Thursday 10 December 2009

கெட்டாலும் மேன்மக்கள்


நான் அந்த கிளினிக்கில் நுழையும் பொழுதே எனக்கு முன்னால் ஆறு பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். அதில் என்னுடைய கல்லூரியில் படிக்கும் சீனியர் ஒருவர். ஒரு அம்மா தன் கைக்குழையுடன் காத்துக்கொண்டிருந்தாள். ஒரு வயசானவரும், மற்றும் இரு வயதான பெண்மணிகளும் இருந்தார்கள். வழக்கமாக கொடுக்கப்படும் நம்பர் டோக்கன் கொடுக்கப் படவில்லை. அதைக் கொடுக்கும் சிறுமி இன்று வேலைக்கு வரவில்லை போலும்.

எனக்கு காலையிலிருந்தே நல்ல காய்ச்சல். ஒரு "அடோல்" போட்டுக்கொண்டால் சரியாகிவிடும் என்று ஒரு மாத்திரைப் போட்டுக்கொண்டு நாளைய பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தேன். மாலை ஆக காய்ச்சல் அதிகமாகியது. ஆதலால் தெரு முக்கு மருத்துவரைப் பார்க்க வந்தேன். இவர் பிங்க் சாயத்தில் ஒரு மருந்துக் கொடுப்பார், அடுத்த நாள் உருவி விட்டாற்போல் ஆகிவிடும், பரீட்சை எழுதலாம் என்று வந்தேன். மிகவும் முக்கியமான முழுப் பரீட்சை. என் எதிரே உட்கார்ந்திருந்த சீனியருக்கும் நல்ல காய்ச்சல் போலும், அவருக்கு இரண்டு நாள் கழித்து பரீட்சை ஆரம்பம். கண்ணை மூடிக்கொண்டு பெஞ்சில் சாய்ந்துக் கொண்டிருந்தார்.

உள்ளே மருத்துவர் ஒரு நோயாளியை "ஆ" காட்ட சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நோயாளி வந்தவுடன் வயதானவர் உள்ளே சென்றார். பின்பு இரண்டு பெண்மணிகளும் நுழைந்தனர். இப்பொழுது என்னுடைய கல்லூரி சீனியரின் முறை வரும் நேரம். அப்பொழுது அந்த பெரிய மனிதர் கிளினிக் உள்ளே தன மகனுடன் வந்தார். அவர்களைப் பார்த்தால் யாருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல முடியவில்லை. இப்பொழுது மருத்துவர் அடுத்து வந்த
பெண்மணியின் குழந்தையைப் பார்த்துவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு அறையின் கதவை திறந்து கல்லூரி சீனியரை அழைக்கும் முன்பு அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தப் பெரியமனிதர் மருத்துவரிடம் மாலை வணக்கம் என்று சொல்லிக் கொண்டு மருத்துவர் அறையினுள் நுழைந்தார். நாங்கள் இதை எதிர் பார்க்கவில்லை. நானும் கல்லூரி சீனியரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
உள்ளே போனவர் அந்தப் பெரியமனிதர் எங்கள் தெருவில் உள்ளவர்தான். அவர் ஒரு தனியார் கம்பெனியில் பொது மேலாளராக இருந்தார். அவர் மருத்துவரிடம் தன் அலுவலக அறையில் புதியதாக குளிர்சாதனம் பொருத்தியிருப்பதாகவும், அது தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லிகொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தது எங்களுக்கு துல்லியமாகக் கேட்டது. மேலும் அவர் அலுவலக நிமித்தமாக வெளிநாடு சென்றதும் என்ன என்ன வாங்கிக் கொண்டு வந்தார் என்று கதை அளந்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் தன் பெருமையை சொல்லிக் கொள்ள வந்ததாகத்தான் தோன்றியது. மருத்துவரும் அவர் பேச்சை நிறுத்தி அவரை வெளியே அனுப்புவதாகத் தெரியவில்லை.

எதிரே இருந்த சீநியரோ காய்ச்சல் வேகத்தில் முனகிக் கொண்டிருந்தார். எனக்கு நாளைய பரீட்சை பயமுறுத்தி கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து பெரிய மனிதர் தன் தம்பட்டத்தை முடித்து வெளியே வந்தார்.

அப்பொழுது சீனியர் அவரை நோக்கி கோபத்தில் " நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா" என்றார். அதற்கு அந்தப் பெரியமனிதர் "என்ன மரியாதை இல்லாமல் பேசுகிறாய்" என்று அவரிடம் பாய்ந்தார். மருத்துவர் அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்பு அந்தப் பெரிய மனிதர் தன் மகனிடம் "நீ வாடா இவனுடன் எண்ணப் பேச்சு, நாம் செய்வதை செய்யவேண்டும், விளைவை எதிர் பார்க்கக் கூடாது, பகவான் கீதையில் அதான் சொல்லியிருக்கிறார்" என்று மகனை அழைத்துக் கொண்டு விறு விறுவென்று வெளியே நடந்தார்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அவன் தலையில இடி விழ

vasu balaji said...

இவனுக்கு கீதை வேறே துணையா?

அண்ணாமலையான் said...

போனா போறார் விடுங்க . சின்னப்பய. இப்படித்தான் ஒருத்தன் தியேட்டர் டாய்லெட்ல செல்ல காதுல வச்சுக்கிட்டு மூத்திரம் போற இடத்துல போவாமலே நின்னான். எனக்கா முட்டிட்டு வருது. என்ன செய்ய?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.