Wednesday 29 August 2012

துபாயில் கம்பி எண்ணப் போனேன்

துபாய்க்கு வேலைக்கு வந்து ஒன்பது மாதங்களாகிவிட்டது. எங்களுடைய பிரம்மச்சாரிகள் குகையை விட்டு எங்களது நட்புறவு சற்று வெளியே பரவிக்கொண்டிருந்த காலம். அப்படி நட்பானவர்களில் ஒருவர்தான் எஸ்.ஆர்.கே. எங்களுக்கெல்லாம் ரொம்ப வேண்டப்பட்டவர். அதற்கு பிரத்தியேகக் காரணம்(சரக்கு வள்ளல்) உண்டு. அவரால்தான் நான் துபாயில் கம்பி எண்ணப்போனேன்.

இருங்க  அவசரப்படாதீங்க, அதற்கு முன் எஸ்.ஆர்.கே வீட்டுதீர்த்தவாரிகளைப் பற்றி எல்லாம் சொல்லவேண்டும்.

அன்றைக்கு காலையில் எஸ்.ஆர்.கே அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்பொழுது போனில் கூப்பிட்டார்.

யோவ் என்னய்யா பிடுங்கிட்டிருக்க, என்றார்.

வேறென்ன ஆணிதான், சொல்லுங்க என்ன விஷயம் என்றேன்.

ஈவினிங் என்ன ப்ரோக்ராம் என்றார்.

என்ன வழக்கம்போல வெட்டிதான் என்றேன்.

சரி அப்போ வீட்டுக்கு வந்திடு என்றார்.

இல்லை ஸார் வேண்டாம் என்றேன்.

ஏன் என்ன விஷயம் சொல்லு என்றார்.

நான் அங்கே போனால் அவரின் மனைவி சட்டசபையில் எதிரே வந்தமர்ந்த கேப்டனை  அம்மா பார்ப்பதுபோல் என்னை பார்க்கிறார்கள். அதை அவரிடம் சொல்ல முடியாது.

விஷயம் இதுதான் வியாழக்கிழமைகளில் சரக்கடித்து எல்லோரையும் ஒரு வழி பண்ணிவிடுவார்.  மனைவி முறைத்தால் பாட ஆரம்பித்துவிடுவார். அதுவும் குலாம் அலியின் "ஹாங்காமா க்யூன்" என்று அப்படியே தமிழாக்கம் செய்து " ஏனிந்த  கலாட்டா, கொஞ்சம்தானே குடித்திருக்கிறேன், திருடி ஒன்றும் குடிக்கவில்லையே " என்று  அந்த கஸல் பாட்டை ஸ்வரம் பிரித்து  பாடுவார்.

யோவ் என்னய்யா யோசனை வாயான்னா, அவளும்  குழந்தையும் வேறே இங்கே இல்லை ஊருக்கு போயிருக்கிறார்கள் போரடிக்குதுயா என்றார்.

சரி  என்று அவர் வீட்டில் மாலை சென்றேன். வழக்கம் போல தீர்த்தவாரி.  இரவு எல்லோரும் மட்டையாகி காலையில் ஒன்பது மணிக்குதான் முழிப்பு வந்தது. அவர் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லோரும் காலை எழுந்தவுடன்  வீட்டிற்கு சென்றுவிட்டார்கள் போலும்.

அவர்  எழுந்தவுடன் மணி என்னய்யா? என்றார். ஸார் மணி பத்தரை என்றேன்.  பிரேம் எங்கே அவனை ஓட்டலுக்கு போய் இட்லி வாங்க சொல்லு என்றார். ஸார் அவனுக எல்லாம் போயிட்டாணுக. எழுந்திருங்க ஒரு வழியா லஞ்சே சாப்பிட்டுவிடலாம் வாங்க என்றேன்.

எழுந்து ஒரு வழியாக கிளம்பினார். கிளம்புமுன் தன்னுடைய கேமராவை எடுத்துக்கொண்டார். யோவ் கொஞ்சநேரம் துபாயில் போட்டோ எடுத்து விட்டு ஓட்டலுக்கு போகலாம் என்றார். அவர் வண்டியில் கிளம்பி பீச் ஓரம் நின்று சிறிதுநேரம் போட்டோ எடுத்தார். பின்னர் ஃபால்கன் ரௌண்ட்டானா அருகே வண்டியை நிறுத்தி போட்டோ எடுத்தார். அடுத்தது அந்த வங்கியிடம் வண்டியை நிறுத்தினார்.  யோவ் வண்டியைவிட்டு இறங்கி எடுக்கலாம் என்றார். அந்த வங்கியை ஒரு இருபது நிமிடமாக போட்டு எடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு போலிஸ் வண்டி எங்கள் முன் வந்து நின்றது.

