Thursday 19 April 2012

கடவுள் வாழ்த்து


பெரும்பாலான பள்ளிகளில் கடவுள் வாழ்த்து பாட்டுடன்தான் பள்ளி தொடங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் குரானிலிருந்து ஒரு பகுதி ஓதியவுடந்தான் வகுப்புகள் தொடங்குகின்றன. பிள்ளைகள் ஸ்கூல் பஸ்ஸை தவற விட்டுவிட்டால் அலுவலகம் செல்லுமுன் அவர்களை பள்ளியில் விடும்பொழுது தவறாமல் கதவு வாசலில் நிறுத்தப்பட்டு கடவுள் வாழ்த்து முடிந்தவுடந்தான் பள்ளியில் அனுமதிப்பார்கள்.

அந்த நேரங்களில் என் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். காலையில் முதல் மணி அடித்தவுடன் நான் படித்த ஆரம்பப்பள்ளியில் கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவ மாணவிகள் கடவுள் வாழ்த்து தொடங்குவோம். அதனுடைய வார்த்தைகள் இன்னும் எனக்கு பிடிபடவில்லை. “சித்தி புத்தி சத்தி விநாயக ஜெயப் பணிந்தோமே” என்று தொடங்கி சாரதாதேவி என்று எல்லா கடவுள்களையும் அழைத்து விடுவோம். இன்று வரை அது என்ன “ஜெயப் பணிந்தோமே” அல்லது “செயல் பணிந்தோமேவா” என்பது தெரியாது. ஆனாலும் எட்டாம் வகுப்பு வரை அதை கும்பலோடு கோவிந்தா எனப்பாடி எப்படியோ ஏதோ படித்து தப்பித் தவறி தேறி மத்திய கிழக்கு நாடுகளில் ஆனி பிடுங்க வந்தாச்சு.

உயர் நிலைப் பள்ளி வந்தவுடன் கடவுள் வாழ்த்து சமஸ்க்ரிதத்தில் தொடங்கி தமிழில் முடிப்போம். அதில் வந்த “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறி துய்ப்பதும் வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்ற பாட்டுக்குத்தான் ஓரளவு பொருள் தெரிந்து பாடியிருக்கிறோம்.

கல்லூரி வந்தவுடன் பகவத்கீதையிலிருந்து ஒரு செய்யுளை ஆடியோவில் தட்டி விடுவார்கள். கல்லூரி படித்த நான்கு வருடத்தில் அதை நாற்பது முறை கேட்டிருந்தால் அது ரெகார்ட். அதற்கும் அர்த்தம் தெரியாது.

தமிழில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் போன்ற நூல்களில் உள்ள அருமையான தமிழ் பாடல்களை விட்டு ஏன் வடமொழியில் புரியாத பாடல்கள் கடவுள் வாழ்த்தாக பெரும்பாலான பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வைத்திருக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.

அரசு நிகழ்ச்சிகளில் பாடும் “நீராருங்கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்”  என்ற தமிழ் தாய் வாழ்த்துதான் எனக்கு பிடித்த கடவுள் வாழ்த்து.

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

Unknown said...

அதெல்லாம் அப்போ, இப்போ வை திஸ் கொலைவெறிதான் பள்ளிகளில் கடவுள் வாழ்த்து என் நினைக்கிறேன். எது எப்படியோ பாடலின் அர்த்தம் புரிந்தால் சரிதானே?

முத்தரசு said...

//“நீராருங்கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்” என்ற தமிழ் தாய் வாழ்த்துதான் எனக்கு பிடித்த கடவுள் வாழ்த்து//

நான் படித்த காலங்களில் தமிழ் தாய் வாழ்த்து தான் பாடி உள்ளேன் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட.

நீங்கசொல்லி உள்ள கடவுள் வாழ்த்துக்கள் இப்ப தான் கேள்வி படுகிறேன் - தெரிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.