Wednesday 2 May 2012

ஸ்வர்ணலதா.................பாடிப் பறந்த குயில்


விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மறைந்த சில இசைக்கலைஞர்களுக்கு அஞ்சலியாக சில கலைஞர்களை நினைவு படுத்தினார்கள்.

ஸ்வர்ணலதா என்ற குயிலின் குரல் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. எனக்குப் பிடித்த பாடகிகளில் எம்.எல். வசந்தகுமாரி, பி.சுசீலா வரிசையில் ஸ்வர்ணலதாவும் ஒருவர்.

அவர் சிறுமியாக இருந்த பொழுது தூர்தர்ஷனில் மலையாள நிகழ்ச்சியில் பாடிய பாடல் நினைவில்லை அந்தக் குரல் இன்னும் நினைவிருக்கிறது. பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில் வசித்து வந்த கே.சி. சேருக்குட்டி, கல்யாணி தம்பதிகளுக்கு 1973 ல் பிறந்தவர். அப்பா அம்மா இருவருக்கும் இசையில் நாட்டம் உண்டு. அப்பா ஹார்மோனியம் வாசிப்பவர். தன் மகளுக்கும் ஹார்மோனியம், கீ போர்டு வாசிக்க கற்றுக் கொடுத்தார். பின் தன் அக்கா சரோஜாவிடம் வாய்ப்பாட்டு பயிற்சி.

ஸ்வர்ணலதா தன்னுடைய பதினாலு வயதில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனால் நீதிக்கு தண்டனை என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு எசுதாசுடன் பாரதியார் பாட்டான சின்னஞ்சிறு குயிலே கண்ணம்மா பாடலை பாடினார். பாடல் பதிவு முடிந்தவுடன் மெல்லிசை மன்னர் இசை உலகிற்கு ஒரு திறமையான பாடகி கிடைத்தார் என்று சொன்னாராம். பின்பு அவர் இளையராஜா, ரஹ்மானின் இசையில் பாடிய பாடல்கள் ஏராளம்.

கருத்தம்மாவில் “போராளே பொன்னுத்தாயி” பாட்டிற்காக தேசிய விருது பெற்றார்.

அவர் பாடிய பாடல்கள் எல்லாமே அருமையானவை. அவற்றில் போராளே பொன்னுத்தாய் சோகப் பாடல் அவருடைய திறமைக்கு சான்று. ஒவ்வொரு ஸ்வரங்களும் அதற்குரிய அழகோடு தெறிக்கும். பின்னணி இசை மிகவும் குறைவானவை. அவருடைய வார்த்தைகள் உச்சரிப்பு பிரமிக்க வைக்கும்.

அதே வகையில் அலைபாயுதே படத்தில் வரும் மற்றுமொரு சோகப்பாடல் “எவனோ ஒருவன் யாசிக்கிறான்”, அவருடைய குரல் நம் உள் புகுந்து நெஞ்சை கிறங்க அடிக்கும்.

மேலும் “ராக்கம்மா கையைத் தட்டு” பாடல்  பி.பி.சி நிறுவனத்தார் 2002 ம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்பில் உலக இசையில் முதல் பத்து வரிசையில் இடம் பெற்றது.

“மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற சத்ரியன் படப்பாடல் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும். “ஆட்டமா தேரோட்டமா” (கேப்டன் பிரபாகரன்) போவோமா ஊர்கோலம் (சின்னத்தம்பி), மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை), குயில் பாட்டு வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே), மலைக்கோவில் வாசலில் (வீரா), குச்சிகுச்சி ராக்கமா (பாம்பே), முக்காபலா(காதலன்),  “திருமண மலர்கள் தருவாயா”  என்று அவருடைய பாட்டுக்கள் இன்னும் நிறைய உள்ளன.

தமிழை தவிர மலையாளம், தெலுங்கு மொழிகளிளிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

ஸ்வர்ணலதா தன்னுடைய முப்பத்தியேழாவது வயதில் 2010 நுரையீரலில் ஏற்பட்ட கிருமி பாதிப்பால் மரணமடைந்தார்.

இருந்தாலும் அவர் பாடிய பாட்டுக்களுக்கு என்றும் மரணம் இல்லை.
ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் “மாலையில் யாரோ”  



(நானூறாவது பதிவு)


02/05/2012

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

சீனு said...

ஸ்வர்ணலதா பற்றிய அழகான பதிவு...அருமையான குரலுக்கு சொந்தக்காரர்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.