசம் வேறு. ஆதலால் இருபது வருடப் புகைப் பழக்கத்தை அப்போது விட்டேன்.

ஆனால் கமலா டீச்சரைப் பற்றி ஒவ்வொருமுறை ஊருக்கு போகும் போதும் வகுப்புத் தோழர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இருப்பிடம் தெரியவில்லை. மனைவியோ எப்போதாவது டீச்சரைப் பற்றி ஆரம்பித்து, “எவ்வளவோ பேருக்கு ஏதேதோ உதவி செய்கிறீர்கள், டீச்சரைக் கண்டுபிடித்து ஏதாவது செய்ய முடியவில்லையே” என்று ஆதங்கப் படுவாள்.

அவளுக்குத் தெரியாது கமலா டீச்சரின் "தன்மானமும், கொள்கைப்பிடிப்பும்"

Follow kummachi on Twitter

Post Comment

நாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்


இந்தக் கதை ஒரு நண்பனின் உறவினருடன் நாங்கள் கண்ட ரெகார்ட் டான்ஸ் பற்றியது. சற்று ஒரு மாதிரியாக குன்சாவாக இருக்கும், ஆதலால் விடலைப்பசங்கள், பொடியர்கள் மற்றும் விரல் சூப்பத் தெரியாதவர்கள் "ஜூட்" விடலாம்.

படித்து முடிந்து வேலை தேடும் சமயம், செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, போஸ்டல் ஆர்டர் வைத்து விண்ணப்பித்துக் கொண்டிருந்த நேரம். அம்மா காலையில் நன்றாக சமைத்து வைத்திருப்பாள். வீட்டில் மற்ற எல்லோரும் அலுலகம், கல்லூரி என்று காலையில் புறப்பட்டவுடன், அம்மாவுடன், அமர்ந்து நல்ல சாப்பாடு. பின்பு ஒரு தூக்கம், மதியம் எழுந்தவுடன், கறந்த பாலில் நல்ல காபி, பின்பு காலாற நடந்து நாயர் கடையில் ஒரு தம், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, விளையாட்டு என்றிருந்து ஒரு மாதிரியான "Boredom" வந்து விட்ட நேரம்.

நண்பன் முத்துராமனின் இரண்டாவது அக்காளுக்கு திருமணம் நிச்சயமாகி, கல்யாணம் திண்டிவனத்தில் நடக்கவிருந்தது. எங்கள் நண்பர்க் குழுவின் எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். எல்லோரும் போகலாம் என்று பிளான் போட்ட நேரம், எனக்கு அப்பாவிடம் அனுமதி கிடைக்காது. ஆனால் நண்பர்கள் என்னை வற்புறுத்தியதாலும், மேலும் அங்கு நிழலான காரியங்கள் செய்யலாம் எனக்கு ஆசை காட்டினார்கள். ஆதலால் அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். எப்படியோ அப்பாவிடம் பேசி எனக்கு அனுமதியும், என் செலவுக்கு பணமும் வாங்கிக் கொடுத்து விட்டாள்.

கல்யாணத்திற்கு எல்லாம் முதல் நாள் காலையிலேயே திண்டிவனம் போய் சேர்ந்து விட்டோம். இரவு மாப்பிள்ளை அழைப்பெல்லாம் முடிந்தவுடன், நண்பர்கள் எல்லோரும் இரவு அருகில் உள்ள விடுதியில் ஒரு ரூம் எடுத்து, முதலில் சிறிது பீர் அருந்தினோம். இதில் நண்பன் முத்துராமனும் அடக்கம். ஆனால் அவன் விரைவில் கல்யாண விடுதிக்கு செல்லவேண்டும் என்று புலம்பிக்கொண்டிருந்தான். ஆனால் நண்பர்களில் ஒருவன் இங்கிருந்து ஒரு ஐந்துக் கிலோமீட்டர் தூரம் போனால் ஒரு இடத்தில் ரெகார்ட் டான்ஸ் நடப்பதாகவும், அதற்க்கு போகலாம் என்று ஆசை காட்டினான். விரைவில் வந்துவிடலாம் என்று முத்துராமனையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டோம். இதற்கெல்லாம் தலைவன் "கஜக்கோல்" என்கிற ஸ்ரீதர் தான். அவன் யாரிடமோ சொல்லி ஒரு நான்கு வாடகை சைக்கிளுக்கு ஏற்பாடு செய்துவிட்டான். எல்லோரும் அந்த நிழலான இடத்தை அடைந்தோம்.




