Thursday 7 February 2013

முதல் காதல் கடிதம்

நான் எழுதிய முதல் காதல் கடிதம் எங்கள் வீட்டில் வேலை செய்யும் வள்ளியம்மாளின் மகள் தேன்மொழிக்கு. ஆனால் நான் அவளுக்கு தான் எழுதுகிறேன் என்று யாருக்கும் ஏன் எனக்குமே தெரியாது.

என்னுடைய சரித்திர பிரசித்தி பெற்ற காதல் கடிதம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் உங்களுக்கு ஜனாவை பற்றி தெரிய வேண்டும். ஜனா என்னுடைய வகுப்பில் படிக்கும் சக மாணவன். பள்ளியின் ஹாக்கி டீமின் கேப்டனும் கூட. பத்தாவது படிக்கும் பொழுதே மீசை முளைத்து  ஒரு இருபது வயது தோற்றத்துடன் ஆஜானு பாகுவாக இருப்பான். நல்ல முரடன். ஒரு முறை கணக்கு வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது அரை ப்ளேடால் சத்தம் செய்து கொண்டிருந்ததை பொறுக்காமல் வாத்தியார் அவனை அடிக்க முனைந்த பொழுது அவர் கையை முறுக்கி பள்ளியிலிருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவன்.

ஒவ்வொரு பரீட்சை முடிந்தவுடன் விடைத்தாள்கள் திருத்தி எங்களது கொடுக்கப்படவுடன் என்னுடைய விடைத்தாளை அந்த வகுப்பு முடிந்தவுடனே என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு விடுவான்.
"அப்பால வாங்கிக்க" என்று போய்விடுவான். பின்னாலேயே சென்று கெஞ்சினாலும் தலையிலடித்து "த அப்பால தரேன்னு சொல்றனில்ல" என்பான். ஆனால் சொன்னபடி அடுத்த நாளைக்கு கொடுத்து விடுவான். ஆனால் மாணவர்மன்றம் போன்ற  பரீட்சை சான்றிதழ்களை மட்டும் திரும்ப கொடுக்க மாட்டான். அதை வாங்குவதற்கு அவனுக்கு கப்பம் கட்ட வேண்டும்.அவன் ஒற்றை இலக்கங்களில்தான் மதிப்பெண்கள் வாங்குவான், ஆதலால் என்னுடைய மதிப்பெண்களை வீட்டில் காண்பிப்பான் போல என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.  இந்த ஜனா தான் தேன்மொழிக்கு காதல் கடிதம் எழுத சொன்னான்.

"வேணாம் ஜனா எனக்கு அந்த வம்பெல்லாம் வேண்டாம்" என்றேன்.
"...த்தா எழுதுறான்னா" என்று மிரட்டினான்.
"இல்லை ஜனா எங்க வீட்டிலே பின்னிடுவாங்க"
"......த்தா தெரிஞ்சதானே"
"இல்லை நீ ஆள விடு" என்றேன்
இந்த முறை குழைய ஆரம்பித்து விட்டான். "நீ ஹாக்கி டீமில் சேரணுமா வேண்டாமா, மேலும் உன் கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கும், அதாலதான் உன் பரீட்சை தாள்களை எல்லாம் நான் வாங்கிய மார்க் என்று அதனிடம் டீல் உட்டுக்கிறேன், இப்போ நான் எழுதினா அது என்ன பார்க்கவே பார்க்காது" என்றான்.

என்னுடைய உடல் வாகிற்கு எந்த டீமிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு முறை கிரிகட் டீம் செலேக்ஷனுக்கு போனபோது கோச், "பையன் நல்லாத்தான் ஆடுறான் ஆனால் ரொம்ப நோஞ்சானா இருக்கான், பந்து எங்கேயாவது படாது இடத்தில் பட்டால் ஸ்கூலுக்கு பிரச்சினையாகிவிடும்" என்று ரிஜக்ட் செய்து விட்டார். ஆதலால் ஜனாவின் ஆசை வார்த்தைக்கு இறங்கி லவ் லெட்டர் எழுத ஒத்துக்கொண்டேன். ஆனால் ஒரு முறைதான் எழுதுவேன் இனி திரும்ப என்னிடம் வராதே என்றதற்கு ஒத்துக்கொண்டான்.

