Wednesday 16 November 2011

வாடகை வீடு


இந்த மேன்ஷன் வாழ்க்கை சரவணனுக்கு பிடிக்கவில்லை. சென்னைக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. படித்து முடித்து வேலைக் கிடைத்தவுடன் சென்னை வந்தாகிவிட்டது. நண்பர்களின் பேச்சைக் கேட்டு மேன்ஷனில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறான். அவனுடைய அறையில் மற்றும் இரண்டு ஆட்கள், இதுவரை வீட்டிலேயே தனி அறையில் இருந்து பழக்கமாகிவிட்டதால் இந்த வாழ்க்கை ஒத்துக்கொள்ளவில்லை. இங்கு பாத்ரூம் போகக்கூட வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. மேன்ஷனில் உள்ள “அக்கா மெஸ்” சாப்பாடு சுத்தமாக பிடிக்கவில்லை. உருளைக்கிழங்கு பொரியல் ஒரு மாதத்திற்கு செய்து விட்டார்கள் போலும். 

அம்மாவும், அப்பாவும் அகமதாபாதில் இருக்கிறார்கள், அப்பாவிற்கு அங்கு வேலை. அக்கா வேறு பிரசவத்திற்கு அங்கு வந்திருக்கிறாள். அம்மாவுடன் போனில் பேசியபொழுது மேன்ஷனில் கஷ்டம் என்றால் தனியாக வீடு பார்த்துக் கொள்ளேன் என்று சொன்னாள். வீடுகிடைத்தால் சாப்பாடு பிரச்சினை தீர்ந்துவிடும், நாமே எதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். சென்னையில் பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பது அத்தனை எளிதா?

எங்கு சென்றாலும் அவன் வேலை சம்பளம் எல்லாம் கேட்டுவிட்டு (வீட்டையும் காண்பிக்காமல், வாடகையையும் சொல்லாமல்) இல்லைப்பா பேச்சிலருக்கு நாங்கள் கொடுப்பதில்லை என்பார்கள். இப்படித்தான் அன்று நகரின் நல்ல பிரதானப் பகுதியில் ஒரு வீட்டில் மாடியில் ஒரு படுக்கையறை, ஹால், கிச்சன் உள்ள வீடு காலியாகி இருப்பதை தெரிந்துகொண்டு அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவை திறந்தவர், அவனை மேலும் கீழும் நோக்கி 

என்னப்பா என்ன வேண்டும்?.
வீடு வாடகைக்கு வேண்டும் ஸார், உங்கள் மாடி போர்ஷன் காலி என்று கேள்விப்பட்டேன்.
ஆமாம் காலிதான், உங்க குடும்பத்தில் எத்தனை பேரு?
அம்மா, அப்பா, அக்கா, பின்னே நான் ஸார், என் பெயர் சரவணன்.
அப்படியா? நாலு பேருக்கு இந்த வீடு பத்தாதேப்பா?
நீ எங்கே வேலை செய்யறே?
வேலை செய்யும் இடத்தை சொன்னான்.
என்ன போஸ்டு?
சரவணன் தன்னுடைய போஸ்டை சொன்னான்.
அப்படியா? நமக்கு எந்த ஊரு?
திருநெல்வேலி ஸார். 
அப்படியா நம்ம ஊருதான், உட்காருப்பா என்று திண்ணையை காண்பித்தார்.
அக்காவிற்கு கல்யாணம் ஆகிவிட்டதா?
ஆயிடுச்சு ஸார்.
அப்போ, நீ அப்பா, அம்மா தான் இந்த வீட்டில் இருக்கப் போறீங்களா?
இல்லை ஸார், வீடு எனக்கு மட்டும்தான், அப்பா இன்னும் வேலையில் இருக்கிறார், அப்பாவால் அகமதாபாதை விட்டு நகர முடியாது. அம்மாவும் அப்பாவை விட்டுவிட்டு வர மாட்டாங்க ஸார்.
அப்படியா, நீ மட்டும் தானா?.
சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே ஹோட்டலா இல்லை மெஸ்? என்று இழுத்தார்.
இல்லை ஸார் நானே சமைத்துக் கொள்வேன்
அப்படியா சமைக்க தெரியுமா, எனக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாது என்றார்.
என்ன ஸார் வீட்டை பார்க்கலாமா?
மாடி வீட்டு சாவி என்னிடம் இல்லை, மனைவியிடம் இருக்கிறது நீ மாலை வாயேன் நான் சொல்கிறேன் என்றார்.
சரவணன் ஏமாற்றத்துடன் வெளியில் வந்தான்.
தெருமுனை வந்தவுடன்தான் அவனுக்கு தன் அலைபேசியை அவர்கள் வீட்டு திண்ணையிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிந்தது.
அதை திரும்ப போய் எடுத்து வந்து விடலாம் என்று அந்த வீட்டை அடைந்தான்.