அது ஒரு பழைய வீடு போல இருந்தது. நடுவில் முற்றமும், சுற்றி நான்கு தாழ்வாரமும் இருந்தது. அதன் வடக்கு மூலையில் ஒரு ஆறு பேர் சில வாத்தியக் கருவிகளுடன் அமர்ந்து, அதை அப்பப்போ தட்டிக்கொண்டு இருந்தனர். நாங்கள் யாவரும் ஒரு இடத்தில் அமர்ந்து செட்டில் ஆகும் முன்பு அந்த இடத்தில் விளக்கு அணைக்கப்பட்டது. வாத்தியங்கள் உயிர் பெற்று எழுந்தவுடன் ஒரு சிகப்பு ஜிகினா உடை அணிந்து ஒருத்தி கீச்சுக் குரலில் பாடினாள். எங்களுக்கெல்லாம் இவள் தான் ஆடப்போகிராளா, அல்லது வேறு யாராவதா எப்படி இருக்கும் என்ற ஆவலில் மயான அமைதியிலிருந்தோம்.பிறகு ஒரு சிறிது செகண்ட் இடைவெளியில் அடுத்த பாட்டு துவங்கியவுடன் வேறொருத்தி வந்து புல் கவர் செய்து ஆடிவிட்டு போனாள்.(அம்பயர் பக்னர் பார்த்தல் எல்.பி.டௌபில்யு தான்) , அப்போது நண்பன் கஜகோல் அருகில் இருப்பவரிடம் விசாரித்ததில் இங்கு நேரம் போகப்போக அம்மண கு. ஆட்டமும் இருப்பதாக தெரிவித்தான். எங்கள் எல்லோருக்கும் காதெல்லாம் ஜிவ் என்று ஆகி, மேற்படி ஆட்டத்தை காண அடுத்து யுவதியின் வழிமேல் விழி வைத்து காத்திருந்தோம். மேற்படி ஆட்டத்தை போலவே மேலும் ஒரு நான்கு ஐந்து ஆட்டங்கள் வேறு வேறு பேர் ஆடிவிட்டு போனார்கள், ஒன்றும் சுகமில்லை. பிறகு ஒரு பத்து நிமிட இடைவேளைக்காக எல்லா இடத்திலும் விளக்கு போடப்பட்டது.

நிற்க, அப்போது தான் என் கூட வந்திருந்த பாலு, "சொம்பை" எதிர் தாழ்வாரத்தில் பார்த்து விட்டன், பிறகு எங்கள் எல்லோரிடமும் டேய், "சொம்பும்" இங்கே வந்திருக்குடா என்றான். எங்கள் எல்லோரையும் விட முத்துராமனுக்கு தான் திகைப்பும் பயமும். நாங்கள் எல்லோரும் வெளியே இருட்டில் வந்து தம் அடிக்கும் பொது, முத்துராமன் கல்யாண கூடத்திற்கு திரும்பிவிடலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்தான். ஆனால் எங்கள் எல்லோருக்கும் இவ்வளவு தூரம் வந்து விட்டு எதிர் பார்க்கும் அம்மண கு. ஆட்டம் பார்க்காமல் போவதாக இல்லை. ஒஹ், சொல்லமறந்து விட்டேன், முத்துராமனின் பயத்திற்கு காரணம், பாலு சொன்ன அந்த “சொம்பு” என்பது முத்துராமனின் பெரிய அக்காவோட கணவரின் பட்டப்பெயர். பெயர்க்காரணம் ஒன்றும் ஆச்சர்யம் அல்ல, இவர் ஒரு ஒன்றும் தெரியாதவர் போல இருப்பார், கொஞ்சம் லூசும் கூட. மேலும் அவர் முத்துராமனின் குடும்பத்திற்கு மிகவும் மரியாதைப்பட்டவர். ஆதலால் அவர் கண்ணில் பட்டால் வீட்டில் எல்லோரிடமும் சொல்லி விடுவாரென்று பயம்தான்.

