Tuesday 15 December 2009

தொல்லைக்காட்சிகளில் "பொதிகை" தனிவிதம்


மத்தியக் கிழக்கு நாடுகளில் இப்பொழுது மழைக்காலம். ஆனால் நம்ம ஊருபோல பொத்திக்கிட்டு ஊத்தாது. ஓயாமல் தூறிக்கொண்டிருக்கும், அதுகூட ஒரு இரண்டு நாட்களுக்கு. அதற்கே தெருவெல்லாம் தண்ணீர் தேங்கும். வண்டி எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முடியாது. என்போல ஒற்றை ஆட்களுக்கு தொலைக்காட்சிதான் பொழுதுபோக்கு. பிள்ளைகளும் மனைவியும் ஊரில் இருப்பதால் வெளியே போவதிலும் ஒரு மஜா இல்லை.

தொலைக் காட்சியிலும் சன், விஜய் கலைஞர் டிவி எதை திருப்பினாலும், தொப்புள். தொடை, மார்புப்பிளவு என்று சஞ்சலத்தை தூண்டும் அபத்தங்கள். ஒரு நாளைக்கு இரண்டு செய்திகளுக்கு மேல் பார்க்கக் கூடாது என்பது நான் எனக்கே வைத்துக் கொண்ட லோக்கல் ரூல். ஆதலால் பெரும்பாலும், நேஷனல் ஜாகரபி, அனிமல் பிளானெட், போன்ற டாகுமெண்டரி காட்சிகள், அவ்வப்போது பொதிகை என்று பார்ப்பேன்.

அவ்வாறு நான் பார்த்தது, டிசம்பர் பத்தாம் தேதியன்று பொதிகையில் கண்ணதாசன் பற்றிய ஒரு நினைவு நிகழ்ச்சியும், பாரதியார் பிறந்த தின நினைவுகளும்.

கண்ணதாசனை நாம் திரைப் பட பாடலாசிரியர் ஆக வெவ்வேறு பரிமாணத்தில் பார்த்துள்ளோம். ஆனால் திரைப் பட பாடல்களிலும் ஒரு தரத்தை வைத்துக் கொண்டு அறிய தத்துவங்களை புகுத்தியதை கூர்ந்து நோக்கினால் புலப்படும்

"இருப்போம் என்று இருப்பவன் கண்களை
இறந்தவன் தானே திறக்கின்றான்".

நீர்க்குமிழி என்ற திரைப் படப் பாடலில் வரும் வரிகள்.

புறநானூற்று பாடல்களில் வரும் கருத்தை பாமரனுக்கும் புரியும்படி எழுதியவர்.

"தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக்கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
என் உள்ளத்தில் நீ நின்று ஆடுகிறாய்".

ஒரு சிறந்த உதாரணம்.

திரைப்படப் பாடலுக்கும் அப்பால் அவருடைய கவிதையில் எனக்குப் பிடித்தது.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
பிறந்த பார் என இறைவன் பணித்தான்,
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
இறந்த பார் என இறைவன் பணித்தான்,
மனையாள் சுகம் என்பது யாதெனக் கேட்டேன்,
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தெரிந்து கொள்வது எனில்,
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்,
அந்த ஆண்டவன் சற்றே அருகினில் வந்து,
அந்த அனுபவமே நான் தான் என்றான்.

இறந்தும் வாழும் கவிஞன்.
“நான் நிரந்தரமானவன் முடிவும் இல்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை".
உண்மை.
அடுத்தப் பதிவில் "பாரதியைப்பற்றி" .

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

சங்கர் said...

//பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
பிறந்த பார் என இறைவன் பணித்தான்,
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
இறந்த பார் என இறைவன் பணித்தான்,
மனையாள் சுகம் என்பது யாதெனக் கேட்டேன்,
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தெரிந்து கொள்வது எனில்,
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்,
அந்த ஆண்டவன் சற்றே அருகினில் வந்து,
அந்த அனுபவமே நான் தான் என்றான்.//

எப்போதோ படித்த கவிதை, கருத்து மட்டும் மனதில் படிந்து, வரிகள் சிக்காமல் வெகுநாளாய் தேடி வந்தேன், நன்றி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.