Tuesday 17 November 2009

மறுபடியும் மாயா


பல வருடங்கள் கழித்து, தீபாவளிக்கு ஊருக்கு சென்றேன். நான் தீபாவளிக்கு குடும்பத்துடன் அங்கு வந்ததில் என் பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என் அம்மா ஒவ்வொரு வருடமும் நானும் உன் அப்பாவும் தனியாகத்தான் தீபாவளிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆதலால் நீங்கள் எங்களுடன் தங்கி தீபாவளி கொண்டாடுங்கள் வேறு எங்கேயும் பார்ட்டி என்று போய் விடாதீர்கள் என்றாள். தீபாவளி நாள் இனிதே சென்றது. பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை பெற்றோர்கள் கொண்டாடியதில் எங்களுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி.

பண்டிகை முடிந்து தொழில் நிமித்தம் ஊர் திரும்ப தயாராகிக் கொண்டிருந்தோம். மனைவி ஊருக்கு வாங்க வேண்டிய பொருட்களை லிஸ்ட் போட்டு வைத்து மும்முரமாக வாங்கிக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல் “சாரதி” வேலையும், மூட்டை தூக்கும் வேலையும் செய்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அலை பேசியில் என் பால்ய நண்பன் அழைத்தான். அவன் என் அப்பாவை இன்று பார்த்ததாகவும் அவர் நான் ஊருக்கு வந்திருக்கும் செய்தி சொன்னார் என்றும், மேலும் இன்று இரவு அவர்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தான். இம்முறை நிறைய நண்பர்கள் ஊரில் இருப்பதால் எல்லோரையும் சந்திக்க சந்தர்ப்பம் அமையும் என்றான்.
இரவு எட்டு மணிக்கு அவன் வீட்டிற்கு சென்றேன். பழைய நண்பர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அவன் வீட்டு வாசலில் பிளாஸ்டிக் நாற்காலி தெருவை அடைத்துப் போட்டு அரட்டை தொடங்கியது. பால்ய காலத்திலிருந்து சமீப காலம் வரை ஒரு ரவுண்டு வந்து விட்டோம். நேரம் போனதே தெரியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு பெண்மணி அடிக்கடி எங்களை கடந்து போவதும், சில சமயம் சிறிது தள்ளி அமர்ந்து தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தாள். பைத்தியம் போலத் தோற்றம், தலை முடியெல்லாம் சடை கட்டி அழுக்காக இருந்தாள். நான் அவளை கவனிப்பதைக் கண்டு ராஜுதான் “யார் தெரிகிறதா?” என்று என்னைக் கேட்டான்.
எனக்கு அடையாளம் தெரியவில்லை.
"மாயாடா" என்றான்.
மாயா நினைவுக்கு வந்தாள்.
தெருவில் நாங்கள் ஒரு எட்டு பத்துபேர் ஏறக்குறைய ஒரே வயதினர்கள். எல்லாக் குடும்பங்களும் ஒரே குடும்பம் போல் பழகியக் காலம். என்னுடன் ஒரு வயது மூத்தவன் அருண்குமார். அவ்ன் தங்கை தான் மாயா. தெருவின் முனையில் கடைசி வீட்டிற்கு முன் வீடு அவர்களது. மிக எழ்மையானக் குடும்பம். சிறுவயதில் தாயை இழந்து விட்டவர்கள். இவர்களுக்கு ஒரு அண்ணன் உண்டு மிகவும் வயதில் மூத்தவன், அவன் கல்யாணம் செய்துகொண்டு தனிக் குடித்தனம் போய் இங்கு வருவதே கிடையாது. அவன் அம்மா இறந்த அன்றைக்கி மட்டும் வந்ததை நாங்கள் பார்த்தோம். மற்றபடி அவனுக்கும் இந்தக் குடும்பத்திற்கும் தொடர்பு அற்றுப் போய் விட்டதாக அருண்குமார் சொல்லியிருக்கிறான். அவர்களுடைய தந்தை ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் கணக்கராக இருந்தார். சம்பளம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

மாயாவும் என் தங்கையும் ஒரே வகுப்பில் படித்தார்கள். மாயா சிறு வயதில் சூடிகையானப் பெண். அவள் அம்மா இறந்தவுடன் அவளிடம் ஒரு சோகம் குடி கொண்டது. பண்டிகை காலங்களில் எங்களது நண்பர்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு தின்பண்டங்கள் கொடுப்போம். அதை அருணும் மாயாவும் ஒரு வெட்கத்துடன் வாங்கிக் கொள்வார்கள். பெரும்பாலும் அருண், மாயாவிற்கு பாடப் புத்தகங்கள் எங்களது பழையப் புத்தகங்களைக் கொடுத்து உதவி செய்வோம்.

அருண் நன்றாகப் படித்தான். அமெரிக்காவிற்கு வேலைக்கு சென்றான். அப்பொழுது தான் நான் அவனைக் கடைசியாகப் பார்த்து. பின்பு நானும் பிழைப்பு தேடி வெளிநாடு வந்து விட்டேன். பின்பு அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் அறிய வாய்ப்பில்லை.

இப்பொழுது மாயாவை இந்த நிலைமையில் பார்த்த பொழுது மனது கனத்தது. அருண் அமெரிக்க போய் இரண்டு மாதத்தில் பிணமாகத்தான் திரும்பினானாம். நியூயார்க் சுரங்கப் பாதையில் தனியாக வந்த பொழுது திருடர்களால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறான்.

மாயா சிறு வயதில் தாயை இழந்து, ஒரே நம்பிக்கையான அண்ணனையும் இழந்து, வயதானத் தந்தையும் கவனிக்க முடியாமல், தொடர்ந்து சோகத் தாக்குதலால் இப்படி ஆகிவிட்டதாக நண்பர்கள் கூறினர்.

விதியின் கோரத்தாண்டவம், இப்படியும் இருக்குமா?

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

Prasanna said...

மனது கனத்து போனது கதையை படித்து :((

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.