ஆனாலும் அவனை எப்படியோ சமாதனம் செய்து, தலையில் ஒரு கர்சிப் கட்டி நாங்கள் பழைய இடத்திலே விளக்கு அணைத்தவுடன் போய் அமர்ந்து கொண்டோம். ஆட்டம் தொடங்கியவுடன் முதலில் வந்தவள் தன் மேல்பாகம் முழுவதையும் ஒரு நான்கு செகண்டுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் காட்டிசென்றாள். அடுத்த வந்த இரண்டு நுங்கு மார்பு நங்கைகள் முழுவதும் மேலாடையை துறந்து ஆட அந்த இடத்தில் சற்று ஜிவென்று சூடு ஏற ஆரம்பித்த சமயம், மற்றுமொரு இடைவேளை, விளக்குகள் எரிய, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, முத்துராமனின் பக்கத்தில் சொம்பு, முதலில் என்னை அடையாளம் கண்டு, "எங்கேடா இங்கே" என்று ஒரு முறை முறைத்து, பின்பு முத்துராமனையும் பார்த்துவிட்டது. எப்படிடா வந்தீர்கள் என்று, கேட்க, நாங்கள் பயத்தில் அது வந்து இந்த கஜகோல் தான் என்று நாங்கள் தடுமாறிய போது, எப்படி திரும்ப போகிறீர்கள் என்று வினவியது. அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது இது வரும்போது எப்படியோ இங்கு வந்து விட்டது திரும்புவதற்கு எங்களை எதிபார்க்கிறது. சைக்கிளில் வந்தோம் சார் என்றோம். நிற்க.

இப்போது எங்களுக்கு இந்த சொம்பைக் கண்ட பயம் ஒரு புறம், மேற்படி நடனத்தை எதிர்ப்பார்த்து, ஆவல் எல்லாம் கலந்துக்கட்டி இருக்கும் நேரம் அந்த சரித்திர புகழ்க் பெற்ற அம்மண. கு ஆட்டம் தொடங்கியது. முதலில் எல்லாம் அணிந்து அதை ஒரு குப்பையாக மேல்புறம் மறைத்து கொண்டு ஒருத்தி வந்து ஆடத்தொடங்கினாள். சிறிது நேரத்திலேயே திறந்த மார்பாகிவிட்டாள். ஆனால் இந்த கதையின் "ஹைலைட்" அவள் ஆடிய பத்து செகண்ட் நிர்வாண நடனம் அல்ல. அவள் ஆடிய பொழுது அவளை ஒரு நூறு ருபாய் தாளை வைத்துகொண்டு சொம்பு அவளை அழைத்ததும், பின்பு அவள் அவருக்காக ஒரு பிரத்தியேக நடனம் ஆடியதும்தான்.

இதற்க்கெல்லாம் முத்தாயிப்பாக சொம்பு திரும்பும் பொழுது "இது என்னடா ஆட்டம்னு இதப் பார்க்கவந்தீக" என்றார். சார் அது வந்து என்று நான் இழுக்கும் பொது, "பாண்டிச்சேரி வாங்கடா அங்க என்னமா இருக்கும்" என்றார்.

இப்போதெல்லாம் "சொம்பைப்" பார்த்தால் என்ன சார் எப்போ பாண்டி போலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 1 June 2009

பீனாவின் நிலை


சுதீஷை நான் ஒரு பார்ட்டியில் சந்தித்தேன். அவன் என்னுடன் பேசிய விதமும் நடந்து கொண்ட முறையும் என்னுள் எப்பொழுதும் எழுந்து அடங்கும் நிராசையை மறுபடியும் தூண்டிவிட்டது. அவன் என்னைவிட ஒரு நான்கு வயது அதிகம் இருப்பான் போலத் தோன்றியது. அந்தப் பார்ட்டிக்கு நான் அழைக்கப்பட்டாலும் அங்கு எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய வாழ்க்கை நான் வாழவில்லை.

நான் கேரளா மாநிலத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். என்னுடைய தாய் என்னையும் என் தம்பியையும் நன்றாகவே வளர்த்தாள். என்னை நன்றாக படிக்க வைத்தாள். ஆனால் நான் வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது, என் தாய் தவறான அறிவுரைகளால் என்னை நடிகையாக ஆக்க ஆசைப்பட்டாள். என்னுடைய உடல்வாகும், நிறமும், அழகும் பார்ப்போரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும்.

