Monday 5 September 2011

லீலா டீச்சர் (ஆசிரியர்தின பதிவு)


எத்தனையோ ஆசிரியர்கள் பள்ளிக் காலங்களிலும் கல்லூரி காலங்களிலும் நம்மை செம்மைபடுத்தி ஆளாக்கியிருக்கிரார்கள். ஆசிரியர் தினம் அன்று நாம் எவ்வளவு பேர் அவர்களை நினைவு கூர்கிறோம் என்று சிந்தித்தால் நமக்கு நம்மையே வெறுக்கத் தோன்றும். காலச்சக்கரத்தின் சுழற்சியில், நாம் அவர்களை நம் நினைவிலிருந்து கழற்றி விடுகிறோம் என்பதே நித்திலமான உண்மை. ஆனால் அதையும் மீறி நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இதற்கு முன்பு நான் இரண்டு ஆசிரியர்களை நினைவு கூர்ந்து பதிவு போட்டேன். அந்த வகையில் என் நினைவில் என்றும் நின்று கொண்டு இருக்கும் லீலா டீச்சர். ஐந்தாம் வகுப்பு வரை நான் பள்ளியில் கடைசி பெஞ்ச் தான். வீட்டு பாடம் எழுதவில்லை என்றாலும் தப்பித்து கழிவறை தேடி ஓடும் பையன்களில் நானும் ஒருவன். டீச்சர் முதல் பெஞ்ச் தொடங்கி சரி பார்த்துக் கொண்டு வரும் நேரம் நம் முறை வரும் பொழுது “எஸ்” ஆகிவிடுவது வழக்கம். வீட்டுப் பாடம் சரித்திரத்தில் செய்தது கிடையாது. என்னுடன் ஏன் பெஞ்சில் இருந்த மோகனும், பாஸ்கரனும் அதே ரகம் தான்.

எங்கள் போக்கை மாற்றி எங்களை முதன்மை பெறவைத்தது லீலாடீச்சர் என்றால் அது மிகையாகாது. மேலும் டீச்சரை ரொம்ப பிடிப்பதற்கு  காரணம் அவர்களது இரண்டு பெண்களும்தான்.

டீச்சர் நாங்கள் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது, அடுத்த பையன்களை சீண்டுவது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் எங்கள் சேஷ்டைகளை செய்து கொண்டிருந்தோம் கால் பரீட்சை வரும் வரை. கால் பரீட்சை முடிந்து ரிப்போர்ட் கொடுக்கும் பொழுதுதான் அவர்கள் எங்களின் மீது கொண்டஅக்கறையை உணர்ந்தோம். நம்ம வீட்டில் ப்ரோக்ரேஸ் ரிப்போர்ட் பார்த்து அப்பா நாலு தட்டு தட்டி அடுத்த முறை கவனமா படி இல்லை என்றால் நீ பன்னி மேய்க்கத்தான் போகணும் என்று சொல்லி கையெழுத்து போட்டுவிடுவார். அவரை சொல்லி குற்றமில்லை நாம் வீட்டில் ஏதோ ஒன்றோ இரண்டோ என்றால் சரி, நாமதான் பத்தோடு பதினொன்னு ஆச்சே. அடுத்த நாள் காலையில் டீச்சரிடம் ரிப்போர்ட் கொடுத்த பொழுது “வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையா இல்லை கையெழுத்து நீயே போட்டுவிட்டாயா” என்றாள்.

பின்பு டீச்சர் எங்கள் வீட்டில் எத்தனை பேர், யார் என்ன என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் விசாரித்தார்கள். பிறகு நீ எந்த தெருவில் இருக்கிறாய் நான் உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கேட்டதால் வேறு வழியில்லாமல் சொல்ல வேண்டியதாகிவிட்டது. டீச்சர் அடுத்த நாள் வீட்டுக்கே வந்து விட்டார்கள். அம்மாவிடம் பேசிய பின்பு “நாளைக்கு பள்ளியில் இருந்து வந்தவுடன் என் வீட்டுக்கு வா, என்ன கட்டாயம் வரணும்” என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள். அம்மா டீச்சரிடம் என்ன சொன்னார்கள், டீச்சர் என்ன சொன்னார்கள் என்ற கவலையில் தூக்கம் வரவில்லை.

அடுத்த நாள் டீச்சர் வீட்டுக்கு நான் போகவில்லை. அவர்கள் வீடு எங்கள் தெருவின் கடைசியில்தான் இருந்தது. அடுத்த நாள் மட்டுமல்ல கிட்டத்தட்ட இரண்டு வாரம் டீச்சர் சொன்னதை நான் கேட்கவில்லை. டீச்சரும் ஏன் வரவில்லை? என்று கேட்கவில்லை.

