Wednesday 23 May 2018

எய்தவன் எங்கிருக்கிறான்?- ஸ்டெர்லைட் பரிதாபங்கள்

நேற்றைய தினம் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் எச்சை ஊடகங்கள் சம்பவத்தை இருட்டடிப்பு செய்தாலும், நவீன தகவல் தொழில் நுட்பத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் மக்களை சென்றடைவது எளிதாகிவிட்டது.

குறிப்பாக துப்பாக்கி சுடும் அந்த காட்சி தற்பொழுது எல்லோரது அலைபேசியிலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தை கலைக்க சுடப்படவில்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இன்று காலை மற்றுமொரு செய்தி வாட்சப்பில் துப்பாக்கி சுடுபவரின் குடும்ப விவரங்கள், அலைபேசி எண் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்ச்சமாகியிருக்கிறார்கள். அந்த நபர் வெறும் அம்புதான்.

எய்தவர் அல்லது எய்தவர்கள் யார்?

வழக்கம்போல விசாரணை கமிஷன் அமைத்து குற்றவாளி தண்டிக்கப் படுவார் என்று அரசு தரப்பில் சொல்லப்படும்.

துப்பாக்கியில் சுட்டவர் பலிகடா ஆக்கப்படுவார்.

எய்தவர்கள் " எஸ்" ஆவார்கள். பணம் படுத்தும் பாடு.

இறந்தவர்களின் குடும்ப நிலை பரிதாபத்திற்குரியது.

சரி எய்தவர்கள் யார்? அவர்களை எய்தத்தூண்டியது யார் என்று கேள்வி கேட்டால் அரசு தொடங்கி அன்றாடங்காய்ச்சி வரை  சுட்டு விரல் திரும்பும்.

ஸ்டெர்லைட் ஆலை துவங்க "அகர்வால்" குஜராத்தில் முயல அங்கிருந்து கோவா பக்கம் திரும்பி செல்ல அங்கும் அரசால் நிராகரிக்கப்பட்டு பின்னர் மகாராஷ்ட்ராவில் தொடங்கினார். ஏறக்குறைய இருநூறு கோடி வரை செலவிட்டு காப்பர் உருக்கும் உலை வரை நிறுவ மக்களின் எதிர்ப்பால் "பவார்" இடத்தை காலி பண்ணுப்பா என்று துரத்தி விட நம்ம
'இரும்பு பெண்ணின்" அழைப்பிற்கு!!! இணங்க தூத்துக்குடியில் துவக்கினார்.

இதை எதிர்த்து மக்கள் போராட்டம் துவங்கிய வேளையில், வரலாற்று சிறப்பு மிக்க 1996  தேர்தல் வந்ததால் எல்லா கட்சிகளும் பொத்தினாப்ல இருந்துவிட்டனர். அதற்குப் பிறகு மக்கள் எழுச்சி பெறும்போதெல்லாம் முதலாளித்துவமும், அரசாங்கமும் அதை ஜாதி சண்டையில் மழுங்க அடித்தன.

அதற்குள் தொழிற்சாலை தொடங்கி மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கவிட்டு உற்பத்தியை அமோகமாக பெருக்கிக்கொண்டு இருந்தார்கள். அப்பப்போ குரல் விடும் அரசியால் வாதிகள் நன்றாக கவனிக்கப்பட்டனர்.

இருந்தாலும் விடாப்பிடியாக போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று ஆலையை இழுத்து மூடினார் வை.கோ.. பின்னர் அடுத்து வந்த ஆட்சி மாசுகட்டுப்பாட்டு வாரிய அமோக ஆதரவுடன் ஆலையின் உற்பத்தியை தொடங்க அனுமதியளித்தது, நடுவில் என்ன நடந்து இருக்குமென்பது அனைவரும் ஊகிக்கக்கூடியதே. ஆனால் அதன் பின்னர் வை.கோ அமைதியானார். இப்பொழுது விரிவாக்கம் என்று ஆலையை விஸ்தரிக்கப் போக போராட்டம் மறுபடியும் தொடங்கியது.

கடந்து 99  நாட்களாக அறவழியில் மக்களால் நடத்தப்பட்ட ஒரு போராட்டம் நூறாவது நாளில் வன்முறைக்கு உள்ளாகிறது, உயிர்ச்சேதம், தீவைப்பு, பொது சொத்துக்கள் சேதம் என்று திசை திரும்பியதா அல்லது திருப்பப்பட்டதா நாம் அறியோம்.

எய்தவன் அல்லது எய்தவர்கள் யார்?  யோசித்துப்பாருங்கள், பணம் பெருக்கும் முதலாளிகள், துணை போகும் அரசியல் வாதிகள், கமிஷன் வாங்கும் அல்லக்கைகள் ஏன் இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடன் மேல் என்று இலவசங்களுக்கும், க்வாட்டருக்கு விலைபோகும் வாக்காளர்களுமே.

சொந்த சகோதர்கள்
துன்பத்தில் சாகக்கண்டும்
சிந்தை இரங்கார்..............
தம் நலம் ஒன்றே அறிவார்.

இனி என்ன எல்லா ஊடகங்களும், சமூக வலை தளங்களிலும் இவ்வளவு நடந்திருக்கிறதே அவன் வாய் திறந்தானா? அந்த ஜாதிக்காரன்  வாய் திறந்தானா? என்று பிணத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியும், ஜாதி வன்மை அரிப்புகளையும் சொரிந்துவிடுவார்கள்.








Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.