Thursday 13 June 2013

காணாமல் போகும் "தந்தி"

கிட்டத்தட்ட நூற்றி அறுபது ஆண்டுகளாக நம்நாட்டில் இருந்த "தந்தி" (Telegram) சேவை வரும் ஜூலை 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவுத்துள்ளது.

கி.பி. 1792 ம் ஆண்டு விரைவாக செய்திகளை மின்சார சிக்னல்கள் மூலம் அனுப்ப முடியும் என்ற ஆய்வு தொடங்கியது. இருந்தாலும் அதற்கான சங்கேத மொழியை 1837ல் அறிமுகப்படுத்தியவர் சாமுவேல் ஃப்.பி. மோர்ஸ் என்ற ஓவியர். முதன் முதலாக  இந்த சங்கேத மொழியை வைத்து அமெரிக்காவில் 1838ல் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு முதல் தந்தி அனுப்பப்பட்டது. பின்னர் அந்த சங்கேத மொழிக்கு மோர்ஸ் கோடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

இந்த முறை பின்னர் நூற்றி அறுபது ஆண்டுகளுக்கு முன்னாள் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது சரித்திரம்.

நமது நாட்டில் பெரும்பாலும் வேகமான செய்தி பரிமாற்றத்திற்கு இவை உபயோகப்படுத்தப்பட்டது.வாழ்த்துக்கள் தெரிவிக்கவும், அசம்பாவிதங்கள் தெரிவிக்கவுமே அவை உபயோகப்படுத்தப்பட்டன.

அகால வேளையில் தந்தி வந்தால் நம் வீட்டு பெருசுகள் அலறி அடித்துக்கொண்டு யாருக்கு என்ன ஆகிவிட்டதோ? என்று நடுங்குவார்கள் அப்பொழுதுதான் ஜபல்பூர் மாமாவிற்கு என்னவோ, சில்குரி சித்தப்பா அபீட்டா என்று தந்தியை வாங்குவதற்கு முன்பு லிஸ்ட் போடுவார்கள். தந்தியை திறந்து பார்க்குமுன் ஊரில் உள்ள குலதெய்வங்களுக்கு நேர்ந்து காசு முடிந்து வைத்த பின்னரே தந்தியை பிரித்துப் பார்ப்பார்கள்.

இந்த தந்தி பெரும்பாலும் நமது வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அந்த தந்தி எனக்கு இரண்டு நாட்கள் தூக்கத்தை கெடுத்ததை என்னால் மறக்க முடியாது.

சென்னை உரத்தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த காலம். மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கிணறுகளுக்கு ஆள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். உரத்தொழிற்சாலையிலிருந்தும்,  எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற் சாலையிலிருந்தும் கூட்டம் கூட்டமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தோம். மூன்று இலக்கங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு ஐந்து இலக்க சம்பளம் என்று மத்திய கிழக்கு நாடுகள் அழைத்துக்கொண்டிருந்தன.

முதலில் சென்னையில் ஒரு நேர்காணல். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்பது பேர்களை மும்பைக்கு அழைத்திருந்தனர். அங்கு எங்களுக்கு  அந்த அமெரிக்க கம்பனி ஆட்கள் இறுதி கட்ட நேர்காணலை நடத்தி ஒரு இருபது பேரை தேர்ந்தெடுத்தனர். இதை ஏற்பாடு செய்தது மும்பையில் இருந்த ஒரு ஆகிலேய நிர்வாகம். பின்னர் சென்னை வந்து வழக்கம்போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தோம்.