சரி சொல்லு எழுதுகிறேன் என்று நோட்டிலிருந்து ஒரு தாளை கிழித்து எழுத ஆரம்பித்தேன்.
மேல எம்.ஜி. ஆர் துணை போட்டுக்க" என்றான்.
இன்னடா இது எம்.ஜி. ஆர் துணையா என்றதற்கு ஆமாம் தேனுக்கு எம்.ஜி. ஆருன்னா ரொம்ப பிடிக்கும் என்றான். அவன் மேலே சொல்ல சொல்ல நான் எழுதிக்கொண்டிருந்தேன். நீ மீனு வாங்க சொல்ல வச்ச கனகாம்பரம் நல்ல வாசனை வருது என்று இயற்கைக்கு புறம்பான வர்ணனைகளை எல்லாம் எழுத சொன்னான்.
கடைசியில் "இதயக்கனி சினிமாவிற்கு போகலாமா?" என்று கேள்வியுடன் முடிக்க சொன்னான்.
பின்னர் "இத தேனிடம் மாலையில கொடுக்கப் போறேன் நீயும் வா என்றான். இல்லடா நான் எதற்கு என்றதற்கு நான் கொடுக்க சொல்ல யாராவது வந்து விட்டால் நீ அதாண்ட கொடுத்திடு, உன்னிய பார்த்து யாரும் சந்தேகப்படமாட்டாங்க நீ சின்ன பையன் மாதிரி இருக்க" என்றான்.

ஆனால் அதற்கு அவசியமில்லாமல் போய் விட்டது. அவனே தான் கொடுத்தான். அந்தப் பெண் அந்த இடத்திருக்கு சற்றும் பொருந்தாத அளவுக்கதிகமான மேக்கப்புடன் மேற்கத்திய குதிரை போல இருந்தது.

ஜனா தொடர்ந்து அவளுக்கு தினமும் கடிதம் எழுதிக்கொண்டிருந்தான், இல்லை அவனுக்காக நான் எழுதிக்கொண்டிருந்தேன்.

இரண்டு வாரம் கழித்து ஜனா என்னிடம் வந்து " டேய் ..த்தா நாங்க நாளைக்கு "இதயக்கனி" சினிமா போறோம் நீயும் வா என்றான்.
"இல்லைடா நான் வரவில்லை வீட்டில நம்மள துவைச்சிடுவாங்க மேலும் என்னிடம் காசு கிடையாது" என்றதற்கு "நான் கூட்டிபோறேன் வா" என்றான்.

கொட்டகைக்கு போனவுடன் மூன்று டிக்கட் எடுத்து அவள் வரக்காத்திருந்தான். பின்னர் படம் தொடங்கியவுடன் அவன் செய்த லீலைகள் எம்.ஜி. ஆர் ராதா சலூஜா காட்சிகளை விட ஓவராக இருந்தது. படம் முடிந்தவுடன் "நீ அவ ஏரியா தாண்டித்தானே போறே அவளோட போ எனக்கு வேறே வேலை இருக்கு" என்று சொல்லி போய்விட்டான்.

அவர்கள் ஏரியா நுழையும் முன் இருக்கும் அந்த கட்சி அலுவலகத்தில் இருந்த ஒருவர் கலங்கிய கண்களுடன் எங்களை பார்த்து அருகில்  அழைத்தார்.

ஏய் தேனு எங்கே போயிட்டு வர, யாரு இந்த ...ர வூட்டு பையன் என்றதற்கு "ஐய்ய எனக்கு என்ன தெரியும்" என்று சொல்லி விடுவிடு என்று ஓடி விட்டது.

அவரோ என்னிடம் " வள்ளியம்மா உங்க வீட்டிலே தானே வேலை செய்யுது?" என்று கேட்டார். ஆமாம் என்றேன் சரி இந்த பக்கமெல்லாம் வராதே என்று சொன்னார்.

பின்னர் இரண்டு வாரம் கழித்து நான் ஸ்பெஷல் கிளாஸ் போக நோட்டுப் புத்தகங்களுடன் கிளம்புகையில் என் அம்மா "டேய் போற வழியில இதை நாடார் கடையில் கொடுத்து ஒரு லிட்டர் கடலெண்ணெய் வர வழியிலே வாங்கிட்டு வந்திடு" என்று காசும் கொடுத்து அனுப்பினாள். போகும் வழியில் அந்த கட்சி அலுவலகம் தாண்டும் பொழுது மறுபடியும் அந்த கலங்கல் ஆசாமியை பார்த்தேன். நான் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு நடந்தேன்.

அப்பொழுது ஒருவன் என்னிடம் வந்து "தம்பி உன்ன ஐயா கூப்பிடுறாரு" என்றான்.

யாரது கொய்யா என்று பார்த்தால் கலங்கல்தான்.

டேய் எங்க போற, என்று கையில் உள்ள நோட் புக்கை பிடுங்கிக்கொண்டார். அப்புறம் நடந்த விஷயத்தில் நான் அம்மாவிடம் மாட்டிய எதிர்கட்சி தலைவர் நிலைக்கு ஆனேன்.

அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு காகிதத்துடன் என் நோட்டு புத்தகத்தையும் மாறி மாறி பார்த்து "அதானா விஷயம், ஏன் ஜாதிப் பேரை சொல்லி உனுக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா, இரு வள்ளியம்மாவாண்ட சொல்லி உன்னை என்ன செய்யுறேன் பாரு மவனே" என்றார்.

நான் ஏறக்குறைய அழும் நிலைக்கு வந்துவிட்டேன்.

