Tuesday 9 December 2014

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
’நெடிய’ என்னாது, சுரம் பல கடந்து,
வடியா நாவின் வல் ஆங்குப் பாடி,
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்து அன்றோ? இன்றே; திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.
இதை பாடியவர் கோவூர் கிழார். 
புலவர்கள் பல காடு மேடுகளை எல்லாம் கடந்து ஒவ்வொரு அரசரையும் கண்டு அவர்களை புகழ்ந்து பாடி அவர்கள் பரிசை ஏற்று அதை மற்றவர்களுடன் பகிர்ந்துண்டு வாழ்கிறோம். அப்படியிருக்க அவ்வாறு வந்திருக்கும் அந்த புலவனை எதிரி நாட்டு ஒற்றன் என்று சந்தேகம் கொண்டு தண்டிக்காதீர்கள் என்று புலவர்களின் நிலைமையை விளக்கி அரசனுக்கு அழகாக அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளது இந்த பாடல்.
சரி அதையெல்லாம் இப்பொழுது கூறி மொக்கை போடுகிறேன் என்று கேட்காதீர்கள்.
நேற்றைய தின சட்டசபைக்கூட்டத்தில் மாநில முதல்வர் முன்னாள் மன்னிக்கவும் மக்களின் முதல்வரின் பெருமையை லாவணி பாடியதற்கும் மேலே உள்ள பாடலுக்கும் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டத்தான்.
இப்பொழுது ஓ.பி.எஸ் பாடிய லாவணி 
அன்னை தமிழகத்தை, அன்புச் சரணாலயமாய் பூத்துக் குலுங்க வைக்கும், புறநானூற்றின் புதுவடிவே!
 தாயாகி, தந்தையாகி, தமிழர் குலச் சாமியாகி, யாதுமாகி நிற்கும் எங்கள் தாயுமானவரே!
 "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடிய நாவுக்கரசரின் திருவாய்மொழிப்படி வாழுகின்ற எடுத்துக்காட்டாய் திகழும் வரலாற்று வடிவே! 
முன்னிருந்தோர் முடிக்க இயலாப் பெருஞ்செயல்களை முன்நின்று நிறைவேற்றும் முத்தமிழின் திருவடிவே!
வேதனைகளெல்லாம் தமக்கென்றும், விளைகின்ற நலம் எல்லாம் பிறர்க்கென்றும், தமிழகம் செழிக்க தவ வாழ்வு வாழ்கின்ற தியாகத் திருவுருவே! 
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நன்னெறியும், நேருக்கு நேர் நின்று போராடும் நெஞ்சுரமும், தனக்கே உரிமைஎனக் கொண்ட தன்மானச் சிங்கமே! 
சோழநாட்டுக் கரிகால் பெருவளத்தானும், பாண்டி நாட்டு ராணி மங்கம்மாளும், வாளெடுத்துப் போரிட்டு வரவழைத்த நீராதார உரிமைகளை, வெள்ளைத் தாளெடுத்துப் போரிட்டு வென்று வந்த வீரத்தாயே! 
தமிழகமே தனது இல்லமாய், தமிழ் மக்களே தனது சுற்றமாய் தமிழ்நாட்டின் நலனுக்கென தன் வாழ்வையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னிகரில்லாத் தங்கமே! 
மக்கள் முதல்வர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களே! 
தங்கள் பொற்பாதங்களில் எனது வணக்க மலர்களைக் காணிக்கை ஆக்கி, தாங்கள் வீற்றிருக்கும் திசை நோக்கி வணங்கி, 2014-2015 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாதத்திற்கு எனது பதிலுரையை வழங்க விழைகிறேன்.
அப்பா பின்னுராங்கப்பா................போன ஆட்சியில் "அரங்கங்களில் அரைகுறை ஆடை நங்கைகளை ஆட விட்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" என்று லாவணி பாடினார்கள். இப்பொழுது சட்டசபையில் வேட்டி அவிழ்த்து பாடுகிறார்கள். இரண்டிற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.
இந்த அழகில் இரண்டு கட்சிகளும் வார்த்தைக்கு வார்த்தை பெரியார், சுயமரியாதை என்று கூவிக்கொண்டு கூத்தடிக்கிறார்கள். 
நாமெல்லாம் சரக்கடித்து "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று ஆடை அவிழ நடுத்தெருவில் படுத்திருந்து அடுத்த தேர்தல் காசு வரும் வரை களித்திருப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

இவங்க பாடற லாவணி சங்க காலத்தையே மிஞ்சுடும்!

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

புகழ்ச்சியை ஒருவர் தினமும் எவ்வாறு ரசிக்க முடியும் என்று பலமுறை யோசனை செய்ததுண்டு... பதில் : மனதில் ஆணவம்...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.