Wednesday 3 June 2009

புரைதீர்த்த (நைய்யப்புடைத்த) பொய்


நண்பர்களே பொய் சொல்லாதீர்கள், (முக்கியமாக அம்மாக்களிடம்) அப்படி சொன்னாலும் கூட்டு சேர்ந்து சொல்லும் நேரம் வந்தால் உங்கள் வாயால் சொல்லாமல் கூட்டாளியை சொல்லவிடுங்கள். காரணம் என் அனுபவம். சொல்கிறேன் கேளுங்கள்.

உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். என் வீட்டில் அருகில் இருக்கும் நண்பர்கள் நாங்கள் நான்கு பேர் நான், வாசு, கண்ணன், குமார் ஒன்றாக பள்ளிக்கு செல்வோம். நால்வரும் ஒரே வகுப்பு பிரிவும் கூட. ஒரு பொன்னான காலம். பள்ளி முடிந்து வீடு வந்தவுடன், தெருவில் கிரிக்கெட், இருட்டும் வரை விளையாடுவோம்.

பள்ளியில் மதிய இடைவேளையில் கையில் கொண்டு வந்த சாப்பாட்டை முடித்து விட்டு, பள்ளி மைதானத்தில் ஒரு பாட்டம் கிரிக்கெட். விளையாட்டு ஆசிரியர் துரத்தினால் மெயின் ரோடு வந்து பள்ளிக்கு மிதிவண்டியில் வரும் மாணவரின் வண்டியை எடுத்து கற்றுகொள்ளும் முயற்சி.
சம்பவம் நடந்த அன்றும் மதிய இடை வேளையில், விளையாட்டு ஆசிரியர் துரத்தியதால் பள்ளி மதிற்சுவரின் ஓரம் நின்று பேசிக்கொண்டு இருந்தோம். மிதிவண்டி பயில்வதற்கு வண்டியும் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் இந்த குமாருக்கு அந்த விபரீத ஆசை தோன்றியது. பள்ளியை ஒட்டியிருந்த வீட்டில் குதித்து மாங்காய் பறிப்பது என்று. அந்த வீட்டில் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. வீட்டை நோட்டம் விட்ட பொழுது ஆள் நடமாட்டம் தென் படவில்லை. ஆதலால் வாசு, கண்ணன், நான் மூவரும் சுவரேறி குதித்தோம். வாசு உடனே ஒரு மாமரத்தின் மீது கிடுகிடுவென்று ஏறி விட்டான். நானும் வாசுவும் அவன் பறித்துப் போடுவதை பிடிக்க தயாராக நின்று கொண்டிருந்தோம்.

நங்கள் சற்றும் எதிபாராத தருணத்தில், வீட்டிலிருந்து ஒரு குரல், "யாருங்கடா அது பிடி பிடி", தொடர்ந்து ஒரு கன்று குட்டி சைசில் ஒரு நாய் 120 டெசிபெல் சத்தத்தில் குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. நானும் கண்ணனும் ஒரே எத்தில் எகிறி மதிர்ச்சுவரைத் தாண்டி பள்ளிப் பக்கம் குதித்து விட்டோம். வாசு பதட்டத்தில் ஏறிக் குதித்ததில் ஒரு பல் உடைந்து, உதட்டைக் கிழித்து நன்றாக ரத்தம் வடிய ஆரம்பித்தது. இரண்டு முழங்கால் முட்டியிலும் சிராய்த்து நல்ல காயம். குமாரைக் காணவில்லை.

அப்பொழுது பள்ளி இடைவேளை முடிந்து மணியும் அடித்து விட்டார்கள். நாங்கள் வாசுவை நொண்ட வைத்துக் கொண்டு வகுப்பில் நுழையும் பொழுது ஆராவமுது சார் கரும் பலகையில் கணக்கு பாடம் எழுத ஆரம்பித்திருந்தார். நாங்கள் தாமதமாக வருவதற்க்கு திட்ட ஆரம்பிக்கும் முன் அவர் வாசுவைப் பார்த்து “என்னடா ஆயிற்று” என்றார். அவன் பேச்சு வராமல் "சைக்கிள்" என்பதை எங்களுக்கே புரியாமல் சொன்னான். ஆராவமுது சார் கண்ணனையும் என்னையும் நோக்கி சரி அவனை வீடிற்கு பத்திரமாக அழைத்துப் போங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

