Tuesday 24 April 2018

வன்கொடுமைகளும் ஊடகங்களும்

இப்பொழுதெல்லாம் டி.வீ பெட்டி சீண்டுவாரற்று கிடக்கிறது. வீட்டில் ரிமோட் சண்டை இல்லை. பொதுவாகவே எங்களுக்கு இந்த சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லை. சிலசமயம் இரவு நேரங்களில் உறங்கப்போவதற்கு முன் காமெடி சேனல் ஒரு பதினைந்து நிமிடங்கள் பார்போம். மற்றபடி செய்திகள் பக்கம் செல்வதே இல்லை. முன்பெல்லாம் காலையில் ஒரு செய்தி, மாலையில் ஒரு செய்தி என்று வழக்கமிருந்தது. இப்பொழுது அது வழக்கொழிந்துவிட்டது. காரணம் ஊரறிந்தது. இந்த விவாதங்கள் நடக்கும் பக்கம் செல்வதே இல்லை, எப்பொழுதாவது தவறுதலாக ரிமோட்டில் கை பட்டு விவாதங்கள் மீது மோதினால் மனைவி முன் "எஃப்" சேனல்😍 வந்த கதையாக மனசு பதைபதைக்கும். சரி விஷயத்திற்கு வருவோம்.

சரி டி.வீ வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தால் வாட்சப்பிலும், மூஞ்சி புத்தகங்களிலும் கேள்வி கேட்காமல்  வன்புணர்வு செய்திகளும், அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களின் உளறல்களும் நம்மிடம் வந்து குவிகின்றன.

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, சிறுமியிடம் கூட்டு வன்புணர்வு, சிறுமி கற்பழித்து கொலை என்று செய்திகள் ஜாதி நிறம் பூசப்பட்டு நம்மை வந்தடைகின்றன. இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தனிமனித உரிமையோ அல்லது அவர்களது குடும்பத்தின் உரிமையையோ பற்றி ஊடங்கங்களும் சரி, இணையப் போராளிகளும் சரி துளியும் கவலைப்படுவதில்லை.

பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளோ இல்லை கொலை வழக்குகளோ ஊடகங்களால் விவாதிக்கப்பட்டு "Media Trial"  தீர்ப்பும் வழங்கப்பட்டு விடுகிறது. வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியே தான் .........தக்காளி தூக்கில் போடணும் என்று ஆளாளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். பிறகு மூன்று பேர் அமர்வு பெஞ்ச் தீர்ப்பு சொன்னாலும் காசு வாங்கிட்டாகப்பா என்று ஏற்கனவே முடிவு செய்த தீர்ப்புக்கு வால் பிடிக்கிறார்கள். இதற்கு காரணம் நமது நீதித்துறைமேல் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மையே.

அதுவும் சமீப காலத்தில் வரும் செய்திகள் அடுத்த பொது தேர்தலுக்கான அச்சாரம் போல் தோன்றுகிறது. கொள்கைரீதியாக விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு திறன் இல்லை, ஆதலால் நாளொருமேனியும் பொழுதொரு கற்பழிப்புமாக செய்திகள் வந்து தெறிக்கின்றன. இதில் மட்டும் கட்சி பாகுபாடின்றி ஒரே கொள்கை குறிக்கோளோடு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியா வல்லரசாகும் என்ற நம்பிக்கைக்கு எண்ணெய் ஊற்றி அணையாமல் பாதுகாக்கிறார்கள்.

வாழ்க இந்தியா, வாழ்க ஜனநாயகம்.


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

ராஜி said...

பாரத் மாதா கீ ஜே

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Sivamoorthy Kishokumar said...

நிச்சயம் இந்தியா வ"ள்"லரசாகும்.. நம்புங்கப்பு..

கும்மாச்சி said...

நம்புவோம் நம்பிக்கைதான் வாழ்க்கையே.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.