Friday 13 November 2009

வாத்தியாரம்மா


அருமையான கல்லூரிக்காலம். எங்கள் தெருவில் உள்ள என் வயது பையன்கள் எல்லோரும் வெவ்வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம். கல்லூரிக்கு செல்ல எல்லோரும் வீட்டிலிருந்து நடந்து ரயில் நிலையத்தை அடைந்து பிறகு சில பேர் தெற்கு நோக்கிச்செல்லும் வண்டியிலும் மீதிபேர் வடக்கு நோக்கிச் செல்லும் வண்டியிலும் பயணிப்போம். வண்டியில் மற்ற நிறுத்தத்தில் வருபவர்களும் சேர்த்து கொண்டு உலக விஷயங்களையும் கல்லூரி விஷயங்களையும் சத்தமாகப் பேசிக்கொண்டு செல்வோம்.

தெருவில் உள்ள எல்லோரும் பெரும்பாலும் சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்திற்கு செல்வோம். எங்கள் கூட்டம் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டோம். பெரும்பாலும் சினிமா, அரசியல், விளையாட்டுக்களை பேசிக்கொண்டு செல்வோம். மேலும் எங்கள் எல்லோருக்கும் பெண்களுடன் பேசுவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ ஒரு வித பயம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாங்கள் தவறாக நடந்து கொண்டால் விஷயம் நாம் கல்லூரி விட்டு வரும் முன்பே வீட்டை அடைந்துவிடும்.

அன்று நான், ஸ்ரீதர், குமார், ராஜாராமன், வெங்கட், சுந்தர் எல்லோருமாக ரயில் நிலையத்திற்கு செல்லும் பொழுது சத்தமாக அன்று முதல் நாள் நடந்த கிரிக்கெட் மாட்சில் இந்தியா வென்றது பற்றி பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தோம். அப்பொழுது ஸ்ரீதர், முதல் நாள் மாட்சில் எதோ ஒரு பிளேயர் அடித்த சிச்செரை ச்லாகித்துக்கொண்டு எல்லோரும் பார்த்தீர்களா என்று கேட்டுக்கொண்டு வந்தான். ராஜா ராமன் ஏதோ யோசனையில் வந்து பதில் சொல்லாததனால், "என்ன ராஜாராமா” என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டான்.

அடுத்து நாங்கள் சற்றும் எதிர்பாராமல் நடந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தன் காலணியைக் கழற்றி "என்ன கிண்டலா, செருப்பால் அடிப்பேன்" என்றாள்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "வாத்தியாரம்மா என்று கிண்டலா செய்கிறீர்கள்".என்றாள்
நாங்கள் ஏதும் பதில் சொல்வதற்கு முன்பு அங்கு அலுவலகம் செல்லும் மற்ற கூட்டம் கூடிவிட்டது. சகட்டுமேனிக்கு அவர் அவர்கள் எங்களை திட்டினார்கள். போததற்கு அறிவுரை வேறு, படிக்கிற வழியைப் பாருங்கள் என்று.

அந்தப் பெண்மணி எங்கள் தெருவில் இருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரின் மனைவி. அவர்கள் நகரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பெண்கள் கல்லூரியில் ஆங்கில பேராசிரியை. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது, அவர்கள் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் என் அம்மாவிற்கு செய்தி போய் விடும். பின்பு என்ன வீட்டில் ஒரே களேபரம்தான். போதாகுறைக்கு போன பரீட்சையில் நான் வாங்கிய மார்க்குகள் ஒன்றும் சொல்லும்படியாகவே இல்லை. இப்பொழுதுதான் அதற்கு உண்டான ஒரு “மண்டல அர்ச்சனை” முடிந்தது.

மாலை கல்லூரியில் இருந்து வந்தவுடன், விளையாட்டில் மனம் செல்லவில்லை. என் வீட்டு வாசலில் கூடி காலையில் நடந்ததை நினைத்து ஒரு வித பயத்துடன் வருந்தி கொண்டிருந்தோம்.

ராஜாராமன் வீட்டிற்கு கிளம்ப இருந்த சமயம், ஸ்ரீதர்தான் "ஏய் வாத்தியாரம்மா" என்றான். நான் ஸ்ரீதரை அதட்டினேன். ஏண்டா திரும்ப வம்பு இழுக்கிறே என்றேன்.

நான் ராஜராமனைக் கூப்பிட்டேன் என்றான். என்காதில் சத்தியமாக “வாத்தியாரம்மா” என்றுதான் விழுந்தது.

இப்போது எனக்கு எல்லாம் பளிங்கு போல விளங்கிவிட்டது. மாலை பேராசிரியை வரக்காத்திருந்தோம். விஷயம் எங்கள் பெற்றோரை எட்டுமுன் அவர்களுக்கு விளக்கி விடவேண்டும் என்று.

அவர்கள் வீட்டிற்கு திரும்பியவுடன் சிறிது நேரம் கழித்து, அவர்கள் வீட்டுக் கதவை தட்டினோம். பேராசிரியை தான் திறந்தார்கள்.அவர்களிடம் விஷயத்தை விளக்கினோம். அவர்கள் அரை மனதாகத் தான் ஏற்றுக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகு அவர்களைக் கண்டாலே எங்கள் பேச்சு நின்று ஒரு அசாத்திய மௌனம் நிலவும்.

அவர்கள் எங்களை காலணியைக் கழற்றி திட்டியதற்கு ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அதில் உள்ள அநியாயம் இன்னும் ஜீரணிக்கமுடியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

கலகலப்ரியா said...

kashtamthaan..!

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

பித்தன் said...

சரி விடுங்க பாஸ் நமக்கு அடி வாங்குறது ஒன்னும் புதுசில்லையே....

virutcham said...

இப்படி விளக்கம் கூட சொல்ல முடியாமல் ஏடாகூடமாக மாட்டிக் கொள்ளும் அனுபவம் ரொம்ப தர்மசங்கடமனது.

-viru

Shareef S M A said...

//.....காலணியைக் கழற்றி திட்டியதற்கு ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அதில் உள்ள அநியாயம் இன்னும் ஜீரணிக்கமுடியவில்லை//

இதுக்காகவே ஒருதடவை வாத்தியாரம்மான்னு கூப்பிட்டிருக்கனும்...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.