Friday 18 December 2009

ரசிகன்


கதிரவன் அன்று விடியற்காலையிலேயே எழுந்து விட்டான். அவன் அப்பா "சூரியனுக்கு சூ----க் காட்டிக்கொண்டு இன்னும் என்ன தூக்கம்" என்று வழக்கமாக பாடும் பல்லவி இன்று இல்லை. அவன் அப்பா வெகு நாட்களாகவே சொல்லிகொண்டிருக்கிறார். கதிரவனை அவருடைய நண்பரின் கடையில் வேலைக்கு சேர்த்து விடுவதாக. இன்று அப்பாவின் நண்பர் கதிரவனையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.
அப்பா மகன் இன்று நேரத்திலேயே எழுந்து விட்ட மகிழ்ச்சியில் பிள்ளைக்கு பொறுப்பு வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு துண்டை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு குளிக்க கிளம்பினார். நேரத்திற்கே போனால் தான் நண்பரை பார்த்து எப்படியாவது தன் பையனுக்கு இன்று வேலை வாங்கிக் கொடுத்து விடவேண்டும். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறப்போகிறார். இன்னும் எத்தனை வருடம் தான் பேருந்தின் ஸ்டீரிங்கை பிடித்துக் கொண்டு ஒரே ரூட்டில் ஒட்டிகொண்டிருப்பது. இப்போதெல்லாம் அடிக்கடி நெஞ்சு வலி வேறு படுத்துகிறது. மருத்துவரிடம் காண்பித்தால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு உண்டான பணம் இன்னும் சேரவில்லை. மகளின் கல்யாணம் வேறு பயமுறுத்துகிறது.

கிணற்றடிக்கு சென்று குளித்து முடித்து விட்டு, காலை உணவை முடித்து விட்டு கிளம்பத் தயாரானார். மனைவியிடம் கதிரவன் தயாராகிவிட்டானா என்று கேட்டார். மனைவியிடமிருந்து பதிலில்லை. காதில் விழவில்லைப் போலும். கதிரவனை அழைத்தார். ஆளை வீட்டில் காணவில்லை. தன் மகளிடம் கேட்டார், கதிரவன் இன்னுமா தயாராகவில்லை, இன்று நண்பரைப் பார்க்க போகணும் என்று சொல்லியிருந்தேனே என்றார்.
"தெரியலே அப்பா, அண்ணன் இப்பொழுது தான் வாசல் பக்கம் வந்த நண்பனைப் பார்க்க சென்றான், இன்னும் வரவில்லை" என்றாள்.

"நீ கொஞ்சம் வெளியே சென்று பாரம்மா, அவனை கூட்டிக்கொண்டு வா, சீக்கிரம் கிளம்ப வேண்டும்". என்றார்.
அவள் சற்று நேரம் கழித்து “கதிரவன் தெருக் கோடிக் கடயன்டையும் இல்லை” என்றாள்.
“தோட்டப் பக்கம் பாரு” என்றார். அங்கேயும் கதிரவனை காணவில்லை.

கதிரவன் வரவுக்காக அவர் காத்திருந்தார்.

கதிரவன் காலையில் எழுந்தவுடன், பெருசு குளித்து முடித்துவிட்டு வரும் முன்பு எஸ் ஆகிவிடவேண்டும் என்று நினைத்திருந்தான்.
ஆதலால் நண்பன் முருகை காலையிலே வரச் சொல்லியிருந்தான். முருகு வந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்து அம்மா கழற்றி வைத்திருந்த இரண்டு பௌன் வளையலை பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கிளம்பினான். இப்பொழுது அவனுக்கு குற்ற உணர்வு அடிக்கடி வருவதில்லை. நான் பெரிய ஆளாகி இது போல் நிறைய நகை செய்து அம்மாவிற்கு கொடுத்து என்று நினைத்துக்கொண்டான்.

போகும் வழியில் சேட் கடையில் நகை வித்து பணத்தை பெற்றுக் கொண்டான். சேட் பணத்தை கொடுக்கும் முன்பு ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டான். "ஏய் பேட்டா சோரிக்கா மால் நை அனா" என்றான்.

போகும் முன்பு நண்பனின் கடையில் சொல்லி வைத்து இரவே வாங்கி வைத்திருந்த பீர் பாட்டல்களை சேகரித்துக் கொண்டான். கதிரவனும் முருகும் அந்தத் திரையரங்குக்கு வந்த பொழுது வாட்ச்மேன் கேட்டை திறந்துக் கொண்டிருந்தான். அவனிடம் கட்டவுட் கட்ட வேண்டிய இடத்தை தெரிந்துக் கொண்டு வண்டி வரக்காத்திருந்தார்கள்.

இப்பொழுது இன்னும் இரு நண்பர்களும் சேர்ந்துக் கொண்டார்கள். கட்டவுட் வந்து இறங்கியதும் கட்டிமுடித்தார்கள். கட்டவுட்காரனுக்கு பணத்தைக் கொடுத்தார்கள். இப்பொழுது முதல் காட்சிக்கு கூட்டம் கூடியது. இப்பொழுது கதிரவனும் நண்பர்களும் கட்டவுட்டின் மேல் விறு விறு வென்றி ஏறி கையிலிருந்த பீர் பாட்டிலைத் திறந்து தங்கள் அபிமான நடிகனின் பிம்பத்தின் மேல் ஊற்றினார்கள். கூடியக் கூட்டம் ஆரவாரமாகக் கைதட்டி கோஷமிட்டார்கள்.
“அண்ணன் கூட நடிக்கும் அன்னிக்கும் பீராபிஷேகம்”.

அரைகுறை ஆடையில் இருந்த அவள் பீர் மழையில் கூட்டத்தைக் கிறங்க அடித்தாள்.

கதிரவன் மகிழ்ச்சியுடன் கீழிறங்கினான்.

கதிரவன் பெருசை ஏமாற்றி முருகுடன் கிளம்பியதை மற்ற நண்பர்களுக்கு ஆரவாரமாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

Chitra said...

காலத்துக்கேற்ற கதை. நல்லா இருக்குங்க.

கும்மாச்சி said...

பின்னூட்டத்திற்கு நன்றி

vasu balaji said...

எத்தனை வருஷம் போனாலும் இவங்க மாறவே மாட்டாங்களா:(

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.