Sunday 11 September 2011

“கும்மாச்சி” காரணப்பெயரா? கப்சா பெயரா?


மடிக்கணினியை வைத்து மேய்ந்து கொண்டிருந்தபொழுது தங்கமணி “எப்பொழுது பார்த்தாலும் கம்ப்யூட்டரில் அப்படி என்ன வேலையோ, காலையிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் இந்த சமையல் கட்டு சிங்க் (தமிழில் என்ன சொல்லறது?) அடைத்துக் கொண்டிருக்கிறது அதை சுத்தம் செய்யுங்கள் என்று சொன்னால் அப்பா, பையன் ரெண்டு பேர் காதிலேயும் விழமாட்டேங்குது. அவன் அந்த ரூமில் மூஞ்சி புத்தகமோ என்னவோ ஏதோ ஒரு கழிசடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் நீங்கள் ப்ளாக் என்ன கன்றாவியோ ஏதாவது அரைகுறை பொம்பளை படத்தைப் போட்டு, இதில் என்ன லாபம்?. ப்ளாக் பேரைப் பாரேன் கும்மாச்சியாம், ஏதோ அம்மாச்சி, உம்மாச்சி என்றாவது இருந்தாலும் பரவாயில்லை அது என்ன கும்மாச்சி” என்று எஸ்.பி.பி யே வியக்கும் அளவிற்கு தம் கட்டி  வசை பாடிக்கொண்டே சென்றாள்.

“அடடா தேங்க்ஸ்டா செல்லம்”

அவள் திரும்பி என்னை ஒரு லுக்குவிட்டு “இன்னிக்கு சோறு கிடையாது”. அப்படியும் அவள் ஓய்ந்தபாடில்லை.

ஆஹா எனது சிந்தனை பத்து பதினைந்து வருடங்கள் பின்னோக்கி “கும்மாச்சி” ஆராய்ச்சிக்கு போய்விட்டது.

நாங்கள் ஒரு முப்பது பேர் சென்னையிலிருந்து கிளம்பி துபாயில் வேலைக்கு சேர்ந்தோம். எல்லோரும் இருபத்தைந்திலிருந்து முப்பது  வயதுடையவர்கள். எங்கள் கூட்டத்தில் ஒரு ஏழு எட்டு பேர் தவிர மற்றவர்கள் எல்லோரும் பேச்சிலர்ஸ். ஒரு வாரம் கடலில் வேலை, பின்பு ஒரு வாரம் கரையில் வெட்டி. நாங்கள் ஆறு பேர் சேர்ந்து ஒரு மூன்று படுக்கையறை கொண்ட பிளாட் வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டிருந்தோம். வீட்டில் எப்பொழுதும் புகை மூட்டம், ஹாலில் தரையில் போடப்பட்ட ஜமுக்காளம் மடித்த சரித்திரம் கிடையாது. காலையில் தொடங்கி மாலை வரை சீட்டுக் கச்சேரி ஓடிக் கொண்டிருக்கும். ஆறு மணிக்கு எல்லோரும் டாக்ஸி டிரைவர் பாரில் ஹாப்பி அவர்சுக்கு அட்டெண்டன்ஸ் கொடுக்க போய் விடுவோம்.

இதில் குடும்பஸ்தர்கள் திருட்டு தம் அடிக்க நம் ப்ளாட்தான் பலகை மறைத்த பொட்டி கடை. அங்கு மனோ தன் மூன்று வயது மகளையும் கூட்டிக்கொண்டு வருவான். அவளிடம் நாங்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே கக்கூசில் போய் ஒரு நான்கு தம் அடித்துவிட்டு வந்துவிடுவான். அப்படியும் அவன் பெண் எப்படியோ மோப்பம் பிடித்து “இருங்க இருங்க அம்மாகிட்டே சொல்லிவிடுவேன்” என்று மிரட்டும்.

