Thursday 14 May 2015

நாலும் மூனும் எட்டு?

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுமீதான  தீர்ப்பு வந்து நான்கு நாட்களாகின்றன, தீர்ப்பிற்கு பிறகு எதிர்பார்த்த நிகழ்வுகள் ஒன்றும் நடக்கவில்லை.

"ரர"க்கள் தற்பொழுது நடப்பது தெரியாமல் கூட்டம் கூட்டமாக மொட்டை அடித்துக்கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் நேர்த்திக்கடனை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆத்தா வீட்டின் முன் கூடி வெடிவைத்து கொண்டாடிய கூட்டங்கள் எப்படியும் தங்கள் தெய்வம் உப்பரிகையில் வந்து காட்சி அளிக்கும் வரம் தரம் என்று எதிர்பார்த்து பின்னர் கடை நோக்கி கிளம்பிவிட்டனர்.

தீர்ப்பு வந்த அடுத்த தினமே, தீர்ப்பின் நகல் கர்நாடக உயர்நீதிமன்ற தளத்தில் போடப்பட்டது. அதன் நகல் கிடைத்தவுடன் 852ம்  பக்க "நாலும் மூனும் எட்டு" தெரியவந்தது. அதை வைத்து அனைவரும் தீர்ப்பின் நம்பகத்தன்மை மீது ஐயம் கொண்டனர்.

அம்மா அல்லக்கைகளோ நுனிப்புல் மேய்ந்து 851ம் பக்கத்தையும் சேர்த்து படிங்கடா "அறிவு ஜீவிகளே" என்றனர். சரி அப்படி என்னதான் அந்த பக்கத்தில் போட்டிருக்கிறது என்றால் ஆத்தா கூட்டம் தனியாரிடம் வாங்கிய கடன் வகையில் 24 கோடி அதை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்.

852ம் பக்கத்தில் வாங்கிய கடன் விவரங்களை பட்டியலிட்டு கூட்டலில் 24 கோடி சொச்சம் காண்பிக்கிறார். ஆனால் உண்மையான கூட்டுத்தொகை 10 கோடி அளவில் தான் வருகிறது. உடனே அம்மா அல்லக்கைகள் இந்தியன் வங்கியில் வாங்கிய கடனாக 1.5 கோடி காண்பிக்கிறார்கள் அது 15 கோடியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் கூட்டி கழித்து பாருங்கள் சரியாக வரும் என்று வழக்கப்படி நுனிப்புல் மேய்ந்திருக்கின்றன.

அப்பரசண்டிகள் அதே தீர்ப்பின் 120 வது பக்கத்தில் இந்திய வங்கிக்கடன் 1.5 கோடி என்று இருப்பதை படிக்கவில்லை போலும்.  இரண்டு பக்கத்திலுமே அச்சுப்பிழைதானா? இல்லையா? என்பது அந்த நீதியரசருக்கே வெளிச்சம்.

எப்படியோ ஊழல் தொகையை பத்து விழுக்காடிற்கு கீழே கொண்டுவந்தால் மத்தியப்ரதேச க்ரிஷன்காந்த் வழக்கை தூசி தட்டி எடுத்து மேற்கோள் காட்டி  தீர்ப்பை சாதகமாக எழுதிவிடலாம். அதுதான் நடந்திருக்கிறது.

இந்த இடத்தில்தான் நமது சட்டத்தின் மீது சந்தேகம் வருகிறது. இன்னும் தீர்ப்பில் நிறைய ஆச்சரியங்கள் உள்ளன. 8 கோடிக்கு நிலம் வாங்கி பத்தே மாதத்தில் 8 கோடி லாபம் பார்த்ததாக வருமானத்தில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

எப்படியோ ஆத்தாவிற்கு இந்த தீர்ப்பின் குழப்பம் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஆதலால் தான் அடுத்த நடவடிக்கைகளில் தயக்கம் காட்டுகிறார். கர்நாடகா அரசாங்கம் உச்சநீதிமன்றம் வரை போகுமா? போகாதா? என்பதெல்லாம் அடுத்து வரும் தேர்தலை ஒட்டி ஆடப்படும் நாடகங்களில் ஒரு காட்சி.

இத்தனை தூரம் இந்த சொதப்பல் தெரிந்தவுடன் எப்படியோ யாரோ ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது நிச்சயம். கர்நாடகா செய்யவில்லை என்றால் முதலில் இந்த வழக்கை தொடுத்த சுவாமிக்கு அந்த உரிமை உண்டு, இரண்டாவது உரிமை இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வழிகோலிய அன்பழகனுக்கு உண்டு.

உச்ச நீதிமன்றம் போனால் மூன்று பேர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்படும், அதுவும் உடனே எடுத்துக்கொள்ளப்படுமா? என்பது தெரியாது. அதற்குப் பிறகு நடக்கப்போவது அரசியல் நாடகங்கள். ஆனால் இதை வைத்து கும்மியடிக்க பிரதான எதிர்கட்சிக்கும் தைர்யமில்லை, ஏன் என்றால் அவர்களுக்கு அடுத்த ஆப்பு ரொம்ப தூரத்தில் இல்லை. 2G  தன் கோரமுகம் காட்டி இளித்துக்கொண்டிருக்கிறது. இருகட்சிகளுமே அடுத்த தேர்தலை எப்படி சந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அது வரை அந்த டவாலி கேல்குலேட்டரில் நாலும் மூனும் எட்டு என்று ஆத்தா அடிப்பொடிகள் கணக்குப்பாடம் கற்கலாம். உடன் பிறப்புகள் ஒரு லட்சத்தி எழுவத்தி ஆறாயிரம் கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்று அதே கேல்குலேட்டரில் சரி பார்க்கலாம்.

அண்ணா நாமம் வாழ்க!!!!!!!!



Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

Unknown said...

// அண்ணா நாமம் வாழ்க!!!!!!!! //

அதோடு சேர்த்து இவர்கள் மக்களுக்கு போட்ட நாமமும் வாழ்க !

திண்டுக்கல் தனபாலன் said...

வெளங்கிடும்...! என்னமோ போங்க...!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.