Tuesday 1 March 2011

பக்கெட் நாராயணன்

நான், நாராயணன், ஜோசப், மோகன், பஷீர், ரவி எல்லாம் ஒரே சமயத்தில் சென்னை வேலையை துறந்து துபாயில் வேலைக்கு சேர்ந்தோம். பின்பு எங்கள் சென்னை கம்பெனியிலிருந்து மேலும் ஒரு இருபது பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். இதில் முக்கால்வாசி பேர் கல்யாணமாகாதவர்கள். நல்ல பேச்சிலர் லைஃப். வார கடைசியில் டாக்ஸி டிரைவர் பாரில் விடிய விடிய “ஜலப்ரவாகம்”. நாராயணன் ஒன்றரை கேன் பியருக்கே மட்டையாகிவிடுவான். மேலும் குடிக்குமிடத்தில் குமுறி கும்மியடித்துவிடுவான். ஆதலால் வாராவாரம் குடிக்குமிடத்தை மாற்ற வேண்டிய நிர்பந்தம். நாராயணனுடன் பக்கெட்டும் சேர்ந்துக் கொண்டது இதனால்தான். எப்படி?, அவசரபடாதீர்கள் சொல்லுகிறேன்.


எத்தனை நாளைக்குதான் வீட்டில் தனியாக இருக்க விடுவார்கள். மேலும் கூட இருக்கும் சில புல்லுருவிகளின் வேலையால் அவர் அவர்கள் வீட்டில் உஷாராகி கல்யாண ஏற்பாடு செய்து விட்டார்கள். இப்பொழுதுதான் பக்கெட் நாராயணன் உருவானான். ஏதாவது ஒருவன் கல்யாணமாகி புதிதாக வந்தால் பார்ட்டி என்ற பெயரில் எல்லோரும் ஆஜராகி, குப்பி உடைத்துவிடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். நாரயணனுக்கு மூடியில் ஊற்றி கொடுத்தாலும் ரெண்டாவது மூடியில் வாந்தி எடுத்து அவர்கள் வீட்டை நாசம் செய்து விடுவான். ஆதலால் நாராயணனுக்கு ஊற்றும் முன்பே அவர்கள் வீட்டு குளியலறையிலிருந்து ஒரு பக்கெட்டை தயாராக வைத்துவிடுவோம். நாளடைவில் பக்கெட்டும் நாராயணனையும் பிரிக்க முடியாத காரணத்தால் நாராயணன் “பக்கெட் நாராயணன்” ஆனான்.

இங்கு நாங்கள் செய்யும் அலம்பல் இரண்டாயிரம் மைலாண்ட இருந்த எங்கள் பெற்றோரை எட்டி ஒவ்வொரு விடுமுறையிலும் தப்பி வந்து மிஞ்சியிருந்த ரவி, பஷீர், நான் மூவரும் ஒரு வழியாக கல்யாணம் செய்து செட்டில் ஆனோம்.

முதலில் ஒரு மூன்று மாதம் ஒழுங்காகப் போனது. அவனவன் குப்பியை மறந்து “புதிதாக திறந்த பப்பியை அடைகாத்துக் கொண்டிருந்தோம்”. குஞ்சு பொரிக்கும் வேளை வந்தவுடன் அவனவன் பழையபடி வீக் எண்ட் பார்ட்டி என்று ஏதாவது ஒரு வீட்டில் பக்கெட் சகிதம் ஆஜர்.

பின்பு கால ஓட்டத்தில் அவனவன் பிள்ளை குட்டி, ஸ்கூல் அட்மிஷன், என்று ஐக்கியமாகி தங்கமணியின் புடவை உள் பாவாடை துவைக்கப் போய்விட்டார்கள். பஷீர் இதில் ஆராய்ச்சி செய்து “டாக்க்க்க்குட்டர்” பட்டம் பெற்றது தனி கதை, வேறொரு பதிவில் பார்த்துக்கொள்ளலாம். பக்கெட் நாராயணனுக்கு வருவோம். நாரயணன் சிங்கப்பூர் சென்று விட்டான். அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.

அவனுடைய தொடர்பு டெலிபோன், மின்னஞ்சல் என்று தேய்ந்து அறுந்து போனது. போன கோடை விடுமுறையில் நாங்கள் ஒரு மூன்று நண்பர்கள் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றோம். என்னுடைய உறவினர் வீட்டில் விருந்து, நண்பர்கள் குடும்பத்தையும் கூட்டிச் சென்றோம். அங்கு வழக்கம் போல் பார்ட்டி, உறவினர் மனைவி “பக்கெட் நிர்மலா” வந்தவுடன் தொடங்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு அதிர்ச்சி அந்த நிர்மலாவுடன் நம்ம பக்கெட் வந்தான். நிர்மலாவின் புருஷன், அவன் கல்யாணத்தை தெரியப் படுத்தாததற்கு அவனை அன்று குமுறு குமுறு என்று குமுறி விட்டோம்.

பின்பு தங்கமணிகள் தங்கள் அரட்டையை தொடங்க எங்களது தீர்த்தவாரி ஆரம்பம். ஒரு பதினைந்து நிமிடம் போன பின்பு அவன் மனைவி நிர்மலா சத்தமில்லாமல் வந்து நாராயணன் பின்னால் ஒரு பக்கெட்டை வைத்து விட்டு எங்களை பார்த்து ஒரு புன்னகை வீசி சென்றாள்.

நாராயணனின் வள்ளல் தன்மை இப்பொழுது புரிந்தது. தன் பட்டப் பெயரை மனைவிக்கு கொடுத்திருக்கிறான்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

sarathy said...

பட்ட பெயரை மட்டும் இல்லை சாமி..... எல்லாவற்றையும்தான்... அவர் வள்ளல் அல்லவா!

Chitra said...

நல்ல புரிதல் உள்ள மனைவி. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

கீறிப்புள்ள!! said...

/“பக்கெட் நிர்மலா” வந்தவுடன் தொடங்கலாம்//
ஹா ஹா ஹா!! படிச்சதும் கொஞ்சம் சாக் ஆயிட்டேன்.. அப்புறமா தான் வள்ளல் தன்மை புரிந்தது!! :))

கத்தார் சீனு said...

அருமையான அனுபவம்....
நாங்களும் 2003ல் இருந்து, கத்தாரில் இது மாதிரி நிறைய வாரக்கடைசி தீர்த்தக்கடல்ல மூழ்கி திளைசிருக்கோம்...அது ஒரு தனி சுகம்தான் !!!

டக்கால்டி said...

சிரிச்சு மாளலை..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.