போலீஸ்காரர் எங்கள் இருவரிடமும் அரபியில் அடையாள அட்டையைக் கேட்டார். பின்னர் எஸ்.ஆர் கேயின் கேமராவை பிடுங்கிக்கொண்டு எங்களிருவரையும் போலிஸ் வண்டியில் ஏறச்சொன்னார், நண்பர் ஏன் வண்டியை என்னபண்ணுவது என்று போலீசாரிடம் கேட்கவே அவரது அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு அவரை அவரது காரில் வர சொல்லிவிட்டு என்னை போலிஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டனர்.  நல்லவேளை வெள்ளிக்கிழமை மதியம் ஆதலால் தெருவில் கூட்டம் இல்லை, யாவரும் என்னை பார்க்கவில்லை என்றாலும் ஸ்டேஷனில் என்ன பண்ணுவார்களோ, எதற்கு வர சொல்லுகிறார்கள் ஒரு மண்ணும் எனக்குப் புரியவில்லை.

ஜுமேராவில் உள்ள போலிஸ் நிலையத்திற்கு சென்று உயர் அதிகாரியிடம் என்னை ஒப்படைத்தார். அவரை பார்த்தவுடன் எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அந்த உயர் அதிகாரி அரபியில் ஏதோ என்னிடம் கேட்டார். ஒன்றும் புரியவில்லை பின்னர் ஆங்கிலத்தில் எத்தனை நாட்கள் இங்கிருக்கிறாய் இன்னும் அரபி கற்றுக்கொள்ளவில்லையா? எதற்கு போட்டோ எடுத்தாய் நீ எந்த க்ரூப் சொல்லு, அதுவும் ஏன் அந்த வங்கியை எடுத்தாய் என்று  கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார்.

சரிதான்  சரியாக மாட்டிக்கொண்டுவிட்டோம்  இந்த மனுஷன் எங்கே இன்னும் வரவில்லை, சரிதான் நமக்கு சிறை நிச்சயம், அடப்பாவி ஒன்றும் செய்யாமல் மாட்டிகொண்டுவிட்டோமே சே அதுவும் இந்த நேரத்தில் அம்மா வேறு பெண் பார்க்க வர சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள், வேலை போய்விடும் என்று ஏதோ ஏதோ எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

பின்னர் எஸ்.ஆர். கே வந்தார் அவரிடம் விசாரணை தொடங்கியது. என்னை ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றனர். கிட்டதட்ட அழும் நிலைக்கு வந்து விட்டேன். அங்கு வந்த மேலும் இரண்டு மூன்று போலீசார்கள் நீதான் அந்த வங்கியை போட்டோ எடுத்தவனா? என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் சென்றனர்.

அந்தப்  பதினைந்து நிமிடத்தில் எனக்குள் என்னென்னவோ தோன்ற ஆரம்பித்து விட்டது. நாம்  கம்பி எண்ணப்போவது நிச்சயம் வீட்டிற்கு எப்படி செய்தி சொல்லுவது என்று ஒரே கவலை. ஏற்கனவே ஜுமேரா ஜெயில் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், சே என்ன எழவுடா இது என்று நொந்து கொண்டிருந்தேன்.

எஸ்.ஆர். கே நிலைமை என்ன ஆகும், அவருக்கு கொஞ்சம் அரபி தெரியும் ஆதலால் அவர் எப்படியும் எஸ் ஆகிவிடுவார், என்றெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தது.

அரை மணி கழித்து எஸ்.ஆர்.கே வந்தார், வாயா போகலாம், ஏன்யா இந்த பயம் பயப்படுற, என்ன தப்பு பண்ணிட்டோம் என்ன பண்ணிடுவாணுங்க. வா போகலாம் என்றார்.

என்ன ஸார் நம்மளை ரிலீஸ் பண்ணிட்டாகளா. என்னது ரிலீசா என்று சிரித்தார்.