சரி "துட்டு எவ்வளவு வச்சிருக்க சொல்லு" என்று கேட்டு என் பையிலிருந்த எண்ணெய் காசை எடுத்துக் கொண்டார்.

எனக்கு இப்பொழுது முழு விவரமும் புரிய ஆரம்பித்தது. அடுத்த நாள் பள்ளியில் ஜனாவிடமும் முழு விவரமும் சொல்லி கவலை பட்ட பொழுது அவன் "உனக்கு ஒன்னும் ஆகாது, அந்தாள்தாண்டா  தேனின் நைனா, அவரு அந்த ஏரியா வட்டச்செயலாளர், உன்னிய ஒன்னும் செய்யமாட்டார், தேனு நானும் ரொம்ப லவ்வாயிட்டோம் எப்படியும் அவருக்கு உண்மை தெரிந்துவிடும், சும்மா நீ அழுவாத" என்று சொல்லி ஹாக்கி மேட்சிற்கு போய்விட்டான்.

எனக்கு நான் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டதாக தோன்றியது. அடுத்த முறை வீட்டில் மளிகை சாமான் வாங்க சொன்ன பொழுது  அவர்கள் ஏரியாவை தவிர்த்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு போய் வந்து கொண்டிருந்தேன். இது கிட்டத்தட்ட என் பள்ளி படிப்பு முடியும் வரை தொடர்ந்தது.

பின்னர் வெளி மாநிலம் சென்று படித்து, வெளிநாடு போய் திரும்பி ஒரு முறை அந்த ஏரியா வழியாக சென்ற பொழுது அந்தக் கட்சி அலுவலகம் இருந்த இடம் கட்டிடமாக மாறி அதே கட்சியின் கொடி பறந்து கொண்டிருந்தது. அதை கடக்கும் பொழுது ஒரு ஆள் வந்து "சார் உங்களை தலைவர் கூப்பிடுகிறார் சார்" என்றான்.

சரிதான் மறுபடியும் மாட்டிகொண்டோம் என்று பர்சை பத்திரப்படுத்திக்கொண்டு தலைவரை நோக்கி நடந்தேன்.

ஆனால் இந்த தலைவர் நம்ம "கலங்கல்" இல்லை. வெள்ளை கட்சி கறை போட்ட வேட்டியும், வெள்ளை சட்டையும், தோளில் வெள்ளை துண்டும் அணிந்த சமகால அரசியல்வாதி என் பேரை சொல்லி என்னை கட்டித் தழுவிக்கொண்டான்.

"நீ நீங்க ஜனா தானே" என்றேன்.

"ஆமாண்டா நீ எங்கே இருக்க இப்போ, வா ஆபிசுல உட்கார்ந்து பேசலாம்" என்றான்.

பின்னர் தேன்மொழி பற்றி பேச்சு வந்தது. "என்னடா ஆச்சு உன் காதல்" என்றேன்.

"சொல்லறேன் வா வீட்டிற்கு போகலாம்" என்றான்.

அவன் வீட்டிற்கு சென்றவுடன் மனைவியை கூப்பிட்டு "தேனு இது யாரு தெரர்தா?" என்றான்.

அவளோ "ஒ தெரியுமே எனக்கு காதல் கடிதம் எழுதினவர் தானே" என்றாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது "இன்னும் என்னை நியாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாயே" என்று கேட்ட பொழுது "உங்களை மறக்க முடியுமா உங்களாலே தானே நாங்க ஒன்றாக இருக்கிறோம்" என்றாள்.

பின்னர் பேசிக்கொண்டிருந்தோம். ஜனா தேன்மொழியிடம் நைனா எங்கே? என்று கேட்டான்.

"திண்ணையிலதானே இருக்காரு, நீங்க பார்க்கலையா" என்றாள்.

பிறகு சிறிதுநேரம் அவர்களிடம் பேசிவிட்டு வெளியே வந்தேன், அப்பொழுது "டேய் இங்கே வா, உன்னிய எங்கேயோ பார்த்தமாதிரி கீதே, வள்ளியம்மா வேலை செய்த வூட்டு ......ற பையன் தானே நீ, துட்டு எவ்வளவு வச்சிகிறே கொடுத்துட்டு போய்கினே இரு" என்றார்.

பின்னர் நான் முன்னாள் இந்நாள் வட்டச்செயலாளர்கள் இருவரிடமும் விடை பெற்று கிளம்பினேன்.

கிளம்பும் பொழுது ஜனா "இந்த முறை நம்ம ஏரியாவில் நிற்க எனக்கு எம்.எல்.ஏ டிக்கட் கிடைத்திருக்கிறது, மச்சி ஏதாவது வேட்புமனு, அறிக்கைன்னா உன்னியதான் கேட்பேன்" என்றான்.

குட் ஓல்ட் ஜனா.
 

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையான சிறுகதை! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி செந்தில்குமார்.

பலசரக்கு said...

கலக்கல்!!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.