Monday 15 March 2010

புத்தகம் படித்தல்.


இந்தப் பழக்கம் என்னிடம் எப்படி வந்தது என்று யோசிக்கிறேன். சிறு வயதில் கோடை விடுமுறை சித்திரை வெயிலில் ஓயாது தெருவில் ஆடி, காய்ச்சல் வந்து வீட்டில் படுத்துக்கொண்டு, காய்ச்சல் சரியானவுடன் வீட்டில் விதித்த தடையால் அம்மாவிடம் நச்சரித்து காசு வாங்கி, நண்பன் பத்து பைசா வாடகையில் தரும் காமிக்சில் தொடங்கியது இப்பழக்கம்.

பருவவ வயதில் வக்கிரத்தின் வடிகாலாக அனானி வகை கொக்கேகப் புத்தகங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டில் கிளிப் அடித்த “நம்ம ஊரு சிங்காரிகளின் லீலைகள்”. படித்தவுடன் மறக்காமல் கிழித்து எறியப்படும்.

பின்பு வாரப் பத்திரிகை தொடர் கதை என்று படிப்படியாக வளர்ந்தது. சுஜாதாவின் தொடர் கதைகளுக்காகவே அடிக்கடி வாரப் பத்திரிகைகளை மாற்றி வீட்டில் எல்லோரையும் கடுப்பேத்துவேன். பின் தொடர்கதை முடிந்தவுடன் அந்த இதழ்களில் உள்ள பாகங்களைப் பிய்த்து சேர்த்து பைன்ட் செய்த சேர்த்து வைப்பேன். சுஜாதாவின் கதைகளும் ஜெயராஜின் ஓவியங்களும் எங்கள் சமகால வாசகர்களுக்கும் பசுமை நினைவு.

பின்பு தமிழில் கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, தேவன, சாண்டில்யன், லா.ச.ரா, சுந்தரராமசாமி, என்று தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.

அதே காலத்தில் ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேசில் தொடங்கி, சிட்னி ஷெல்டன், ஆர்தார் ஹைலே, கேன்போல்லே, இர்விங் வாலஸ் என்று தொடங்கி பின்பு படிக்க ஆரம்பித்த பத்துப் பக்கத்திலேயே துகில் உரியும் தலைகாணி வகை “பெஸ்ட் செல்லர்கள்”.

வீட்டில் தங்கமணியின் “எப்போ பாரு என்னப் புத்தகமோ, வீடு முழுக்க அடைத்துக் கொண்டு, குழந்தை கக்கா பண்ணியிருக்கான், கழுவி விடுங்கள் என்ற பல்லவி எரிச்சல் தருவதில்லை”.

பின்னர் ஓரளவு படிப்பதில் முதிர்ச்சி வந்த பின் தேடி தேடி கட்டுரைகள், கவிதைகள், விஞ்ஞான கதைகள், சரித்திர ஆய்வுகள் என்று படிப்பது வாழ்வின் ஒரு இன்றியமையாத செயல் ஆகிவிட்டது.

நீண்ட நேரப் பயணங்களில் புத்தகங்கள் தவறாமல் கொண்டு செல்வது வழக்கமாகி விட்டது.

பின்பு படிப்படியாக வருடத்திருக்கு ஒரு நாற்பது ஐம்பது புத்தகங்கள் என்று வாங்கி படித்து வீட்டில் அடுக்கிக் கொண்டிருக்கிறேன். இரண்டு அலமாரிகளைத் தாண்டி மூன்றாவதில் அடுக்க ஆரம்பித்துள்ளேன். (புத்தகம் இரவல் வாங்கிச் சென்றவர்கள் திரும்ப கொடுக்காதது இன்னும் ஒரு அலமாரி பெறும்)

இப்பொழுது பதிவுலகில் வரும் பதிவுகளைப் படிக்கும் பொழுது, நிறையப் பதிவர்கள் எல்லா வகை தலைப்பிலும், கவிதை, கதை, கட்டுரை, நையாண்டி, சமூக அக்கறை என்று கலக்குகிறார்களே, இவர்களெல்லாம் நிறையப் படித்திருக்க வேண்டும், படிக்காமல் எழுத முடியாது என்று தோன்றுகிறது.

இப்பொழுது என் குழந்தைகள் பாடங்களுடன் மற்ற புத்தகங்களும் படிக்க ஆரம்பிக்கிறார்கள், நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களையும் ஒரு நாள் படிக்கத் தொடங்குவார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

settaikkaran said...

ஹையா! நான் தான் ஃபர்ஸ்ட்! :-))))

//இரண்டு அலமாரிகளைத் தாண்டி மூன்றாவதில் அடுக்க ஆரம்பித்துள்ளேன். (புத்தகம் இரவல் வாங்கிச் சென்றவர்கள் திரும்ப கொடுக்காதது இன்னும் ஒரு அலமாரி பெறும்)//

நீங்க எவ்வளவோ பரவாயில்லீங்க! இந்த தடவை புஸ்தகக்கண்காட்சியிலே ஏறக்குறைய இரண்டாயிரம் ரூபாய்க்கு புஸ்தகம் வாங்கினேன். வந்த அன்னிக்கு இரவல் போனதுங்க இன்னும் திரும்ப வரலே! அடுத்த கண்காட்சியிலே அதே புஸ்தகங்களைத் திரும்ப வாங்க வேண்டியது தான் போலிருக்கு!

கலக்கல் பதிவு!!

கும்மாச்சி said...

வாங்க சேட்டை, வருகைக்கு நன்றி.
இரவல் கொடுத்தவரிடம் திரும்பக் கேட்டால் அவர்கள் நம்மை அற்பப் புழு போல் பார்க்கும் பார்வையும் பதிலும் கொடுமை.

vasu balaji said...

:).

Chitra said...

இரவல் கொடுத்தவரிடம் திரும்பக் கேட்டால் அவர்கள் நம்மை அற்பப் புழு போல் பார்க்கும் பார்வையும் பதிலும் கொடுமை.

.......... புத்தகத்தை இரவல் கொடுத்து விட்டு திருப்பி வாங்குவது எப்படி? - விலை ரூ.250. ha,ha,ha......

பித்தன் said...

அண்ணே!! நான் பித்தன் உங்க பக்கத்திலேதான் இருக்கேன் எனக்கும் ரெண்டு புக் தாங்களேன்............

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு

கும்மாச்சி said...

அனைவரின் வருகைக்கும் நன்றி

Thenammai Lakshmanan said...

புத்தகங்களின் நேசராக உங்கள் இன்னொரு முகம் அருமை கும்மாச்சி

கும்மாச்சி said...

நன்றி தேனம்மை அவர்களே. நீங்களும் ஒரு புத்தகப் பிரியர் என்று உங்கள் சமீபத்தியப் பதிவில் அறிந்தேன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.