Saturday 14 July 2012

தெரு நாய் (மீள்பதிவு)


“நாய் பேச்சே இனிமேல் வீட்டுல யாரும் எடுக்கக்கூடாது”
இது வீட்டம்மாவின் கட்டளை. இதற்கு காரணம் என் மகள்தான். அவள் வகுப்புத் தோழியின் வீட்டில் அழகான நாய்க்குட்டிகளைக் கண்டதும் அதில் ஒன்றை நம் வீட்டில் வளர்க்கவேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.  அதைக் கேட்டுதான் வீட்டு அம்மா இட்ட கட்டளை. அவள் பல்லியைக் கண்டாலே அலறுவாள், நாய் என்றால் கேட்கவா வேண்டும். அதை கேட்டு என் மகளின் முகம் மாறியது. அவளை எப்படியோ சமாதானப் படுத்தி “போய் வீட்டு பாடம் செய்” என்று அங்கிருந்து அனுப்பி வைத்தேன்.

அப்பொழுதுதான் வெளியே போய் விட்டு வந்த மகன் “எங்க அந்த நாயி ஏன் ஜாமெட்ரி பாக்சை எடுத்துக் கொண்டு விட்டது” என்று தங்கையை பற்றி புகார் செய்து கொண்டிருந்தான். 

“டேய் சும்மா இரு இப்பொழுதுதான் அம்மா நாய் பேச்சே எடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறாள் நீ வேறே” என்றேன். 

மனைவிக்கு நாயெல்லாம் வளர்க்கக்கூடாது, நாய் வளர்க்கிறது என்றால் நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என்றாள்.

இருந்தாலும் என் பெண்ணிற்கு நாய் வளர்க்கும் ஆசை போகவில்லை. புலம்பிக் கொண்டே இருந்தாள். சரி எந்த நாய் வளர்க்கலாம் சொல் என்றேன். உடனே உற்சாகமாகிவிட்டாள். இணையத்தில் எந்த நாய் உயர்ந்த வகை என்று தேட ஆரம்பித்தாள். அப்பொழுதுதான் உலகில் கிட்டதட்ட நூற்றி அறுபது நாய் வகைகள் (தெருநாய்கள் நீங்கலாக) இருப்பது தெரிய வந்தது. பொமேரேனியன் என்றால் வேண்டாம் ஒரே சத்தம் போடும், ராட்வேலார் ஐந்து வயதிற்குப் பிறகு நரமாமிசம் சாப்பிடும், அல்சேஷன் ரொம்ப குரைக்கும், ஜெர்மன் ஷெப்பர்ட், லெப்ரடார், டால்மேஷன், பக்ஹ்,  வேண்டாம் என்று  ஒவ்வொரு வகையையும் நிராகரித்துக் கொண்டு இருந்தோம். இந்தக் கூத்தெல்லாம் மனைவிக்கு தெரியாமால்தான்.

எதிர்த்த மனையில் அப்பொழுது வீடு கட்டி முடியும் தருவாயில் இருந்தது. அங்கிருந்த மணல் மேட்டருகிலேயே அங்கு வேலைய செய்யும் சித்தாள் குடும்பம் தங்கியிருந்தது. அந்தக் குடும்பத்தில் உள்ள பத்து வயது சிறுமி ஒரு நாய்க்குட்டியை எங்கிருந்தோ கொண்டு வந்து வளர்த்து வந்தாள். குட்டி பிறந்து ஒரு மாசம் தான் ஆகியிருக்கும். அதன் தாய் எங்கே என்று தெரியாது. குட்டி கருப்பு கலந்த வெள்ளை நிறத்துடன் மிக அழகாக இருக்கும்.  

அன்று காலை எழுந்தவுடன் வண்டி நிறுத்துமிடத்தில் அது ஒடுங்கிக்கொண்டு இருந்தது. எதிர் வீட்டு அந்த சித்தாள் குடும்பத்தை காணவில்லை. நாய்க்குட்டி உணவு இல்லாமல் மிகவும் சோர்ந்து இருந்தது. என் மகள் அதற்கு வீட்டிலிருந்து பால்,  பிஸ்கட் எல்லாம் வைத்தாள். பிறகு அது எங்கள் வீட்டையே சுற்றி வந்தது. நாளடைவில் அது சுதந்திரமாக எங்கள் வீட்டு தோட்டத்திலும், மொட்டை மாடியிலும் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு இருக்கும். சாப்பாடு வேளையில் வீட்டு கதவருகே வந்து அழகாக “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” போஸில் உட்கார்ந்து கொண்டிருக்கும். நாளடைவில் எங்கள் வீட்டு சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அது நன்றாக வளர்ந்து விட்டது. வீட்டிற்கு யார் வந்தாலும் குரைத்து விரட்டி விடும். குரியர் ஆட்கள் கம்பி கேட் அருகிலேயே நின்று கொண்டிருப்பார்கள்.

வீட்டில் மனைவி சமையல் எரி வாயு தீர்ந்துவிட்டது, ஏஜென்சிக்கு சொல்லி இருபது நாள் ஆகிறது இன்னும் வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஏஜென்சிக்கு போன் செய்தால் “ஸார் எங்கள் ஆட்கள் மூன்று முறை வந்தார்கள் நீங்கள் வீட்டில் இல்லையாம்” என்றான்.