இரண்டு மாதங்கள் கழித்து மத்திய கிழக்கு நாட்டில் பிரசித்தி பெற்ற அந்த எண்ணெய் கம்பனியிலிருந்து வேலையில் சேர ஆர்டர் வந்தது. அதை ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டு அனுப்பிய இரண்டு வாரங்களில் முதலில் மும்பை எஜெண்டிடமிருந்து "Resign your job and get ready to join" என்று ஒரு தந்தி வந்தது. அதை வைத்து உரத்தொழிற்சாலை வேலையை துறந்தாகிவிட்டது. என்னுடன் வேலை செய்த மற்றும் இரண்டு பேருக்கும் ஆர்டர் வந்து அவர்களையும் வேலையை ராஜினாமா செய்யச்சொல்லி தந்தி வந்தது. நாங்கள் மூவரும் வேலையை துறந்தவுடன் கம்பனி "தொலைந்தாங்கடா" என்று பிரிவு உபசார விழா நடத்தி மாலை போட்டு அனுப்பிவிட்டார்கள்.

ஒரு வாரம் கழித்து "மும்பைக்கு கிளம்பி வாருங்கள் நீங்கள் மத்திய கிழக்கு நாடு செல்ல விசா டிக்கட் எல்லாம்  தயார்" என்று மற்ற இரண்டு பேருக்கும் தந்தி வந்தது. அவர்கள் இன்னும் மூன்று நாட்களில்  மும்பையிலிருந்து கிளம்பி அந்த நாட்டிற்கு செல்லவேண்டும்.  எனக்கு அந்த தந்தி வரவில்லை. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. இரண்டு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்தேன். என்னுடன் சேர்ந்து என் அம்மாவும் கவலைப்பட ஆரம்பித்தாள். கையிலிருந்த வேலையும் விட்டாகிவிட்டது. இனி எப்படி எல்லோர் மூஞ்சியிலும் முழிப்பேன் என்று கவலை.

மூன்றாவது நாள் அந்த மும்பை கம்பனிக்கு தொலை பேசியில் அழைக்கலாம் என்று மெயின் ரோட்டிலிருந்த அந்த பேக்கரிக்கு சென்றேன். ஒரு மூன்று நிமிட கால் புக்  செய்து காத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் தங்கை கையில் அந்த "ரோஸ் நிற" தந்தியுடன் ஓடி வந்தாள். தந்தியை கை நடுங்க பிரித்து பார்த்தேன். எனக்கு வந்த தந்திதான். ஆனால் அதில் மும்பையிலிருந்து கிளம்பவேண்டிய நாள் அன்று என்று போட்டிருந்தது. இப்பொழுது என்னுடைய நடுக்கம் அதிகமாகிவிட்டது. அதற்குள் நான் புக் செய்த தொலைபேசி அழைப்பு கிடைக்கவே நான் அவர்களுடன் இப்பொழுதுதான் தந்தி என் கையில் கிடைத்தது, ஆதலால் என்னால் இப்பொழுது கிளம்பமுடியாது என்று சொல்ல எதிர்முனையில் உள்ள பெண் பதட்டப்பட வேண்டாம் நீங்கள் கிளம்புவதற்கு மற்றுமொரு நாள் ஏற்பாடு செய்கிறோம், நீங்க எப்பொழுது மும்பை வரமுடியும் என்றாள். நான் நான்கு நாட்கள் கழித்து வருவதாக சொன்னேன், சரி வந்தவுடன் என்னை வந்து பாருங்கள் என்று தன் பெயரை சொன்னாள்.

நான் அம்மாவிடம் விஷயத்தை  சொன்னேன். அவளுக்கு நிம்மதி வந்தது.

அப்பொழுதுதான் யாரோ ஒருவர் கையில் ஒரு தந்தியை வைத்துக்கொண்டு வீடு வீடாக தேடிக்கொண்டிருந்தார், கோயிலுக்கு செல்லுமுன் நான்தான் அவரை பார்த்தேன் என்ன? என்று விசாரித்ததில் அவர் இந்த தந்தியை கொடுத்தார். இந்த தந்தி இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் கொடுத்து விட்டார்களாம். அவர் ஊரில் அப்பொழுது இல்லையாம். அலுவலக வேலை நிமித்தம் வெளியூரு சென்றிருந்தாராம், அவரது மனைவிதான் அவர் ஊரிலிருந்து வந்தவுடன் தந்தியைக் கொடுத்து இது ஏதோ வேலை விஷயம் போலிருக்கிறது ஆதலால் தேடி அவர்களிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லவே அவர் இதை வீடு வீடாக விசாரித்துக் கொண்டிருந்தார் என்று அம்மா சொன்னாள்.

