Monday 29 March 2010

கூலி மிககேட்பாள், கொடுத்தவுடன் அம்பேல் ஆவாள்


கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;


பாரதி வேலைக்காரன்களோட மாரடிச்சு “நொந்து நூடுல்ஸ்” ஆன பின்னதான் இந்த மாதிரி பாடியிருக்கனும்.

நான் ஒவ்வொருமுறையும் ஊருக்கு செல்லும் பொழுதும், மனைவி ஏதாவது ஒரு வேலைக்காரி கதை வைத்திருப்பாள். அந்தக் கதை நான் விடுமுறை முடிந்து திரும்பும் வரையில், புது புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு நாளும் மெருகேறும். அவள் சொல்லும் கதைகளில் அவளது சொந்த ஜோடனைகளும், விவரிக்கும் விதமும் நேரில் பார்த்தது போல் இருக்கும்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அவர்களை மாற்றி விடுவாள். இப்பொழுது இருப்பவள் தான் எனக்கு தெரிந்து சற்று நெடுங்காலம் இருக்கிறாள், மூன்று வருடம் என்று நினைக்கிறேன்.

முன்பு இருந்தவள் "சுனிதா" ஒரு இரண்டு வருடம் வேலை செய்தாள். வீட்டு வேலை எல்லாம் மிக பொறுப்பாக செய்வாள். வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். மனைவிக்கு அவள் இல்லை என்றால் கை ஒடிந்தது போல் ஆகிவிடும். விடுமுறை எடுக்க மாட்டாள், கூலி அதிகம் கேட்கமாட்டாள், ஆனால் "கை சற்று நீளம்".

அன்று காலை என் பெண்ணின் பிறந்த நாள், பள்ளி செல்லும் முன் எங்களை வணங்கிய பொழுது ஐந்நூறு ரூபாய்க் கொடுத்தேன். அதை பத்திரமாக வாங்கி தன் சிறிய பையில் வைத்து அதை அவள் புத்தக அலமாரியில் வைத்து சென்றதைப் பார்த்தேன். மாலையில் அவள் வீடு திரும்பியவுடன் ஒரே அமர்க்களம். ஐந்நூறு ரூபாயைக் காணவில்லை என்று அழுதாள். வேறு யாரும் அதை எடுக்க வாய்ப்பில்லை. அடுத்த முறை என் பையனின் கைகடிகாரம் காணவில்லை. வீட்டை தலைகீழாக தேடி விட்டோம். என் மனைவி வேலைக்காரி தான் எடுத்திருப்பாள், அவளைக் கேட்கலாம் என்றாள். நான் கூடாது என்று சொல்லிவிட்டேன், தக்க ஆதாரம் இல்லாமல் அவளை கேட்டு அவள் அப்படி எடுக்க வில்லை என்றால் அவள் மனது கஷ்டப் படும், மேலும் நாம் அஜாக்கிரதையாக இருந்தது நம் தவறு என்று தடுத்துவிட்டேன். பிறகு அவளே வேலையை விட்டு நின்று விட்டாள்.

அடுத்து வந்தவள்தான் “வள்ளி” இப்பொழுது இருப்பவள். வேலை மிக துல்லிய மாக செய்வாள். வீட்டில் எந்தப் பொருள் வைத்தாலும் தொடுவதில்லை. அந்த விஷயத்தில் நம்பிக்கையானவள். ஆனால் திடீரென்று விடுமுறை எடுப்பாள். கேட்டால் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு காரணம் சொல்லுவாள்.

கலைஞர் டிவி கொடுக்கிரார்னு வாங்கப் போனேன்மா என்பாள். ஏன் உன் வீட்டுக்காரர் போய் வாங்க வேண்டியது தானே என்றால், அவர் போ மாட்டார்மா, மேலும் என்கிட்டதான் கொடுப்பாங்கன்னு ஆபிசர் சொல்லிட்டார் என்பாள்.

மற்றொரு நாள் நான் வெளியே சென்று மாலை வீடு திரும்பிய வுடன் தான் மாலை அவள் வள்ளி இரண்டு நாள் வராதக் கதையை என்னிடம் சொன்னாள்.