போகும் வழியெல்லாம் வாசு அழுது கொண்டே அவன் அம்மாவிடம் சைக்கிள் ஓட்டும் பொழுது விழுந்ததாக சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொண்டே வந்தான். உண்மையை சொன்னால் அவர் அப்பா அவனை நைய்யப்புடைத்து விடுவாராம். அவன் வீட்டிற்குள் நுழையும் பொழுது வாசு பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டான். அவன் அம்மா கண்ணனையும் என்னையும் பார்த்து "என்னடா ஆச்சு குழந்தைக்கு நீங்க கீழே தள்ளி விட்டுட்டீங்களா" என்றாள். உடனே கண்ணன் என் முகத்தைப் பார்த்தான், நான் "வந்து இல்லீங்கம்மா, வாசு சைக்கிள் ஓட்டும் பொழுது கீழே விழுந்துட்டான்" என்றேன்.

அப்பொழுது நான் சற்றும் எதிர்பாராமல் வாசு அழுது கொண்டே "இல்லேம்மா ஸ்கூல் பக்கத்து வீட்டில் மாங்காய் பறிக்கும் பொழுது மரத்திலிருந்து விழுந்தேட்டேன்" மேலும் "கார்த்தி தாம்மா என்னை பறிக்க சொன்னான்" என்று என்னை மாட்டி விட்டுட்டான். உடனே வாசு அம்மா என்னை பார்த்து "திருட்டுத்தனம் பண்ணிட்டு பொய் வேறே சொல்லறியா" இரு ஜோதியிடம் (என் அம்மா) சொல்கிறேன் என்றாள்.

பிறகு நான் பயந்து கொண்டே வீட்டை அடைந்தேன். இருந்தாலும் என்னுள் ஒரு நப்பாசை வாசு அம்மா என் வீட்டில் வந்து சொல்லமாட்டார்கள் என்று. மேலும் அவர்கள் என் அம்மாவைப் பார்க்க இதற்காக நெடுந்தூரம் நடந்து வரமாட்டார்கள் என்று அசட்டு தைரியத்தில், மேலும் ஒரு நாலைந்து நாட்கள் கழித்து சொன்னால் விஷயத்தின் வீர்யம் குறைந்து விடும் என்றிருந்தேன்.

ஆனால் நடந்தது வேறு, என் அம்மா காய்கறி வாங்கச் செல்கையில் அன்று மாலையே வாசுவின் அம்மா எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் போலும். அம்மா வீட்டிற்கு வந்தவுடன் இன்று பள்ளிக்கூடத்தில் வாசுக்கு என்னடா ஆச்சு என்றாள். நான் வந்து சொல்ல ஆரம்பிப்பதற்குள் எனக்கு சரமாரியாக அடி முதுகிலும் கன்னத்திலும் விழுந்தது. "ஏன்டா ஏன் மானத்தே வாங்குறே, எங்கேயாவது செத்து ஒழியேன்". நான் எது சொன்னாலும் அவள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆதலால் நான் மெளனமாக இருந்தேன்.
பின்பு அம்மாவிடம் நடந்த உண்மையை சொன்னேன். அவள் எனக்காக வருந்தினாள்.
பிறகு நான் வாசுவிடம் ஒரு வருடம் பேசவில்லை. இப்பொழுது வாசு நியூயார்க்கில் இருக்கிறான். எப்பொழுதாவது என்னைத் தொடர்புகொண்டு பேசுவான். இத்தனை வருடம் ஆனாலும் அவன் என்னைக் காட்டிக்கொடுத்ததை என்னால் மன்னிக்க முடியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

கலையரசன் said...

சின்ன வயசுல என்னனனா வி்லத்தனம்?

அதுகாகவா இன்னம் பேசவில்லை, விடுங்க
பாஸூ.. சின்ன வயசுலா அப்படி, இப்படி இருக்கறது
சகஜம்தான்! மறந்துட்டு நண்பர்களாகுங்கள்!!

அருமை தொடருங்கள்...
ஓட்டு போட்டாச்சு..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.