அவருடைய பெயரையும், முகவரியையும் அம்மா விசாரித்து வைத்திருந்தாள். என்னுடைய பெயர்தான் அவருக்கும்.

நான் உடனே இரண்டு தெருவு தள்ளி இருந்த அவர்களது வீட்டிற்கு சென்றேன். அவர் வீட்டில் இல்லை அவருடைய மனைவிதான் இருந்தார்கள்.அவர்களிடம் நான் நன்றியை சொன்னேன். அப்பொழுது அந்த அம்மாள் நாங்களும் உங்கள் தெருவில்தான் வசித்துக் கொண்டிருந்தோம். ஒருவருடம் முன்புதான் இங்கு குடி பெயர்ந்தோம். அவர்கள் ஒன்றாம் நம்பர் வீட்டில் இருந்திருக்கிறார்கள், நாங்க பத்தாம் நம்பர் வீட்டில் இருக்கிறோம்.  நாங்க அந்த தெருவிற்கு குடிவந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது.

தந்தியின் முகவரியை பார்த்தேன் பத்தாம் நம்பருக்கு பதில், ஒன்றாம் நம்பர் இருந்தது. இப்பொழுது விஷயம் எனக்கு தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. "பூஜ்யம்" செய்த வேலை. தபால்காரர் ஒன்றாம் நம்பர் வீட்டில் இந்த தந்தியை கொடுக்கப்போக வீட்டுக்காரர்  தன் வீட்டில் முன்பு குடியிருந்த இருந்தவரின் பெயரை நியாபகம் வைத்துக்கொண்டு அங்கே அனுப்ப ஒரு வழியாக அந்த பிரசித்தி பெற்ற தந்தி என்னை வந்து அடைந்தது.

நான் மும்பை கிளம்ப தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் என் பெயர் உள்ள அவரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றேன். அவர் அலுவலகத்தில் இருந்து அப்பொழுதுதான் வந்திருந்தார். அவரிடம் என் நன்றியை தெரிவித்துக்கொண்டேன். நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை, மனைவிதான் ஊரிலிருந்து வந்தவுடன் நச்சரித்தாள் இதை எப்படியாவது உரியவரிடம் சேர்த்துவிடுங்கள் என்று, அதுதான் அலுவலகம் செல்லும் முன்பு உங்கள் தெருவில் தேடினேன் என்றார்.

அவரது மனைவியை நோக்கி கையை கூப்பினேன்.

மத்திய கிழக்கு நாடு வந்து பல வருடங்கள் ஓடி விட்டன, இந்த தந்தி விஷயம் என்னால் மறக்க முடியாத ஒன்று.

அந்த தந்தி தான் இப்பொழுது எலெக்ட்ரானிக் யுகத்தில் அடிபட்டு  காணாமல் போகப்போகிறது. ஆனாலும் என் நினைவை விட்டு நீங்காது.

Follow kummachi on Twitter

Post Comment

18 comments:

ராஜி said...

கன்னித்தீவு மறக்குமா?!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜி. என்னது கன்னித்தீவா?

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத சம்பவத்தோடு பகிர்வு... இனி...

பரபரப்பு... எதிர்ப்பார்ப்பு... ஆவல்... மகிழ்ச்சி... பயம்... மற்ற அனைத்திற்கும் ஒரு முடிவு... ம்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

Advocate P.R.Jayarajan said...

ஆபத்பாந்தவ தூதுவனாக இருந்த தந்தி இப்போது சம்பந்தப்பட்ட துறையே கை கழுவிய அனாதையானது. அறிவியலோடு ஆளும் வளர, அவன் கைக்குள் உலகம் வந்து விட்டது. எனினும் எங்கள் வக்கீல் தொழிலில் தந்தி இன்னும் சான்றியியல் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

கும்மாச்சி said...