அவள் என்னை ஒரு தயாரிப்பாளரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவர் என்னை போட்டோ சூட் என்று ஏதேதோ சொல்லி என்னை தனிமைப் படுத்தி அவர் தேவையை முடித்துக் கொண்டார். அவர் எடுக்கப் போகும், படத்தில் நான் தான் கதாநாயகி என்றும் என்னை ஆசைக் காட்டி மேலும் இரண்டு மாதங்களுக்கு என்னை உபயோகப் படுத்திய பின் ஒரு நாள் படப்பிடிப்பில் எனக்கு மேக்கப் எல்லாம் போட்டு, நடிக்க வைத்தார் ஆனால் கதாநாயகியின் ஆறு தோழிகளில் ஒருத்தியாக. அந்தப் படம் இன்றுவரை வெளிவரவில்லை. கதாநாயகி மற்ற தோழிகளின் கதியும் தெரியவில்லை. இவை எல்லாம் என் அன்னையின் மேல் எனக்கு தீராத கோபத்தை உண்டாக்கியது. நான் என் அன்னையிடம் விவரத்தை சொன்ன பொழுது அவளின் மெத்தனம் மேலும் என்னை வெறுப்படைய செய்தது.

எல்லா சராசரிப் பெண்களுக்கும் தோன்றும் கல்யாணம், குடும்பம் போன்ற ஆசைகள் எனக்கு நிராசையாக தோன்ற ஆரம்பித்தது. அப்பொழுது தான் எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு நபர் என் வீட்டிற்கு வந்தார், அவர் அம்மாவிடம் என்னை கல்யாணம் செய்து கொள்வதாகவும், இரண்டு மாதம் கழித்து சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாகவும் சொன்னார். ஆதலால் என்னை அவருடன் ஜாலியாக இருக்கச் சொல்லி அம்மா கட்டாயப் படுத்தினாள். அந்தக் கயவன் இரண்டு மாதம் கழித்து காணாமல் போனான்.

இப்பொழுது ஒரு தொழிலதிபக் கிழவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறேன். கிழவன் எங்கள் குடும்பத்தை நன்றாகவே கவனித்துக் கொள்கிறான். எங்களை இப்பொழுது சென்னையில் செட்டில் செய்து விட்டு தம்பியை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கும் டூ வீலர், கம்ப்யூட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்து குடும்ப செலவிற்கு ஏராளமாகவே பணம் தருகிறான். ஆனால் என் உணர்ச்சியை குழிதோண்டி மண்போட்டு மூடிவிட்டான், படுபாவி. அன்னை என் நிலைமையை புரிந்து கொண்டு நான் எப்போதாவது ஜிம்மில் பார்க்கும் ஏதாவது ஒருவனை மாட்டி, கிழவன் ஊரில் இல்லாத நாளில் அழைத்துக் கொண்டு வந்தால், அவர்கள் கொடுக்கும் எச்சில் பானத்தை குடித்து அவர்களுக்கு கோழி வறுவல் கொடுத்து, எங்களை முதலிரவு அறைக்கு அனுப்பும் தோழி போல அனுப்பிவைப்பாள்.

என் வாழ்க்கையை விமர்சிக்கும் முன்பு, என்னை ஒரு முறை பார்த்து என்னுடன் பேசிப் பாருங்கள் ஒவ்வொரு ஆண்மகனும் என்போன்ற ஒருத்திக்கு ஏதாவது ஒரு சமயத்தில் ஏங்குவீர்கள்.

சுதீஷும் நானும் அந்தப் சந்திப்பிற்குப் பின் நன்றாக பழக ஆரம்பித்தோம். அவன் வேலை நிமித்தமாக வெளி ஊர்களுக்கு சென்று தங்கும் பொழுது என்னையும் கூட்டிச்செல்ல ஆரம்பித்தான். சில சமயம் இரண்டு மூன்று நாட்களுக்கு தங்கும் பொழுது அவன் அலுவலகம் செல்லும் நேரங்களில் அவனுடைய உடைகளை ஒழுங்குப்படுத்தி அவனுக்காக ஒரு மனைவியைப் போலக் காத்துக் கொண்டிருப்பேன். சுதீஷ் என்னை மிகவும் நன்றாகவே நடத்தினான்.

