Wednesday 6 June 2012

விடையில்லா வினாக்கள்


இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு அந்த ஊரிலிருந்து கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். இரவு பத்து மணிக்குத்தான் ட்ரெயின். ரயில் நிலையமும் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே இருந்தது. நடந்தே போய் விடலாம்.

பொற்கோவிலை பார்க்க வந்து மொழி தெரியாத ஊரில் எப்படியோ ஒப்பெற்றிவிட்டோம். சப்பாத்தியும் குருமாவையும் தின்று வயறு தயிர் சோறுக்கு ஏங்கிக்கொண்டிருந்தது. எப்பொழுது இரவு எட்டு மணியாகும் என்று காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் மணி மதியம் இரண்டுதான் ஆகியிருந்தது. விடுதியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் பொழுதை போக்குகிறது.

இங்கேயே எங்காவது அருகிலிருக்கும் கடைத் தெருவிற்கு போகலாமே என்றாள் மனைவி. சரி என்று கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு மைல் நடந்த பிறகு அந்த புராதான ஷாப்பிங் சென்டர் வந்தது. பிளாட்பாரக் கடைகள். பிளாஸ்டிக் கூடையிலிருந்து, மோடா, சாண்டேகா தேல்(உடும்பு தைலம்), வாசனை திரவியங்கள் என்று உலகத்தில் உள்ள எல்லா பொருட்களும் கிடைக்கும் இடம். இது டில்லியானாலும் சரி திண்டுக்கல் ஆனாலும் சரி எல்லா ஊர்களிலும் இது போன்ற கடைகள் இருக்கின்றன. எங்களுக்கு ஒன்று வாங்கும் உத்தேசம் இல்லை. இருந்தாலும் சும்மா இலக்கில்லாமல் எல்லா கடைகளையும் பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தோம்.

மோடா கடையை பார்த்தவுடன் மனைவிக்கு அவளது சொந்தங்கள் சொன்ன லிஸ்ட் நியாபகம் வந்து விட்டது. அதை எல்லாம் வாங்கா விட்டாலும் விலையாவது தெரிந்து கொள்ளலாம் என்று அந்த பிளாட்பாரக் கடையிலே நின்றோம். அப்பொழுது பின் பக்க ஏதோ சலசலப்பு கேட்கவே திரும்பிப் பார்த்தேன்.

கிழவர் ஒருவர் தரையில் கிடக்க அவரை ஒரு நடுத்தர வயதினர் ஷூ அணிந்த காலால் உதைத்துக் கொண்டிருந்தார். கிழவருக்கு ஒரு எழுபது வயது இருக்கும். ஒவ்வொரு உதையும் இடியாக இறங்கிக்கொண்டிருக்க கிழவர் அதை தன் கைகளால் தடுக்கப் போராடிக் கொண்டிருந்தார். யாரும் அடிப்பவரை தடுப்பதாக தெரியவில்லை. நாங்கள் சென்ற கடைக்காரர் ஒன்றுமே நடக்காததுபோல் தன் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார். மற்ற கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் ஒன்றுமே நடக்காதது போல் நடந்து கொண்டிருந்தனர். அடிப்பவரை தடுக்க அசாத்திய தைர்யம் வேண்டும். நல்ல ஆஜானுபாகு.

என்னால் பொறுக்க முடியவில்லை. ஆனால் ஆஜானுபாகுவிடம் செல்ல எனக்கே உரிய நடுத்தரவர்க்க பயம் வேறு. மேலும் மொழி தெரியாத இடம். மற்றவர்கள் ஒன்றும் செய்யாத பொழுது நமக்கேன் வம்பு என்ற இயல்பான மனப்போக்கு வேறு தடுத்தது.

ஆனாலும் கிழவரின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர் ஒரு சத்தமும் போடவில்லை. அடிப்பவனின் இடியோசையைத் தவிர அவனிடமிருந்தும் ஒரு சத்தமும் இல்லை.

நான் இப்பொழுது அடிப்பவனின் பின்பக்கமாக அவனை அணுகினேன். அவனது முழங்கையை பிடித்து எனக்கே தெரிந்த அரைகுறை இந்தியில் “போதும் அண்ணா விட்டுடுங்க என்றேன்”. அவன் என் பக்கம் திரும்பாமலேயே உதைப்பதை நிறுத்திவிட்டு தன் கடையினுள் சென்றான்.

கிழவர் எழுந்து தன் உடையை சரி செய்துகொண்டு எதிர் புறமாக நடந்தார்.

பிறங்கு நாங்கள்  அவ்விடத்தை விட்டு நகர்ந்து  விடுதிக்கு வந்தோம்.

அந்தக் கிழவர் யார்? கடைக்காரனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? ஏதாவது ரத்த சம்பந்தமா?

அந்த கிழவர் என்ன தப்பு செய்தார் அந்த உதை வாங்குவதற்கு?

உதைப்பவருக்கு கிழவரின் மேல் அவ்வளவு கோபம் ஏன்?

ஏன் மற்ற கடைக்காரர்களோ, இல்லை மற்றவர்களோ தடுக்கவில்லை?

இல்லை அந்த இடத்தில் இது ஒரு வாடிக்கையான நிகழ்ச்சியோ?

ஒரு கிழவரை காலால் உதைப்பது எந்த வகையில் நியாயம்?

மேற்படி கேள்விகளுக்கு விடை தெரியாமல் நான் வண்டி ஏறினேன்.

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.