Saturday 23 July 2016

கபாலியை யாருக்கும் பிடிக்காது

கபாலியை பற்றி உங்களுக்கு தெரியுமுன் சபேச அய்யரையும் அம்பாவையையும் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்......

மேற்கு மாம்பலத்தில் அயோத்யா மண்டபம் என்று ஒரு லேன்ட் மார்க். 49 தியாகராய நகர் போரூர் பேருந்தில் தி. நகர் பேருந்து நிலையத்தில் ஏறி இருபது பைசா கொடுத்து டிக்கட் எடுத்தால் அனிதா பார்மசி வாசலில் இறக்கி விடுவார்கள். அங்கே இருந்து மேற்கே பார்த்தால் அயோத்யா மண்டபம், அதன் வாசலில் இதயக்கனி போஸ்டரில் ராதா சலூஜா மேல் தர்பை சமித்து இத்யாதி வஸ்துக்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார் சபேச ஐயர். ஆள் கச்சையாக குடுமி வைத்துக்கொண்டு கடைக்கு வருபவர்களை நக்கலடித்து வியாபார உத்திகளை பற்றி கவலைபடாமல் "என்ன ஒய் தண்டபாணி பொண்ணு ஒக்காந்துட்டாளா" என்று கப்பிதனமாக கேள்வி கேட்டு அவரே சிரித்துக்கொள்வார்.

அவரோட சீமந்த புத்தரி .........சீமந்த புத்ரி என்ன ஒரே புத்ரிதான் அம்பா. அம்பாதான் எங்களது ஏரியா பாலைவன சோலை. எப்பொழுதும் தாவணி அணிந்து கொண்டு ... வாக வசந்தமாளிகை வாணிஸ்ரீ மாதிரி தெருவில் திரிந்துகொண்டு இருக்கும். மேற்படி விவரம் புரியவேண்டுமெனில் வாசகர்கள் வசந்த மாளிகை திரைப்படத்தை ஒரு முறை பார்ப்பது மிகவும் நல்லது.

நிற்க இந்தக் கதை வசந்த மாளிகை வாணிஸ்ரீ பற்றி என்று நினைத்து மேலே படிப்பவர்கள் கதையிலிருந்து விலகுவது உச்சிதம்.

அன்று வழக்கம்போல் எதிர்த்த வீட்டு சுவற்றில் கரியில் கோடு போட்டு கிரிக்கட் விளையாடிக் கொண்டு இருந்தோம். திடீரென்று "திருடன் பிடிங்க  பிடிங்க" என்று எங்கள் வீட்டு நாலு வீடு தள்ளியிருக்கும் ராஜி ஆண்ட்டி கத்திக்கொண்டு ஓடினார்கள். நாங்கள் எங்களது விளையாட்டை துறந்து அவனை பிடிக்கும் முன்பு அவன் ஓடி சரேலென்று இடது பக்க சந்தில் திரும்பி ஓடி மறைந்து விட்டான்.

விஷயம் இதுதான் ராஜி ஆண்ட்டி அலுவலகத்தில் திரும்பி வரும் பொழுது அவரது கைப்பையை திருடிக்கொண்டு ஓடி விட்டான் திருடன். அடுத்து அவன் யார்  என்று ஆராய்ச்சியில் இறங்கும் பொழுது அம்பா வந்து எனக்குத் தெரியும் கபாலிதான் ஓடினான் என்றாள்.

கபாலி எங்களது தெருவிலிருந்து மேற்காலே போயி வடக்கால திரும்பினால் நாற்பது குடிசை என்று ஒரு இடம் உண்டு அங்கு வசிப்பவன். ஆள் திடகாத்திரமாக இருப்பான். மிகவும் சாதுவான ஆனால் அழுத்தமான ஆள். அவன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று எங்களுக்கு தெரியும்.

