Thursday 9 September 2010

அடை மழையும் என் தூங்காத இரவும்

மழை என்றாலே எனக்கு இன்னும் அந்த நினைவு போகவில்லை. இன்று நினைத்தாலும் அந்த தூங்கா இரவு என்னுள் பயம் பரவ செய்யும். சென்னையில் ஒரு அக்டோபர் தினம். அன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை. முதல் நாள் இரவு சற்று ஒய்ந்துவிட்டு அன்று காலை மழை வலுக்கத் தொடங்கிவிட்டது. நான் கம்பெனிக்குப் போகவில்லை. நான் விடுவிக்க வேண்டியவன் எனக்குப் பதில் காலை ஷிப்டில் தங்கிவிட்டான். என் தம்பி தங்கைகளுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை.


கடமை உணர்ச்சி தவறாத என் அப்பா வழக்கம் போல் ஆபீசுக்கு கிளம்பி விட்டார். அவரது பாரம்பரிய உடையான வேட்டியைக் கட்டிக்கொண்டு, ஹவாய் சப்பலுடன் நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கிளம்பிவிட்டார். மதியம் வரை விடாமல் மழை கொட்டிகொண்டிருந்தது. தெருவெல்லாம் ஒரே வெள்ளக் காடு. ஒரு தம் அடிக்கக்கூட வெளியில் செல்ல முடியவில்லை. எப்படியோ மாலை வரை தள்ளிவிட்டேன். நான்கு மணிக்கே இரவு எட்டுமணி போல் இருட்டு. இரவு ஏழு மணியாகியும் அப்பா இன்னு வீடு திரும்பவில்லை. அப்பாவைத் தேடிக்கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் வரை போகலாமென்று கிளம்பினேன். போகும் வழியில் அப்பாவுடன் வேலை செய்பவர் வீடு இருந்தது. அவர் வீட்டில் சென்று அவர் வந்துவிட்டாரா பார்க்கலாம் என்று கதவைத் தட்டினேன். அவர்தான் கதவைத் திறந்தார். அப்பா இன்று மதியம் ஒரு மணிக்கே ஆபிஸை விட்டு கிளம்பிவிட்டார் என்றார். ரயில்வே ஸ்டேஷன் சென்று வண்டி வந்ததா என்று பார்க்கப் போனால் அங்கே ஒரே கும்மிருட்டு. ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வீடு வந்து அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா மிக தைரியசாலி, கவலைப் படாதே அப்பா வந்து விடுவார் என்றாள்.இரவு மணி பத்து ஆகியது. உறங்கச் சென்றோம். எனக்கு அப்பாவிற்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கவலை. உறக்கம் பிடிக்கவில்லை. இரவு மணி இரண்டு ஆகியது. எப்பொழுது உறங்கினேன் என்று தெரியாது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நான் கம்பெனிக்கு கிளம்பவேண்டும். அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இப்பொழுது எல்லோரையும் கவலை ஆட்கொண்டது. நான் கம்பெனி செல்லவில்லை. மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. நேரம் ஆக ஆக எல்லோரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. கிட்ட தட்ட என் தம்பி தங்கைகள் அழும் நிலைக்கு வந்து விட்டார்ககள். மணி எட்டு ஆகிவிட்டது. மழை வலுத்து விட்டது. நானும் என் தம்பியும் குடையை எடுத்துக் அப்பாவை தேடி கொண்டு கிளம்பினோம். ஸ்டேஷன் வரை சென்றேன் வண்டி வந்தத் தடயம் ஏதுமில்லை. அப்பாவை காணவில்லை.

பயம் ஏற ஏற வீட்டிற்கு திரும்பினேன். என் தங்கை வெளியில் அப்பா எங்கே என்றாள்?. இல்லை காணவில்லை என்றேன். தம்பியும் திரும்பி வந்தான். அப்பா வரவில்லை.

அம்மா இப்பொழுதும் தைரியமாக இருந்தாள். அப்பா தன் தங்கை வீட்டிற்கு போயிருப்பார்கள் கவலைப்படாதீர்கள் என்றாள்.

சுமார் பத்து மணிக்கு அப்பா வீட்டிற்கு வந்தார். இரவு முழுதும் கண் முழித்து சிவந்த கண்களுடன் வந்தார். எங்கள் கவலையைக் கண்டு அப்பா ஆச்சர்யமுற்றார். அவர் மதியம் மூன்று மணிக்கு வண்டியில் ஏறி இருக்கிறார். வண்டியில் நல்லக் கூட்டம். இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரும்பொழுது இறங்க முடியவில்லை. வண்டி அடுத்த ஸ்டேஷனை நெருங்கும் பொழுது மின்சாரம் நின்று போய் வண்டி இரண்டு ஸ்டேஷன்களுக்கு நடுவே நின்று இருக்கிறது.

மறு நாள் மின்சாரம் வந்தவுடன் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மறு வண்டு பிடித்து வந்திருக்கிறார்.

எங்கள் எல்லோருக்கும் மழை என்றாலே அந்த நியாபகம் வந்து இன்னும் எங்களை பயமுறுத்தும்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Chitra said...

உங்கள் அம்மாவின் உறுதியான நம்பிக்கையை பாராட்டுகிறேன். Pretty Impressive!

Zen the Boss said...

naila irkuth unga narration keep it up. But is it a true story ????

velji said...

தீவிரமான மழையையும்,வீட்டின் பதற்றத்தையும்,அம்மாவின் தைரியத்தையும் உணர முடிகிறது.

நல்ல எழுத்து!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அம்மாவின் மன உறுதி பாராட்டுக்குரியது...

அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.