சீட்டு கச்சேரி நடந்து கொண்டிருக்கும் பொழுதே டிவியில் கேசட் போட்டு ஏதாவது படம் ஓடிக்கொண்டிருக்கும். அன்று கவுண்டமணி செந்தில் காமெடி ஓடிக்கொண்டிருந்தது. கவுண்டமணி ஒவ்வொரு முறை செந்திலை பார்க்கும் பொழுதும் கூமட்டதலையா, கொட்டாங்குச்சி தலையா என்று வசைபாடி போட்டு தாளித்துக் கொண்டிருப்பார். அடுத்த முறை “டேய் கும்மாச்சி தலையா” எனும்பொழுது அழைப்பு மணி அடிக்கவே எவண்டா அவன் கும்மாச்சி தலையன் என்று சொல்லிக் கொண்டு கதவை திறந்தால் வழக்கம்போல் மனோ, ”வந்துட்டாண்டா கும்மாச்சி” என்று கதவை திறந்து சீட்டு கச்சேரி விட்ட இடத்தில் தொடர்ந்தேன்.

அடுத்த முறை முதல் மனோ வரும்பொழுதே அவனது மகள் “கும்மாச்சி மாமா எங்கே?” என்று சொல்லிக் கொண்டே வரும். அது முதல் கும்மாச்சி எனக்கு நிலைத்துவிட்டது.

பிறகு பல வருடங்கள் கழித்து வலைப்பூ தொடங்க நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவன்தான் “கும்மாச்சி” என்ற பெயரை நினைவு படுத்தினான். முதலில் வலைப்பூ தொடங்கி பழங்களின் அருமை என்று ஒரு காப்பி பேஸ்ட் மெசேஜ் போட்டேன். அது போனியாகவில்லை. தமிழிஷில் என் வோட்டும் அவன் வோட்டும் தவிர ஏதும் ஏற வில்லை.

சரி பேரை “அருள் மொழி வர்மன்” என்று மாற்றினேன்.  இப்பொழுது அவன் வோட்டும் போய் விட்டது. அதோடு நிற்காமல் “அருள் மொழி வர்மனா யாரை கேட்டு பேரை மாற்றினாய்? இத்தனை வருடங்களாக நாங்கள் அன்புடன் அழைத்த கும்மாச்சியை துறக்க உனக்கு எப்படிடா மனம் வந்தது?” என்று ஏதோ போரில் புறமுதுகு காட்டியவன் போல் என்னை பார்த்தான்.  

பிறகு பேரை கும்மாச்சிக்கு மாற்றி, அவதாருக்கு ஒரு “அட்டபிகரை” போட்டு “துணை நடிகையும் வாழைக்காயும்” என்று பதிவு போட்டேன். கூடவே ஒரு நடிகையின் அரைகுறை படமும் போட்டதால் ஒரு முப்பது ஒட்டு விழுந்து தமிழிஷில் பிரபலமாகியது. அதற்கு பிறகு நடந்ததெல்லாம்  சரித்திரம், சமச்சீர் கல்வி புத்தகங்களில் சேர்க்க சொல்லி அறிஞர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

settaikkaran said...

தங்களது பெயர்க்காரணத்தை அறிந்து, நெகிழ்ந்து, நெக்குருகி, கண்ணீர்மல்கி, பிறவிப்பயனை அடைந்தேன். வாழ்க! :-))))))))))))

கும்மாச்சி said...

சேட்டை அதற்காகத்தான் இந்த பதிவு. ஹா ஹா.

RVS said...

நானும் சேட்டையை வழிமொழிகிறேன்!! அடாடா.... உம்மாச்சி.... இந்தக் கும்மாச்சியைக் காப்பாத்து!!

கும்மாச்சி எல்லாரையும் காப்பாத்து....

:-)))

கும்மாச்சி said...

ஆர்.வி. எஸ் ஸார் வருகைக்கு நன்றி. நாங்களும் மொக்கை மொக்கை மட்டும் தான் போடுவோம்னு நிரூபிக்கத்தான் இந்த பதிவு.

Philosophy Prabhakaran said...

ஓ இதான் அந்த சரித்திரமா... அவ்வ்வ்வ்...

Anonymous said...

சாதிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கே...அதுக்குள்ளே சுயசரிதை முகவுரை போட்டுட்டீங்களோன்னு நினைச்சேன்...கும்மாச்சி...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.