“பாருங்க இரண்டு நாள் முன்பு வள்ளிக்கு சம்பளம் கொடுத்தேன், இரண்டு நாள் வரவில்லை, என்ன எதுன்னு கேட்டா, ஒரே அழுகைங்க. அவ வீட்டுக்காரன் சரக்க அடிச்சுட்டு அவள காலாலேயே எட்டி வுட்டுட்டு சம்பளத்த பிடிங்கிட்டானான். இரண்டு நாட்களாக ஒரே உடம்பு வலியாம், பாவம் அழுகிறாள். என்ன மனுஷன் அவன். அதனாலே ஒரு ஐந்நூறு ரூபா கேட்டா, பாவமா இருந்தது கொடுத்திட்டேங்க” என்றாள்.

நான் என் மனைவியிடம் உன்னை அவள் ஏமாற்றுகிறாள் என்று சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டாள். “உங்களுக்கு ஒன்னும் தெரியாது, அவங்க வீட்டில் எல்லாம் அப்படித்தான்,” என்பாள்.

நான் இதான் சாக்கு என்று “பார்த்தாயா அவள் புருஷன் சரக்கடிச்சுட்டு எட்டி விடுறான், நான் ஏதோ கிளப்புக்கு போய் ரெண்டு பெக் அடிச்சா ஒரே ஆர்பாட்டம் செய்யறே” என்று நக்கல் அடித்தேன்”.

இரண்டு வாரம் கழித்து நான் வெளியே ஏதோ வேலை விஷயமாக சென்று வீடு திரும்பும் பொழுது துணிகள் தோய்க்கப்படாமல் இருப்பதைக் கண்டு மனைவியிடம் இன்று வள்ளி வேலைக்கு வரவில்லையா என்று கேட்க, “இல்லை காலையிலே வந்து புருஷனுக்கு உடம்பு சரியில்லை அவசரமாக ஆஸ்பத்திரி போகணும் என்று ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றாள்” என்றாள்.

“நீ திருந்தமாட்டே அவள் பொய் சொல்கிறாள், நான் வரும்பொழுது நம்ம ஊரு சினிமா கொட்டகை வாசலில் அவளைப் பார்த்தேன் அவள் புருஷனுடன் வரிசையில் புதுப் படத்திற்காக நின்று கொண்டிருக்கிறாள்” என்றேன்.

“சும்மா ஒளராதீங்க, அது வேற யாரவது இருக்கும், அது சரி நீங்க ஏன் அங்கேயெல்லாம் போறீங்க” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

இராகவன் நைஜிரியா said...

// “சும்மா ஒளராதீங்க, அது வேற யாரவது இருக்கும், அது சரி நீங்க ஏன் அங்கேயெல்லாம் போறீங்க” என்றாள்.//

மனைவியிடம் பேசி ஜெயித்ததாக சரித்திரம், பூகோளம் எதாவது உண்டுங்களா?

கும்மாச்சி said...

ராகவன் வருகைக்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களது பின்னூட்டம், மகிழ்ச்சி.

பனித்துளி சங்கர் said...

{{{{“சும்மா ஒளராதீங்க, அது வேற யாரவது இருக்கும், அது சரி நீங்க ஏன் அங்கேயெல்லாம் போறீங்க” என்றாள்}}}}

உங்க வீட்டுக்காரம்மா ரொம்ப உஷார்தானுங்கோ!!

இராகவன் நைஜிரியா said...

// கும்மாச்சி said...
ராகவன் வருகைக்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களது பின்னூட்டம், மகிழ்ச்சி.//

வெரி வெரி சாரி...

இனிமேல் ஒழுங்கா வருவேன் என உறுதி கூறுகின்றேன்

மன்மதக்குஞ்சு said...

3வது 4வது வேலைக்காரி(ர) கதையெல்லாம் வரட்டும். ரைட்டு...

Thenammai Lakshmanan said...

உண்மையை சொன்னாலும் எடுபடாத இடம் இது ..ஏன்னா வேலைக்காரிதானே முக்கியம் ...கும்மாச்சி நீங்க பாடு சொல்லிட்டு போய்டுவீங்க ...சண்டை போட்டுட்டாம்கஷ்டப் படப் போறது அவங்கதானே

Chitra said...

“சும்மா ஒளராதீங்க, அது வேற யாரவது இருக்கும், அது சரி நீங்க ஏன் அங்கேயெல்லாம் போறீங்க” என்றாள்.

......... அதானே......! :-)

கும்மாச்சி said...

அது சரி தேனம்மை, அங்கேயும் அப்படித்தானா.

Vetirmagal said...

40 வருட அனுபவம்.. நன்றாக வேலை செய்தால் பல நாட்கள் மட்ட்ம் போடுவார்கள். தினமும் வந்தால், வேலை மோசம்.

The choice is ours! :-))

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.