Monday 8 February 2010

ஜே.பி. (பால்யநண்பன்)


இரண்டு வருடம் கழித்து விடுமுறைக்கு தாய் நாடு திரும்புகிறேன். நான்கு மணி நேர விமானப் பயணம். அருகில் என்னைப் போல் தாய் நாடு திரும்பும் இரண்டு புதுவை யுவதிகள். விமானம் கிளம்பும் முன்னே ஆரம்பித்த பேச்சு ஓய்ந்த பாடில்லை. ஒரு நிமிடம் கூட கண்ணை மூடவில்லை. ஒரு வழியாக தூங்கு மூஞ்சியுடன் வீடு சேர்ந்தேன். என் மகள் நன்றாக உறங்கிவிட்டாள்.

வரவை எதிர் பார்த்திருந்த பெற்றோர்கள், சகோதர சகோதரிகளுடன் பேச்சு, இரண்டு வருடக் கதையை இரண்டு மணியில் பேசி அவர் அவர்கள் கடமையாற்ற கிளம்பிவிட்டனர். என் மகள் பிரயாணக் களைப்பில் நான் அப்புறம் சாப்பிடுகிறேன் என்று உறங்கிவிட்டாள். அம்மாவுடன் காலை உணவை முடித்து விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அம்மா மனைவி குழந்தைகள் பற்றி விசாரித்தாள், எப்பொழுது அவர்கள் வருகிறார்கள் என்றாள். பெரியவனுக்கு இப்பொழுது பரீட்சை நேரம்மா, முடிந்தவுடன் அவர்கள் அடுத்த வாரம் வருவார்கள் என்றேன். சிறிது நேரம் தூங்குகிறேன்” என்று அறைக்குள் நுழைந்தேன். அம்மாவும் சிறிது நேரம் தூங்குகிறேன் என்று ஹால் சோபாவில் உறங்கப் போனாள்.

கண் அசரும் நேரம் அழைப்பு மணி அழைக்கவே எழுந்தேன், ஹாலைக் கடக்கும் பொழுது அம்மா யாரவது சோப்பு விற்பவர்கள் ஆக இருக்கும், நீ போய் உறங்கடா, இரண்டு முறை மணி அடித்துவிட்டு அவர்களே போய் விடுவார்கள் என்றாள். விடாமல் மணி ஒலிக்கவே நான் கதவைத் திறந்தேன்.

சார் “வீட்டுல பண்ண பிஸ்கட் முறுக்கு எல்லாம் இருக்கு, வாங்கிக்கங்க என்றான்” அழைப்பு மணி அடித்தவன்.
அதற்குள் அம்மா அதெல்லாம் வேண்டாம்பா, போன முறை வாங்கியதே இன்னும் யாரும் தின்னாமல் கிடக்கிறது” என்றாள்.
நான் அவள் பேச்சை கேட்காமல் ஒரு இரண்டுப் பாக்கட் வாங்கினேன். முதல் முறை என்னை நிமிர்ந்துப் பார்த்தவன் இந்த முறை பாக்கெட்டை கொடுத்து பணத்தை தலையை குனிந்து கொண்டுதான் பெற்றுக் கொண்டான். அவன் என்னை நோக்குவதை தவிர்ப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. எனக்கு அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது, என் பால்ய சிநேகிதன் ஜே.பி. அவன் முழுப் பெயர் ஜ. பாலகுமார். அவன் வாழ்ந்த வாழ்க்கை என் மனதில் ஓடியது. மிகவும் பெரிய பணக்கார வீட்டுப் பையன் அவன். பள்ளியின் மதிய இடைவேளையில் நாங்கள் கொண்டு வந்த உணவை அவன் வீட்டில் வைத்துதான் உண்பேன், அப்பொழுது அவன் தாத்தா நான் திண்ணையில் தனியாக உண்பதைக் கண்டு ஜே. பியைக் கடிந்துக் கொண்டு என்னையும் அவனுடன் உண்ண வைப்பார். மிகப் பெரிய வீடு, தோட்டம் துரவேல்லாம் இருக்கும், அவன் வீட்டு மாட்டுக் கொட்டகை அளவிற்குத்தான் என் வீடு இருக்கும். அவனுக்கு ஒரு தங்கையும் இரண்டு தம்பிகளும் உண்டு. அவர்கள் வீட்டில் எனக்கு ராஜ மரியாதை தான்.

