Wednesday 11 April 2018

நடந்தாய் வாழி காவேரி.

உழவர் ஓதை, மதகு ஓதை
மடை நீர் ஓதை தன் பதம் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி

விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி

மருங்கு வண்டு சிறந்த ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழுத்தெல்கி
நடந்தாய் வாழி காவேரி

என்று இளங்கோவடிகள் காவிரி பாயும் அழகை வர்ணிக்கிறார். "கா" என்றால் சோலை, சோலைகளினூடே விரிந்து பாய்வதால் "காவிரி" என்று பெயர் வந்ததாம். ஆனால் சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் காவேரி என்று வருவது கவிதை இலக்கண விதிகளின் படியே எனினும், காவிரி, காவேரி இரண்டும் சரியே.

இதெல்லாம் பேசவோ படிக்கவோ அந்த காவிரி நதி போலவே இனிக்கிறது. ஆனால் காலம் செய்த கோலத்தில் உழவர் ஓதை நின்று போக அவ்வப்பொழுது மதகு ஓதை,  மடை நீர் ஓதை ஹொகனேக்கல்லில் கேட்டால் மேட்டூர் வரை நடந்தாய் வாழிதான். அதற்கு பிறகு "மாண்புமிகுக்கள்" தயவில் ஆடிப்பெருக்கு முன்போ இல்லை சம்பா, குருவை, தாளடி என்று எதாவது ஒரு போகத்திற்கு அணையின் கையிருப்பை வைத்து திறந்து விடப்பட்டால் பின்பு வீராணம் வரை ஊர்ந்தாய் வாழிதான்.

சரி விஷயாத்திற்கு வருவோம் மேற்சொன்ன யாவும் ஏதோ முப்பது வருடங்கள் முன்பு வரை,  இருந்த கதை. கரிகாலன் உபயத்தில் தஞ்சை வளமிக்க நாடாக இருந்த காலம். அதை வைத்து

வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்.

என்று இருந்த காலம் இப்பொழுது அதே காவேரி தண்ணிக்காக சொந்த சகோதரர்களே அடித்துக்கொள்ளும் காலம் இது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வாதி பிரதிவாதி இருவருமே சரியாக வாசித்தார்களா? இல்லை அவரவர் சுயநலத்திற்காக தங்கள் விருப்பபடி புரிந்துகொண்டார்களா? தெரியவில்லை. ஆனால் இதை வைத்து தற்பொழுது தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் எத்தனை பிரிவுகள் உள்ளன என்று உலகத்திற்கு படம் பிடித்து காட்டுகிறது.


இதே மக்கள் பிரச்சினைக்காக மற்ற மாநிலங்கள் போராடும் பொழுது அவர்களது குரல் ஒரே குரலாக ஒலிக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாளில் போராட்டம் பந்த் என அறிவித்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை வாழவிடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள். பந்த் என்பது நம் நாட்டில் "வேலை வெட்டி இல்லாதவர்கள் தெருவுக்கு வந்து வேலைக்கு போறவங்களையும் தெரு வியாபாரிகளையும் வேலையில்லாம செய்வதுதான்".  நேற்று ஒரு கட்சி போராட்டம் இன்னிக்கு ஒரு கட்சி பொது வேலை நிறுத்தம், நாளைக்கு உண்ணா விரதம் பின்னர் ரயில் மறியல் என்று தினமும் மக்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் நேற்று அண்ணா சாலையில் நடந்த போராட்டம் நமக்கு நாமே போராட்டம்? அது என்ன நமக்கு நாமே போராட்டம் என்றால் நமக்கு நாமே அடித்துகொள்வது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சா !!!நீதிமன்றத்துல போய் அடிங்க, இல்ல தண்ணி திறந்துவுடமாட்டோம்னு சொல்ற கர்நாடகாவில போய் அடிங்க. அதுவும் இல்லையா உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்து ஸ்கீமோ அல்லது மேலாண்மை வாரியமோ அமைக்க இரண்டு மாத கால அவகாசம் அளித்த போது தீர்ப்பை உடப்பில் போட்டு கள்ள உறக்கம் உறங்கிய  ராஜதந்திரிகளையோ  இல்லை இதை கண்டும் காணாமல் இருக்கும் ராஜ அடிமைகளையோ அடிங்க, அதென்ன நம்ம ஆளுங்களையே அடிக்கிறது.

இன்னிக்கி ஒரு கூட்டம் பந்த் என்ற பெயரில் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ரயில்மீது ஏறி மறியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ரயில் மீது ஏறி மறியல் செய்துகொண்டிருக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து ஒருவர் நடைமேடையில் தூக்கி எறியப்படும் நேரடி காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியினரும், அமைப்பினரும் ஒவ்வொரு விதமாக போராட்டங்களையும் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை தாக்குவதும், மற்றபடி ஒரே மேடையில் போராடிக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் மற்றுமொருவரை இழித்துப் பேசுவதும் நமக்குள் இருக்கும் ஒற்றுமை இன்மையை உலகிற்கு பறை சாற்றுகிறது.

காவிரி மேலாண்மைக்காக நாம் உலகின் கவனத்தை ஈர்க்கிறோமோ இல்லையோ, "ஆயிரம் உண்டு இங்கு பிரிவு" என்று நமது பலவீனத்தை எதிரிக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

இந்த தான்தோன்றி அரசியல்வாதிகளும்,  கட்சிகளும் இருக்கும் வரை இனி காவிரி உழவர் ஒதை, மதகு ஒதை, விழவர் ஒதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி என்று பாயமாட்டாள்.


Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

ராஜி said...

சில ஆர்வக்கோளாறுகளால் போராட்டம் திசை மாறிடுமோன்னு பயமா இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம் தான் என்ன சொல்ல.

சில விஷயங்கள் பார்க்கும் போது மனதில் வேதனை. எல்லாமே அரசியலாகிவிட்டது இங்கே.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.