எங்கள் தெருவில் உள்ளவர்கள் யாருக்கும் கபாலியைப் பிடிக்காது. அதற்கு பிரத்யேக காரணங்கள் பெரிதாக ஒன்றும் இல்லை, கபாலியைப் பிடிக்காது அவ்வளவுதான்.

ஏய் அம்பா இங்கேவா? அது கபாலிதானா என்று சபேச ஐயர் வினவ, ஆமாம்ப்பா நான் பார்த்தேன் என்றாள். போடி பித்துக்குளி சரியா தெரியாம எதுவும் சொல்லாத அவனுக்கு தெரிஞ்சா நம்மள சவட்டிடுவான், நமக்கு அடி தாங்காது என்றார்.

இப்போது ராஜி மாமி போலிசுக்கு போன் பண்ணி கபாலிதான் கைப்பையை அடித்தவன் என்று குற்றப்பத்திரிகை பதிவு செய்துவிட்டாள்.

கபாலியை அதற்குப் பிறகு தெருவில் பார்க்க முடியவில்லை.

இது நடந்து ஒரு வாரம் சென்ற பின்பு ஒரு நாள் சபேச அய்யர் தெருவில் போவோர் வருவோரை எல்லாம் ஏய் அம்பாவை பார்த்தியா? நேத்து ராத்திரியில் இருந்து ஆளை காணோம் எங்கே போச்சுன்னு தெரியலையே என்று பித்துப் பிடித்தவர்போல் சுற்றிக்கொண்டு இருந்தார்.

அதற்கு பிறகு வெகு வருடங்கள் ஆகியும் கபாலியைப் பற்றியோ அம்பாவை பற்றியோ யாருக்கும் விஷயம் தெரியவில்லை.

பிறகு நான் வேலை விஷயமாக வெளிநாட்டில் செட்டில் ஆகி முதல் வருடம் விடுமுறையில் சென்ற பொழுது விசாரித்ததில் சபேச ஐயர் வீட்டை காலி செய்துகொண்டு போய்விட்டார் என்றும் அவர் இப்பொழுது எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை என்றார்கள்.அம்பாவை பற்றியோ கபாலியை பற்றியோ தகவல் இல்லை.

இது நடந்து கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சலஸ் சென்றிருந்தேன், நண்பர் வீட்டில் இரண்டுநாள் தங்கப்போவதாக சொன்னேன். அவர் ஹாலிவுட், பெவர்லி ஹில்ஸ், யுனிவர்சல் ஸ்டூடியோ எல்லாம் கூட்டிக்கொண்டு சென்றார்.

யுனிவர்சல் ஸ்டூடியோவில் மாலை நான்கு மணிக்கு ஒரு ஸ்டன்ட்டு ஷோ இருக்கிறது அதை பார்க்கவில்லை என்றால் மோட்சம் கிடைக்காது என்றார். சரி மோட்சத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்ய நாலு மணிக்கே சென்று வரிசையில் நின்றோம். அப்பொழுது பின்னாலிருந்து என் தோளை தட்ட ஏய் நீ நம்ம "கும்மு" தானே என்று ஒரு குரல் கேட்டது.

திரும்பினால் கபாலி. ஏய் நீ எங்கே இங்கே என்றேன். நான் இங்குதான் வேலை செய்கிறேன், ஷோ முடிந்தவுடன் இதே இடத்தில் வந்து நில்லு என்று அரங்கினுள் சென்றுவிட்டான்.

ஷோ நன்றாக இருந்தது, பிரதான ஸ்டன்ட்டு வேலைகளை செய்தது கபாலிதான். ஷோ முடிந்தவுடன் கபாலி வந்து எங்களை அவன் வீட்டிற்கு அழைத்தான்.