பின்பு நான் உயர் பள்ளி, கல்லூரி என்று வேறே இடத்தில் படித்ததால் அவனைக் காணுவது மிகவும் அபூர்வமாகிவிட்டது. மேலும் நான் கல்லூரி சென்றவுடன் நாங்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் குடி புகுந்தோம். அவனை நான் பார்த்து வெகு வருஷங்கள் ஆகிவிட்டது.

இப்பொழுது அவனை பார்த்ததும் என்னால் அடையாளம் காண முடிந்தது. அவன் வீடு வீடாக சென்று முறுக்கு விற்கும் அளவிற்கு வந்தது எனக்கு வேதனையாக இருந்தது. கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்கிறார்களே, என்னைக் கேட்டால் அதைவிடக் கொடுமை எல்லாம் அனுபவித்து விட்டு ஒன்றும் இல்லாதவனாக ஆகிவிடுவது என்பேன். அவனை பார்த்து அவன் கஷ்டத்தைக் கேட்டு என்னால் எதாவது செய்ய முடியுமா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து அவனை தெருமுனையில் சந்தித்தேன். ஜே.பி என்னை அடையாளம் தெரிகிறதா என்றேன். ஏண்டா தெரியாம எப்படிட இருக்க என்ன பண்ணுகிறாய் என்று என்னைக் கேட்டான். என் கதையை சொன்னேன். அம்மா அப்பா தங்கை தம்பிகள் எப்படிடா இருக்கிறார்கள் என்று கேட்டேன்.

இரண்டு தம்பிகளும் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார்கள், கல்யாணம் ஆகிவிட்டது அவர்களுக்கு என்றான். தங்கை உமா எப்படி இருக்கிறாள் என்றேன். அவள் கல்யாணமாகி தாம்பரத்தில் இருக்கிறாள் என்றான். அப்பா இறந்து விட்டாராம், அவனும் அம்மாவும் தனியாக இருக்கிறார்களாம்.

அவன் அப்பா அவன் தாத்தா வைத்துப் போன சொத்தையெல்லாம், கிண்டி, பெங்களூர் என்று ஊர் ஊராக சென்று குதிரை மேலேக் கட்டி ஒழித்துவிட்டாராம், அவருடைய நடத்தைப் பிடிக்காமல் படிப்பிலும் கவனம் செலுத்தாமல் பாதியிலேயே ஜே.பி படிப்பை நிறுத்தி விட்டான். அவன் அம்மா தன் நகைகளை விற்று தங்கைக் கல்யாணத்தை எப்படியோ முடித்திருக்கிறார்கள். தம்பிகள் இருவரையும் அம்மாவும் இவனும் சேர்ந்து படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிரார்கள். ஆனால் அமெரிக்கா சென்று அங்கேயே திருமனம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார்களாம். இங்கு வரவே இல்லையாம். எப்பொழுதாவது போன் செய்து அம்மாவுடன் பேசுவார்களாம். ஆனால் இவர்கள் பொருளாதார நிலமைத் தெரிந்து கொண்டதுபோல் இது வரை காட்டிக் கொன்டதில்லையாம்.
ஏண்டா உனக்கு இதை நினைத்து வருந்துவதில்லையா என்று அடக்க முடியாமல் கேட்டேன்.
இல்லைடா நானும் அம்மாவும் இப்பொழுது ஏதோ வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.. எங்கள் சொத்து போனவுடன் அம்மா எப்படி நான்கு பேரையும் கரை சேர்க்கப் போகிறோம் என்று புலம்புவாள். இப்பொழுது தம்பிகள் இருவரும் செட்டில் ஆகிவிட்டார்கள். உமாவும் ஓரளவுக்கு சுமாராக செட்டில் ஆகிவிட்டாள், அடிக்கடி எங்களை வந்துப் பார்த்துப் போவாள். இப்பொழுது வரும் வருமானம் எங்கள் இருவருக்கும் போதுமானது என்றான்.