யோவ் பயப்படாதே, அந்த  வங்கியை போட்டோ எடுக்கக் கூடாதாம், நமக்கு தெரியாத, சரிடா இந்தா வச்சிக்கோ என்று கேமாராவிளிருந்து பிலிமை உருவி கொடுத்து விட்டேன் என்றார். மேலும் அந்த வங்கியில் கண்ணாடி அறைக்குள் இரண்டு போலீசார் இருக்கிறார்கள் போலும் நீ ஏன் என்னிடம் சொல்ல வில்லை என்றார். ஸார் நான் கவனிக்க வில்லை என்றேன்.

பின்னர் ஊருக்கு சென்று கல்யாணமாகி துபாய் வந்து அங்கிருந்து வேறு வேலை தேடி இங்கு வந்து பல வருடங்கள் ஓடிவிட்டன.

சமீபத்தில் நானும் மனைவியும் வெளியே சென்றுகொண்டிருந்த பொழுது ஒருடிராபிக் நிறுத்தத்தின் அருகில் ஒரு போலிஸ் வேனை பார்த்தேன் முன்னே இரு போலீசார் அமர்ந்திருக்க பின் சீட்டில் ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார். அதை பார்த்தவுடன் இந்த கதை நியாபகம் வர அவளிடம் சொன்னேன்.

சரிதான் ஒரு கிரிமினலை நான் கல்யாணம் செய்து கொன்டிருக்கிறேனா? இதை ஏன் கல்யாணத்திற்கு முன்பு என்னிடம் சொல்லவில்லை என்று என்னை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்..

அது  முதல் எந்த வாக்கு வாதத்திலும் "ஆமாம் நீங்க ஒரு கிரிமினல் உங்களுக்கு என்னைத்தவிர யார் வாழ்க்கை கொடுப்பார்கள், சரி சரி இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி அடுக்கிட்டு கிட்சனை சுத்தம் பண்ணிட்டு வாங்க" என்பது வழக்கமாகிவிட்டது.

"சரி நாளைக்கு என்ன சமையல் செய்யப்போறீங்க" என்று நக்கலடித்துக் கொண்டிருக்கிறாள்.










Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையான திகிலான அனுபவம்! நன்றி!

இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

முத்தரசு said...

அனுபவம்
அயல் நாட்டில்
ம்

திண்டுக்கல் தனபாலன் said...

என்னங்க... இப்படியா பயமுறுத்துறது... (TM 2)

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

அண்ணே 2 வருசத்துக்கு ம்ன்னாடி துபாய் வந்திருந்தப்ப என்னோட ஃபிரண்ட் , புஜாரா-லா பார்ர்டி வர்ரியானு கேட்டான் நான் டயர்டா இருக்கு வரலைனு சொல்லிட்டேன், திரும்பி வரும்போது பசங்க நல்லா குடிச்சிட்டு ஸ்பீடா வந்திருக்காங்க... பொலீஸ்ல மாட்டி அப்புறம் ஏகப்பட்ட கஷ்டத்துக்கப்புறம் 15,000 திராம்ஸ் ஃபைன் கட்டி மறுநாள் வெளில கொண்டுவந்தோம்...

சூதானமாத்தா இருக்கனும் போல....

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி, ஜே. குடிச்சிட்டு வண்டி ஓட்டுவது நல்லதல்ல. அதுவும் மத்தியகிழக்கு நாடுகளில். நம்ம வீட்டு அம்மா வண்டி ஓட்ட ஒத்துக்கிட்டதான் பார்ட்டிக்கு போறது. இல்லையென்றால் வெறும் எழுமேல(Sevenup) தான்.

settaikkaran said...

யப்பா! தலைப்புலேயே வயித்துலே புளியைக் கரைச்சிட்டீங்க! :-)செம எக்ஸ்பீரியன்ஸ்தான்!

Manimaran said...

ரொம்ப திகிலான அனுபவமா இருக்கே...நான் கூட வீடியோ எடுத்து சிங்கப்பூர் போலிஸ் கிட்ட ஒருதடவ மாட்டியிருக்கேன்...

கும்மாச்சி said...

சேட்டைக்காரன், எஸ்.ரா., மணிமாறன் வருகைக்கு மிக்க நன்றி.

ANVICTER said...

nalla thirilingga master.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.