பெரியவர் வெராண்டாவில் இல்லை. உள்ளே ஹாலில் இருக்கிறார் போலும் என்று அழைப்பு மணியை அழுத்தினான். கரண்ட் இல்லை போலும் சத்தம் வரவில்லை. கதவை தட்டலாமா, இல்லை ஸார் என்று கூப்பிடலாமா என்று யோசிக்கும் பொழுது அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் உள்ளே ஹாலில் உரத்தக் குரலில் பேசிக்கொண்டிருந்தது அவனுக்கு தெளிவாக கேட்டது.

வீட்டை வாடகைக்கு விடறதை விடுங்க, அந்த பையன் அட்ரெஸ் கேட்டு வச்சிட்டிங்களா?
ஐயோ இல்லை.
உங்களுக்கு எல்லாம் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. பையன் நல்ல வேலையில் இருக்கிறான். ஆளும் நல்லா இருக்கான், நம்ம ஜோதிக்கு பார்க்கலாங்க.
அப்போ அந்த பையன் வந்தால் மாடி வீட்டை கான்பிக்கலாமா?.
நான் சொல்வதை முதலில் செய்யுங்க, வாடகைக்கு வேறே யாராவது குடும்பஸ்தர் வருவார்கள். அந்த பையனின் தாய் தந்தையர் அட்ரஸ் வாங்குங்க மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்.
சரவணன் அழைப்பு மணியை அழுத்தாமல் கம்பிக்ராதியின் வழியே தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான சிறுகதை கலக்கலா இருக்கிறது...!!!

பால கணேஷ் said...

இப்போதெல்லாம் அதிக வாடகையைத் தயங்காமல் கொடுப்பார்கள் என்பதால் பேச்சிலருக்கு வீடுதர யாரும் தயங்குவதில்லை. இது எப்போ நடந்த விஷயம் சார்..?

சக்தி கல்வி மையம் said...

நல்ல சிறுகதை..
//உங்களுக்கு எல்லாம் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. பையன் நல்ல வேலையில் இருக்கிறான். ஆளும் நல்லா இருக்கான், நம்ம ஜோதிக்கு பார்க்கலாங்க.// இது மாதிரி நடக்குதா இப்ப?

rajamelaiyur said...

அர்மையான கதை நண்பா

சித்ரவேல் - சித்திரன் said...

இப்பெல்லாம் வீட்டுத்தரகர் சொல்ற பொய்தான் அதிகம்... இந்த கதைய படிக்கிறப்ப நாயா நான் சென்னையில் அலைந்தது தான் நியாபகம் வருது நண்பரே

Unknown said...

மாப்ள அப்பவும் வீடு கெடைக்கல...பொண்ணு தான் கெடச்சிதா ஹிஹி கலக்கல்!

சந்தானம் as பார்த்தா said...

இப்படி கூட house owner இருக்காங்களா...

நம்ப முடியல...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.