Thursday 16 February 2017

தாமதிக்கப்பட்ட நீதியும் தரங்கெட்ட அரசியலும்

சொத்துக்குவிப்பு வழக்கின் உச்ச(சா) நீதிமன்ற தீர்ப்பு விசாரணை எல்லாம் என்றோ முடிவடைந்த நிலையில் நேற்றைய முன் தினம் வெளியானது. மறைந்த முதலமைச்சர் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதே இந்த தீர்ப்பு தேதி குறிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. அதன் காரணம் ஒன்றும் நாம் அறியாததல்ல.

இந்த வழக்கின் போக்கை முதலிருந்தே கவனித்தவர்களுக்கு தெரியும் இதன் தீர்ப்பு எப்படி இருக்குமென்று. இடையிடையே வழக்கை எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அந்த அளவிற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து விளையாடினார்கள் என்பதை நாடறியும்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு நகலை படித்தவர்களுக்கு தெரியும் இந்த வழக்கு இனி எங்கு சென்றாலும் குன்ஹா தீர்ப்பை மாற்றுவது கடினம் என்று, ஏனெனில் இந்த வழக்கில் ஆதாரங்கள் மிகவும் நேர்த்தியாக சமர்பிக்கப்பட்டு இருந்தது. குன்ஹா தீர்ப்பை விலாவரியாக எழுதி (கிட்டத்தட்ட ஆயிரத்தி நூறு பக்கங்கள்) வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புட்டு புட்டு வைத்திருந்தார். இடையே வந்த குமாரசாமி ஒரு புதிய கணக்கை உண்டாக்கி வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்யாசம் ஒரு எட்டு விழுக்காடுதான் "தப்பிச்சுக்கோ" என்று தீர்ப்பு எழதினார். இந்த தீர்ப்பு நகலைப் படித்தவர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர்.

ஆனால் கர்நாடக அரசு இதை விடுவதாக இல்லை உச்ச்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து தங்களது பணியை செவ்வனே செய்தது. இந்த வழக்கு உச்ச்சநீதிமன்றத்திற்கு வந்த பொது இது ஒரு "OPEN AND SHUT CASE" என்று சட்ட வல்லுனர்களுக்கு தெரிந்திருக்கும். ஏன் என்றால் உயர்நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள்.

ஆனால் தீர்ப்பு சில அரசியல் காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறியதை நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் உடல் நிலை காரணமாக  கிட்டத்தட்ட செயல்படாத நிலையில் இருந்தார். இதனால் அரசாங்கம் ஸ்தம்பித்தது. அவரது நேரடி பார்வை இல்லாததால் அல்லக்கைகள் ஆட்டையைப் போட ஆரம்பித்தனர். கூடவே இருந்த கூட்டமோ தங்களது ஆட்டத்தை முடுக்கிவிட்டது. பிறகு முதலமைச்சர் நோய்வாய்ப்பட அப்போலோ வாசலில் அமைச்சர்கள் நின்று காவடி எடுத்து அதிகாரிகளின் கையில் ஆட்சி போக பின்னர் நடந்த குளறுபடிகளும் அதன் தொடர்ச்சியாக நடந்த வருமானவரித்துறை நடத்திய அதிரடி நடவடிக்கைகளும் தமிழகத்தின் கேவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியது.

முதலமைச்சரின் மர்ம சாவு, பின்னர் மாஃபியாக்களின் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஆடிய ஆட்டங்கள் தற்பொழுது தமிழகத்தின் இன்றைய நிலை ஒரு கேலிக்கூத்து.

கட்சியின்
நிரந்தரப் பொதுசெயலாளர் செத்துப்போயிட்டார்.
தற்காலிக பொதுசெயலாளர் ஜெயிலுக்கு போயிட்டார்
துனைப் பொதுச்செயலாளர் இப்போதான் கட்சியில் சேர்ந்துள்ளார்
முதலைச்சர் கட்சியிலேயே இல்லை
எம்.எல். ஏக்கள் எங்க இருக்காங்கன்னு தெரியல
எம்'பி'க்கள் எதுக்கு இருக்காங்கன்னு தெரியல
காவல்துறை எந்தப்பக்கமுன்னு அவங்களுக்கே தெரியல
ஆளுநருக்கு ஒன்னும் புரியல...............

இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக நான்கு பெரும் குற்றவாளிகள் என்றும் மினிம்மா கூட்டம் இந்த ஆதாயத்திற்காகவே மறைந்த முதலமைச்சருடன் தங்கி இருந்தனர் என்று நாமறிந்த உண்மையை ஊரறிய சொல்லியிருக்கிறது.

குற்றவாளியின் புகைப்படங்கள் அரசாங்க அலுவலகங்களிலோ இல்லை சட்டசபையிலோ இருக்கக்கூடாது அகற்றப்படவேண்டும் என்று சட்டம் சொல்லுகிறது.

பிறந்த குழந்தைமுதல் இறந்த பிணம் இன்ன பிற அரசு நிவாரணப்பொருட்கள் என்று எல்லா இடத்திலும் ஸ்டிக்கர் ஒட்டியவர்களின் கதி அந்த முகத்தை எங்குமே யாரும் பார்க்கக்கூடாது என்று விதி வழிவிட்டுவிட்டது.

அதிகாரத்தில் இருந்த பொழுது அனைவரையும் காலடியில் விழவைத்த கொடுமை இப்பொழுது கால்களோடு புதைப்பட்டதா  இல்லையா என்ற சர்ச்சையை இழுத்து விட்டிருக்கிறது.

கூடவே இருந்த குழிபறித்து ஆட்டடையை போட்ட கூட்டம் களி தின்ன சென்றுவிட்டது.

ஆடி அடங்கும் வாழ்கை, ஆறடி நிலம்தான் சொந்தம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் யாரும் ஆட்டத்தை நிறுத்தப்போவதில்லை.........

இதுவும் கடந்து போகும்.....

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

வேகநரி said...

அருமையான பதிவு.

ஜெயலலிதா அனைவரையும் காலடியில் விழவைத்து கொடுமைகள் செய்ததினால் தான், இரும்பு தலைவி,ஆளுமை கொண்ட தலைவி என்று புகழ்ந்தார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சே...! சே...! சே...!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இதுகளை கடந்து போவோம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.