சுதீஷ் என்னை நன்றாக புரிந்துக் கொண்டான். நான்தான் சுதீஷிடம் என்னைக் கொடுத்தேன். நான் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். நான் முன்பு சொன்ன என் கல்யாண ஆசை மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.

கிழவனுக்கு நான் ஊர் மேயும் சேதி தெரிய ஆரம்பித்து விட்டது. என் அம்மாவிடம் ஆசை காட்டி எங்களை கூண்டோடு ஐதராபாடுக்கு மாற்றி விட்டான். அங்கு என் அம்மாவின் பெயரில் ஒரு பிளாட் வாங்கி என் உணர்ச்சிக்கு மேலும் சமாதிக் கட்டிவிட்டான்.
சுதீஷ் எனக்காக காத்திருந்து, வெறுத்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டான். மறுபடியும் நான் அவனை சந்தித்த பொழுது அவன் சொல்லிய வார்த்தைகள் என்னை வாழ்நாள் முழுவதும் தொடருவது திண்ணம்.

“பீனா நம் சந்திப்பு நீ படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்திருந்தால் நம் இருவர் வாழ்வும் நன்றாக இருந்திருக்கும்”.

Follow kummachi on Twitter

Post Comment

துணை நடிகையும் வாழைக்காயும்


எங்களது கிரிக்கெட் டீமுக்கு என்று தனி பிட்ச் எல்லாம் கிடையாது. தெருவில் மொத்தம் நாற்ப்பது வீடுகள் இருக்கும், இந்த தெருவில் உள்ள விடலைப் பையன்கள் டீம் தான் இது. இரண்டு வீட்டு சுவற்றில் கோடிட்டால் விக்கெட், தெரு தான் பிட்ச். அவ்வபோது பந்து சுவற்றை தாண்டி விழுந்தால், அந்த வீட்டு பாட்டி பல குரலில "எந்த கட்டேலே போறவண்டா கல் எரியறது" என்று 200௦௦ டெசிபல் சௌன்ட் உடும். நான் சொல்லவந்தது கிரிக்கெட் பற்றி அல்ல.
அப்படி ஒரு நாள் விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது, விளையாட்டு ஒரு அசாத்திய மௌனத்துடன் நிறுத்தப்பட்டது. காரணம் எங்கள் வயதினால் ஒருவள் கடந்து சென்றதால். பின்பு விளையாட்டு தொடரும் பொழுது ராஜா தான் கேட்டான், யாரடா இது புதுசா இருக்கு. சுண்டு உடனே டேய் நம்ம பக்கெட் நாரயணன் வீட்டுலே புதுசா குடி வந்திருக்கங்கடா என்றான். அத்துடன் அந்த பேச்சு முடிந்தது, ஏறக்குறைய அவளையும் மறந்து விட்டோம்.
ஒரு நாள் நாங்கள் எங்களது தெருவில் உள்ள ஒரே ஒரு நாடாரின் காய்கறி கடை (இவர் கடைய வைத்து ஒரு பதிவு போடுவோம்ல) அருகே இருந்த பொது எங்கள் விளையாட்டில் ஊடால வந்தவள் அங்கு வந்து வாழைக்காய் வாங்கினாள். அன்று முதல் அவள் பெயர் "வாழைக்காய்" ஆனது.
பிறகு பாலா அவளின் நதி மூலம் ரிஷி மூலத்தை ஆராய்ந்து அன்று விளையாட்டு சமயம் மூதரிக்கப்ப்டது. அவளின் அம்மா ஒரு துணை நடிகை என்ற விஷயம் எல்லோரிடமும் ஒரு வித நிழலான செய்தி ஆக சொல்லப்பட்டது.
அன்று முதல் அவளைக் கண்டால் எங்கள் டீமில் உள்ள மொட்டையும்(ரமேஷ்), கஞ்சுமிட்டி (பெயர்க் காரணம் அறியவில்லை) "வாழைக்காய்" என்று குரல் உடுவார்கள். மேலும் அவள் அவளுடைய அம்மாவுடன் வந்தால் ஒருவன் "வாழைக்காய்" என்பான் மற்றொருவன் ஆமாம் போடு ஒன்னு "எக்ஸ்ட்ரா" என்பான். முதலில் இது அவளுக்கு புரியவில்லை என்றாலும் காலப்போக்கில் அவள் புரிந்துகொண்டு ஒருமுறை நின்று எங்களது விளையாட்டையும் நிறுத்தி முறைத்து விட்டு சென்றாள்.
அடுத்த முறை மேட்டர் கொஞ்சம் சீரியஸ். மற்றோருமுறை வாழைக்காயும் அவள் அம்மாவும் எங்களைக் கடந்தவுடன், விளையாட்டு தொடங்கிய பொது நான் அடித்த புல் bladed சாட் சரியாக வாழைக்காயின் பின்னால் சம அடி, நிஜக்காய் நசுங்கியிருக்கும். நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும், ஒரு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் கஞ்சுமிட்டி சும்மா இல்லாமல் டேய் வாழைக்காய் பஞ்சர் என்றான். பந்தை எடுக்க சென்ற பாலாவோ "எக்ஸ்ட்ரா எட்செட்ட்ரா" என்று கேவலமாக கேலி செய்தான். நிஜமாகவே இது அவர்களை கோபம் கொள்ள செய்தது. வாழைக்காயின் அம்மா என்மேல் தன் பாதரட்சையை பிரயோகம் செய்தாள். மேலும் பல இன் சொற்களையும், சாபங்களையும் என்மேல் வீசினாள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் அவர்களை ஏறக்குறைய மறந்து விட்டோம். முழப் பரீட்சை, லீவ் என்று ரொம்ப பிஸி ஆகி விட்டோம். பிறகு சிறிது நாட்களில் அவர்கள் எங்கள் தெருவை விட்டு போய் விட்டார்கள் என்று பாலா ஒரு நாள் சொன்னான்.