கடைசியில் அடக்க முடியாமல் ஏண்டா கல்யாணம் பண்ணிக்கவில்லையா என்று கேட்டுவிட்டேன்.

இல்லைடா, எனக்கு அந்த நினைப்பு இல்லை, மேலும் திரும்ப குழந்தை குட்டி என்று அவர்கள் படிப்புக்கு என்னால் ஓட உடம்பிலும் மனசிலும் வலுவிருக்குமா தெரியவில்லை என்றான்.

ஜே. பி உன்னை என்ன என்று சொல்வது தெரியவில்லை. அவன் தம்பிகளை நினைத்தேன், வெறுப்பு முட்டியது.

கண்ணதாசனின் “அண்ணன் என்னடா” பாடல்” ஏனோ நினைவுக்கு வந்தது.

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

அண்ணாமலையான் said...

அழுத்தமான பதிவு.

கும்மாச்சி said...

அண்ணாமலையான் உங்களது பின்னூட்டம் எனக்கு பெரிய ஊக்கம். அடுத்த முறை சிதம்பரம் வரும் பொழுது உங்களை சந்திக்க விழைகிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

மனசு வலிக்குது தல..:-(

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்னைக்கு வலைச்சரத்துல உங்களுடைய "குருசாமி தாத்தா" கேரக்டர் பத்தித்தான் எழுதி இருக்கேன் நண்பா..

கும்மாச்சி said...

கார்த்தி இப்போ எங்கே இருக்கீங்க. துபாயிலா இல்லை தமிழ் நாட்டிலா. சிறிது இடைவெளி விட்டு நாம் தொடர்புக் கொள்கிறோம்.
உங்களது கடைசிப் பதிவான வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைப் படித்தேன், நல்லப் பதிவு.

மன்மதக்குஞ்சு said...

விழியோரம் கண்ணீர் துளிர்க்க வைக்கும் கலப்படமில்லா நிதர்ஸனமான உண்மை. என் வாழ்விலும் இம்மாதிரி அனுபவத்தை சந்தித்துள்ளேன்.

vasu balaji said...

கொடுமைங்க கும்மாச்சி.

ரிஷபன் said...

நிராகரிப்பு போல ஒரு கொடுமை வாழ்க்கையில் வேறெதுவும் இல்லை.. தளர்ந்து போகாமல் ஜீவிக்க அவர் செய்யும் முயற்சிகளுக்கு ஒரு சபாஷ்..

settaikkaran said...

இது போல பல ஜே.பி.க்கள் இருக்கிறார்கள்; உங்களைப் போல சிலர் அவர்களுக்காக மனிதாபிமானத்துடன் கூடிய இயல்பான கரிசனத்தை வெளிப்படுத்துகிறீர்கள். பலருக்கு ஜே.பி.போன்றவர்கள் "வேலியில் போகிற ஓணான்கள்," தான் அண்ணே! கண்டும் காணாதது போல போய் விடுவார்கள்! மனதை உருக்கிய பதிவு!

manjoorraja said...

மனதை மிகவும் கனக்க செய்துவிட்டீர்கள் நண்பரே.... ஒரு விசயம் நெருடுகிறது. உங்கள் வீட்டுக்கு வரும் போது உங்களுக்கு அவரை தெரிந்ததும் அவருடன் பேசாமல் இருந்தது ஏன்?

Unknown said...

மனசுக்கு கஷ்டம்மா இருக்குங்க..,

ஹேமா said...

வாழ்க்கையில் யாரையுமே நம்பாமல் இருப்பதே நல்லது.நல்லதொரு பாடமான கதை.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.