ஒரு நாள் மோகன்தான்  டீச்சர் வீட்டில் நாய் இருக்கிறது, பூனை இருக்கிறது, விளையாடுவதற்கு நிறைய இடம் இருக்கிறது, டீச்சர் ரொம்ப நல்லவங்க, எனக்கு அவங்க வீட்டில் கோகோ குடுத்தாங்க என்று என்னை உசுப்பி விட்டதால் அன்று வேண்டாவெறுப்பாக சென்றேன். நான் நினைத்ததுபோல் டீச்சர் எங்களுக்கு பாடம் எல்லாம் நடத்தவில்லை. அவர்கள் வீட்டில் அவர்கள் இரு பெண்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு விளையாடினோம். ஆனால் டீச்சர் எப்பொழுதும் எங்களிடம் வகுப்பில் நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை மட்டும் அடிக்கடி சொல்லுவார்கள். எப்பொழுதாவது பாடங்களில் கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொடுப்பார்கள்.
 
நாளடைவில் டீச்சர் வகுப்பை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன், பிறகு மற்ற டீச்சர்கள் பாடங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். அரைப் பரீட்சையில் எங்கோ முப்பத்தைந்து ரேங்க்கிலிருந்து ஒரு பதினைந்துக்கு வந்து விட்டேன். டீச்சர் என்னை பாராட்டினார்கள். அப்பொழுது விளையாட்டுடன் கூட படிப்பிலும் கவனம் செல்ல ஆரம்பித்தது. அதற்கு பிறகு ரேங்க் வருவது வெறியாக மாறியது.

பின்பு அந்த பள்ளி முடிந்து ஹைஸ்கூல் போகும் வரை நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன். அப்பா எப்பொழுதும் அடுத்த முறை இன்னும் நல்ல வாங்கணும் என்பார்.

நாங்கள் ஹைஸ்கூல் போனதால் டீச்சர் வீட்டுக்கு அடிக்கடி செல்வது நின்றது. மேலும் அவர்கள் பெண்கள் பெரியவர்கள் ஆகிவிட்டதால் எங்களுக்கே உரிய பயமோ மரியாதையோ எதோ ஒன்று தடுத்தது.

பத்தாவது படிக்கும் பொழுது வந்த தீபாவளி என்னால் மறக்க முடியாது. நாங்கள் எல்லோரும் புது உடை உடுத்தி வெடி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். டீச்சர் வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. அம்மாவிடம் கேட்டபொழுது அங்கெல்லாம் நீங்க சின்னபசங்க போகாதீங்க டீச்சர் ரொம்ப சீரியஸா இருக்காங்க என்றார்கள். எனக்கு மனசு கேட்கவில்லை புது உடையை களைந்து விட்டு நானும் பாஸ்கரும் அவர்கள் வீட்டுக்கு சென்றோம். வெளியே நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். டீச்சரின் பெயரை சொல்லிக் கொண்டு அவர்கள் வீட்டில் நுழைந்தோம். டீச்சரை நாங்கள் கண்ட கோலம் இன்னும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது. டீச்சரின் கணவரும் இரு பெண்களும் பக்கத்தில் அழுது கொண்டு இருந்தார்கள்.

ஒவ்வொரு தீபாவளியும் எனக்கு லீலா டீச்சர் நியாபகம் வருவது தவிர்க்க இயலாது.
ஒவ்வொரு தீபாவளியும் எங்களுக்கு ஆசிரியர் தினம்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

settaikkaran said...

ஆசிரியர்தின வாழ்த்துகள்! எல்லாருக்கும் டீச்சர்கள் குறித்து எழுத பல சுவாரசியமான ஞாபகங்கள் இருக்கும் என்பதை இந்த இடுகையும் நிரூபிக்கிறது. அருமை.

கும்மாச்சி said...

நன்றி சேட்டை

சக்தி கல்வி மையம் said...

ஆசிரியர்தின வாழ்த்துகள்!

K said...

வணக்கம் சார், கும்புடுறேனுங்க! அருமையா இருக்கு சார்! இனிமேல் ஓவொரு தீபாவளிக்கும், இந்த இடுகையும், அந்த லீலா டீச்சரும்தான் நினைவுக்கு வருவாங்க!

கும்மாச்சி said...

நன்றி ஐடியா மணி.

கும்மாச்சி said...

கருண் வருகைக்கு நன்றி

அன்புடன் அருணா said...

purikirathu....:(

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

ஆசிரியர்தினம் குருவை நினைவு கூர்ந்து எழுதிய நல்ல பதிவு....வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

Thenammai Lakshmanan said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள். லீலா டீச்சரை நினைத்து வருந்த வைத்தது..

பனித்துளி சங்கர் said...

கல்விப் பணி செய்யும் அனைத்து ஆசான்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

கும்மாச்சி said...

நன்றி தேனம்மை மேடம்.

ஸாதிகா said...

லீலா டீச்சரின் நினைவுகள் நெகிழ வைத்தது.மறைவு கலங்க வைத்தது.

கும்மாச்சி said...

நன்றி சாதிகா, உங்களுடைய பதிவு அருமை. வாழ்த்துகள்

Unknown said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி!

மன்மதக்குஞ்சு said...

எனக்கு வாய்த்த ஆசிரியர்களையும் (உமா டீச்சர் தொடங்கி பேராசிரியர் ராமன் வரை) நினைவு கூரவைத்து விட்டது.

ஆமினா said...

என் சரஸ்வதி டீச்சரை நியாபகப்படுத்தியது......

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.