பிறகு இப்போது நாங்கள் எல்லாம் ஒவொரு திசைக்கு மேல் படிப்புக்க்காகவும், வேலைக்காகவும் பிரிந்து ஒவ்வொரு ஊரில் இருக்கிறோம். சிறு வயது நண்பர்கள் இப்போது யார் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரமெல்லாம் தெரியவில்லை.

கிட்டத்தட்ட முப்பைதைந்து வருடத்திற்கு பிறகு சமீபத்தில் நான் விடுமுறையில் குடும்பத்துடன் தாய்லாந்து சென்ற பொது நடுக்கடலில் படகில் செல்லும் போது பாலாவை சந்திக்கப்போகிறோம் என்று நினைக்கவில்லை.
பாலாதான் என்னை அடையாளம் கண்டு வந்தான். பிறகு தன்னுடைய மனைவியை எங்கள் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினான். என்னிடம் இவள் உனக்கு தெரிந்தவள் தான் என்றான். எனக்கு அவளை அடையாளம் தெரிந்த பொது ஏய் இவள் வாழைக்காய் தானே என்று பிறகு நாக்கை கடித்துகொண்டேன்.
சாரிடா மன்னிச்சுக்கோ அவளுடைய பெயர் எனக்கு தெரியாதுடா, நீயும் மனைவி என்று தானேடா சொன்னே, பெயர் சொல்லவில்லையே என்றேன்.
பிறகு நாங்கள் சிறிது நேரம் பேசிவிட்டு, நான் குடும்பத்துடன் அன்றிரவே மத்ய கிழக்கு நாட்டுக்கு திரும்பி விட்டேன். மறக்காமல் இருவரும் தொலை பேசி எங்களை பரிமாறிக்கொண்டோம்.
பிறகு அவர்கள் எப்படி சந்தித்தார்கள், அவன் மனைவியிடமும் மாமியாரிடமும் மன்னிப்பு கேட்டானா என்றெல்லாம் கேட்க ஆவலாக இருந்தது.
அடுத்த முறை அவனை காண்டக்ட் செய்யும் பொழுது கேட்கவேண்டும்.

பிடித்தால் இங்கே வோட்டப் போடுங்க.

Follow kummachi on Twitter

Post Comment