கநோகோ பார்க்கில் அருமையான தனி வீடு. மனைவியை அறிமுகம் செய்தான், ஏய் இதுதான் மரியா மை வைப் என்றான். மரியாவிற்கும் கபாலிக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் அழகோ அழகென்று இருந்தாள். பின்பு அவனிடம் நீ அம்பாவுடன் ஓடிவிட்டதாகதான் ஊரு நினைத்துக்கொண்டிருக்கிறது என்று கேட்ட பொழுது அம்பாவா ஆஹாஹா..........என்று கபாலி மாதிரியே சிரித்தான்.

சரி உனக்கு ஒரு சர்ப்ரைஸ், அம்பாவும் இங்குதான் இருக்கிறாள் பார்க்கிறாயா? என்றான்.

என்னடா சொல்ற என்றதற்கு சரி டின்னர் சாப்பிட்டுவிட்டு அவள் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றான்.

சாப்பிட்டு முடிந்தவுடன் அம்பாவை பார்க்க சென்றோம்.

அம்பா மிகவும் மாறியிருந்தாள், அடையாளம் கண்டுகொள்ள திணறினாள்.

அம்பா உனது கணவர் எங்கே?..... இதோ இப்பொழுதுதான் ஆபீசிலிருந்து வந்தார் மாடியில் இருக்கிறார் இதோ கூப்பிடுகிறேன் என்று அவரை அழைத்து வந்தாள்.

ஏய் அம்பி நீ எங்கே இங்கே என்றேன்..அம்பா நீ எப்படி... ஒன்றும் புரியவில்லை.

அம்பி எங்கள் வீட்டில் மாடியில் குடியிருந்தான்...........ஒரு மருந்து கம்பெனியில் வேலை செய்து மாதம் தவறாமல் அப்பாவிடம் வாடகையை சரியாக கொடுத்து விடுவான்.

அந்த திருட்டு சம்பவம் நடக்கும் ஒரு வாரம் முன்புதான் வீட்டை காலி செய்துகொண்டு மாற்றலாகி  பாம்பே சென்று விட்டான்.

ஓ......கதை அப்படி போனதா............ஹூம் மகிழ்ச்சி என்றேன்.

அம்பாவிடம் அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்ட பொழுது தோ இங்குதான் இருக்கிறார் வாக்கிங் போயிருக்கிறார் வந்துவிடுவார் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அரை டிராயர், டி ஷர்ட், ஸ்நீக்கர்ஸ் உடன் சபேச ஐயர், அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார்.

அம்பா அவரிடம் அப்பா இது யார் தெரிகிறதா? என்று கேட்க தெரியும் நீ "கும்மு" தானே...... ஏண்டா நீ அந்த பத்தாம் கிளாசை பாஸ் பண்ணிட்டியோ...........நாலஞ்சு தடவ எழுதினவன் தானே என்றார்.

கூட இருந்த கபாலியை "கொழந்த" எப்படிடா இருக்கே..........நீ ஒண்டி இல்லேன்னா இந்த பித்துக்குளியை கண்டு பிடித்திருக்க முடியாது என்று கண்ணில் நீர் வர சிரித்தார்.





Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

குருபிரசாத் said...

Super Sekar, அருமையான நடை, கபாலிய வைத்து பலர் காசு பார்த்தார்கள், நீங்க அட்லீஸ்ட் கொஞ்சம் ஹிட்ஸ் பாருங்க

கும்மாச்சி said...

நன்றி தலைவா......

Unknown said...

அருமை சேகர்

கும்மாச்சி said...

நன்றி கோபால்

'பரிவை' சே.குமார் said...

அருமையான் கதை...
வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

நன்றி குமார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கபாலி கதைய இப்படிகூட எடுத்திருக்கலாம் போல இருக்கே

கும்மாச்சி said...

நன்றி முரளிதரன்

”தளிர் சுரேஷ்” said...

அந்த கபாலியை விட இந்த கபாலி பெட்டர் போலிருக்கே! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

ஹா...ஹா... நல்ல கதை!

Alpha said...

Nice Post! Have a look at Arivuk Kalanchiyam for interesting posts. Thank you.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.