வீட்டிலே இல்லையா? யார் சொன்னது நாங்க வீட்டிலே தான் இருக்கோம் அவரை இப்போ வர சொல்லுங்க என்றேன்.

அரை மணி கழித்து அவன் வந்தான், நாய் விடாமல் குரைத்தது. நான் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன், சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு திரும்ப ஆயத்தமானான்.

நான் அவனை கூப்பிட்டு வாயா வீட்டிலே தான் இருக்கோம் என்றேன், அதற்கு அவன் ஸார் நாய் இருக்குது அதை பிடித்து கட்டுங்க இன்னா ஸார் மூணு தபா வந்தேன் இந்த நாயால திரும்பப் பூட்டேன் ஸார் என்றான்.  

“யோவ் அது தெரு நாய் நாங்க வளர்க்கிறது இல்லை ஒன்றும் செய்யாது வா, குரைக்கிற நாய் கடிக்காது உனக்கு தெரியாதா வா” என்றேன்.

“அடப்போ ஸார் அது எனக்கு தெரியும், உனுக்கு தெரியும் நாய்க்கு தெரியுமா” என்றான். “ஸார் உனுக்கு அடுத்த முறை சிலிண்டர் வேணுமென்றால் நாயை விரட்டு” என்றான்.

“அது தெரு நாய்ப்பா நாங்கள் வளர்க்கிறது இல்லை” என்றதற்கு “சுடுதண்ணி ஊத்து ஸார் ஓடிடும்” என்றான்.

இதை கேட்டுக்கொண்டிருந்த மனைவி “என்ன சொல்லுறே நீ வாயில்லா ஜீவன் மேல் சுடு தண்ணி ஊத்துறதா, என்ன பேச்சு இது. உனக்கு பயமா இருந்தா எங்களிடம் சொல் நான் நாயை பிடித்துக் கொள்கிறன்” என்றாள்.
(இன்று காலை கலக்கல் காக்டெயில் பதிவிடும்பொழுது “தெருநாய்” என்ற பதிவு தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே மீள்பதிவு. இத்துடன் பல நல்ல உள்ளங்களின் விமர்சனங்களும் பாராட்டுகளும் நீக்கப்பட்டுவிட்டன.)

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

கும்மாச்சி said...

அன்பே சிவம் என்பது உண்மைதான். எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு ” ஜாக்கி “ (நாய் என்று சொல்லக் கூடாது ) இருக்கிறது. உங்கள் பதிவைப் படித்ததும் எங்கள் ஜாக்கியைப் பற்றியும் எழுத ஆசை! ஆனால் என் பையனின் அனுமதிதான் வேண்டும்! on தெரு நாய் தி.தமிழ் இளங்கோ

கும்மாச்சி said...

ஹாரி பட்டரின் பின்னூட்டம்

ஒரு சம்பவத்தை அன்பின் கலந்து பகிர்ந்து இருக்கிறீர்கள்.. கடந்த சில நாட்களாக உங்கள் பதிவிற்குள் மட்டும் நுழைய முடியவில்லை.. இன்று தான் சரி ஆனது.. மிஸ் பண்ணிய பதிவுகளை பார்த்து விட்டு போகிறேன்.. நன்றி.. on தெரு நாய்

கும்மாச்சி said...

சுரேஷ் அவர்களின் பின்னூட்டம்

எங்க வீட்டிலும் ஒரு நாய் இப்படி வந்து சேர்ந்து வம்சா விருத்தி செய்து வருகிறது! சூப்பர் கதை! on தெரு நாய்

கும்மாச்சி said...

திண்டுக்கல் தனபாலனின் பின்னூட்டம்

நாயிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளன... அதில் முக்கியமானது "நன்றி"... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 3)

கும்மாச்சி said...

வீடு சுரேஸ்குமார் அவர்களின் பின்னூட்டம்

நாய் நன்றியுள்ளது சார்..!நல்ல சிறுகதை!

கும்மாச்சி said...

மனசாட்சி எழுதியது

நல்லா சொன்னீங்க on தெரு நாய்

கும்மாச்சி said...

நண்பர் எஸ்.ரா அவர்களின் பின்னூட்டம்

ரசித்தேன். on தெரு நாய்

கும்மாச்சி said...

மாப்ள விக்கி அவர்களின் கருத்து


அன்பு எப்போது வரும் என்று யாருக்கு தெரியும் ஓய்! on தெரு நாய்

sarathy said...

நம்ம வூட்டு நாய், நல்லா வளர்ந்து, permanentஆ ரோடுக்குப் போய், குறைப்பதையே நிறுத்திவிட்டதுதான் ... வீட்டுக்கும் வரலையே! இது எந்த வகை அல்லது எந்த ஊர், நாய்?
இது பின்னோட்டம் (from memory), தலைவா...

sarathy said...

நம்ம வூட்டு நாய், நல்லா வளர்ந்து, permanentஆ ரோடுக்குப் போய், குறைப்பதையே நிறுத்திவிட்டதுதான் ... வீட்டுக்கும் வரலையே! இது எந்த வகை அல்லது எந்த ஊர், நாய்?
இது பின்னோட்டம் (from memory), தலைவா...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஸார்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.