Monday 9 August 2010

இனி அவசியமில்லை

அன்று காலையில் எதிரில் உள்ளக் காலி மனையில் லாரிகளில் செங்கல் வந்து இறங்கும் பொழுதே அந்த மனையின் சொந்தக் காரர் வக்கீல் வீடு கட்டப் போகிறார் என்பது எங்களுக்கு நிச்சயமாகிவிட்டது. அப்பொழுது தான் ஊருக்கு சற்று வெளியே காலியாக இருந்த மனைகளில் வீடு ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருந்தது. என் வீட்டிற்கு இரண்டு பக்கமும் காலி மனைகள் தான்.
முதலில் காலி மனையின் முன்பக்கத்தில் ஒரு குடிசை போடப் பட்டது, அஸ்திவாரம் தோண்டும் முன்பு அங்கு ஒரு வாட்ச்மேனும் வேலைக்கு வந்தார். அவர் தான் செங்கலுக்கும் தெருவில் கொட்டியுள்ள மனலுக்கும் காவல். எழுபதை நெருங்கும் முகம், முப்பதுக்குள்ள தேகம். உழைத்து கைகள் முறுக்கேரியிருந்தன. இரவு நெடு நேரம் வரை மணலில் படுத்துக் கொண்டிருப்பார். அஸ்திவார வேலையில் மேஸ்திரிக்கு உதவியாக இருப்பார். குடிசையில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.எப்பொழுதாவது நான் இரவு சாப்பாட்டை முடித்து வாசலில் வரும் பொழுது என்னிடம் பேச்சுக் கொடுப்பார். அப்படித்தான் அவர் பெயர் கண்ணன் என்றும், அவர் குடும்ப நிலவரத்தையும் தெரிந்துக் கொண்டேன். ஒரு பத்து வருடம் முன்பு மனைவியை இழந்து விட்டார். ஒரே பிள்ளையும், ஒரே பெண்ணும் அம்பாசமுத்ரத்தில் இருக்கிறார்கள். மகன் மளிகைக் கடை நடத்துகிறான். மகன் சரியாக வைத்துகொள்ளாததால் ஊரை விட்டு தன் கையை நம்பி பொழைக்க வந்து விட்டார். சில நாட்களில் எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு டிபனும் டீயும் கொடுப்போம். அவர் செங்கல் மணலுடன் அவ்வபோழுது எங்கள் வீட்டுக்கும் காவல் காரராக இருந்தார்.சில நாட்கள் போன பிறகு அந்தக் குடிசையில் ஒரு பெண் தன் கைக் குழந்தையுடன் இருப்பதைக் கவனித்தேன். அவரது மகளாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று இரவு மணலில் அமர்ந்து அவருடன் பேசும் பொழுது நான் குடிசையைப் பார்ப்பதைக் கண்டு அவரே அந்த பெண்ணை பற்றி சொன்னார். அந்த இடத்தில் வேலை செய்யும் சித்தாள்களில் அவளும் ஒருத்தியாம். ஊருக்கு தள்ளியிருந்த குடியிருப்பில் வசிப்பவள், அவள் கணவன் இந்தக் குழந்தையைக் கொடுத்து விட்டு ஓடிவிட்டானாம். இவள் தனியாக அங்கு மானத்துடன் வசிக்க முடியவில்லையாம். அங்கு இருக்கும் ஆட்களின் தொல்லைத் தாங்க முடியாமல் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறாள். அவளுக்கு இவர் அந்த சின்ன குடிசையை விட்டு மணலில் படுத்துக் கிடக்கிறார்.அன்று இரவு என் அலுவலக வேலை முடிந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது. தெருவில் திரும்பும்பொழுது கவனித்தேன், கண்ணனை மணல்மேட்டில் காணவில்லை. அந்தக் கட்டிட மனையை நெருங்கும் பொழுது, சிறு சிறு சலப்பு, கண்ணன் முனகிக்கொண்டிருந்தார். நான் வரும் சத்தம் கேட்டவுடன் ஒருவன் மனையின் பின்புறம் ஓடுவதைக் கவனித்தேன். அந்தப் பெண் உடையை சரி செய்துக் கொண்டு கிழவரின் அருகில் வந்தாள். குழந்தை உள்ளே அழுதுக் கொண்டிருந்தது. கிழவருக்கு தலையில் பலத்த அடி, பின் மண்டையில் ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. அவள் சற்றும் தயங்காமல் தன் சேலையைக் கிழித்து அவருக்கு மண்டையில் கட்டுப் போட்டாள்.கண்ணனை நான் அன்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். மருத்துவர் அவருக்கு தையல் போட்டு கட்டுக் கட்டி மருந்துப் பரிவாரங்களுடன் அனுப்பித்து விட்டார்.திரும்பி வரும்பொழுது அந்த மனையிலிருந்து ஒருவன் இரு தொடைகளுக்கும் நடுவில் கைகளை வைத்துக் கொண்டு வழியில் முனகிக்கொண்டு சென்றான். காலிடுக்கில் ரத்தம் வந்து அவன் கைலியை நனைத்திருன்தது அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரை அந்தக் குடிசையில் விட்டு வரும் பொழுது அந்தப் பெண்ணிடம் கேட்டேன் யார் அவரை அடித்தது என்று. வந்தது ஓடிப் போன அவள் புருஷனாம். குடித்து விட்டு திரும்ப அவளிடம் கலாட்டா செய்திருக்கிறான். தடுக்க வந்தக் கண்ணனை மண்டையில் உத்திரத்திற்கு வைத்திருந்த கம்பியால் அடித்திருக்கிறான்.நான் அவளிடம் மறுபடியும் பிரச்சனை வராமலிருக்க வேண்டுமென்றால் நான் என் டிபார்ட்மெண்டில் சொல்லி அவனை ஓட வைக்கிறேன் என்றேன்.

அதற்கு அவள் “தேவையில்லை சார் நானே செய்துவிட்டேன்” என்று கண்ணனை அடித்த கம்பியை நோக்கினாள்..

நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற பொழுது அவன் மறுபடி வந்திருக்கிறான். இப்பொழுது எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது.

புருஷன் எந்தத் தேவைக்கு வந்தானோ இனி அதற்கு அவசியம் இல்லாமல் பண்ணிவிட்டாள்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

Jey said...

//நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற பொழுது அவன் மறுபடி வந்திருக்கிறான். இப்பொழுது எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது.//

இதுதான் செலவில்லாத பலன் குடுக்குற ட்ரீட்மெண்ட்...

(ரொம்ப பிஸியா அன்ணாச்சி?.. கடை பக்கம் ஆளே காணோம்)

vasu balaji said...

நல்லாருக்கு கும்மாச்சி

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் அருமையாக இருக்கிறது...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.