Thursday 18 March 2010

விட்டல்ராவ் ஸார்


நம் வாழ்வில் எவ்வளவு ஆசிரியர்களின் பாடங்கள், அறிவுரைகள் கேட்டு வளர்ந்திருக்கிறோம், அதில் எத்தனை ஆசிரியர்களை நியாபகம் வைத்துள்ளோம், நான் அவ்வப்போது எண்ணிப் பார்ப்பது உண்டு. ஆனால் சில ஆசிரியர், ஆசிரியைகள் நம்முள் ஒரு மாறாத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

என் ஒன்றாம் வகுப்புத் தொடங்கி (கே.ஜி, பி.ஜி எல்லாம் நான் போகவில்லை) பட்டப் படிப்பு வரை வந்த ஆசிரியர்களில் ஒரு சிலர் என் நினைவில் எப்பொழுதும் நின்று கொண்டிருப்பார்கள். அவ்வகையில் “விட்டல் ராவ் ஸார்” என் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியவர்.

கரிய மெலிந்த தேகம். எப்பொழுதும் சிரித்த முகம், முக்கியமாக ரௌத்திரம் பழகியவர். தன் வாழ் நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைப் பிடித்தவர். காசு ஆசை துளிக்கூடக் கிடையாது.

ஸார் என்னுடைய ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பாடமும் அறிவியல் பாடமும் போதித்தார். மதிய இடை வேளைகளில் என்னையும் ராஜசேகரனையும் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருப்பார்.

பள்ளி கோடை விடுமுறையில் எங்கள் ஊரில் கோவில் சித்திரை திருவிழா நடக்கும். மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்து நடு இரவு வரை நடக்கும். எங்கள் வீட்டில் திருவிழாப் போக அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஸார் வந்து என்னையும் ராஜசேகரனையும் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி கூட்டிகொண்டு செல்வார். இரவில் அங்கு கடைகளில் கிடைக்கும் சூடான மசாலாப் பாலும், பழங்களும் வாங்கிக்கொடுப்பார். பிறகு வீட்டில் எங்களை விட்டுச் செல்வார்.

திரு விழாவில் நடக்கும் கச்சேரிகளின் இசை நயத்தை எங்களுக்கு விளக்குவார். அவருக்கு இசையில் தீவிர நாட்டம் உண்டு. எங்களுக்கு நாட்டு நடப்பை புரிய வைப்பார். அவ்வப்பொழுது எங்களுக்கு புரியாத தத்துவங்களை உதிர்ப்பார். பாரதியின் கவிதையில் ஈடுபாடு கொண்டவர்.

பின்பு நான் கல்லூரி சென்றவுடன் கூட அவருடன் தொடர்பு வைத்திருந்தேன். சனி ஞாயிறுகளில் வாடகை சைக்கிள் வைத்துக் கொண்டு அவர் இருந்த அறைக்கு சென்று பேசிவிட்டு வருவேன்.

கல்லூரி முடித்து ஒரு வங்கியில் விடுமுறை வாய்ப்பில் ஆறு மாதம் பணி புரிந்தேன். பின்னர் எனக்கு ஒரு மருந்துக் கம்பனியில் நிரந்தர வேலைக்கு தேர்வாகி இருந்தேன். முபையில் பயிற்சிக்கு வர சொல்லி ஆர்டர் அனுப்பியிருந்தார்கள் ரயில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்தேன், கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பு டைபாயட் காய்ச்சல் வந்து போக முடியாததால் கம்பெனி ஆர்டரை ரத்து செய்து விட்டார்கள்.

நான் மிகவும் நொந்து போயிருந்த நேரம், அவர் என் நிலைமையை ராஜசேகரனிடம் தெரிந்து கொண்டு என்னைக் காண வீட்டிற்கு வந்தார். அவர் வந்தவுடன் நான் என் முதல் நிரந்தர வேலை பறி போன கதையை சொல்லி தேம்பி தேம்பி அழுதேன்.

அவர் என்னை முதன் முறையாக கடிந்து கொண்டார். “பெண் பிள்ளை மாதிரி அழாதே, இந்த வேலை இல்லையெனில் இன்னொரு நல்ல வேலை உனக்கு காத்திருக்கிறது” என்றார். பின்பு எனக்கு நல்ல அறிவுரை வழங்கினார். மருந்துத் தொழில் எனக்கு ஏற்றது அல்ல என்றும் என்னுடைய படிப்பிற்கு வேதியல் சம்பந்தப் பட்ட உற்பத்தித் தொழிலுக்கு சென்றால் நல்ல முன்னுக்கு வரலாம் என்றார்.

சொல்லி வைத்தார்ப் போல் எனக்கு உரத்தொழிற்சாலையில் வேலைக் கிடைத்தது, அதன் பிறகு நான் இந்தத் துறையில் கண்ட வளர்ச்சி அபாரம். இதையெல்லாம் அவரிடம் சொல்லி நான் அவரை மகிழ்விக்க அவர் ரொம்பக் காலம் எங்களுடன் இல்லை. முதுமை அவரை நிரந்தர நித்திரையில் ஆழ்த்திவிட்டது.

இப்பொழுது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், நான் என்று பெருமை கொள்ள என்னது எதுவும் இல்லை, எல்லாப் பெருமைகளும், என்னை உருவாக்கிய ஆசிரியர்களையே சாரும்.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//ஆசிரியைகள் நம்முள் ஒரு மாறாத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

கண்டிப்பாக உண்மைதான் ..

மதுரை சரவணன் said...

ஆம். சில ஆசிரியர்கள் மட்டும் நம் நினைவில் என்றூம் இருப்பார்கள். அவர்கள் என்றும் வழிக்காட்டிகளாய் வாழ்நாள் முழுவதும் தொடர்வார்கள். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.மறக்காம இந்த வாத்தியையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

Chitra said...

எல்லாப் பெருமைகளும், என்னை உருவாக்கிய ஆசிரியர்களையே சாரும்.

...... அந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கு, வாழ்த்துக்கள்

டக்கால்டி said...

Super

Thenammai Lakshmanan said...

ரொம்ப சரி கும்மாச்சி நம்மை நன்கு உருவாக்கிய பெருமை நம் ஆசிரியர்களையே சாரும்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.