சட்டத்துறையில் தந்தி முக்கிய ஆவணம் என்பது எனக்கு செய்தியாக உள்ளது. ஜெயராமன் வருகைக்கு நன்றி.

rajamelaiyur said...

அறிவியல் வளர வளர இது போல சில விஷயங்கள் மறையும் தான் ..

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

தந்தி குறித்த அருமையான நினைவலைகள்! சிறப்பான பகிர்வு நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Advocate P.R.Jayarajan said...

@ Parithi Muthurasan
//தங்களது தந்தி பதிவைபடிக்கும்போது எனக்கு சிறுவயது சம்பவம் நினைவுக்கு வந்தது...RAMAN IS FINE என்று சென்னையிலிருந்து உடல்நிலை சரியில்லாத எனது உறவுக்காரர் பையனை ஊருக்கு அனுப்பிய தந்தியில் FIRE என்று எழுதி வந்தது..ஊரே அழுது வடிந்தது...அப்போது எங்கள் ஊரில் தொலைபேசி கிடையாது..பக்கத்து ஊரிலிருந்து வெளியூர் ட்ட்ரங் கால் போட்டால் கிடைப்பதும் அரிது.//


சார் இது ஒரு விதம்.... இதப் பாருங்கோ இது இன்னொரு விதம் ...

நாங்க படிக்கிறப்போ ஒரு நண்பருக்கு 'Father died - krishnamoorthy' என்று ஒரு தந்தி வந்தது... உடனே தனது அப்பா இறந்து விட்டார் என்று அதிர்ச்சி ஆகி வேதனையில் ஆழ்ந்தார், எனது நண்பர். கண்ணீருடன் உடனே ஊருக்கு கிளம்பினார். துணைக்கு நானும் கிளம்பினேன். அதிகாலையில் ஊர் சென்றடைந்தோம்.

அங்கு சென்றவுடன் மற்றொரு அதிர்ச்சி! யார் இறந்து விட்டார் என்று எனது நண்பர் கண்ணீரும் கம்பலையுமாக புறப்பட்டு வந்தாரோ அவரே எதிரில் வந்து, "வாடா.. தந்தி எப்போ கிடைச்சது...? எந்த பஸ்ஸில் வந்தீங்க?" என்றவாறு பெட்டியை வாங்கிக் கொண்டார். உடனே நண்பர் 'அப்பா... உங்களுக்கு ... நீங்க நல்லா இருக்கீங்கல்லே..." என்று குளறிக் கொண்டே கேட்டான். எனக்கும் குழப்பம். அவரும், "ஏன்டா.. எனக்கென்ன..? நான் நல்லாத்தான் இருக்கேன்.." என்று கூறி விட்டு... "கிருஷ்ணா மூர்த்தியோட அப்பா நேத்து ராத்திரி திடீரென்னு அட்டாக் வந்து செத்து போயிட்டாரு.." என்றார்.

இதைக் கேட்டவுடன் எங்கள் ரெண்டு பேருக்கும் அட்டாக் வந்த மாதிரி ஆகி விட்டது. இன்று எனது நண்பர் சப் ஜட்ஜ். அவர் அப்பா இன்றும் நலமுடன் இருக்கின்றார்.

கும்மாச்சி said...

தந்திகளால் வந்த குழப்பம் சற்று அதிகம்தான்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மாற்றம் .

கும்மாச்சி said...

எஸ்.ரா.வருகைக்கு நன்றி.

K said...

தந்தி முறைமை இல்லாமல் போவது வருத்தமான செய்தி அண்ணா! இருந்தாலும் கால மாற்றம் அல்லவா? தாங்கித்தான் ஆகோணும்ம்!

கும்மாச்சி said...

மணி வருகைக்கு நன்றி.

Ponchandar said...

எனக்கு இந்திய விமானப் படையில் சேர தந்தி மூலம்தான் அழைப்பு வந்தது.

கும்மாச்சி said...

பொன்சந்தர் வருகைக்கு நன்றி. அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் வேலை விஷயங்கள் தந்தி பரிமாற்றங்கள் மூலமே நடைபெற்றன.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.