Friday 16 July 2010

ஒரு பதிவரின் டைரிக் குறிப்பு.

இது ஏதோ பதிவைப் பற்றிய குறிப்பு என்று படிக்க வருபவர்கள் அப்படியே அடுத்த ப்லாகிற்கு போயிடுங்க ஆமா முதலிலேயே சொல்லிட்டேன். இது வந்து எனக்கு டைரி எழுத வேண்டும் என்ற ஆவலில் எதையோ கிறுக்கி பின் டைரிக் கனவை கொன்று குழி தோண்டிப் புதைத்தக் கதை.

என் அப்பா விடாமல் டைரி எழுதுவார் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் எல்லா நுணுக்கங்களும் இருக்கும். அவரிடம் நான் கவனித்தப் பழக்கம் தினமும் எழுதுவார். ஒரு இரண்டு நாட்கள் விட்டு விட்டு மூன்றாவது நாள் எழுதுவோம் என்பதெல்லாம் கிடையாது. நான் யாருக்காவது கடன் கொடுத்தோ அல்லது வாங்கியோ இருந்தால், அதை அவரிடம் சொன்னால் அதையும் எழுதுவார். அப்புறம் இரண்டு வருடம் கழித்து என்னை நியாபகப் படுத்தி கடுப்பும் ஏற்றுவார்.

ஒரு முறை கல்லூரி விடுமுறையில் வீட்டில் பொழுது போகாதபோது பரணில் ஏறி எல்லாப் பழைய குப்பைகளை கிளறிய போது என் தாத்தாவின் இரண்டு டைரிகள் கையில் கிட்டின. (அதே பரணில் இரண்டு கொக்கோகம் (ரசவந்தி) சம்பந்தப் பட்டவைகளும் சிக்கின அது வேறு கதை, என் அண்ணன் கைங்கர்யம்). தாத்தா எல்லா நுணுக்கமான விஷயங்கள், நாங்கள் பிறந்த நேரம் முதல், நிலம் வாங்கிய விவரங்கள், அவரின் காசி பயணம் எல்லாம் விலாவரியாக எழுதியிருந்தார். பாட்டியுடன் போட்ட சண்டையும் விடவில்லை. இந்த டைரி படிப்பதில் ஒரு குற்ற உணர்வு இருந்தாலும் அவர் எப்படியும் சமாதியில் இருந்து எழுந்து வந்து காதைத் திருகமாட்டார் என்ற ஒரு தைரியம்.

நிற்க இது தாத்தாவின் டைரியைப் படித்த அனுபவமோ அல்லது அப்பா எழுதும் டைரிகளைப் பற்றியோ அல்ல. எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பதிவு கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருத்த பொழுது நான் எழுதிய சரித்திரப் புகழ் பெற்ற டைரியைப் பற்றியது. கல்லூரி வகுப்பை கட் செய்து விட்டு எங்கு ஒரே காட்சியில் இரண்டுப் படம் போடுகிறார்கள் என்று அலைந்து தேடிப் படம் பார்த்த காலம். இதையெல்லாம் ஒன்று விடாமல் எழுதியிருந்தேன். முதல் செமஸ்டரில் மட்டு ஐம்பதுப் படங்கள் பார்த்திருந்தேன். இதைத் தவிர எந்தப் பெண் எந்த பஸ் பிடிக்க எத்தனை மணிக்கு பஸ் நிறுத்தம் வருகிறாள் என்ற “டாவு”களைப் பற்றிய புள்ளி விவரங்களும் அடங்கும்.

ஒரு நாள் கல்லூரியிலிருந்து நான் வந்த பொழுது என் தங்கை அலமாரியில் எதையோ தேடுவதுபோல் பாவனை செய்துக் கொண்டிருந்தாள், நான் கேட்டபொழுது ஒன்றுமில்லை ஒரு புத்தகம் என்னுடையது காணவில்லை என்றாள். நானே அன்று சரியான மூடில் இல்லை, கல்லூரியில் செமஸ்டர் மார்க் வந்த நேரம். ஆதலால் அவளை விட்டு விட்டேன். அப்பொழுது தெரியாது எனக்கு சரியான ஆப்பு இரவில் காத்திருக்கிறது என்று.

அப்பா அலுவலகத்திலிருந்து வந்தவுடன், மெதுவாக என்னிடம் செமஸ்டர் ரிசல்ட் கேட்க ஆரம்பித்தார். நான் வாங்கிய மார்க்குகளை சொன்னேன், எப்பவும் சொல்வதுபோல் அடுத்தமுறை படித்து நன்றாக மார்க் எடு என்று தான் சொல்லுவார் என்று நினைத்தேன். மாறாக நீ எங்கே உருப்படப் போறே, காலேஜ் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போகவேண்டியது, எந்தப் பெண் எப்ப வருவா என்று வாரவதியில தேவுடு காக்க வேண்டியது. இந்த அழகில இவனுக்கு டைரி எழுதறதுதான் முக்கியம். என்னத்த எழுதறான் பாரு டைரில, என்று தன் பின்புறம் மறைத்து வைத்திருந்த டைரியை எடுத்து என் அம்மாவின் முன் நீட்டிவிட்டு அதை தோட்டப் பக்கம் எறிந்தார், அது எங்கள் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் போய் விழுந்தது.

புரிந்துவிட்டது. என் தங்கை சனியன் தான் போட்டுக் கொடுத்திருக்கிறது என்று. அத்தனையும் கேட்டுக் கொண்டு “இதற்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் படித்துக் கொண்டிருந்தாள்”.
“தக்காளி” அன்னிக்கு வச்சேன் இனி மவனே டைரியே எழுத்தாகக் கூடாது என்று. என் டைரி எழுதும் வழக்கம் அந்த கிணற்றில் புதைந்த டைரியுடன் போய் விட்டது.

அதனால் என்ன இப்பொழுது ப்லாகில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவுக்கு அமெரிக்காவிலிருந்து கட்டாயம் “சனியன்” பின்னூட்டம் போடும். ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும் பொழுது “அண்ணா உன் டைரி எங்கே?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Jey said...

//“தக்காளி” அன்னிக்கு வச்சேன் இனி மவனே டைரியே எழுத்தாகக் கூடாது என்று. என் டைரி எழுதும் வழக்கம் அந்த கிணற்றில் புதைந்த டைரியுடன் போய் விட்டது.
//

கடைசில இங்கே டைரி எழுதிபுடேரே, தல.


http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_16.html

sarathy said...

Where is your home & well....hope to get more precious matters...good luck

Ramesh said...

அதனால தான் நாங்கெல்லாம் டைரி எழுதுறது இல்ல. சொந்த செலவுல யாராவது சூன்யம் வச்சுக்குவாங்களா?

மோகன்ஜி said...

நல்லா இருந்திச்சி உங்க டைரி அனுபவம்.யாரும் கொஞ்ச நாளைக்கப்புறம் டைரி எழுதறதில்ல. என்னோட பழைய கவிதை ஒண்ணு சொல்லவா நண்பரே?

டைரி

புதுக்காகித மணப் பெண்ணின்
கதுப்புக் கன்னத்தில்,
மைமுத்தங்கள்.

ஆசை நாள் அறுபதும்
மோக நாள் முப்பதும்
புரட்டி ஓய்ந்ததும் ......

‘பால் கணக்கு’ பிள்ளைபெறும்
பத்து மாதம் கடந்த பின்னே !

( சென்னை 1978)
வாழ்த்துக்கள்.http://vanavilmanithan.blogspot.com/

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.